“அவருடைய தோள்களிலிருக்கும் சட்டையைக் கழற்றி தருவார்” என்ற வரிக்கு ஒரு போதகர் உண்மையிலேயே உயிரூட்டினார். “நம்முடைய மேல்சட்டைகளை நிஜமாகவே  கழற்றி, இல்லாதவரிடம் கொடுத்தால் என்ன நடக்கும்?” என்று சபையாரிடம் ஓர் சவால் விடுத்தார். அதன் பின்னர், தமது கோட்டை(Coat) கழற்றி சபையின் முன்னால் அதை வைத்தார். அதை பார்த்தவுடன், பலர் அவரது செய்கையைப் பின்பற்றினார்கள். இந்த சம்பவம் குளிர்காலத்தில் நடந்தது, அதனால் வீட்டிற்கு திரும்பும் பயணம் அவ்வளவு எளிதாக இருந்துவிடவில்லை. ஆனால் தேவைகளுடன் இருந்த பலருக்கு அந்த குளிர் காலம் இதமாய் இருந்தது. 

யோவான் ஸ்நானகன் யூதேயாவின் வனாந்திரங்களில் சுற்றித்திரிந்த போது, அவரைக் காண வந்த மக்களிடம் கடுமையாகப் பேசினார். “விரியன்பாம்பு குட்டிகளே!….மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்” என்று அவர்களை விமர்சித்தார் (லூக். 3:7-8). “நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்று ஆச்சர்யத்துடன் கேட்ட அவர்களிடம், “இரண்டு அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்குக் கொடுக்கடவன்; ஆகாரத்தை உடையவனும் அப்படியே செய்யக்கடவன்” என பதிலளித்தார். உண்மையான மனந்திரும்புதல் பெருந்தன்மையுள்ள இருதயத்தை உண்டுபண்ணும். 

குற்றஉணர்ச்சியினாலோ பிறரின் பலவந்தத்தினாலோ ஒருவரும் கொடுக்கத் தேவையில்லை, ஏனெனில் “உற்சாகமாய் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்” (2 கொரி. 9:7). இலவசமாகவும் உற்சாகத்துடனும் நாம் கொடுக்க ஆரம்பித்தவுடன், ஒன்று நன்றாக விளங்க ஆரம்பிக்கும்-பெற்றுக்கொள்ளும்போது உணரும் ஆசீர்வாதத்தை விட, கொடுப்பதில்தான் அதிக ஆசீர்வாதம்.