இங்கிலாந்து தேசத்தின் டோவர் (Dover) மாநிலத்திலுள்ள ஒரு சின்ன கிராமத்திற்கு எழுத்தாளர் ரீட்டா ஸ்நோடன் (Rita Snowden) சென்றபொழுது ஏற்பட்ட குதூகலமான அனுபவத்தை விவரிக்கிறார். ஒரு மதியவேளை சாலையோர உணவகத்தில், டீ அருந்திக் கொண்டிருந்தபொழுது ஒரு அருமையான நறுமணம் வீசக்கண்ட ரீட்டா, உணவகப் பணி யாளர் ஒருவனிடம் அந்நறுமணத்தை குறித்து கேட்டாள். அதற்கு அவன் அங்கு நடந்து செல்பவர்களிடமிருந்து தான் அந்நறுமணம் வீசுவதாக கூறினான். ஏனெனில் அக்கிராமத்தி லுள்ள அநேகர் அருகிலுள்ள நறுமணத்தைலம் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்ப்பதால், அவர்களுடைய உடைகளில் அந்நறுமணம் கலந்து, அவர்கள் வீடு திரும்பும் பொழுது அந்நறுமணத்தை போகும் இடமெங்கும் சுமந்து சென்றார்கள். 

இது கிறிஸ்தவ வாழ்வைப் பிரதிபலிக்கும் அருமையான காட்சி அல்லவா! அப்போஸ்தலனாகிய பவுல் கூறுவதைப்போல, நாம் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருந்து, அவருடைய நறுமணத்தை எவ்விடமும் பரப்புகிறோம் (2 கொரி:2:15). மேலும் போரிலே வெற்றி சிறந்த அரசன் நாடு திரும்பும் பொழுது, தன்னுடைய யுத்த வீரர்களோடு, சிறைப்பிடிக்கப்பட்டவர்களை இழுத்து வரும் வேளையில் அவ்வெற்றியையும் அரசனுடைய மகத்துவத்தையும் கொண்டாடும் விதமாக வீசும் தூபவர்க்கத்திற்கு ஒப்பாக கிறிஸ்தவ வாழ்வை பவுல் காட்சிப்படுத்துகிறார் (வச. 14). 

பவுலைப் பொறுத்தவரை நாம் கிறிஸ்துவின் நறுமணத்தை இரண்டு விதமாக பரப்புகிறோம். முதலாவது நம்முடைய வார்த்தைகளின் மூலம் பூரண அழகுடையவரை மற்றவரிடம் பகிர்ந்துகொள்ளும் பொழுது நறுமணம் வீசுகிறோம். இரண்டாவதாக, கிறிஸ்துவின் தன்னல மற்ற தியாகச்செயல்களை நம் வாழ்வில் நாம் செய்வதின் மூலம் நறுமணம் வீசுகிறோம் (எபே. 5:1-2) நாம் வீசும் தெய்வீக நறுமணத்தை அனைவரும் விரும்பாமல் போனாலும், அந்நறுமணம் அநேகரை கிறிஸ்துவண்டை கொண்டு வரும். 

சிறிது நறுமணத்தை முகர்ந்த ரீட்டா ஸ்நோடன் அதன் ஆதாரத்தை அறிந்துக்கொள்ள முயன்றாள். நாம் இயேசுவை பின்பற்றும் பொழுது, நாமும் அவருடைய வாசம் நிறைந்தவர்களாய், செல்லும் இடமெங்கும், நம்முடைய சொல்லாலும் செயலாலும் நற்கந்தம் வீசுவோமாக!