இங்கிலாந்தில் வசிக்கும் எங்களை அமெரிக்காவிலிருக்கும் என்னுடைய பெற்றோர் காண வந்திருந்தார்கள். அவர்கள் திரும்பிச்செல்லும் பொழுது கையசைத்து வழியனுப்பிக்கொண்டிருந்த என் மகள் சட்டென்று கண்ணீர் விட்டு அழுதுகொண்டே, ”அவர்கள் திரும்பிச்செல்வதை நான் விரும்பவில்லை”, எனக் கூறினாள். நான் அவளை சமாதானப்படுத்திக்கொண்டிருந்த பொழுது, “என்ன செய்வது, அதுதான் அன்பின் விலை” என என் கணவர் கூறினார். 

நமக்குப் பிரியமானவர்களின் பிரிவு நமக்கு மனவலியை உண்டாக்கும். ஆனால் சிலுவையிலே அன்பின் விலையை இயேசு செலுத்தியபொழுது எவரும் அனுபவிக்க முடியாத பிரிவை அவர் அனுபவித்தார். “அநேகருடைய பாவத்தைச்சுமந்து” என்று 700 ஆண்டுகளுக்கு முன்பு ஏசாயா தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டதை தேவனும் மனுஷனுமாகிய இயேசு நிறைவேற்றினார் (ஏசா. 53:12). இயேசுவே நம்முடைய பாடுகளைசுமக்க வந்த ஜீவ பலி என்பதற்கான அநேக குறியீடுகள் இவ்வதிகாரத்தில் உள்ளது. போர்ச் சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவிலே குத்திக் காயப்படுத்தியபொழுது (யோ:19:34), “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு” (வச.5) என்னும் குறியீடு நிறைவேறிற்று. மேலும் ஒரு குறியீடு, “அவருடைய தழும்புகளால் நாம் குணமாகிறோம்” (ஏசா. 53:5). 

அன்பின் நிமித்தமாகவே இப்பூமியிலே இயேசு குழந்தையாகப் பிறந்தார். அன்பின் நிமித்தமாகவே நியாயப்பிரமாண போதகர்களிடமும், மக்களிடமும், போர்ச்சேவகரிடமும் இருந்து பல கொடுமைகளை அனுபவித்தார். அன்பின் நிமித்தமாகவே, நமக்குப் பதிலாக அவர் பாடுபட்டு மரித்து, பரிபூரண ஜீவபலியாக தம்மையே ஒப்புக்கொடுத்து நம்சார்பில் பிதாவின் முன்பாக நின்று கொண்டிருக்கிறார். அன்பின் நிமித்தமாகவே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.