நான் செல்லும் ஆலயத்தில், பலிபீடத்தின் முன்பு ஒரு பெரிய சிலுவை உள்ளது, அது நம்முடைய பாவமும் இயேசுவின் பரிசுத்தமும் சந்தித்த, இயேசு மரித்த அதே சிலுவையைக் குறிக்கிற அடையாளச்சின்னமாக உள்ளது. அன்று தேவன், நாம் நம் சொல்லாலும் செயலாலும் செய்த எல்லாவித பாவங்களுக்காக பூரணசற்குணராகிய தம்முடைய குமாரனை அச்சிலுவையிலே ஒப்புக்கொடுத்தார். மரணத்திற்கு பாத்திரராயிருந்த நம்மை மரணத்திலிருந்து விடுவிக்க செய்யவேண்டிய அனைத்தையும் சிலுவையிலே இயேசு செய்து முடித்துவிட்டார் (ரோ. 6:23). 

சிலுவையைக் காணும்பொழுது, அது இயேசு எனக்காக அனுபவித்ததை எண்ணிப்பார்க்கத் தூண்டுகிறது. அவரைச் சிலுவையில் அறைவதற்கு முன்பு அவரைச் சாட்டையினால் அடித்தார்கள், அவர்மீது காரித் துப்பினார்கள். சில போர்ச்சேவகர்கள் அவருடைய தலையில் கோலால் அடித்து, பரியாசம் பண்ணும்விதமாக முழங்கால்படியிட்டு அவரை வணங்கினார்கள். மகாகொடூரமான சாட்டையடியினால் அவர் மிக பெலவீனமாய் இருந்தபொழுதும் அவரை அறைய இருந்த சிலுவையை அவரையே சுமந்துவரச் செய்தனர். கொல்கொத்தா மலைக்கு வந்து சேர்ந்தபொழுது, அவருடைய கைகளிலும் கால்களிலும் ஆணிகளை அடித்து சிலுவையில் தொங்கவிட்டார்கள். அவருடைய சரீரத்தின் பாரம் முழுவதையும் ஆணி அறையப்பட்ட அக்காயங்களே சுமந்தன. பின்பு ஆறு மணி நேரம் கழித்தே இயேசு தன் ஜீவனை விட்டார் (மாற். 15:37). இயேசுவின் மரணத்தைக் கண்ட ஒரு நூற்றுக்கு அதிபதி, “மெய்யாகவே இந்த மனுஷன் தேவனுடைய குமாரன்,” என சாட்சியிட்டான் (வச. 39).

அடுத்தமுறை நீங்கள் சிலுவையைக் காணும்பொழுது கிறிஸ்துவின் சிலுவை உங்களுக்கு என்னவாக இருக்கிறது என எண்ணிப் பாருங்கள். தேவனுடைய குமாரன் சிலுவையிலே பாடுகளை அனுபவித்து மரித்தார். ஆனால் மூன்றாம் நாள் உயிரோடு கூட எழுந்து நித்திய வாழ்வை ஈந்தளித்துள்ளார்.