என் தந்தையைப் போன்று
என்னுடைய படிக்கும் அறையின் தரையிலிருந்த, என் தந்தையினுடைய குதிரை சவாரிக்குப் பயன்படுத்தப்படும் உயரமான தூசிபடிந்த பூட்ஸ்சுகள் அவர் எப்படிப்பட்டவர் என்பதை என் நினைவில் கொண்டு வந்தன.
பிற வேலைகளோடு, அவர் குதிரை வளர்ப்பதையும், குதிரைப்பந்தயத்தில் மிக வேகமாக ஓடுவதற்கும் அவற்றைப் பயிற்றுவிப்பதையும் செய்துவந்தார். அவர் வேலை செய்வதைப் பார்ப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தரும். அவர் அவைகளோடு சேர்ந்து ஓடுவதை நான் பார்த்து பிரமித்ததுண்டு.
நான் சிறுவனாக இருந்தபோது என் தந்தையைப் போலிருக்க வேண்டுமென விரும்பினேன். இப்பொழுது எனக்கு 80 வயதுக்குமேலாகிறது. இப்பொழுதும் அவருடைய அந்த பூட்ஸ்சுகள் எனக்குப் பெரியனவாகவேயுள்ளது.
என் தந்தை இப்பொழுது மோட்சத்தில் இருக்கின்றார். ஆனால், நான் பின்பற்ற வேண்டிய மற்றுமொரு தந்தையிருக்கிறார். நான் அவரைப் போல நன்மை செய்பவனாகவும், அவரின் அன்பின் நறுமணத்தை பரப்புபவனாகவும் இருக்க வேண்டுமென விரும்புகிறேன். இவ்வுலக வாழ்வில் நான் அவரைப் போல இல்லை; இருக்கவும் முடியாது. அவருடைய பூட்ஸ்சுகள் எனக்கு எப்பொழுதுமே பெரியவையாகவே உள்ளன.
ஆனால், அப்போஸ்தலனாகிய பேதுரு இவ்வாறு சொல்லுகின்றார், “கிறிஸ்து இயேசுவுக்குள் தம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற தேவன் தாமே… உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக” (1 பேது. 5:10). இதைச் செய்யக் கூடிய ஞானமும், வல்லமையும் அவருக்கேயுரியது (வச. 11) என்பதை தெரிந்து கொள்வோமாக.
நம் பரமத் தந்தையைப்போல நாம் முற்றிலும் மாற முடியாத இக்குறை நீண்ட நாட்கள் நிலைத்திருக்கப் போவதில்லை. தேவன் தம்முடைய அழகிய குணாதிசயங்களை நாம் பகிர்ந்து கொள்ளவே நம்மை அழைத்துள்ளார். இந்த உலக வாழ்வில் நாம் அவரை மிகக் குறைவாகவே பிரதிபலிக்கின்றோம். ஆனால், பரலோக வாழ்வில் பாவமோ துக்கமோ இல்லை. அங்கு நாம் அவரை முற்றிலுமாகப் பிரதிபலிப்போம். இதுவே “தேவனுடைய மெய்யான கிருபை” (வச. 12).
நிபுணர்கள் சொல்வதென்ன?
“சில காரியங்களில் திரளான, மிகமோசமான தவறுகளைச் செய்யும் நிபுணர்களின் விசித்திர திறமையைக் குறித்து பாஸ்டன் குளோப் என்ற பத்திரிக்கையின் எழுத்தாளர் ஜெஃப் ஜேகோபி எழுதுகிறார். சமீப கால நிகழ்வுகள் அவர் சரியாகச் சொல்லியிருக்கிறார் எனக் காட்டுகின்றன. எடுத்துக்காட்டாக மிகப் பெரிய கண்டுப் பிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன் பேசும் படங்களால் ஒருபோதும் பேசா ஊமைப் படங்களை நீக்கிவிட முடியாது என தெரிவித்தார். 1928 ஆம் ஆண்டு ஹென்றி ஃபோர்ட் “மக்கள் மிகவும் புத்திசாலிகளாகிவிட்டதால் மீண்டும் ஒரு யுத்தம் வராது” எனத் தெரிவித்தார். இதைப் போன்று அநேக நிபுணர்களின் கணிப்புகள் தவறாகிவிட்டன. மிகச் சிறந்த திறமைகளுக்கும் ஓர் எல்லையுண்டு.
ஆனால், ஒரேயொரு நபர் மட்டும் முற்றிலும் நம்பக்கூடியவர். இந்த திறமைசாலிகளுக்குக் கடுமையான சில வார்த்தைகளைச் சொன்னார். இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மதத்தலைவர்கள் தங்களிடம்தான் உண்மையுள்ளதென உறுதியாகக் கூறினார்கள். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட மேசியா வரும்போது அவர் எவ்வாறிருப்பார் என்பது அவர்களுக்குத்தான் தெரியும் என இந்த கற்றவர்களும், வேத அறிஞர்களும் எண்ணினர்.
இயேசு அவர்களை எச்சரிக்கின்றார். “நீங்கள் வேதத்தைத் தீவிரமாகக் விடாமுயற்சியோடு கற்கின்றீர்கள். ஏனெனில், அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டு என நினைக்கிறீர்கள்” ஆனால், வேத வாக்கியங்களின் மையம் என்ன என்பதைக் காணத் தவறி விடுகிறீர்கள் என சுட்டிக்காட்டுகின்றார். “என்னைக் குறித்து சாட்சி கொடுக்கிறவைகளும் வேத வாக்கியங்களே. அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை” (யோவா. 5:39-40) என்றார்.
மற்றுமோர் புதிய ஆண்டிற்குள் வந்துள்ள நாம், பயங்கரமானவற்றிலிருந்து பரவலாக நம்பக்கூடியவை வரை அநேக கணிப்புகளைக் கேட்கிறோம். அவற்றில் பெரும்பாலானவை மிகப்பெரிய நம்பிக்கைக்குரியதாகவும், அதிகாரத்தோடும் சொல்லப்படுகின்றன. ஆனாலும் பயப்படாதிருங்கள். நமது நம்பிக்கை வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய நபரையே சார்ந்துள்ளது. அவர் நம்மீதும் நமது எதிர்காலத்தின்மீதும் மிக உறுதியான பிடிப்பு கொண்டுள்ளார்.
பிரமிக்க செய்யும் மகிமை
ஐரோப்பா பயணத்தில் மிகவும் மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக அமைந்தது எதுவென்றால், ஆங்காங்கே அமைந்துள்ள சிறப்புமிக்க பேராலயங்களைப் பார்வையிட்டதாகும். அவற்றின் பிரமிக்கச் செய்யும் அழகு “பரலோகத்திலிருப்பதைப் போல உணரச் செய்தது. அவற்றின் கட்டடக்கலை, கலை நுணுக்கம் மற்றும் எவற்றின் அடையாளமாக இந்த வியக்கச் செய்யும் கட்டடங்கள் எழுப்பப்பட்டனவோ அவை வார்த்தையால் விவரிக்க முடியாத, ஆச்சரியமான சிறப்புமிக்க அனுபவத்தைக் கொடுத்தது.
தேவனுடைய தனிச்சிறப்பையும், எல்லாவற்றையும் கடந்த அவருடைய மகிமையையும் குறித்து நாம் நினைவுகூறும்படியாக இந்த கட்டட அமைப்புகள் எழுப்பப்பட்டன என்ற உண்மையை நான் நினைக்கும் போது, நம் சிந்தனைகளிலும் இருதயத்திலும் தேவனுடைய மகத்துவத்தையும், மாட்சிமையையும் மீண்டும் நம் நினைவில் கொண்டு வருகின்றன என வியந்தேன், நாம் செய்ய வேண்டியதென்னவெனில் மனிதனின் சிறப்பான வானளாவிய கட்டட அமைப்புகளையும் தாண்டி, தேவன் உருவாக்கியவற்றின் மாட்சிமையைக் காண்பதேயேயாகும். வீண்மீன்கள் நிறைந்த இரவு வானத்தைப் பார்! அவருடைய வார்த்தையால் உருவாகியிருக்கும் இந்த அண்டத்தையும் பார்த்து, அவருடைய வல்லமையை நினைத்துக்கொள். புதிதாகப் பிறந்த குழந்தையொன்றைக் கையிலெடுத்து தேவன் கொடுத்த அற்புதமான ஜீவனுக்காக அவருக்கு நன்றி செலுத்துவோம். பனிபடர்ந்த அலாஸ்கா மலைத் தொடரையும், அல்லது லட்சக்கணக்கான தேவன் படைத்த உயிரினங்கள் அடங்கிய அட்லாண்டிக் சமுத்திரத்தையும், இத்தனை சுற்றுச் சூழலையும் இயக்குகின்ற அவருடைய வல்லமையையும் நினைத்துப் பார்.
மனிதன் வானளாவிய கட்டடங்களை உருவாக்கியதில் தவறில்லை. ஆனால், அவை நம்மை தேவனை நோக்கிப் பார்க்கத் தூண்ட வேண்டும். நம்முடைய உண்மையான புகழ்ச்சி தேவன் ஒருவருக்கே சொந்தம் என்பதால், “கர்த்தாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும்; மகத்துவமும் உம்முடையவைகள்” (1 நாளா. 29:11) என்று நாம் சொல்லுவோம்.
தொடருகிறேன்
நான் பணிபுரியும் அலுவலக கட்டடத்தின் வெளிப்புறமாக நான் நடந்து சென்ற போது, கான்கிரீட்
தள ஓடுகளில் ஏற்பட்ட சிறிய பிளவில் மிக அழகிய மலர் வளர்ந்திருப்பதைப் பார்த்து ஓடுகளில் அதிசயித்தேன். அது வளருவதற்கு ஏற்ற சூழல் இல்லாதிருந்த போதிலும் அந்தச் செடி தனக்கு ஒரு சிறிய பிடிமானம் கிடைத்ததைக் கொண்டு அந்த வறண்ட குறுகிய திறப்பில் செழித்து வளர்ந்துள்ளது. அந்த செடிக்கு மேல் பகுதியிலுள்ள குளிரூட்டியிலிருந்து (AC) நாள் முழுவதும் தண்ணீர் வழிந்துகொண்டிருந்ததை பின்னர் நான் கவனித்தேன். அந்தச் சுற்றுப்புறத்தில் வளருவதற்கு ஏற்ற சூழலில்லாத போதும், அந்த செடியானது தனக்குத் தேவையான உணவை மேலிருந்து வழிந்த நீரிலிருந்து பெற்றுக்கொண்டது.
கிறிஸ்தவ வாழ்வில் வளர்வது சில வேளைகளில் கடினமாகத் தோன்றலாம். ஆனால் நாம் தேவனோடு நம்மைத் தொடர்ந்து இணைத்துக் கொண்டோமேயாகில் தடைகளையெல்லாம் மேற்கொள்ள முடியும். நம்முடைய சூழ்நிலை, ஒருவேளை நமக்கு சாதகமற்ற சோர்வடையச்செய்யும் தடைகளாகத் தோன்றலாம். ஆனால் நாம் நம் தேவனோடுள்ள உறவில் தொடரும் போது அந்த தனிமையானச் செடியைப் போன்று செழித்திருக்கலாம். இதுவே அப்போஸ்தலனாகிய பவுலின் அனுபவமும்கூட, மோசமான கஷ்டங்களையும் சவால்களையும் அவர் சந்திக்க நேரிட்டபோதும் (2 கொரி. 11:23-27) அவர் தளர்ந்து போகவேயில்லை. கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக் கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன். “மேலும்” பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன். (பிலி. 3:12)
என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய பெலனுண்டு என்று சொல்லுகிறார் (4:13). எனவே நாமும் நமக்கு பெலன் தருகின்ற கிறிஸ்துவை பற்றிக்கொண்டு தொடருவோம்.
மீண்டும் ஆரம்பித்தல்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் முடிவுற்று டிசம்பர் மாதக் கடைசியை அடைந்தபோது, என்னுடைய எண்ணங்கள் வரப்போகும் ஆண்டிற்கு நேராகத் திரும்பின. என்னுடைய குழந்தைகள் பள்ளி விடுமுறையில் இருந்ததால், எங்களுடைய அன்றாடக வேலைகள் சற்று நிதானமாகச் சென்றபோது, நான் கடந்த ஆண்டு என்னை எங்கு கொண்டுவந்துள்ளது எனவும், அடுத்த ஆண்டு என்னை எங்கு கொண்டு, செல்லுமென்ற நம்பிக்கையைக் குறித்தும் சிந்திக்கலானேன். நான் செய்த தவறுகளை எண்ணிய போது சிலவேளைகளில் அந்நினைவுகள் வேதனையையும், மன வருத்தத்தையும் கொடுத்தன. ஆனாலும் புதிய ஆண்டின் துவக்கத்தின் எதிர்நோக்கல் என்னுள்ளத்தை நம்பிக்கையாலும் எதிர்பார்ப்புகளாலும் நிறைத்தது. பழைய ஆண்டு எவ்வாறு இருந்தாலும் இப்பொழுது எனக்கு ஒரு புதிய துவக்கத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டதாக எண்ணினேன்.
என்னுடைய இந்த புதிய ஆரம்பத்தின் எதிர்பார்ப்பு எழுபது ஆண்டுகள் பாபிலோனில் சிறைப்பட்டிருந்த இஸ்ரவேலரை பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் யூதேயாவிலுள்ள தங்கள் தாய்நாட்டிற்குத் திரும்பிச் செல்லுமாறு விடுவித்தபோது அவர்களுக்கிருந்த நம்பிக்கையை ஒப்பிடும்போது அற்பமானதாக உணர்ந்தேன். முந்திய பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் இஸ்ரவேலரை அவர்களின் நாட்டை விட்டு வெளியேற்றினான். ஆனால் கர்த்தர் கோரேஸின் ஆவியை ஏவினதினால் அவன் இஸ்ரவேலரை எருசலேமிற்குப் போய் தேவனுடைய ஆலயத்தைக் கட்டும்படி அவர்களை விடுவித்தான் (எஸ்றா 1:2-3). மேலும், நேபுகாத்நேச்சார் தேவனுடைய ஆலயத்திலிருந்து எடுத்துவந்த பொக்கிஷங்களையும் கோரேஸ் திருப்பிக்கொடுத்தான். தங்கள் பாவத்தின் விளைவாக நீண்ட காலம் பாபிலோனில் கஷ்டங்களைச் சகித்தபின்பு தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள், தேவன் அவர்களுக்கு கொடுத்த தேசத்தில் ஒரு புதிய வாழ்வைத் துவங்கினார்கள்.
நமது கடந்த காலம் எவ்வாறிருந்தாலும் பொருட்படுத்தாமல் நாம் நமது பாவங்களை அறிக்கை செய்தால் தேவன் நம்மை மன்னித்து நமக்கு ஒரு புது துவக்கத்தைத் தருகிறார். இது நம்பிக்கைக்கு எத்தனை பெரிய தூண்டுதல்!
விசுவாசத்தைக் கட்டும் நினைவலைகள்
இசையால் நிறைந்திருந்த பரிசுத்த ஸ்தலத்தில் நான் நுழைந்தபோது, புது வருஷத்தைக் கொண்டாட புத்தாண்டிற்கு முந்தையநாள் அங்கு வந்திருந்தவர்களைச் சுற்றிப் பார்த்தேன். கடந்த ஆண்டு நாங்கள் ஏறெடுத்த ஜெபங்களை நான் நினைத்த பொழுது சந்தோஷம் என் இருதயத்தை நம்பிக்கையால் துள்ளப்பண்ணிற்று. சபையாக நாங்கள், வழிதவறிப்போன பிள்ளைகள், அருமையானவர்களின் மரணம், வேலையிழப்பு, முறிந்த உறவுகள் ஆகிய வற்றால் துக்கப்படுகிறவர்களுக்காக ஜெபித்தோம். தேவனுடைய கிருபையால் மனந்திரும்பினவர்கள், உறவுகள் மறுபடியும் சீராக்கப்பெற்றவர்கள்… போன்றவர்களையும் நினைத்தோம். வெற்றிகள், திருமணங்கள், பட்டம்பெற்றது, தேவசபையில் இணைக்கும் ஞானஸ்நானங்கள் ஆகியவற்றையும் நாங்கள் கொண்டாடினோம். தத்தெடுக்கப்பட்ட மற்றும் பிறந்த குழந்தைகள் அர்பணிக்கப்பட்ட குழநதைகளை வரவேற்றோம். இன்னும் இது போன்ற பல காரியங்களை எண்ணி நன்றி கூறினோம்.
எரேமியா தன் சிறுமையையும், தவிப்பையும் (புல. 3:19) நினைத்ததுபோல, நாங்களும் எங்கள் சக குடும்பத்தினர் சந்தித்த பாடுகளின் வரலாற்றை நினைவுகூர்ந்தோம். “நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை” (புல. 3:22) என்பதை நான் விசுவாசித்தேன். தீர்கதரிசி, கடந்தகாலத்தில் தேவனுடைய உண்மையை நினைத்து “தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத்தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர்” (வச. 25) என்ற வார்த்தையினால் தன்னைத் தேற்றிக்கொண்டது, அது என்னையுயம் ஆறுதல்படுத்தினது.
அந்த இரவில், எங்கள் சபையிலுள்ள ஒவ்வொருவரும் வாழ்வை மறுரூபமாக்கும் தேவனுடைய அன்பிற்கு அடையாளமாயிருந்தனர். கிறிஸ்துவின் சரீரமாகிய சபையின் உறுப்பினர்கள் யாவரும், வரப்போகிற ஆண்டுகளில் எதை சந்திக்க நேர்ந்தாலும், அவரையே சார்ந்திருக்க முடியும். நாம் ஒருவரையொருவர் தாங்கி, தொடர்ந்து தேவனைத் தேடும்பொழுது, எரேமியாவைப் போல நாமும் விசுவாசத்தைக் கட்டும் நினைவுகளால் பெலப்பட்டு, தேவனுடைய மாறாத்தன்மைiயும் நம்முடைய நம்பிக்கையையும் அவர் மீது சார்ந்திருக்கச் செய்வார்.
நிறைவேற்றின காலங்கள்
வருடத்தின் முடிவில் நாம் செய்து முடிக்காத காரியங்களின் பாரம் நம்மை சோர்வுக்குள்ளாக்கலாம். குடும்பப் பொறுப்புகளும் வேலைகளும் ஒருநாளும் ஓயாது என்பது போல தோன்றலாம். இன்று முடியாத வேலைகள் நாளைய வேலைகளுடன் சேர்ந்து கொள்ளுகிறது. ஆனால், நம் விசுவாச பயணத்தில், நாம் நிறைவேற்றின பணிகளுக்காகவும், தேவனுடைய உண்மைக்காகவும் நாம், நின்று, கொண்டாடும் நேரங்கள் இருத்தல் வேண்டும்.
தங்களது முதல் மிஷனரி பயணத்தில் நிறைவேற்றின கிரியைகளுக்காக, பவுலும் பர்னபாவும் தேவனுடைய கிருபைக்கு ஒப்புவிக்கப்பட்டுப் புறப்பட்டு அந்தியோகியாவுக்கு வந்து சேர்ந்தார்கள் (அப். 14:26). இயேசுவை அறிவிக்கும் பணி நெருக்கினாலும், நாங்கள் நிறைவேற்றின கிரியைகளுக்காகத் தேவனுக்கு நன்றி சொல்ல நேரம் ஒதுக்கினார்கள்.” அவர்கள் அங்கே சேர்ந்தபொழுது, சபையைக் கூடிவரச்செய்து தேவன் தங்களைக்கொண்டு செய்தவைகளையும், அவர் புறஜாதிகளுக்கு விசுவாசத்தின் கதவைத் திறந்ததையும் அறிவித்தார்கள் (வச. 27).
கடந்த வருடத்தில் தேவன் உங்கள் மூலமாகச் செய்தது என்ன? நன்கு அறிந்து நேசிக்கிற ஒருவருக்கு தேவன் விசுவாசக் கதவை எவ்வாறு திறந்தார்? நம்மால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத வழியில், முற்றுப்பெறாததாய் அல்லது அற்பமாய்த் தோன்றுகிற காரியங்களில், தேவன் நம்மூலமாக செயல்பட்டுக்கொண்டே இருக்கிறார்.
தேவன் நம்மூலமாகச் செய்த காரியம் முடிவடையாததை நினைத்து வேதனைப்படும் பொழுது, அவர் நம்மூலமாக செயல்பட்ட வழிகளுக்காய், மறக்காமல் நன்றி சொல்லுவோம். தேவன் கிருபையாய் செய்தவைகளை நினைத்து களிகூறுவதே வரப்போகும் அடுத்த கட்டத்திற்கு அஸ்திபாரமாகும்.
கண்களில் நிலை நிற்பவை எது?
ஹம்மிங் பறவையின் பெயர் (HUMMING BIRD) இதன் இறக்கைகள் வேகமாக அடிப்பதால் ஏற்படும் ரீங்கார ஓசையினால் இதற்கு இந்தப் .பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. போர்த்துக்கீசிய மொழியில் “பூக்களை முத்தமிடும் பறவை” (FLOWER KISSER) என்றழைக்கப்படுகிறது. ஸ்பானிய மொழியில் “பறக்கும் ரத்தினம்” (FLYING JEWELS) எனப்படும். எனக்குப் பிடித்த பெயர்களில், மெக்சிகன் ஒன்று. சப்போடெக் மொழியில் பியுலூ என்பதே. இதன் அர்த்தம் “கண்களில் நிலைநிற்பது” என்பதாகும் அதாவது இந்த ஹம்மிங் பறவையை ஒரு முறை பார்த்துவிட்டால் மறக்கவே முடியாது!
ஜீ. கே. செஸ்டர்ட்டன் “உலகில் அதிசயங்கள் ஒழிந்துபோவதேயில்லை. ஆச்சரியப்படுபவர்கள் இல்லாததுதான் குறை;” என்றார். இந்த ஹம்மிங் பறவை அப்படியொரு அற்புதம். இந்த சின்னக் குருவியில் என்ன அற்புதம் இருக்கிறது? அவைகளின் சிறிய உருவம் கிட்டத்தட்ட ஒரு விரல் நீளம் (2-3) இருப்பதாலோ அல்லது ஒரு வினாடிக்கு 50 முதல் 200 தடவை இறக்கைகளை அடிப்பதாகவோ இருக்கலாம்.
104ம் சங்கீதத்தை எழுதியது யார் என்று திட்டமாகத் தெரியவில்லை. ஆனால் அவர் இயற்கையின் அழகினால் நிச்சயம் கவரப்பட்டிருந்தார். சிருஷ்டிப்பின் பல அதிசயங்களை, உதாரணமாக லீபனோனின் கேதுரு மரங்கள், காட்டுக் கழுதைகள் போன்றவற்றை வர்ணித்தபின், “கர்த்தர் தம்முடைய கிரியைகளிலே மகிழுவார்” (வச. 3) என்று பாடினார். அதன்பின் “நான் அவரைத் தியானிக்கும் தியானம் இனிமையாயிருக்கும் என்று ஜெபித்தார் (வச. 340).
என்றும் கண்களில் நிலைத்து நிற்கும் அழகும் பூரணமும் கொண்ட அநேகக் காரியங்கள் இயற்கையிலுண்டு. நாம் அவற்றைத் தியானித்து கர்த்தரை எவ்வாறு பிரியப்படுத்தலாம்? நாம் அவற்றைக் கண்டு, ரசித்து, களிகூரும்பொழுது, கர்த்தருடைய கிரியைகளை நினைத்து, ஆச்சரியப்பட்டு, அவருக்கு நன்றி சொல்லலாம்.
ஒவ்வொரு நாளின் மணித்துளிகள்
நான் வாங்கிய பலசரக்குகளைக் காரில் வைத்தபின் கார் நிறுத்தும் இடத்திலிருந்து கவனமாக வெளியே எடுத்தேன். திடீரென்று ஒருவன், நான் வருவதைக் கவனியாமல் என் முன் வேகமாக குறுக்கே வந்துவிட்டான். நல்ல வேளை நான் ‘சடன் பிரேக்’ போட்டு அவன் மேல் மோதாமல் பார்த்துக் கொண்டேன். அவன் திகைத்துப் போய் என்னையே உற்றுப் பார்த்தான். அந்தச் ஷணத்தில், நான் இரண்டில் ஒன்று செய்திருக்கலாம்; கண்களை உருட்டி வெறுப்பைக் காட்டியிருக்கலாம்; அல்லது மன்னிக்கும் புன்னகையைக் காட்டியிருக்கலாம். நான் புன்னகித்தேன்.
அவன் முகத்தில் ஒரு தெளிவு தோன்றி மறைந்தது; அவனும் நன்றியோடு புன்னகித்தான்.
நீதிமொழிகள் 15:13 “மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத்தரும்; மனோதுக்கத்தினாலே ஆவி முறிந்துபோம்” என்கிறது. நமது வாழ்வில் வரும் எல்லா இடையூறுகளிலும், ஏமாற்றங்களிலும், தொல்லைகளிலும் நாம் சிரித்த முகத்தோடிருக்க வேண்டுமென்று இதை எழுதியவர் கூறுகின்றாரா? நிச்சயமாக இல்லை! சில வேளைகளில் நாம் உண்மையிலேயே துக்கப்படுகிறோம், சோர்ந்துபோகிறோம், அநியாயத்திற்குக் கோபப்படுகிறோம். அந்த வினாடியில், ஒரு புன்னகை நமக்குத் தெளிவையும், நம்பிக்கையையும் தொடர்ந்து முன்னேறுவதற்கான கிருபையையும் தர முடியும்.
உள்ளான மன நிலையைப் பொறுத்து, புன்னகை தானாக வரும் என்பதே இந்த நீதிமொழியின் உள்ளான கருத்து. ஒரு சந்தோஷமான இருதயம், சமாதானத்தோடிருக்கும், மனரம்மியமாயிருக்கும், தேவனுடைய சிறந்த நன்மைக்குத் தன்னை அர்ப்பணிக்கும். இப்படி உள்ளத்திலிருந்து சந்தோஷம் பொங்கி வெளிவரும் இருதயமிருந்தால், எந்த சூழ்நிலையையும் புன்னகையோடு எதிர்கொள்ளளலாம்.. தேவனிடத்திலுள்ள நம்பிக்கையையும் சமாதானத்தையும் பெற்று அனுபவிக்க மற்றவர்களையும் அழைக்கலாம்.