“சில காரியங்களில் திரளான, மிகமோசமான தவறுகளைச் செய்யும் நிபுணர்களின் விசித்திர திறமையைக் குறித்து பாஸ்டன் குளோப் என்ற பத்திரிக்கையின் எழுத்தாளர் ஜெஃப் ஜேகோபி எழுதுகிறார். சமீப கால நிகழ்வுகள் அவர் சரியாகச் சொல்லியிருக்கிறார் எனக் காட்டுகின்றன. எடுத்துக்காட்டாக மிகப் பெரிய கண்டுப் பிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன் பேசும் படங்களால் ஒருபோதும் பேசா ஊமைப் படங்களை நீக்கிவிட முடியாது என தெரிவித்தார். 1928 ஆம் ஆண்டு ஹென்றி ஃபோர்ட் “மக்கள் மிகவும் புத்திசாலிகளாகிவிட்டதால் மீண்டும் ஒரு யுத்தம் வராது” எனத் தெரிவித்தார். இதைப் போன்று அநேக நிபுணர்களின் கணிப்புகள் தவறாகிவிட்டன. மிகச் சிறந்த திறமைகளுக்கும் ஓர் எல்லையுண்டு.

ஆனால், ஒரேயொரு நபர் மட்டும் முற்றிலும் நம்பக்கூடியவர். இந்த திறமைசாலிகளுக்குக் கடுமையான சில வார்த்தைகளைச் சொன்னார். இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மதத்தலைவர்கள் தங்களிடம்தான் உண்மையுள்ளதென உறுதியாகக் கூறினார்கள். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட மேசியா வரும்போது அவர் எவ்வாறிருப்பார் என்பது அவர்களுக்குத்தான் தெரியும் என இந்த கற்றவர்களும், வேத அறிஞர்களும் எண்ணினர்.

இயேசு அவர்களை எச்சரிக்கின்றார். “நீங்கள் வேதத்தைத் தீவிரமாகக் விடாமுயற்சியோடு கற்கின்றீர்கள். ஏனெனில், அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டு என நினைக்கிறீர்கள்” ஆனால், வேத வாக்கியங்களின் மையம் என்ன என்பதைக் காணத் தவறி விடுகிறீர்கள் என சுட்டிக்காட்டுகின்றார். “என்னைக் குறித்து சாட்சி கொடுக்கிறவைகளும் வேத வாக்கியங்களே. அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை” (யோவா. 5:39-40) என்றார்.

மற்றுமோர் புதிய ஆண்டிற்குள் வந்துள்ள நாம், பயங்கரமானவற்றிலிருந்து பரவலாக நம்பக்கூடியவை வரை அநேக கணிப்புகளைக் கேட்கிறோம். அவற்றில் பெரும்பாலானவை மிகப்பெரிய நம்பிக்கைக்குரியதாகவும், அதிகாரத்தோடும் சொல்லப்படுகின்றன. ஆனாலும் பயப்படாதிருங்கள். நமது நம்பிக்கை வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய நபரையே சார்ந்துள்ளது. அவர் நம்மீதும் நமது எதிர்காலத்தின்மீதும் மிக உறுதியான பிடிப்பு கொண்டுள்ளார்.