நான் வாங்கிய பலசரக்குகளைக் காரில் வைத்தபின் கார் நிறுத்தும் இடத்திலிருந்து கவனமாக வெளியே எடுத்தேன். திடீரென்று ஒருவன், நான் வருவதைக் கவனியாமல் என் முன் வேகமாக குறுக்கே வந்துவிட்டான். நல்ல வேளை நான் ‘சடன் பிரேக்’ போட்டு அவன் மேல் மோதாமல் பார்த்துக் கொண்டேன். அவன் திகைத்துப் போய் என்னையே உற்றுப் பார்த்தான். அந்தச் ஷணத்தில், நான் இரண்டில் ஒன்று செய்திருக்கலாம்; கண்களை உருட்டி வெறுப்பைக் காட்டியிருக்கலாம்; அல்லது மன்னிக்கும் புன்னகையைக் காட்டியிருக்கலாம். நான் புன்னகித்தேன்.

அவன் முகத்தில் ஒரு தெளிவு தோன்றி மறைந்தது; அவனும் நன்றியோடு புன்னகித்தான்.

நீதிமொழிகள் 15:13 “மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத்தரும்; மனோதுக்கத்தினாலே ஆவி முறிந்துபோம்” என்கிறது. நமது வாழ்வில் வரும் எல்லா இடையூறுகளிலும், ஏமாற்றங்களிலும், தொல்லைகளிலும் நாம் சிரித்த முகத்தோடிருக்க வேண்டுமென்று இதை எழுதியவர் கூறுகின்றாரா?  நிச்சயமாக இல்லை! சில வேளைகளில் நாம் உண்மையிலேயே துக்கப்படுகிறோம், சோர்ந்துபோகிறோம், அநியாயத்திற்குக் கோபப்படுகிறோம். அந்த வினாடியில், ஒரு புன்னகை நமக்குத் தெளிவையும், நம்பிக்கையையும் தொடர்ந்து முன்னேறுவதற்கான கிருபையையும் தர முடியும்.

உள்ளான மன நிலையைப் பொறுத்து, புன்னகை தானாக வரும் என்பதே இந்த நீதிமொழியின் உள்ளான கருத்து. ஒரு சந்தோஷமான இருதயம், சமாதானத்தோடிருக்கும், மனரம்மியமாயிருக்கும், தேவனுடைய சிறந்த நன்மைக்குத் தன்னை அர்ப்பணிக்கும். இப்படி உள்ளத்திலிருந்து சந்தோஷம் பொங்கி வெளிவரும் இருதயமிருந்தால், எந்த சூழ்நிலையையும் புன்னகையோடு எதிர்கொள்ளளலாம்.. தேவனிடத்திலுள்ள நம்பிக்கையையும் சமாதானத்தையும் பெற்று அனுபவிக்க மற்றவர்களையும் அழைக்கலாம்.