நேரடி அறிவுரைகள்
என்னுடைய இரண்டாவது குழந்தை, ‘‘பெரிய படுக்கையில் அவளுடைய சகோதரியின் அறையில் தூங்குவதற்கு மிகவும் ஆவலாயிருப்பாள். ஒவ்வொரு இரவும் நான் பிரிட்டாவை போர்வைக்குள் மூடியபின், அவளுடைய படுக்கையில் இருக்கும்படி கண்டிப்பான அறிவுரைகளை வழங்கி, தவறினால் அவளைத் தொட்டில் கட்டிலுக்கு அனுப்பிவிடுவதாக எச்சரிப்பேன். ஒவ்வொரு இரவும் நான் அவளை கூடத்தில் கண்டுபிடித்து மீண்டும், தைரியமிழந்த என்னுடைய அன்பு மகளை அவளுடைய தொட்டிலுக்கு வழி நடத்த வேண்டியிருந்தது. சில ஆண்டுகளுக்குப் பின் இந்த வழக்கத்தைக் குறித்து தெரிந்து கொண்டேன். தன்னுடைய அறையைப் பகிர்ந்து கொள்ள விரும்பாத மூத்த சகோதரி, ஒவ்வொரு நாளும் பிரிட்டாவிடம் அம்மா அவளைக் கூப்பிடுவதாகக் கேட்கிறது எனச் சொல்வாள். பிரிட்டா தன்னுடைய சகோதரியின் வார்த்தையை நம்பி, என்னைத் தேடி வந்து, இப்படியாக மீண்டும் தன்னுடைய தொட்டில் கட்டிலினுள் வந்து சேர்ந்து விடுவாள்.
தவறான சத்தத்திற்குச் செவி கொடுக்கும் போது பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். தேவன் ஒரு மனிதனை பெத்தேலுக்கு அனுப்பி, அவர் சார்பாக பேசும் படி சொல்கிறார். தேவன் தெளிவான கட்டளைகளை அவனுக்குக் கொடுக்கிறார். நீ அப்பம் புசியாமலும், தண்ணீர் குடியாமலும் போன வழியாய்த் திரும்பாமலும் இரு (1 இரா. 13:9) என கட்டளையிடுகிறார். யெரொபெயாம் அவனைத் தன்னோடு உணவருந்தும்படி அழைக்கின்றான். ஆனால் தீர்க்கதரிசி மறுத்து, தேவனுடைய அறிவுரையைப் பின்பற்றினான். ஆனால் கிழவனான ஒரு தீர்க்கதரிசி அவனை உணவருந்த அழைத்தபோது அம்மனிதன் முதலில் மறுக்கிறான். பிற்பாடு வற்புறுத்தப்படும் போது அவன் சாப்பிட்டு விடுகிறான். அங்கிருந்த மூத்தவர்கள் தேவதூதன் அவனைச் சாப்பிடக் கூறியதாகச் சொல்லி ஏமாற்றிவிட்டார்கள். நான் என்னுடைய மகள் பிரிட்டா அவள் விரும்பிய பெரிய கட்டிலில் தூங்கட்டும் என்று விரும்பியது போல, தேவனுடைய அறிவுரைக்குச் செவி கொடுக்காத அம்மனிதனைக் குறித்து தேவனும் வருந்தியிருப்பார் என நான் நினைக்கிறேன்.
நாம் தேவனை முற்றிலுமாக நம்ப வேண்டும். அவருடைய வார்த்தைகளே நம் வாழ்விற்கு பாதையைக் காட்டும். நாம் அவற்றைக் கவனிக்கவும் கீழ்ப்படியவும் ஞானமாயிருக்க வேண்டும்.
முதியோரின் ஞானம்
2010 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் வெளியான ஒரு செய்தித் தாளில் எட்டு மூத்த குடிமக்களிடமிருந்து வெளியான வாழ்க்கைக் கல்வியைக் குறித்து சிறப்பு செய்தி வெளி வந்தது. அந்த செய்தி இவ்வாறு ஆரம்பித்தது. ‘‘முதுமை உடலுக்கும் மனதுக்கும் சவால்களைக் கொண்டு வந்த போதிலும், அது வேறு சில பகுதிகளில் விரிவுக்கு வழிவகுக்கின்றது. அங்கு அளவற்ற, உணர்வு மற்றும் சமுதாயம் சார்ந்த அறிவு இருக்கிறது; அதாவது அறிஞர்கள் ஞானம் என்று வரையறுக்கும் ஒன்றின் குணாதிசயங்கள்.... அதுவே முதியோரின் ஞானம்.”
உண்மையில் ஞானமுள்ள முதியோரிடம் வாழ்க்கையைப் பற்றி கற்றுக் கொடுக்க நிறைய இருக்கிறது. ஆனால் வேதாகமத்தில் நாம் புதிதாக முடி சூட்டப்பட்ட ஓர் அரசனைச் சந்திக்கின்றோம், அவன் இந்த ஞானத்தை கண்டு கொள்ளத் தவறிவிட்டான்.
சாலமோன் அரசன் மரித்து விட்டான். 1 இராஜாக்கள் 12:3ல் நாம் வாசிப்பது, ‘‘இஸ்ரவேல் சபையனைத்தும் வந்து ரெகொபெயாமை நோக்கி” ஒரு வேண்டுகோளை வைக்கின்றனர். அவர்கள் அந்த புதிய ராஜாவிடம், அவருடைய தகப்பன் சுமத்தின கடினமான வேலையையும், வரிச்சுமையையும் லேசாக்கும். அப்பொழுது அவர்கள் ரெகொபெயாமை உண்மையாய்ச் சேவிப்பதாகச் சொல்கின்றனர்.
முதலில் இந்த இளம் அரசன் முதியோரை ஆலோசிக்கின்றான் (வச. 6). ஆனால் அவர்களின் ஆலோசனையை நிராகரித்துவிட்டு, அவனோடு வளர்ந்த வாலிபர் கொடுத்த முட்டாள்தனமான ஆலோசனையை ஏற்றுக் கொள்கிறான். (வச. 8) அவன் ஜனங்கள் மீது இன்னும் அதிகமான பாரத்தைச் சுமத்தினான். அவனுடைய அவசர புத்தி அவனுடைய ராஜ்ஜியத்தின் பெரும்பகுதியை இழக்கச் செய்தது.
நம்மனைவருக்கும் அனுபவமிக்கவர்களிடமிருந்து வரும் ஆலோசனை தேவை, சிறப்பாக தேவனோடு நடந்து, அவருடைய ஆலோசனைக்குச் செவி கொடுத்தவர்களின் ஆலோசனை வேண்டும். அவர்கள் சேர்த்து வைத்துள்ள, அவர்களுக்கு தேவன் கொடுத்துள்ள ஞானத்தை நினைத்துப் பார்ப்போம். அவர்களிடம் தேவனைப் பற்றி பகிர்ந்து கொள்ள நிறைய அனுபவமிருக்கிறது. நாம் அவர்களைத் தேடிச் சென்று அவர்களின் ஞானத்திற்குச் செவி கொடுப்போம்.
இப்பொழுதிற்கு பிரியாவிடை
என்னுடைய பேத்தி எலிசாவும் நானும் குட் பை சொல்லும்போது, ஒரு பழக்கத்தை வழக்கமாகக் கொண்டிருந்தோம். நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் புயங்களால் அணைத்து சத்தமாக ஓலமிட்டு, போலியாக ஏங்கிக் கொண்டு சுமார் இருபது நொடிகள் இருப்போம். பின்னர் நாங்கள் சற்று பின் நகர்ந்து “பார்ப்போம்” என்று கூறி திரும்பி விடுவோம். இந்த முட்டாள்தனமான செயலைச் செய்தாலும், நாங்கள் மீண்டும் சீக்கிரத்தில் சந்திப்போம் என்பதும் தெரியும்.
சில வேளைகளில் நாம் மிகவும் நேசிக்கும் சிலரின் பிரிவு வேதனையைத் தரும். அப்போஸ்தலனாகிய பவுல் எபேசு சபையின் மூப்பரிடம் பிரியாவிடை பெற்றபோது அவர்களெல்லாரும் மிகவும் அழுது, “என் முகத்தை நீங்கள் இனிப் பார்க்க மாட்டீர்களென்று அவன் சொன்ன வார்த்தையைக் குறித்து அதிகமாய் துக்கப்பட்டு” பவுலின் கழுத்தைக் கட்டிக் கொண்டார்கள் (அப். 20:37-38).
மிக அதிக துக்கம் என்பது சாவினால் பிரிக்கப்படும்போது தான் வரும். ஏனெனில் அவர்களுக்கு வாழ்வில் கடைசியாக பிரியாவிடையளிக்கிறோம். அத்தகைய பிரிவை நினைத்துப் பார்க்க முடியாது. நாம் துக்கிப்போம், அழுவோம். நாம் நேசித்த ஒருவரை மீண்டும் அணைக்கவே முடியாது என்ற இருதயத்தை நொறுக்கும் துக்கத்தை நம்மால் எதிர்கொள்ள முடியாது.
ஆனாலும் நாம் நம்பிக்கையற்ற மற்றவர்களைப் போல துக்கிப்பதில்லை. எதிர்காலத்தில் மீண்டும் இணைவோம் என பவுல் எழுதுகிறார். இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே (1 தெச. 4:13-18). மேலும் அவர் சொல்லுகிறார், ‘‘கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும் பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கி வருவார்”. இயேசுவுக்குள் மரித்தவர்களும், உயிரோடிருக்கிறவர்களும் தேவனோடு இணைந்து கொள்வோம். எத்தனை இன்பமான இணைப்பு.
எல்லாவற்றிற்கும் மேலாக நாம் இயேசுவோடு எப்பொழுதும் இருப்போம். இதுவே நம்முடைய நித்திய நம்பிக்கை.
ஒரு சிறு குழந்தையைப் போல
அந்த சிறு பெண் மகிழ்ச்சியாகவும், நளினமாகவும் ஆராதனை இசைக்குத் தகுந்தாற்போல் அசைந்தாள். அவள் மட்டும் தான் இருக்கைகளுக்கிடையேயுள்ள நடைபாதையில் நின்றதால் அவள் சுழல்வதற்கும், புயங்களை அசைப்பதற்கும், பாதங்களை உயர்த்துவதற்கும் தடையில்லாமலிருந்தது அவளுடைய தாயின் முகத்தில் ஒரு புன்முறுவல், அவள் இந்த சிறு பெண்ணின் அசைவுகளை நிறுத்த முயற்சிக்கவில்லை.
இதைப் பார்த்தபோது, என்னுடைய இருதயமும் அவளோடு இணைந்து ஆட விரும்பியது. ஆனால் செய்யவில்லை. நீண்ட நாட்களுக்கு முன்னரே, குழந்தைப் பருவத்தின் மகிழ்ச்சியையும், வியப்பையும், கபடற்ற மனதுடன் தன் உணர்வற்று வெளிப்படுத்தும் குணத்தையும் இழந்துவிட்டேன். நாம் வளரும் போது முதிர்ச்சியடைந்து குழந்தை தன்மையை விட்டுவிட எதிர்பார்க்கப்படுகிறோம். ஆனால் நாம் தேவனோடுள்ள உறவுகளில் மகிழ்ச்சியையும், வியப்பையும் விட்டுவிட எதிர்பார்க்கப்படவில்லை.
இயேசு இவ்வுலகில் வாழ்ந்த நாட்களில் அவர் குழந்தைகளை வரவேற்றார். அடிக்கடி தன்னுடைய போதனைகளில் குழந்தைகளைக் குறிப்பிடுகின்றார் (மத். 11:25 ; 18:3; 21:6). ஒரு சமயத்தில், பெற்றோர் தம் குழந்தைகளை இயேசு ஆசிர்வதிக்கும்படி அவரிடம் கொண்டு வந்தபோது, இயேசுவின் சீடர்கள் அவர்களைத் தடை செய்தனர். சீடர்களை இயேசு கடிந்து கொண்டார். அவர், சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள். அவர்களைத் தடை பண்ணாதிருங்கள். தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது (மாற்கு 10:14) எனக் கூறினார். தேவன் குழந்தை போன்ற குணநலன்களையே கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளத் தகுந்த குணம் எனக் குறிப்பிடுகிறார் - அவை மகிழ்ச்சி, வியப்பு, எளிமை, சார்ந்திருத்தல், நம்பிக்கை, மற்றும் தாழ்மை.
குழந்தையைப் போன்ற அதிசயித்தலும், மகிழ்தலும் அவரை வரவேற்கும்படி நம்முடைய இருதயங்களைத் திறந்து தரும். அவருடைய புயங்களுக்குள்ளே நாம் ஓடி வரும்படி அவர் நமக்காகக் காத்திருக்கின்றார்.
புல்தரையா அல்லது கிருபையா
என்னுடைய நண்பன் ஆர்ச்சி விடுமுறைக்குப்பின் தன் வீட்டிற்குத் திரும்பின போது, அவனுடைய அண்டை வீட்டுக்காரன் ஒரு மரவேலியை இவனுடைய நிலத்தினுள் ஐந்து அடி உள்ளே அமைத்திருப்பதைக் கண்டான். அந்த மரவேலியை நகர்த்தும்படி அண்டை வீட்டுக்காரனிடம் சொல்லி பல வாரங்கள் கடந்தன. என் நண்பன் அந்த நகர்த்தும் வேலையில் உதவுவதாகவும். பாதி செலவை ஏற்றுக் கொள்வதாகவும் சொல்லிப் பார்த்தான். ஒன்றும் பலனளிக்கவில்லை. ஆர்ச்சி இதனைக் குறித்து பொது வேலை அதிகாரிகளிடம் முறையிட்டிருக்கலாம். ஆனால் அவனுடைய அண்டை வீட்டுக்காரன் தேவனுடைய கிருபையைப் பற்றி சற்றேனும் தெரிந்து கொள்ளட்டும் என்பதற்காக, அவன் இந்த உரிமையை விட்டு விட தீர்மானித்து, அந்த வேலி அப்படியேயிருக்க அனுமதித்தான்.
“ஆர்ச்சி ஒரு கோழை” என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் அவன் ஓர் உயர்ந்த, வலுவான மனிதன். அவன் ஒரு சிறு புல்தரையை விட கிருபையை விரும்பினான்.
நான் ஆபிரகாமையும், லோத்துவையும் நினைத்துப் பார்க்கின்றேன். அவர்களின் மந்தைகளின் பெருக்கம், அவர்கள் ஒருமித்து குடியிருக்க அந்த பூமி தாங்கக் கூடாதிருந்தது. எனவே ஆபிரகாமின் மந்தை மேய்ப்பருக்கும், லோத்துவின் மந்தை மேய்ப்பருக்கும் இடையே வாக்குவாதம் உண்டாயிற்று. அக்காலத்திலே கானானியரும், பெரிசியரும் அத்தேசத்தில் குடியிருந்தார்கள் (ஆதி. 13:7). லோத்து அந்த பகுதியில் மிகச் சிறந்ததை தேர்ந்து கொண்டான். முடிவில் எல்லாவற்றையும் இழந்தான். ஆபிரகாம் மீதியானதை எடுத்துக் கொண்டு, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தைப் பெற்றான் (வச. 12-17).
நமக்கு உரிமையிருக்கிறது. நாம் அதனை கேட்டுப் பெற முடியும், சிறப்பாக பிறருடைய உரிமை அதில் இணைந்திருக்கும்போது நாம் கேட்டுப் பெற்றுக் கொள்ள முடியும். சில வேளைகளில் நாம் அவற்றை வலியுறுத்த வேண்டியுள்ளது. பவுலும் சனகெரிப் சங்கம் சட்ட விரோதமாக செயல்பட்டபோது (அப். 23:1-3) உரிமை கோரினார். ஆனால் நாம் விட்டுக் கொடுக்கத் தேர்ந்து கொள்ளும்போது இவ்வுலகிற்கு ஒரு சிறந்த வழியைக் காட்ட முடியும். இதனையே வேதாகமம் “சாந்தம்” என்றழைக்கிறது. பலவீனம் என்றல்ல பெலமும் தேவனுடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும்.
தேவன் நம்மை நிரப்பும் போது
நான் என்ன செய்தேன்? இது என் வாழ்வை மிகவும் களிகூரச் செய்த நேரமாயிருந்திருக்க வேண்டும். அதிலும் நான் தனிமையில் தள்ளப்பட்ட நேரம், என்னுடைய கல்லூரி படிப்பிற்குப் பின்னர் எனக்கு கிடைத்த முதல் வேலை. நான் வளர்ந்த பட்டணத்திலிருந்து சில நூறு மைல்களுக்கப்பால் உள்ள ஓர் இடத்தில் கிடைத்தது. ஆனால் அந்த முதல் அடியின் சுகம் சீக்கிரத்தில் மறைந்தது. எனக்கு ஒரு சிறிய தங்கும் இடம் கிடைத்தது. அதில் இருக்கைகள் மற்றும் படுக்கைகள் இல்லை. அந்தப் பட்டணம் நான் இதற்கு முன் அறியாத இடம். அங்கு யாரையும் எனக்குத் தெரியாது. அந்த வேலை எனக்கு ஆர்வமளிப்பதாக இருந்தும், தனிமை என்னை மிகவும் வாட்டியது.
ஓர் இரவில் நான் சுவரில் சாய்ந்து உட்கார்ந்திருந்தேன். நான் என்னுடைய வேதாகமத்தைத் திறந்தேன். சங்கீதம் 16ல் நிலைத்து விட்டேன். அதில் வசனம் 11ல் தேவனுடைய சமூகத்தில் பரிபூரண ஆனந்தம் உண்டு எனக் கூறுகிறது. நான், தேவனே இந்த வேலை எனக்குச் சரியானது தான். ஆனால் நான் தனிமையை உணருகிறேன். தயவு கூர்ந்து நான் உம்முடைய சமூகத்தை உணரும்படிச் செய்யும் என ஜெபித்தேன். நான் இந்த வேண்டுதலை வெவ்வேறு வகைகளில் சில வாரங்களாகச் செய்தேன். சில இரவுகள் கடந்த போது என்னுடைய தனிமை உணர்வு சற்று தணிந்தது. நான் தேவனுடைய பிரசன்னத்தை ஆழ்ந்து அனுபவிக்க ஆரம்பித்தேன். சில இரவுகளில் தனிமையாகப் பிரிக்கப்பட்ட வேதனையை இன்னும் உணர்கிறேன்.
நான் இந்த வார்த்தையை மீண்டும் வாசிக்கும் போது, ஒவ்வொரு இரவும் என் இருதயம் இந்த வசனத்தில் நிலைத்து விடும். தேவன் படிப்படியாக என் நம்பிக்கையை ஆழப்படுத்தினார். அவருடைய உண்மையை, இதற்கு முன் அனுபவியாத விதத்தில் உணர்ந்தேன். என்னுடைய வேலை, என்னுடைய இருதயத்தை நான் அவரிடம் ஊற்றும்படியாக கொடுக்கப்பட்ட வேலை என்பதைக் கற்றுக் கொண்டேன். அவருடைய வாக்கின் மீது நம்பிக்கை வைத்து, அவருடைய ஆவியில் என்னை நிரப்பும்படி, நான் பொறுமையாக அவருடைய செயலுக்காகக் காத்திருக்கின்றேன்.
தேவனுக்கு விலையேறப் பெற்றவர்கள்
அவருடைய பெயர் டேவிட். ஆனால் அநேகர் அவரை தெரு வயலின்காரர் எனக் கூப்பிடுவதுண்டு. டேவிட் ஒரு வயோதிபர், எப்பொழுதும் பரட்டைத் தலையோடு எங்கள் பட்டணத்தின் பிரபல இடங்களில், வழக்கமாக தன்னுடைய வயலின் மீட்டும் திறமையினால் கடந்து செல்வோரை கவரும் ஓர் இசைக் கலைஞன். அவருடைய இசைக்குப் பதிலாக அப்பகுதியைக் கடந்து செல்வோர் ஒரு சில ருபாய்களை, நடைபாதையில் திறந்து வைக்கப்பட்டிருக்கும் அவருடைய வயலின் பெட்டியில் போடுவர். டேவிட் புன்னகையோடு தன் தலையைத் தாழ்த்தி நன்றி தெரிவித்து விட்டு, தன்னுடைய இசையைத் தொடர்வார்.
சமீப காலத்தில் டேவிட் மரித்து விட்டார். அவருடைய இரங்கல் செய்தி அங்குள்ள நாளேட்டில் வந்திருந்தது. அதில், அவர் அநேக மொழிகளைப் பேசுபவரெனவும், ஒரு புகழ் பெற்ற பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றவரெனவும், அந்த தேச செனட்டிற்காக பல ஆண்டுகளுக்கு முன் போட்டியிட்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவருடைய வெளித் தோற்றத்தை வைத்து அவரை மதிப்பிட்ட சிலர் அவருடைய சாதனைகளைக் கேட்டு, தங்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.
‘‘தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார்” (ஆதி. 1:27) என வேதாகமம் சொல்லுகிறது. இது நாம் நமக்குள்ளாகவே ஒரு மதிப்பைக்கொண்டுள்ளோம் என்பதை வெளிப்படுத்துகிறது. இந்த மதிப்பு நம்முடைய வெளிப்புற தோற்றத்தையோ, நாம் எதை அடைந்துள்ளோம் என்பதையோ, அல்லது பிறர் நம்மைக் குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பதையோ பொருத்ததல்ல. நாம் பாவத்தில் சிக்குண்டு தேவனை விட்டு விலகினாலும், தேவன் நம்மை மிகவும் நேசித்து, மதித்து அவருடைய ஒரே பேரான சொந்தக் குமாரனை அனுப்பி, இரட்சிப்பை பெற்றுக் கொள்ளவும், அவரோடு நித்தியத்தில் வாழவும் வழியைக் காட்டினார்.
நாம் தேவனால் நேசிக்கப்படுகிறோம். நம்மைச் சுற்றியுள்ளவர்களும் அவருக்கு விலையேறப் பெற்றவர்கள். நாம் நம்முடைய அன்பை பிறரோடு பகிர்ந்து, நாம் தேவன் மீது வைத்துள்ள அன்பைக் காட்டுவோம்.
தொலைபேசி மண்டலம்
கைபேசியின் ஒரு முக்கிய நன்மையென்னவெனின், நாம் பிறரோடு தடையில்லாமல் எங்கேயிருந்தாலும் தொடர்பு கொள்ள முடியும். அதன் விளைவாக அநேகர் வாகனங்களை ஓட்டும்போதும் பேசுகின்றனர், குறுஞ் செய்திகளை அனுப்புகின்றனர். அதன் விளைவாக பயங்கர, வாகன விபத்துக்களைச் சந்திக்கின்றனர். இத்தகைய விபரீதங்களைத் தவிர்க்க, உலகின் பல பகுதிகளில் வாகனம் ஓட்டும் போது உள்ளாகும் கவனச் சிதறலை சட்ட விரோதமானதாக அறிவித்திருக்கின்றனர். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு உதவியாக கைப்பேசி மண்டலத்தைத் தெரிவிக்கும் குறியீடுகள் வைக்கப்பட்டுள்ளன. அங்கு அவர்கள் சாலையை விட்டு விலகி வந்து பாதுகாப்பாக கைபேசியில் பேசவும், மனம் விரும்பிய செய்திகளை அனுப்பவும் முடியும்.
இது வாகனம் ஓட்டும்போது கைப்பேசியை பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு நல்ல திட்டமாகும். இன்னொரு வகையான தொடர்பு சாதனமுண்டு. அதற்கு கட்டுப்பாடு இல்லை. அதுதான் ஜெபம். தேவன் நம்மை எங்கிருந்தாலும், போகும் போதும், வரும் போதும் அல்லது உட்கார்ந்திருந்தாலும் அவரைக் கூப்பிடச் சொல்லுகிறார். புதிய ஏற்பாட்டில் பவுல் தேவனோடு தொடர்பு கொள்ள நினைக்கும் ஒவ்வொருவருக்கும் சொல்லுவது, ‘‘இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்” (1 தெச. 5:17). மேலும் பவுல் ‘‘எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்;” (வ.16), எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ் செய்யுங்கள்” (வச. 18) என்று ஊக்கப்படுத்துகின்றார். தேவன் நம்முடைய மகிழ்ச்சியையும், நன்றியறிதலையும் தேவன் மீதுள்ள நம்பிக்கையின் வெளிப்பாடுகளாகவும், மேலும் கிறிஸ்துவின் மூலம் தேவனிடத்தில் தொடர்ந்து ஜெபத்தில் பாதுகாப்பாகவும் இருக்க அழைக்கின்றார்.
நம்முடைய அவசர குரலுக்கும் அல்லது ஒரு நீண்ட உரையாடலுக்கும் தேவன் எப்பொழுதும் தயாராகவே இருக்கின்றார். நாம் அவரோடு நம்முடைய மகிழ்ச்சி, நன்றியறிதல், தேவைகள், கேள்விகள் மற்றும் நம்முடைய ஆவல்களையும் தொடர்ந்து, முடிவில்லாமல் பகிர்ந்து கொள்ள நம்மை அழைக்கின்றார் (எபி. 4:15-16) நாம் எப்பொழுதும் ஜெப மண்டலத்திலிருக்கிறோம்.
நாங்கள் உடைந்து போவதில்லை
நான் கலிபோர்னிய குடிமகன். வெப்பமான அனைத்தையும் விரும்புபவன், குளிரான எல்லா பொருட்களையும் விட்டு விலகுபவன். ஆனாலும் பனிச்சூழலைக் காட்டும் அழகிய புகைப்படங்களை ரசிப்பவன். எனவே, இல்லினாய்ஸ்ஸிலிருக்கும் எனது நண்பன், அவன் ஜன்னலருகே வைத்திருந்த ஒரு மரக்கன்று குளிர்காலத்தில் தோன்றும் காட்சியைப் படம் பிடித்து அனுப்பியிருந்ததைப் பார்த்துச் சிரித்தேன். நான் அதைப் பார்த்து பாராட்டுவதை விட்டு விட்டு வருத்தத்திற்குள்ளானேன். ஏனெனில், அந்த இளம் மரத்தின் முடிச்சுகளான இலையற்ற கிளைகள், வெண்ணிற பனியின் எடையினால் தாழ்ந்து கிடந்தன.
எவ்வளவு காலம் இந்த வளைந்த கிளைகள் பழுவான பனியைத் தாங்கிக் கொண்டு உடைந்து போகாமல் இருக்க முடியும்? இந்த எடை எப்பொழுது வேண்டுமானாலும் இம்மரத்தின் கிளையை உடைத்து விடலாம் என பயமுறுத்திக் கொண்டிருந்தது. இந்த காட்சி, கவலையின் பாரத்தினால் தொங்கிப் போன எனது தோள்களை நினைவுபடுத்தியது.
மிகப் பெரிய பொக்கிஷங்கள் யாவும் இந்த உலகத்திற்குரியதல்ல, அவை நிலையானவை அல்ல என இயேசு உறுதியாகக் கூறி, உங்களுடைய கவலையின் எண்ணங்களை விட்டு விடுங்கள் என்கிறார். இவ்வுலகைப் படைத்து, அதைப் பாதுகாத்து வருபவர் அவருடைய பிள்ளைகளை நேசித்து அவர்களுக்குத் தேவையானவற்றைக் கொடுப்பது அதிக நிச்சயம். எனவே நாம் நம்முடைய விலையேறப்பெற்ற நேரத்தைக் கவலையில் செலவழிக்க வேண்டாம். தேவன் நம் தேவைகளையறிவார். அவர் நம்மை கவனித்துக் கொள்வார் (மத். 6:19-32).
ஆனால் நாம் கவலைகளுக்குள்ளாக இழுக்கப்படுகிறோம் என்பதையும் அவர் அறிவார். அவர் நம்மை முதலாவது அவரிடம் வரும்படி அழைக்கிறார். அவருடைய பிரசன்னத்தையும் நம்புங்கள் என்கிறார். உங்களுடைய அந்தந்த நாளின் தேவைகளை அவர் பார்த்துக் கொள்வார். ஒவ்வொரு நாளும் விசுவாசத்தில் வாழுங்கள் என்கிறார் (வச. 33-34).
இவ்வுலக வாழ்வில் நம் தோள்களை தொங்கச் செய்யும், நம்மை மேற்கொள்ளும் சோதனைகளையும் நிலையற்ற காரியங்களையும் நாம் சந்திக்கின்றோம். நம் கவலையின் பாரத்தினால் தற்காலிகமாக வளைந்து போகலாம். ஆனால் நாம் தேவனை நம்பும் போது நாம் உடைந்து போவதில்லை.