என்னுடைய நண்பன் ஆர்ச்சி விடுமுறைக்குப்பின் தன் வீட்டிற்குத் திரும்பின போது, அவனுடைய அண்டை வீட்டுக்காரன் ஒரு மரவேலியை இவனுடைய நிலத்தினுள் ஐந்து அடி உள்ளே அமைத்திருப்பதைக் கண்டான். அந்த மரவேலியை நகர்த்தும்படி அண்டை வீட்டுக்காரனிடம் சொல்லி பல வாரங்கள் கடந்தன. என் நண்பன் அந்த நகர்த்தும் வேலையில் உதவுவதாகவும். பாதி செலவை ஏற்றுக் கொள்வதாகவும் சொல்லிப் பார்த்தான். ஒன்றும் பலனளிக்கவில்லை. ஆர்ச்சி இதனைக் குறித்து பொது வேலை அதிகாரிகளிடம் முறையிட்டிருக்கலாம். ஆனால் அவனுடைய அண்டை வீட்டுக்காரன் தேவனுடைய கிருபையைப் பற்றி சற்றேனும் தெரிந்து கொள்ளட்டும் என்பதற்காக, அவன் இந்த உரிமையை விட்டு விட தீர்மானித்து, அந்த வேலி அப்படியேயிருக்க அனுமதித்தான்.

“ஆர்ச்சி ஒரு கோழை” என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் அவன் ஓர் உயர்ந்த, வலுவான மனிதன். அவன் ஒரு சிறு புல்தரையை விட கிருபையை விரும்பினான்.

நான் ஆபிரகாமையும், லோத்துவையும் நினைத்துப் பார்க்கின்றேன். அவர்களின் மந்தைகளின் பெருக்கம், அவர்கள் ஒருமித்து குடியிருக்க அந்த பூமி தாங்கக் கூடாதிருந்தது. எனவே ஆபிரகாமின் மந்தை மேய்ப்பருக்கும், லோத்துவின் மந்தை மேய்ப்பருக்கும் இடையே வாக்குவாதம் உண்டாயிற்று. அக்காலத்திலே கானானியரும், பெரிசியரும் அத்தேசத்தில் குடியிருந்தார்கள் (ஆதி. 13:7). லோத்து அந்த பகுதியில் மிகச் சிறந்ததை தேர்ந்து கொண்டான். முடிவில் எல்லாவற்றையும் இழந்தான். ஆபிரகாம் மீதியானதை எடுத்துக் கொண்டு, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தைப் பெற்றான் (வச. 12-17).

நமக்கு உரிமையிருக்கிறது. நாம் அதனை கேட்டுப் பெற முடியும், சிறப்பாக பிறருடைய உரிமை அதில் இணைந்திருக்கும்போது நாம் கேட்டுப் பெற்றுக் கொள்ள முடியும். சில வேளைகளில் நாம் அவற்றை வலியுறுத்த வேண்டியுள்ளது. பவுலும் சனகெரிப் சங்கம் சட்ட விரோதமாக செயல்பட்டபோது (அப். 23:1-3) உரிமை கோரினார். ஆனால் நாம் விட்டுக் கொடுக்கத் தேர்ந்து கொள்ளும்போது இவ்வுலகிற்கு ஒரு சிறந்த வழியைக் காட்ட முடியும். இதனையே வேதாகமம் “சாந்தம்” என்றழைக்கிறது. பலவீனம் என்றல்ல பெலமும் தேவனுடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும்.