அவருடைய பெயர் டேவிட். ஆனால் அநேகர் அவரை தெரு வயலின்காரர் எனக் கூப்பிடுவதுண்டு. டேவிட் ஒரு வயோதிபர், எப்பொழுதும் பரட்டைத் தலையோடு எங்கள் பட்டணத்தின் பிரபல இடங்களில், வழக்கமாக தன்னுடைய வயலின் மீட்டும் திறமையினால் கடந்து செல்வோரை கவரும் ஓர் இசைக் கலைஞன். அவருடைய இசைக்குப் பதிலாக அப்பகுதியைக் கடந்து செல்வோர் ஒரு சில ருபாய்களை, நடைபாதையில் திறந்து வைக்கப்பட்டிருக்கும் அவருடைய வயலின் பெட்டியில் போடுவர். டேவிட் புன்னகையோடு தன் தலையைத் தாழ்த்தி நன்றி தெரிவித்து விட்டு, தன்னுடைய இசையைத் தொடர்வார்.

சமீப காலத்தில் டேவிட் மரித்து விட்டார். அவருடைய இரங்கல் செய்தி அங்குள்ள நாளேட்டில் வந்திருந்தது. அதில், அவர் அநேக மொழிகளைப் பேசுபவரெனவும், ஒரு புகழ் பெற்ற பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றவரெனவும், அந்த தேச செனட்டிற்காக பல ஆண்டுகளுக்கு முன் போட்டியிட்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவருடைய வெளித் தோற்றத்தை வைத்து அவரை மதிப்பிட்ட சிலர் அவருடைய சாதனைகளைக் கேட்டு, தங்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

‘‘தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார்” (ஆதி. 1:27) என வேதாகமம் சொல்லுகிறது. இது நாம் நமக்குள்ளாகவே ஒரு மதிப்பைக்கொண்டுள்ளோம் என்பதை வெளிப்படுத்துகிறது. இந்த மதிப்பு நம்முடைய வெளிப்புற தோற்றத்தையோ, நாம் எதை அடைந்துள்ளோம் என்பதையோ, அல்லது பிறர் நம்மைக் குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பதையோ பொருத்ததல்ல. நாம் பாவத்தில் சிக்குண்டு தேவனை விட்டு விலகினாலும், தேவன் நம்மை மிகவும் நேசித்து, மதித்து அவருடைய ஒரே பேரான சொந்தக் குமாரனை அனுப்பி, இரட்சிப்பை பெற்றுக் கொள்ளவும், அவரோடு நித்தியத்தில் வாழவும் வழியைக் காட்டினார்.

நாம் தேவனால் நேசிக்கப்படுகிறோம். நம்மைச் சுற்றியுள்ளவர்களும் அவருக்கு விலையேறப் பெற்றவர்கள். நாம் நம்முடைய அன்பை பிறரோடு பகிர்ந்து, நாம் தேவன் மீது வைத்துள்ள அன்பைக் காட்டுவோம்.