நான் கலிபோர்னிய குடிமகன். வெப்பமான அனைத்தையும் விரும்புபவன், குளிரான எல்லா பொருட்களையும் விட்டு விலகுபவன். ஆனாலும் பனிச்சூழலைக் காட்டும் அழகிய புகைப்படங்களை ரசிப்பவன். எனவே, இல்லினாய்ஸ்ஸிலிருக்கும் எனது நண்பன், அவன் ஜன்னலருகே வைத்திருந்த ஒரு மரக்கன்று குளிர்காலத்தில் தோன்றும் காட்சியைப் படம் பிடித்து அனுப்பியிருந்ததைப் பார்த்துச் சிரித்தேன். நான் அதைப் பார்த்து பாராட்டுவதை விட்டு விட்டு வருத்தத்திற்குள்ளானேன். ஏனெனில், அந்த இளம் மரத்தின் முடிச்சுகளான இலையற்ற கிளைகள், வெண்ணிற பனியின் எடையினால் தாழ்ந்து கிடந்தன.

எவ்வளவு காலம் இந்த வளைந்த கிளைகள் பழுவான பனியைத் தாங்கிக் கொண்டு உடைந்து போகாமல் இருக்க முடியும்? இந்த எடை எப்பொழுது வேண்டுமானாலும் இம்மரத்தின் கிளையை உடைத்து விடலாம் என பயமுறுத்திக் கொண்டிருந்தது. இந்த காட்சி, கவலையின் பாரத்தினால் தொங்கிப் போன எனது தோள்களை நினைவுபடுத்தியது.

மிகப் பெரிய பொக்கிஷங்கள் யாவும் இந்த உலகத்திற்குரியதல்ல, அவை நிலையானவை அல்ல என இயேசு உறுதியாகக் கூறி, உங்களுடைய கவலையின் எண்ணங்களை விட்டு விடுங்கள் என்கிறார். இவ்வுலகைப் படைத்து, அதைப் பாதுகாத்து வருபவர் அவருடைய பிள்ளைகளை நேசித்து அவர்களுக்குத் தேவையானவற்றைக் கொடுப்பது அதிக நிச்சயம். எனவே நாம் நம்முடைய விலையேறப்பெற்ற நேரத்தைக் கவலையில் செலவழிக்க வேண்டாம். தேவன் நம் தேவைகளையறிவார். அவர் நம்மை கவனித்துக் கொள்வார் (மத். 6:19-32).

ஆனால் நாம் கவலைகளுக்குள்ளாக இழுக்கப்படுகிறோம் என்பதையும் அவர் அறிவார். அவர் நம்மை முதலாவது அவரிடம் வரும்படி அழைக்கிறார். அவருடைய பிரசன்னத்தையும் நம்புங்கள் என்கிறார். உங்களுடைய அந்தந்த நாளின் தேவைகளை அவர் பார்த்துக் கொள்வார். ஒவ்வொரு நாளும் விசுவாசத்தில் வாழுங்கள் என்கிறார் (வச. 33-34).

இவ்வுலக வாழ்வில் நம் தோள்களை தொங்கச் செய்யும், நம்மை மேற்கொள்ளும் சோதனைகளையும் நிலையற்ற காரியங்களையும் நாம் சந்திக்கின்றோம். நம் கவலையின் பாரத்தினால் தற்காலிகமாக வளைந்து போகலாம். ஆனால் நாம் தேவனை நம்பும் போது நாம் உடைந்து போவதில்லை.