வகை  |  odb

எப்போதும் இல்லாத நல்ல மாற்றம்

சால்மன் மீன் பிடிக்கும் ஒரு குழுவைப் பற்றிய ஒரு கதை உண்டு. மீன் பிடிப்பதற்காக நாள் முழுதும் செலவழித்துவிட்டு, ஒரு ஸ்காட்லாந்து விடுதியில் கூடி இருந்தார்கள். அந்தக் குழுவில் ஒருவர் தான் பிடித்த மீனைப் பற்றிக் கூறும்போது, கையை ஆட்டிப் பேசியதில், ஒரு கண்ணாடிக் குவளை சுவரில் பட்டு நொறுங்கி, வெள்ளைச் சுவரில் கறையை ஏற்படுத்தியது. அந்த மனிதர் விடுதிக் காப்பாளரிடம் மன்னிப்புக் கேட்டதோடு, தான் ஏற்படுத்திய சேதத்திற்கு பணம் செலுத்துவதாகக் கூறினார். ஆனாலும் சேதமடைந்த அந்தச் சுவரை அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அருகில் உட்கார்ந்திருந்த ஒருவர் “கவலைப் படவேண்டாம்” என்று சொல்லி, எழுந்து வந்து, தன்னிடமிருந்த ஒரு தூரிகையால், அந்த கறையைச் சுற்றி வரைய ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் அந்தக் கறை ஒரு கலைமானாக மாறி இருந்தது. அந்த மனிதர் விலங்குகளை அழகாகப் படம் வரையக்கூடிய ஸ்காட்லாந்தைச் சேர்ந்த
சர் இ. ஹெச். லேண்ட்ஸியர்.

சங்கீதம் 51ஐ எழுதிய, இஸ்ரவேலின் மிகச் சிறந்த இராஜாவான தாவீது, தன்னுடைய பாவங்கள் காரணமாக, தன் மீதும், தன் இராஜ்யத்தின் மீதும் அவமானத்தை வரப்பண்ணினான். தன்னுடைய நண்பர்களில் ஒருவனின் மனைவியை அபகரித்ததோடு, அந்த நண்பன் மரணம் அடையும்படி செய்தான். இந்த இரண்டு செயல்களுக்குமே மரணம்தான் தண்டனை. அவன் வாழ்க்கையே பாழானதாகத் தோன்றியது. ஆனால் அவன் கடவுளிடம் மன்றாடினான்: “உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்” (வச. 12).

தாவீதைப் போல, நாமும் கடந்த காலத்தில் ஏதோ அவமானமான செயல்களைச் செய்திருக்கலாம். அந்த நினைவுகள் நம்மைத் துரத்தி, இரவில் நம்மை தூக்கம் இழக்கச் செய்யலாம். நாம் செய்த காரியங்களை அழிக்க முடியாதா அல்லது சரியாக மீண்டும் செய்ய முடியாதா என்று நினைக்கலாம். 

ஆனால் கடவுளின் கிருபை நம் பாவங்களை மன்னிப்பதோடு, அவற்றின்மூலம் நம்மை முன்பை விட நல்லபடியாக மாற்றக்கூடியது. கடவுள் எதையுமே வீண் செய்வதில்லை.

தைரியமான நிலைப்பாடு

இரண்டாம் உலகப் போரின் ஆரம்பத்தில், ஜெர்மானிய நாசிக்கள் (Nazis) தெரஸா ப்ரெகெரோவாவின் நாடான போலந்தை முற்றுகையிட்டபோது, அவள் பதின்பருவத்தில் இருந்தாள். நாசிக்களால் கைது செய்யப்பட்ட யூதர்கள் காணாமல் போன, ஹோலோகாஸ்ட் என்று அழைக்கப்பட்ட அழிவின் காலத்தின் ஆரம்பம் அது. தெரஸாவும் அவள் நாட்டைச் சேர்ந்த பலரும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து, நாசிக்களின் அழிவிலிருந்து, வார்ஸா நகரில் இருந்த யூதர்களுக்கான சிறையிருப்பிலிருந்து, தங்கள் அயலகத்தார்களைக் காப்பாற்றினார்கள். பிற்காலத்தில் தெரஸா இந்த போர் குறித்த ஒரு சிறந்த வரலாற்று வல்லுனராக விளங்கினார். ஆனால் எருசலேமின் யாத் வாஷேம் ஹோலோகாஸ்ட் நினைவிடத்தில் (Yad Vashem Holocaust Memorial) அவள் பெயர் இடம்பெறுவதற்கு, கொடுமைக்கு எதிராக அவள் தைரியமாக எதிர்த்து நின்றதே காரணம்.

தீங்கை எதிர்த்து நிற்க தைரியம் தேவை. “மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அதிகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு” என்று பவுல் எபேசு சபைக்குக் கூறினார். கண்களுக்குப் புலப்படாத இந்த எதிர்ப்புகளை நம்மால் தனியே எதிர்கொள்ள முடியாது என்பது தெளிவாகத் தெரிகிறது. அதனால் “பிசாசின் தந்திரங்களை எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி” (வச. 11) கடவுள் நமக்குத் தேவையான ஆவிக்குரிய ஆயுதங்களைக் (தேவனுடைய சர்வாயுத வர்க்கம்) கொடுத்துள்ளார்.

அப்படிப்பட்ட தைரியமான நிலைப்பாட்டிற்கு என்ன செய்ய வேண்டும்? அநீதியை எதிர்த்து வேலை செய்ய வேண்டியதிருக்கலாம். பாதிக்கப்பட்ட அல்லது ஆபத்தில் இருக்கும் நமக்குத் தெரிந்த ஒருவருக்காக நாம் தலையிட்டு உதவ வேண்டியதிருக்கலாம். எந்த விதமான குழப்பமாக இருந்தாலும், நாம் தைரியமாக இருக்க முடியும் – ஏனென்றால், கடவுளுக்காக தீமையை எதிர்த்து நிற்கத் தேவையானவற்றை அவர் ஏற்கனவே கொடுத்துவிட்டார்.

உதவி கேட்பது

அதிக நேரம் வேலை செய்த ஒரு நாளின் முடிவில் அவளது மின்னஞ்சல் வந்தது. உண்மையைச் சொன்னால், நான் அதைப் படிக்கவில்லை. அதிக சுகவீனமாய் இருந்த குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அதை சமாளிக்க உதவும் வகையில் நான் கூடுதல் நேரம் பணிசெய்து கொண்டிருந்தேன். அதனால் கவனத்தைத் திசைதிருப்பும் விஷயங்களுக்கு எனக்கு நேரமில்லை.

அடுத்த நாள் என் தோழியின் மின்னஞ்சலைப் படித்தபோது “உனக்கு என்ன உதவி தேவை?” என்ற கேள்வியைப் பார்த்தேன். என் எண்ணத்தைக் குறித்து வெட்கப்பட்டு, எந்த உதவியும் தேவை இல்லை என்று பதில் அனுப்ப ஆரம்பித்தேன். பின்னர் ஆழ்ந்த மூச்செடுத்து மீண்டும் பார்த்தபோது, அவள் கேள்வி நன்றாகத் தெரிந்ததாக – தெய்வீகத்தன்மை கொண்டதாகத் தோன்றியது.

ஏனென்றால் இயேசு அதே கேள்வியைக் கேட்டார். எரிகோவுக்குப் போகும் வழியில், கண் பார்வையற்ற ஒரு பிச்சைக்காரன் கூப்பிடுவதைக் கேட்ட இயேசு நின்று, பர்திமேயு என்று பெயர்கொண்ட அவனிடம், இதேபோன்ற கேள்வியைக் கேட்டார். என்ன உதவி தேவை? அல்லது இயேசு கேட்டதுபோல் “நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறாய்” (மாற்கு 10:51).

இந்தக் கேள்வி திகைப்பூட்டுகிறது. சுகமாக்கும் இயேசு நமக்கு உதவ ஆர்வமாய் இருப்பதை அது காட்டுகிறது. ஆனால் முதலில் தாழ்மையை உணர்த்தும் விதமாக, நமக்கு அவர் உதவி தேவை என்பதை ஏற்றுக்கொள்ள அழைக்கப்படுகிறோம். பர்திமேயு என்ற பிச்சைக்காரன் தேவை உள்ளவனாய் இருந்தான் – ஏழ்மையாக, யாருமற்றவனாக, ஒருவேளை பசியுற்றவனாக இருந்தான். ஆனால் ஒரு புதிய வாழ்க்கையை விரும்பியவனாக, தன்னுடைய அடிப்படைத் தேவையைக் கூறினான். அவன் “ஆண்டவரே, நான் பார்வையடைய வேண்டும்” என்றான்.

பார்வையற்ற ஒருவனுக்கு அது ஒரு உண்மையான வேண்டுதல். இயேசு அவனை உடனே சுகப்படுத்தினார். என் தோழி என்னிடம் அதே உண்மையை விரும்பினாள். என் அடிப்படைத் தேவை என்ன என்பதைப் புரிந்து கொள்ள ஜெபிக்கிறேன் என்றும், பின்னர் தாழ்மையுடன் அவளிடம் சொல்வேன் என்றும் அவளிடம் வாக்களித்தேன். இன்று உங்கள் அடிப்படைத் தேவை என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் நண்பர் கேட்கும்போது அதைச் சொல்லுங்கள். அதன்பின் உங்கள் வேண்டுதலை அதற்கும் மேலாக எடுத்துச் செல்லுங்கள். அதை கடவுளிடம் தெரிவியுங்கள்.

தேவனின் எரியும் கொள்ளி

ஐந்து வயது சிறுவன் ஜாக்கிக்கு குரல் கொடுத்துக்கொண்டே, சிறிய குழந்தையைத் தூக்கிக்கொண்டு, ஓரு பணிப்பெண், தீப்பிடித்து எரிகிற வீட்டிலிருந்து வெளியே ஓடி வந்தாள்.

ஆனால் ஜாக்கி அவள் பின்னால் வரவில்லை. வெளியே இருந்த ஒரு பார்வையாளர், தன் நண்பரின் தோள்மேல் ஏறி நின்று துரிதமாக செயல்பட்டார். மாடி ஜன்னல் வழியாக அவர் ஜாக்கியை பாதுகாப்பாக இறக்கியவுடன், மாடியின் கூரை தீப்பிடித்து கீழே விழுந்தது. “நெருப்பில் இருந்து எடுக்கப்பட்ட கொள்ளிக்கட்டை” என்று ஜாக்கியைப் பற்றி அவன் அம்மா சூசனா குறிப்பிட்டார். அதிக பிரயாணம் செய்து பிரசங்கித்த பிரபலமான ஊழியக்காரர் ஜான் வெஸ்லிதான் (1701-1791) அந்த “கொள்ளிக்கட்டை” என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

கடவுளின் பண்பைக் குறித்து மிக அழகாக எடுத்துச் சொல்லும் சகரியா தீர்க்கதரிசியை மேற்கோள் காட்டியே சூசனா ஜாக்கியை அவ்வாறு கூறினார். தான் கண்ட தரிசனத்தைப் பற்றிக் கூறும் தீர்க்கதரிசி, பிரதான ஆசாரியனாகிய யோசுவாவுக்கு அருகில் சாத்தான் நிற்கும் ஒரு விசாரணைக் காட்சியை விவரிக்கிறார். சாத்தான் யோசுவாவைக் குற்றம் சாட்டுகிறான். ஆனால் கர்த்தர் சாத்தானைக் கடிந்துகொண்டு, “இவன் அக்கினியினின்று தப்புவிக்கப்பட்ட கொள்ளி அல்லவா?” என்று கூறுகிறார் (வச. 2). “நான் உன் அக்கிரமத்தை உன்னிலிருந்து நீங்கச்செய்து உனக்குச் சிறந்த வஸ்திரங்களைத் தரிப்பித்தேன்” என்று கர்த்தர் யோசுவாவிடம் கூறுகிறார் (வச. 4). 

பின்னர் “நீ என் வழிகளில் நடந்து என் காவலைக் காத்தால், நீ என் ஆலயத்தில் நியாயம் விசாரிப்பாய்” (வச. 7) என்று கர்த்தர் யோசுவாவுக்கு ஒரு சவாலையும் ஒரு வாய்ப்பையும் ஒரே நேரத்தில் தருகிறார். 

இயேசுவின்மீது வைக்கும் விசுவாசம் மூலமாக நாம் கடவுளிடம் பெறும் வெகுமதியை இது அழகாக எடுத்துக்காட்டுகிறது. அவர் நம்மை நெருப்பில் இருந்து எடுத்து, நம்மை சுத்தம் செய்து, நாம் பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலைப் பின்பற்றும்போது, நம்மில் கிரியை செய்கிறார். நெருப்பில் இருந்து எடுக்கப்பட்ட கர்த்தரின் கொள்ளிக்கட்டைகள் என்று நம்மை நாம் கூறலாம்.  

நமது நண்பர்களுக்காக

எமிலி ப்ராண்ட் எழுதிய உதரிங் ஹைட்ஸ் (Wuthering Heights) என்ற கதையில் அடுத்தவர்களை குறை சொல்லுவதற்கு அடிக்கடி வேதாகமத்தை மேற்கோள் காட்டும், முரணாகப் பேசும் ஒரு கதாபாத்திரம் உண்டு. “வேதாமத்தைத் துருவி ஆராய்ந்து, அதன் வாக்குறுதிகளைத் தனக்கென்று எடுத்துக்கொண்டு, சாபங்களை அடுத்தவர்கள் மீது எடுத்தெறியும், சலிப்பைத்தரும், சுய நீதி கொண்ட பரிசேயன்” என்று அந்த கதாபாத்திரம் விவரிக்கப்படுகிறது.

முந்திய வாக்கியம் நமக்கு சிரிப்பை வரவழைக்கும்; நமக்குத் தெரிந்த சில மனிதர்களை ஒருவேளை நம் நினைவுக்குக் கொண்டுவரும். ஆனால் ஒருவிதத்தில் நாம் அனைவரும் இதேபோல்தானே இருக்கிறோம் -  அடுத்தவர்கள் தோல்வியை கண்டனம் செய்து நமது குறைகளுக்கு நாமே சமாதானம் சொல்லிக்கொள்கிறோம் அல்லவா?

வேதாகமத்தில் குறிப்பிடப்படும் சிலர் இதற்கு நேர்மாறாக நடந்துகொண்டார்கள். மற்றவர்களை காப்பாற்ற முடியும் என்றால் தங்களுக்கு கடவுள் கொடுத்த வாக்குறுதிகளை விட்டுக்கொடுத்து, சாபத்தைக் கூட ஏற்றுக்கொள்ள தயங்கவில்லை. இஸ்ரவேலரின் பாவங்கள் மன்னிக்கப்படாமல் இருப்பதற்கு பதிலாக தன் பெயரை கடவுளின் புஸ்தகத்திலிருந்து நீக்குமாறு மோசே கூறுவதைப் பார்க்கிறோம் (யாத்திராகமம் 32:32). தன் இனத்தார் கடவுளைக் கண்டுகொள்ள, கிறிஸ்துவை விட்டு தான் சபிக்கப்படுவதை விரும்புவதாக பவுல் கூறினார் (ரோமர் 9:3).

இயற்கையாகவே சுய நீதி கொண்டவர்களாகிய நமக்கு, தங்களை விட மற்றவர்களை அதிகமாக நேசித்தவர்களை வேதாகமம் எடுத்துக்காட்டுகிறது.  

ஏனென்றால் இத்தகைய அன்பு இறுதியில் இயேசுவை சுட்டிக்காட்டுகிறது. “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை” (யோவான் 15:13) என்று இயேசு கற்பித்தார். நாம் இயேசுவைப் பற்றி தெரிந்துகொள்ளும் முன்பாகவே, நமக்கு வாழ்வளிப்பதற்காக, சாவைத் தெரிந்துகொண்டு, இயேசு “முடிவு பரியந்தம்” நம் மேல் அன்புவைத்தார் (யோவான் 13:1).

இதேபோல் நாமும் நேசிக்கவும், நேசிக்கப்படவும், கடவுளின் குடும்பத்திற்கு அழைக்கப்படுகிறோம் (யோவான் 15:9-12). கற்பனை செய்ய முடியாத கடவுளின் அன்பை நாம் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும்போது, இந்த உலகம் அவரைக் காணும்.  

புதிரை விடுவித்தல்

ஒரு நாள் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு நான் திரும்பி வந்தபோது, வாகனம் நிறுத்தும் இடத்திற்கு அருகில் ஒரு ஜோடி உயர் குதிகால் காலணிகள் கிடப்பதைப் பார்த்தேன். அது யாருடையதாக இருக்கும் என்று என்னால் ஊகிக்க முடிந்தது. என் மகள் லிசா தன் குழந்தைகளை அழைத்துச் செல்ல வரும்போது அவளிடம் கொடுக்க நினைத்து வாகனக்கூடத்தில் அதை எடுத்து வைத்தேன். ஆனால் லிசாவிடம் கேட்டபோது அது அவளுடையது அல்ல என்று கூறினாள். எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் அது தங்களுடையது அல்ல என்று கூறினார்கள். அதனால் எடுத்த இடத்திலேயே அதை வைத்துவிட்டேன். அடுத்த நாள் அந்த காலணியைக் காணவில்லை. அது ஒரு புதிராக இருந்தது.

 

பவுல் அப்போஸ்தலர் தன் கடிதங்களில் ஒரு புதிர் அல்லது இரகசியத்தைப் பற்றி எழுதினார் என்று உங்களுக்குத் தெரியுமா? ஆனால் அவர் குறிப்பிட்ட புதிர் ‘யார் குற்றவாளி’ என்பது போன்ற புதிரைக் காட்டிலும் மேலானது. உதாரணத்திற்கு எபேசியர் 3ல், “முற்காலங்களில் மனுபுத்திரருக்கு அறிவிக்கப்படாத” (வச. 5)  இரகசியத்தைப் பற்றிக் கூறுகிறார். முன்பு கர்த்தர் தம்மை இஸ்ரவேல் மூலமாக வெளிப்படுத்தினார், ஆனால் இப்போது இஸ்ரவேலர் அல்லாத புறஜாதிகளும், “அவர்களுடனே வாரிசாக” இருக்கும்படி இயேசு கிறிஸ்து மூலமாக வெளிப்படுத்துகிறார் என்பதே அந்த இரகசியம்.

 

இது எதைத் தெரிவிக்கிறது என்பதை யோசித்துப் பாருங்கள்: இயேசுவை இரட்சகர் என்று நம்பும் அனைவரும் சேர்ந்து அவரை நேசிக்கவும், சேவிக்கவும் முடியும். நாம் அனைவரும் சரிசமமாக அவரை “தைரியம் மற்றும் திட நம்பிக்கையோடே தேவனிடத்தில்” அணுக முடியும் (வச. 12). சபையின் ஐக்கியம் மூலமாக, கர்த்தரின் ஞானம் மற்றும் தயையை உலகம் தெரிந்துகொள்ளும்.

நமது இரட்சிப்புக்காக தேவனைத் துதிப்போம். பலதரப்பட்ட பின்னணி கொண்ட அனைவரும் இயேசுகிறிஸ்துவில் ஒன்றாக இணையும்போது, ஐக்கியத்தின் புதிர் நமக்குப் புரியும்.

சிதறியவற்றை சேகரித்தல்

டான்சானியத் தலைநகர் டோடோமாவில் தரிசாகக் கிடக்கும் ஒரு நிலத்தை என் சிநேகிதி ரூத் பண்படுத்த விரும்பினாள். அங்குள்ள விதவைகளின் தேவைகளை உணர்ந்த ரூத், அவர்கள் நலனுக்காக அந்த தரிசு நிலத்தை சீர்ப்படுத்தி விவசாயம் செய்யவும், கோழி வளர்க்கவும் கூடிய இடமாக மாற்ற நினைக்கிறார். பிறர் தேவை அறிந்து அவர்களுக்கு உதவவேண்டும் என்ற அவளது தொலைநோக்குப் பார்வைக்குக் காரணம் அவள் தேவன்மீது வைத்திருக்கும் அன்பு. மேலும் அவள் பெயர்கொண்ட வேதாகமத்தின் ரூத் அவளுக்கு ஒரு தூண்டுகோல்.

 

எளியவர்களும், அயல் தேசத்தாரும் வயல்களின் ஓரத்தில் சிந்திய கதிர்களை சேகரித்துக்கொள்ள கர்த்தரின் சட்டம் அனுமதித்தது. (லேவியராகமம் 19:9-10). வேதாகம ரூத் ஒரு அயல்தேசத்தாள். எனவே அவள் தனக்கும், தன் மாமியாருக்கும் சாப்பிட சேகரிக்கும்படியாக வயலில் அனுமதிக்கப்பட்டாள். நெருங்கிய உறவினரான போவாஸின் வயலில் அவள் சிதறிய கதிர்களைப் பொறுக்கியதால் அவளுக்கும், நகோமிக்கும் வீடும், பாதுகாப்பும் கிடைத்தது. அன்றைய தினத்தின் வேலையாக, வயல் ஓரங்களில் உள்ள சிதறிய கதிர்களை சேகரிப்பதற்கு, ரூத் தன் முயற்சி மற்றும் புத்திகூர்மையை உபயோகித்தாள். கர்த்தர் அவளை ஆசீர்வதித்தார்.

 

என் தோழி ரூத்தின் ஆர்வமும், வேதாகம ரூத்தின் அர்ப்பணிப்பும், கர்த்தர் எளிய, ஒடுக்கப்பட்ட மக்களை எப்படிக் காக்கிறார் என்பதை உணர்த்தி, அவருக்கு ஸ்தோத்திரம் செலுத்த என்னைத் தூண்டுகின்றன. சமூகத்தில் உள்ளவர்களுக்கு உதவவும், அது ஜீவனுள்ள நம் தேவனுக்கு நன்றிசெலுத்தும் விதமாக அமையவும், அவர்கள் எனக்குத் தூண்டுதலாக அமைகிறார்கள். கர்த்தரின் கருணையை நாம் மற்றவர்களுக்குக் காண்பிப்பதன்மூலம் நாம் எவ்வாறு தேவனை சேவிக்கமுடியும்?

முதலில் கர்த்தரிடம் கேட்பது

திருமணமான புதிதில், என் மனைவியின் விருப்பங்களைப் புரிந்துகொள்ள மிகவும் சிரமப்பட்டேன். இரவில் வீட்டில் அமைதியாக சாப்பிடுவதை விரும்புவாளா அல்லது ஒரு ஆடம்பர உணவகத்தில் சாப்பிட விரும்புவாளா? என் நண்பர்களோடு நேரம் செலவழிப்பதை ஒத்துக்கொள்வாளா அல்லது வார இறுதி நாட்களில் அவளுடன் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பாளா? ஒருமுறை, நான் ஊகித்து முடிவெடுப்பதற்குப் பதிலாக, “உன் விருப்பம் என்ன?” என்று அவளிடம் கேட்டேன்.

 

“எனக்கு எதுவானாலும் சம்மதமே,” என்று புன்முறுவலோடு பதில் சொன்னாள். “என்னிடம் கேட்டதே மகிழ்ச்சி,” என்றாள்.

 

சில சமயங்களில், தேவன் நான் என்ன செய்ய விரும்புகிறார் என்பதை சரியாகத் தெரிந்துகொள்ள தீவிர ஆர்வம் காட்டினேன். எந்த வேலையில் சேர்வது என்று முடிவெடுப்பதை உதாரணமாக கூறலாம். வழிநடத்துதலுக்காக ஜெபிப்பதும், வேதாகமத்தை வாசிப்பதும் தெளிவான பதிலை வெளிப்படுத்தவில்லை. ஆனால் தெளிவாக இருந்த ஒரு பதில் என்னவென்றால்: நான் கர்த்தரை நம்பி, அவரிடத்தில் மனமகிழ்ச்சியாய் இருந்து, என் வழியை கர்த்தருக்கு ஒப்புவிப்பதே (சங். 37:3-5).

 

கர்த்தரின் வழிகளை நமது வழிகளுக்கு முன்பாக முதன்மைப்படுத்தும்போது, நம் விருப்பத்தைத் தேர்வு செய்யும் சுதந்தரத்தை அவர் நமக்குத் தருகிறார் என்பதை அப்போது புரிந்துகொண்டேன். அதாவது தவறாக, ஆண்டவருக்கு விருப்பமில்லாத நமது தேர்வுகளை விட்டுவிடவேண்டும். நெறியற்ற, தேவ பக்தியற்ற, அவருடன் நமக்கு இருக்கும் உறவை பாதிக்கக்கூடிய ஒன்றாக அது இருக்கலாம். மீதியுள்ள தேர்வுகள் கர்த்தரைப் பிரியப்படுத்தும் என்றால், அவற்றையே நாம் தெரிந்துகொள்ள வேண்டும். நமது அன்பின் பிதா நம் இருதயத்தின் வேண்டுதல்களைத் தர விரும்புகிறார். அது அவரிடத்தில் மனமகிழ்ச்சியாய் இருக்கும் இருதயமாய் இருக்க வேண்டும்
(வச. 4).

நாம் சோர்வடையும்போது

சரியான காரியத்தைச் செய்ய முயல்வது சில சமயங்களில் சோர்வை ஏற்படுத்துகிறது. நல்லெண்ணத்தோடு நான் செய்யும் செயல்களும், பேசும் வார்த்தைகளும் யாருக்காவது பிரயோஜனமாயிருக்கிறதா என்று சில சமயங்களில் நாம் யோசிக்கலாம். ஒரு நண்பரை உற்சாகப்படுத்த, அதிகம் யோசித்து, ஜெபத்துடன் அனுப்பிய மின்னஞ்சலுக்கு கோபமாக பதில் வந்தபோது நானும் அப்படிதான் யோசித்தேன். அவரது பதில் எனக்கு கோபத்தையும், மன வருத்தத்தையும் தந்தது. எப்படி அவரால் என்னைத் தவறாக புரிந்துகொள்ள முடிந்தது?

 

நானும் அவருக்கு கோபமாக பதில் அனுப்பும் முன் சற்று யோசித்தேன். இயேசு உங்களை நேசிக்கிறார் என்று நாம் ஒருவருக்குக் கூறும்போது அதன் பலனை (குறிப்பாக நாம் விரும்பும் பலனை) நம்மால் எப்போதும் பார்க்க முடியாது என்பதை நினைவுகூர்ந்தேன். கர்த்தரை நோக்கி ஈர்க்கும் எண்ணத்தில் நாம் பிறருக்கு நல்லது செய்யும்போது, அவர்கள் நம்மை வெறுத்து ஒதுக்கலாம். ஒருவர் சரியான காரியத்தைச் செய்யத் தூண்டுவதற்கு நாம் எடுக்கும் முயற்சியை அவர்கள் பொருட்படுத்தாமல் இருக்கலாம்.

 

கரிசனையோடு நாம் எடுக்கும் முயற்சிகளை, பிறர் ஏற்காததால் நாம் சோர்ந்துபோகும்போது, கலாத்தியர் 6 நாம் படிப்பதற்கு ஏற்ற பகுதியாகும். நம் உள்நோக்கத்தை ஆராயும்படி பவுல் கூறுகிறார் – நாம் பேசுவதையும், சொல்வதையும் ‘சோதித்துப் பார்க்கச்’ சொல்கிறார் (வச. 1-4). அப்படி நாம் செய்தபிறகு, விடாமல் முயற்சி செய்ய ஊக்கப்படுத்துகிறார். “நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம். ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும் நன்மை செய்யக்கடவோம்” (வச. 9-10).

 

நாம் தொடர்ந்து தேவனுக்காக ஜீவிக்கவேண்டும் என்பதை அவர் விரும்புகிறார். இதுவே “நன்மை செய்வது” – அதாவது பிறருக்காக ஜெபிப்பதும், அவர்களுக்கு ஆண்டவரைக் குறித்து எடுத்துச் சொல்வதுமாகும். அதற்கான பலனை அவர் பார்த்துக்கொள்வார்.