இரண்டாம் உலகப் போரின் ஆரம்பத்தில், ஜெர்மானிய நாசிக்கள் (Nazis) தெரஸா ப்ரெகெரோவாவின் நாடான போலந்தை முற்றுகையிட்டபோது, அவள் பதின்பருவத்தில் இருந்தாள். நாசிக்களால் கைது செய்யப்பட்ட யூதர்கள் காணாமல் போன, ஹோலோகாஸ்ட் என்று அழைக்கப்பட்ட அழிவின் காலத்தின் ஆரம்பம் அது. தெரஸாவும் அவள் நாட்டைச் சேர்ந்த பலரும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து, நாசிக்களின் அழிவிலிருந்து, வார்ஸா நகரில் இருந்த யூதர்களுக்கான சிறையிருப்பிலிருந்து, தங்கள் அயலகத்தார்களைக் காப்பாற்றினார்கள். பிற்காலத்தில் தெரஸா இந்த போர் குறித்த ஒரு சிறந்த வரலாற்று வல்லுனராக விளங்கினார். ஆனால் எருசலேமின் யாத் வாஷேம் ஹோலோகாஸ்ட் நினைவிடத்தில் (Yad Vashem Holocaust Memorial) அவள் பெயர் இடம்பெறுவதற்கு, கொடுமைக்கு எதிராக அவள் தைரியமாக எதிர்த்து நின்றதே காரணம்.

தீங்கை எதிர்த்து நிற்க தைரியம் தேவை. “மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அதிகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு” என்று பவுல் எபேசு சபைக்குக் கூறினார். கண்களுக்குப் புலப்படாத இந்த எதிர்ப்புகளை நம்மால் தனியே எதிர்கொள்ள முடியாது என்பது தெளிவாகத் தெரிகிறது. அதனால் “பிசாசின் தந்திரங்களை எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி” (வச. 11) தேவன் நமக்குத் தேவையான ஆவிக்குரிய ஆயுதங்களைக் (தேவனுடைய சர்வாயுத வர்க்கம்) கொடுத்துள்ளார்.

அப்படிப்பட்ட தைரியமான நிலைப்பாட்டிற்கு என்ன செய்ய வேண்டும்? அநீதியை எதிர்த்து வேலை செய்ய வேண்டியதிருக்கலாம். பாதிக்கப்பட்ட அல்லது ஆபத்தில் இருக்கும் நமக்குத் தெரிந்த ஒருவருக்காக நாம் தலையிட்டு உதவ வேண்டியதிருக்கலாம். எந்த விதமான குழப்பமாக இருந்தாலும், நாம் தைரியமாக இருக்க முடியும் – ஏனென்றால், தேவனுக்காக தீமையை எதிர்த்து நிற்கத் தேவையானவற்றை அவர் ஏற்கனவே கொடுத்துவிட்டார்.