அதிக நேரம் வேலை செய்த ஒரு நாளின் முடிவில் அவளது மின்னஞ்சல் வந்தது. உண்மையைச் சொன்னால், நான் அதைப் படிக்கவில்லை. அதிக சுகவீனமாய் இருந்த குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அதை சமாளிக்க உதவும் வகையில் நான் கூடுதல் நேரம் பணிசெய்து கொண்டிருந்தேன். அதனால் கவனத்தைத் திசைதிருப்பும் விஷயங்களுக்கு எனக்கு நேரமில்லை.

அடுத்த நாள் என் தோழியின் மின்னஞ்சலைப் படித்தபோது “உனக்கு என்ன உதவி தேவை?” என்ற கேள்வியைப் பார்த்தேன். என் எண்ணத்தைக் குறித்து வெட்கப்பட்டு, எந்த உதவியும் தேவை இல்லை என்று பதில் அனுப்ப ஆரம்பித்தேன். பின்னர் ஆழ்ந்த மூச்செடுத்து மீண்டும் பார்த்தபோது, அவள் கேள்வி நன்றாகத் தெரிந்ததாக – தெய்வீகத்தன்மை கொண்டதாகத் தோன்றியது.

ஏனென்றால் இயேசு அதே கேள்வியைக் கேட்டார். எரிகோவுக்குப் போகும் வழியில், கண் பார்வையற்ற ஒரு பிச்சைக்காரன் கூப்பிடுவதைக் கேட்ட இயேசு நின்று, பர்திமேயு என்று பெயர்கொண்ட அவனிடம், இதேபோன்ற கேள்வியைக் கேட்டார். என்ன உதவி தேவை? அல்லது இயேசு கேட்டதுபோல் “நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறாய்” (மாற்கு 10:51).

இந்தக் கேள்வி திகைப்பூட்டுகிறது. சுகமாக்கும் இயேசு நமக்கு உதவ ஆர்வமாய் இருப்பதை அது காட்டுகிறது. ஆனால் முதலில் தாழ்மையை உணர்த்தும் விதமாக, நமக்கு அவர் உதவி தேவை என்பதை ஏற்றுக்கொள்ள அழைக்கப்படுகிறோம். பர்திமேயு என்ற பிச்சைக்காரன் தேவை உள்ளவனாய் இருந்தான் – ஏழ்மையாக, யாருமற்றவனாக, ஒருவேளை பசியுற்றவனாக இருந்தான். ஆனால் ஒரு புதிய வாழ்க்கையை விரும்பியவனாக, தன்னுடைய அடிப்படைத் தேவையைக் கூறினான். அவன் “ஆண்டவரே, நான் பார்வையடைய வேண்டும்” என்றான்.

பார்வையற்ற ஒருவனுக்கு அது ஒரு உண்மையான வேண்டுதல். இயேசு அவனை உடனே சுகப்படுத்தினார். என் தோழி என்னிடம் அதே உண்மையை விரும்பினாள். என் அடிப்படைத் தேவை என்ன என்பதைப் புரிந்து கொள்ள ஜெபிக்கிறேன் என்றும், பின்னர் தாழ்மையுடன் அவளிடம் சொல்வேன் என்றும் அவளிடம் வாக்களித்தேன். இன்று உங்கள் அடிப்படைத் தேவை என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் நண்பர் கேட்கும்போது அதைச் சொல்லுங்கள். அதன்பின் உங்கள் வேண்டுதலை அதற்கும் மேலாக எடுத்துச் செல்லுங்கள். அதை தேவனிடம் தெரிவியுங்கள்.