சரியான காரியத்தைச் செய்ய முயல்வது சில சமயங்களில் சோர்வை ஏற்படுத்துகிறது. நல்லெண்ணத்தோடு நான் செய்யும் செயல்களும், பேசும் வார்த்தைகளும் யாருக்காவது பிரயோஜனமாயிருக்கிறதா என்று சில சமயங்களில் நாம் யோசிக்கலாம். ஒரு நண்பரை உற்சாகப்படுத்த, அதிகம் யோசித்து, ஜெபத்துடன் அனுப்பிய மின்னஞ்சலுக்கு கோபமாக பதில் வந்தபோது நானும் அப்படிதான் யோசித்தேன். அவரது பதில் எனக்கு கோபத்தையும், மன வருத்தத்தையும் தந்தது. எப்படி அவரால் என்னைத் தவறாக புரிந்துகொள்ள முடிந்தது?

நானும் அவருக்கு கோபமாக பதில் அனுப்பும் முன் சற்று யோசித்தேன். இயேசு உங்களை நேசிக்கிறார் என்று நாம் ஒருவருக்குக் கூறும்போது அதன் பலனை (குறிப்பாக நாம் விரும்பும் பலனை) நம்மால் எப்போதும் பார்க்க முடியாது என்பதை நினைவுகூர்ந்தேன். கர்த்தரை நோக்கி ஈர்க்கும் எண்ணத்தில் நாம் பிறருக்கு நல்லது செய்யும்போது, அவர்கள் நம்மை வெறுத்து ஒதுக்கலாம். ஒருவர் சரியான காரியத்தைச் செய்யத் தூண்டுவதற்கு நாம் எடுக்கும் முயற்சியை அவர்கள் பொருட்படுத்தாமல் இருக்கலாம்.

கரிசனையோடு நாம் எடுக்கும் முயற்சிகளை, பிறர் ஏற்காததால் நாம் சோர்ந்துபோகும்போது, கலாத்தியர் 6 நாம் படிப்பதற்கு ஏற்ற பகுதியாகும். நம் உள்நோக்கத்தை ஆராயும்படி பவுல் கூறுகிறார் – நாம் பேசுவதையும், சொல்வதையும் ‘சோதித்துப் பார்க்கச்’ சொல்கிறார் (வச. 1-4). அப்படி நாம் செய்தபிறகு, விடாமல் முயற்சி செய்ய ஊக்கப்படுத்துகிறார். “நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம். ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும் நன்மை செய்யக்கடவோம்” (வச. 9-10).

நாம் தொடர்ந்து தேவனுக்காக ஜீவிக்கவேண்டும் என்பதை அவர் விரும்புகிறார். இதுவே “நன்மை செய்வது” – அதாவது பிறருக்காக ஜெபிப்பதும், அவர்களுக்கு ஆண்டவரைக் குறித்து எடுத்துச் சொல்வதுமாகும். அதற்கான பலனை அவர் பார்த்துக்கொள்வார்.