சிதறியவற்றை சேகரித்தல்
டான்சானியத் தலைநகர் டோடோமாவில் தரிசாகக் கிடக்கும் ஒரு நிலத்தை என் சிநேகிதி ரூத் பண்படுத்த விரும்பினாள். அங்குள்ள விதவைகளின் தேவைகளை உணர்ந்த ரூத், அவர்கள் நலனுக்காக அந்த தரிசு நிலத்தை சீர்ப்படுத்தி விவசாயம் செய்யவும், கோழி வளர்க்கவும் கூடிய இடமாக மாற்ற நினைக்கிறார். பிறர் தேவை அறிந்து அவர்களுக்கு உதவவேண்டும் என்ற அவளது தொலைநோக்குப் பார்வைக்குக் காரணம் அவள் தேவன்மீது வைத்திருக்கும் அன்பு. மேலும் அவள் பெயர்கொண்ட வேதாகமத்தின் ரூத் அவளுக்கு ஒரு தூண்டுகோல்.
எளியவர்களும், அயல் தேசத்தாரும் வயல்களின் ஓரத்தில் சிந்திய கதிர்களை சேகரித்துக்கொள்ள கர்த்தரின் சட்டம் அனுமதித்தது. (லேவியராகமம் 19:9-10). வேதாகம ரூத் ஒரு அயல்தேசத்தாள். எனவே அவள் தனக்கும், தன் மாமியாருக்கும் சாப்பிட சேகரிக்கும்படியாக வயலில் அனுமதிக்கப்பட்டாள். நெருங்கிய உறவினரான போவாஸின் வயலில் அவள் சிதறிய கதிர்களைப் பொறுக்கியதால் அவளுக்கும், நகோமிக்கும் வீடும், பாதுகாப்பும் கிடைத்தது. அன்றைய தினத்தின் வேலையாக, வயல் ஓரங்களில் உள்ள சிதறிய கதிர்களை சேகரிப்பதற்கு, ரூத் தன் முயற்சி மற்றும் புத்திகூர்மையை உபயோகித்தாள். கர்த்தர் அவளை ஆசீர்வதித்தார்.
என் தோழி ரூத்தின் ஆர்வமும், வேதாகம ரூத்தின் அர்ப்பணிப்பும், கர்த்தர் எளிய, ஒடுக்கப்பட்ட மக்களை எப்படிக் காக்கிறார் என்பதை உணர்த்தி, அவருக்கு ஸ்தோத்திரம் செலுத்த என்னைத் தூண்டுகின்றன. சமூகத்தில் உள்ளவர்களுக்கு உதவவும், அது ஜீவனுள்ள நம் தேவனுக்கு நன்றிசெலுத்தும் விதமாக அமையவும், அவர்கள் எனக்குத் தூண்டுதலாக அமைகிறார்கள். கர்த்தரின் கருணையை நாம் மற்றவர்களுக்குக் காண்பிப்பதன்மூலம் நாம் எவ்வாறு தேவனை சேவிக்கமுடியும்?
முதலில் கர்த்தரிடம் கேட்பது
திருமணமான புதிதில், என் மனைவியின் விருப்பங்களைப் புரிந்துகொள்ள மிகவும் சிரமப்பட்டேன். இரவில் வீட்டில் அமைதியாக சாப்பிடுவதை விரும்புவாளா அல்லது ஒரு ஆடம்பர உணவகத்தில் சாப்பிட விரும்புவாளா? என் நண்பர்களோடு நேரம் செலவழிப்பதை ஒத்துக்கொள்வாளா அல்லது வார இறுதி நாட்களில் அவளுடன் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பாளா? ஒருமுறை, நான் ஊகித்து முடிவெடுப்பதற்குப் பதிலாக, “உன் விருப்பம் என்ன?” என்று அவளிடம் கேட்டேன்.
“எனக்கு எதுவானாலும் சம்மதமே,” என்று புன்முறுவலோடு பதில் சொன்னாள். “என்னிடம் கேட்டதே மகிழ்ச்சி,” என்றாள்.
சில சமயங்களில், தேவன் நான் என்ன செய்ய விரும்புகிறார் என்பதை சரியாகத் தெரிந்துகொள்ள தீவிர ஆர்வம் காட்டினேன். எந்த வேலையில் சேர்வது என்று முடிவெடுப்பதை உதாரணமாக கூறலாம். வழிநடத்துதலுக்காக ஜெபிப்பதும், வேதாகமத்தை வாசிப்பதும் தெளிவான பதிலை வெளிப்படுத்தவில்லை. ஆனால் தெளிவாக இருந்த ஒரு பதில் என்னவென்றால்: நான் கர்த்தரை நம்பி, அவரிடத்தில் மனமகிழ்ச்சியாய் இருந்து, என் வழியை கர்த்தருக்கு ஒப்புவிப்பதே (சங். 37:3-5).
கர்த்தரின் வழிகளை நமது வழிகளுக்கு முன்பாக முதன்மைப்படுத்தும்போது, நம் விருப்பத்தைத் தேர்வு செய்யும் சுதந்தரத்தை அவர் நமக்குத் தருகிறார் என்பதை அப்போது புரிந்துகொண்டேன். அதாவது தவறாக, ஆண்டவருக்கு விருப்பமில்லாத நமது தேர்வுகளை விட்டுவிடவேண்டும். நெறியற்ற, தேவ பக்தியற்ற, அவருடன் நமக்கு இருக்கும் உறவை பாதிக்கக்கூடிய ஒன்றாக அது இருக்கலாம். மீதியுள்ள தேர்வுகள் கர்த்தரைப் பிரியப்படுத்தும் என்றால், அவற்றையே நாம் தெரிந்துகொள்ள வேண்டும். நமது அன்பின் பிதா நம் இருதயத்தின் வேண்டுதல்களைத் தர விரும்புகிறார். அது அவரிடத்தில் மனமகிழ்ச்சியாய் இருக்கும் இருதயமாய் இருக்க வேண்டும்
(வச. 4).
நாம் சோர்வடையும்போது
சரியான காரியத்தைச் செய்ய முயல்வது சில சமயங்களில் சோர்வை ஏற்படுத்துகிறது. நல்லெண்ணத்தோடு நான் செய்யும் செயல்களும், பேசும் வார்த்தைகளும் யாருக்காவது பிரயோஜனமாயிருக்கிறதா என்று சில சமயங்களில் நாம் யோசிக்கலாம். ஒரு நண்பரை உற்சாகப்படுத்த, அதிகம் யோசித்து, ஜெபத்துடன் அனுப்பிய மின்னஞ்சலுக்கு கோபமாக பதில் வந்தபோது நானும் அப்படிதான் யோசித்தேன். அவரது பதில் எனக்கு கோபத்தையும், மன வருத்தத்தையும் தந்தது. எப்படி அவரால் என்னைத் தவறாக புரிந்துகொள்ள முடிந்தது?
நானும் அவருக்கு கோபமாக பதில் அனுப்பும் முன் சற்று யோசித்தேன். இயேசு உங்களை நேசிக்கிறார் என்று நாம் ஒருவருக்குக் கூறும்போது அதன் பலனை (குறிப்பாக நாம் விரும்பும் பலனை) நம்மால் எப்போதும் பார்க்க முடியாது என்பதை நினைவுகூர்ந்தேன். கர்த்தரை நோக்கி ஈர்க்கும் எண்ணத்தில் நாம் பிறருக்கு நல்லது செய்யும்போது, அவர்கள் நம்மை வெறுத்து ஒதுக்கலாம். ஒருவர் சரியான காரியத்தைச் செய்யத் தூண்டுவதற்கு நாம் எடுக்கும் முயற்சியை அவர்கள் பொருட்படுத்தாமல் இருக்கலாம்.
கரிசனையோடு நாம் எடுக்கும் முயற்சிகளை, பிறர் ஏற்காததால் நாம் சோர்ந்துபோகும்போது, கலாத்தியர் 6 நாம் படிப்பதற்கு ஏற்ற பகுதியாகும். நம் உள்நோக்கத்தை ஆராயும்படி பவுல் கூறுகிறார் – நாம் பேசுவதையும், சொல்வதையும் ‘சோதித்துப் பார்க்கச்’ சொல்கிறார் (வச. 1-4). அப்படி நாம் செய்தபிறகு, விடாமல் முயற்சி செய்ய ஊக்கப்படுத்துகிறார். “நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம். ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும் நன்மை செய்யக்கடவோம்” (வச. 9-10).
நாம் தொடர்ந்து தேவனுக்காக ஜீவிக்கவேண்டும் என்பதை அவர் விரும்புகிறார். இதுவே “நன்மை செய்வது” – அதாவது பிறருக்காக ஜெபிப்பதும், அவர்களுக்கு ஆண்டவரைக் குறித்து எடுத்துச் சொல்வதுமாகும். அதற்கான பலனை அவர் பார்த்துக்கொள்வார்.
அது மீனைக் குறித்ததல்ல
ஆஸ்திரேலியாவின் மேற்கு குயின்ஸ்லாந்து கடற்கரைக்கு அருகில் பலமுறை தென்பட்ட மிகாலூ என்ற ஹம்ப் பேக் வகை திமிங்கிலம்தான் முதல்முறையாக ஆவணப்படுத்தப்பட்ட, உடல் முழுதும் வெள்ளையாக இருக்கும் வெளிரி நோயால் பாதிக்கப்பட்ட திமிங்கிலமாகும். நாற்பது அடிக்கும் மேல் நீளமான உடல் கொண்ட அந்த அரிய திமிங்கிலத்தைக் காப்பதற்காக, ஆஸ்திரேலியா ஒரு தனிச் சட்டத்தை இயற்றியது.
தப்பி ஓடிய ஒரு தீர்க்கதரிசியை விழுங்குவதற்காக கர்த்தர் அனுப்பிய ஒரு பெரிய, அரிய மீனைப்பற்றி நாம் வேதாகமத்தில் வாசிக்கிறோம் (யோனா 1:17). பெரும்பாலானவர்களுக்கு இந்தக் கதை தெரியும். நியாயத்தீர்ப்பு குறித்த செய்தியை நினிவே மக்களுக்குச் சொல்லுமாறு யோனாவிடம் தேவன் கூறினார். ஆனால் அனைவரையும் – குறிப்பாக எபிரேயர்களை – துன்புறுத்தும் பழக்கம் கொண்ட நினிவே மக்களிடம் பேசுவதை யோனா விரும்பவில்லை. அதனால் அவர் தப்பி ஓடினார். ஆனால் நிலைமை மோசமாகியது. மீனின் வயிற்றில் இருந்த யோனா மனஸ்தாபப்பட்டார். இறுதியில் நினிவே மக்களுக்குப் பிரசங்கித்தார். அவர்களும் மனந்திரும்பினார்கள் (யோனா 3: 5-10).
இது ஒரு நல்ல கதை. ஆனால் இந்தக் கதை அதோடு முடியவில்லை. நினிவே மக்கள் மனஸ்தாபப்பட்டபோது யோனா அதிருப்தி அடைந்தான். “கர்த்தாவே நான் இதைச் சொல்லவில்லையா? நீர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவரும், தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமான தேவனென்று அறிவேன்” என்று விண்ணப்பம் செய்தார் (யோனா 4:2). சாவின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட யோனாவின் பாவகரமான கோபம் அதிகரித்து, என் பிராணனை எடுத்துக்கொள்ளும் என்று ஜெபிக்கத் தூண்டியது (வச. 3).
யோனாவின் கதை மீனைக் குறித்தது அல்ல. அது மனித சுபாவம் மற்றும் நம்மை நாடும் ஆண்டவருடைய சுபாவம் ஆகியவற்றைக் குறித்தது. “ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி, நம் மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்” (II பேதுரு 3:9). இரக்கமற்ற நினிவே மக்களிடமும், அதிருப்தி அடையும் தீர்க்கதரிசிகளிடமும், உங்களிடமும், என்னிடமும் தேவன் அன்பாய் இருக்கிறார்.
அநேக அழகிய காரியங்கள்
ஓவியரும், மிஷனரி ஊழியருமான லிலியஸ் ட்ராட்டர் இறப்பதற்கு முன், தன் ஜன்னல் வழியாக பரலோக ரதம் ஒன்றை தரிசனமாகக் கண்டாள். அவளது நண்பர் “அநேக அழகான காரியங்களைக் காண்கிறாயா?” என்று கேட்டதாகவும், “ஆம், அநேகம், அநேகமான அழகான காரியங்களைக் காண்கிறேன்” என்று லிலியஸ் பதில் சொன்னதாகவும், அவளது வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
ட்ராட்டரின் வாழ்க்கையில் தேவனின் பங்கை அவளது கடைசி வார்த்தைகள் பிரதிபலிக்கின்றன. அவளது இறப்பில் மட்டுமல்லாது, அவளது வாழ்க்கை முழுவதும் கர்த்தர் பல அழகிய காரியங்களை அவளுக்கும், அவள் மூலமாகவும் வெளிப்படுத்தினார். ஒரு திறமை மிக்க ஓவியராக இருந்தாலும், கிறிஸ்துவை சேவிக்க, அல்ஜீரியாவில் மிஷனரியாகப் பணி செய்ய முடிவு செய்தாள். அவளது இந்த முடிவைக் குறித்து, அவளுக்கு ஓவியக்கலையைக் கற்றுக்கொடுத்த ஜான் ரஸ்கின் என்ற புகழ்பெற்ற ஓவியர் “திறமையை வீணடிக்கிறாள்” என்று கூறினார்.
இதேபோல், புதிய ஏற்பாட்டில், குஷ்டரோகியான சீமோன் வீட்டிற்கு வந்த ஒரு பெண் வெள்ளைக்கல் பரணியில் கொண்டுவந்த நளத தைலத்தை இயேசுவின் பாதத்தில் ஊற்றியபோது, அருகில் இருந்தவர்கள் அதை வீண் என்று நினைத்தார்கள். விலையுயர்ந்த அந்தத் தைலமானது, ஒரு ஆண்டிற்குக் கிடைக்கும் கூலிக்கு சமானமாக இருந்ததால், அதை எளியவர்களுக்குக் கொடுத்து உதவியிருக்கலாம் என்று அங்கிருந்த சிலர் நினைத்தார்கள். ஆனால் அந்தப் பெண்ணின் ஆழ்ந்த அர்ப்பணிப்பைப் பாராட்டிய இயேசு கிறிஸ்து “என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள்” என்று கூறினார் (மாற்கு 14:6).
தினந்தோறும் கிறிஸ்துவின் ஒளி நம் வாழ்க்கையில் ஒளிவீசவும், அவரது அருமையை உலகுக்கு வெளிப்படுத்தவும் நாமும் முடிவெடுக்கலாம். சிலருக்கு அது ஒரு வீணான காரியமாகத் தோன்றலாம். ஆனால் நாம் சுயவிருப்பத்தோடு அவரை சேவிப்போமாக. அவருக்கு நாம் அநேக அழகிய காரியங்களைச் செய்திருக்கிறோம் என்று இயேசு கிறிஸ்து சொல்வாராக.
கர்த்தரின் வழியில் நடப்பது
“நாம் இந்த வழியாகப் போகவேண்டும்” என்று என் மகனின் தோளைத் தட்டிச் சொன்னேன். கூட்டத்தில் அவன் போகவிருந்த திசையிலிருந்து அவனை மாற்றி, அவன் அம்மாவுக்கும், சகோதரிகளுக்கும் பின்னால் போகச் சொன்னேன். நாங்கள் குடும்பமாகச் சென்றிருந்த உல்லாசப் பூங்காவில், இதையே பலமுறை அவனிடம் கூறினேன். சோர்வடைந்திருந்த அவன் கவனம் எளிதில் சிதறியது. அவர்களை அவன் பின் தொடர்ந்து போனால் என்ன? என்று நினைத்தேன்.
நானும் இதையே எத்தனை தடவை செய்கிறேன்? எத்தனை தடவை கர்த்தருக்கு கீழ்ப்படிந்து அவரோடு நடக்காமல், எத்தனை தடவை கர்த்தருடைய வழிகளைத் தெரிந்துகொள்வதற்குப் பதிலாக, என் சுய ஆசைகளால் ஈர்க்கப்பட்டிருக்கிறேன், என்று அப்போதுதான் நான் உணர்ந்தேன்.
இஸ்ரவேலுக்காக கர்த்தர் ஏசாயா மூலம் சொன்ன வார்த்தைகளை யோசித்துப்பாருங்கள்: “நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்” (ஏசாயா 30:21). அதே அதிகாரத்தின் முன்பகுதியில் கர்த்தர் தம் ஜனங்களின் கீழ்ப்படியாமையும், எதிர்ப்பையும் கடிந்து கொண்டார். ஆனால் அவர்கள் மனந்திரும்பி தங்கள் சுய வழிகளின்மேல் அல்லாமல், கர்த்தரின் பெலத்தில் நம்பிக்கை கொண்டிருந்தால் (வச. 15), கர்த்தர் தன் இரக்கத்தையும், மன உருக்கத்தையும் காண்பிப்பதாக வாக்குக் கொடுத்தார் (வ. 18).
தம் ஆவியின் மூலமாக நம்மை வழிநடத்துவதாக கர்த்தர் கொடுத்த வாக்குறுதி, அவரது இரக்கத்தின் வெளிப்பாடாகும். நமது விருப்பங்களை அவரிடத்தில் எடுத்துக்கூறி, நமக்கு என்ன முன்குறித்திருக்கிறார் என்பதை நாம் ஜெபத்தில் கேட்கும்போது அது நடந்தேறும். நாம் அவரில் நம்பிக்கை வைத்து, அவருடைய சத்தத்துக்குச் செவி கொடுக்கும்போது தேவன் பொறுமையாக, ஒவ்வொரு நாளும், படிப்படியாக, நம்மை வழிநடத்துவதற்காக நான் கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன்.
உன் சகோதரனுக்குச் செவிகொடுப்பது
தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன். யாக்கோபு 5:20
“நான் சொல்வதைக் கேள், நான் உன் அண்ணன்”. எங்கள் வீட்டிற்கு அருகில் ஒரு சிறுவன், தன்னைவிட்டு தூரமாக விலகிச் செல்லவிருந்த தன் தங்கையிடம் அக்கறையுடன் கூறினான். அந்தச் சூழ்நிலையில் எது சிறந்தது என்று அந்தச் சிறுவனால் அனுமானிக்க முடிந்தது.
நம்மில் எத்தனை பேர் நம் சகோதரன் அல்லது சகோதரியின் ஞானமான அறிவுரைகளை ஏற்க மறுத்திருக்கிறோம்? நல்ல அறிவுரையை ஏற்காததின் பின்விளைவுகளை நீங்கள் ஒருவேளை சந்தித்திருந்தால், உங்களைப்போல் நிறையபேர் இருக்கிறார்கள் என்று புரிந்துகொள்ளுங்கள்.
கிறிஸ்தவ விசுவாசிகளாக, நமக்குக் கிடைத்திருக்கும் பெரிய கொடைகளில் ஒன்றுதான் குடும்பம் – கர்த்தரில் நாம் அனைவரும் கொண்டிருக்கும் விசுவாசத்தினால் ஆவியில் இணைக்கப்பட்ட விசுவாசம், குடும்பம். கர்த்தரையும், ஒருவரை ஒருவர் நேசிக்கும் பண்பட்ட சகோதர சகோதரிகள் இந்தக் குடும்பத்தில் உண்டு. எங்கள் வீட்டிற்கு அருகில் இருந்த அந்தச் சிறுவனைப்போல, ஒரு எச்சரிக்கும் வார்த்தை அல்லது திருத்துதல் நமக்கும் சில சமயங்களில் தேவைப்படுகிறது. நம்மை யாரோ புண்படுத்தும்போது அல்லது நாம் யாரையோ புண்படுத்தும்போது இது மிகவும் பொருந்தும். சரியான காரியத்தைச் செய்வது கடினம்தான். ஆனால் மத்தேயு 18:15-20ல் இயேசுவின் வார்த்தைகள் இதுபோன்ற ஆவிக்குள்ளான குடும்பங்களில் மனஸ்தாபம் ஏற்படும்போது என்ன செய்யவேண்டும் என்று எடுத்துக்கூறுகிறது.
அதிர்ஷ்டவசமாக, கிருபையின் பரம பிதா, கர்த்தரையும், மற்றவர்களையும் கனம்பண்ணுவதற்கு நமக்கு உதவி செய்ய நம் வாழ்க்கையில் சில மக்களை வைத்திருக்கிறார். அவர்கள் சொல்வதை நாம் கேட்கும்போது, குடும்பத்தில் எல்லாம் சுமூகமாக இருக்கும் (வச. 15).
ஊக்குவிப்பவர்களின் ஆசீர்வாதம்
ராஜாவின் பேச்சு என்று அர்த்தம் கொள்ளும் த கிங்ஸ் ஸ்பீச் (The King’s Speech) என்ற 2010ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட திரைப்படம், தன் சகோதரன் அரியணையைத் துறந்ததால் எதிர்பாராத விதமாக மன்னராகும் இங்கிலாந்து அரசர் ஜார்ஜ் VI ஐப் பற்றியது. இரண்டாம் உலகப்போர் வரக்கூடும் என்ற சூழ்நிலையில், பிரபலமாகி வந்த வானொலியில் பேச, நன்கு பேசக்கூடிய தலைவர் வேண்டும் என்று அரசு அதிகாரிகள் விரும்பினார்கள். ஆனால் ஜார்ஜ் VI மன்னருக்கு திக்குவாய் ஒரு பெரிய தடையாக இருந்தது.
ஜார்ஜ் மன்னரின் மனைவி எலிசபெத் அந்தத் திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டிருந்த விதம் என்னை அதிகம் கவர்ந்தது. ஜார்ஜ் மன்னர் தனது திக்குவாய் பிரச்சனையை சமாளிக்க முயற்சி செய்யும்போது, எலிசபெத் தொடர்ந்து அவரை ஊக்கப்படுத்துகிறார். மன்னரது பிரச்சனையைத் தாண்டி, போரின்போது நல்ல முறையில் அவர் ஆட்சி செய்ய எலிசபெத்தின் மாறாத அர்ப்பணிப்பு பெரிதும் உதவியது.
கடினமான சூழ்நிலைகளில் நிலையான ஆதரவு அளித்து ஊக்குவித்தவர்களைப்பற்றி வேதாகமம் எடுத்துக்கூறுகிறது. இஸ்ரவேலின் யுத்தங்களின்போது, மோசேக்கு ஆரோன் மற்றும் ஊர் ஆகிய இருவரின் ஆதரவு கிடைத்தது (யாத்திராகமம் 17:8-16). எலிசபெத் கர்ப்பந்தரித்திருந்த தன் உறவினர் மரியாளை ஊக்கப்படுத்தினாள் (லூக். 1:42-45).
பவுல் மனந்திரும்பிய பிறகு, அவருக்கு பர்னபாவின் ஆதரவு தேவைப்பட்டது. பர்னபா என்ற பெயருக்கு “ஆறுதலின் மகன்” என்று பொருள். சீஷர்கள் பவுலைக்கண்டு பயந்தபோது, தனக்கிருந்த நற்பெயர் கெடும் வாய்ப்பு இருந்தாலும், பவுலுக்காக உத்தரவாதம் அளித்தார் (அப்போஸ்தலர் 9:27). கிறிஸ்தவ சபையினர் பவுலை ஏற்றுக்கொள்ள பர்னபாவின் உத்தரவாதம் தேவைப்பட்டது. பின்னர் பர்னபா பவுலின் பயணத்திலும், பிரசங்கத்திலும் உற்ற துணையாக இருந்தார் (அப்போஸ்தலர் 14). ஆபத்துகள் சூழ்ந்திருந்தாலும், அவர்கள் இருவரும் சேர்ந்து சுவிசேஷத்தை அறிவித்தனர்.
கிறிஸ்தவ விசுவாசிகள் இன்றும் “ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்ய” அழைக்கப்படுகிறார்கள். பிறரை, குறிப்பாக கஷ்டமான சூழ்நிலையில் இருப்பவர்களை, ஊக்குவிக்க விருப்பம் கொண்டவர்களாக நாம் இருப்போமாக.
எதிர்பாராத வழிகள்
இங்கிலாந்தில் ஜெர்ஸி மிருகக்காட்சி சாலையில் உள்ள 20 அடி உயரம்கொண்ட கொரில்லா வேலித் தடுப்புக்குள், 1986ஆம் ஆண்டு ஐந்து வயது லெவன் மெரிட் விழுந்துவிட்டான். அவன் பெற்றோர்களும், பார்வையாளர்களும் உதவி வேண்டித் தவித்தபோது, ஜம்போ என்ற சில்வர்பேக் வகை ஆண் கொரில்லா அசைவற்றுக் கிடந்த சிறுவனுக்கும் மற்ற கொரில்லாக்களுக்கும் நடுவே பாதுகாப்பாக நின்றுகொண்டது. பின்பு சிறுவனின் முதுகை மெதுவாகத் தடவிக் கொடுத்தது. லெவன் அழ ஆரம்பித்தபோது, மிருகக்காட்சி சாலை ஊழியர்களும், மருத்துவ ஊர்தி ஓட்டுநரும் அவனைக் காப்பாற்றுவதற்கு வசதியாக, ஜம்போ மற்ற கொரில்லாக்களை தங்கள் தடுப்புப்பகுதிக்குள் போகச்செய்தது. முப்பது ஆண்டுகள் ஆனபிறகும், மென்மையான ஜம்போ ஒரு பாதுகாவலனாக தன்னை காத்துக்கொண்டதையும், எதிர்பாராத விதமாக நல்ல முறையில் நடந்துகொண்டதையும், இன்றும் லெவன் ஆச்சரியமாகப் பேசுகிறார். அந்த நிகழ்ச்சி கொரில்லாக்கள் குறித்த அவர் கண்ணோட்டத்தை மாற்றியது.
கர்த்தர் எப்படி நடந்துகொள்வார் என்ற எலியாவின் எதிர்பார்ப்புக்கு மாறாக, கர்த்தாதி கர்த்தர், கன்மலைகளை உடைக்கக்கூடிய பெருங்காற்று மூலமாகவும், பூமி அதிர்ச்சி மூலமாகவும், அக்கினி மூலமாகவும், தன்னைப்பற்றி எப்படி நினைக்கக்கூடாது என்பதை எலியாவுக்கு உணர்த்தினார். அதன்பின், அமர்ந்த மெல்லிய சத்தம் மூலம் கர்த்தர் தன் இருதயத்தையும், தன் பிரசன்னத்தையும் உணர்த்தினார் (I இராஜாக்கள் 19:11-12).
எலியா இதற்குமுன் கர்த்தரின் வல்லமையைப் பார்த்திருக்கிறார் (18:38-39). ஆனால் மகத்துவமான, பயத்தைத் தரக்கூடிய கடவுள்களையும் விட மேலானவராக அறியப்பட விரும்பும் கர்த்தரை அவர் முழுவதுமாக புரிந்துகொள்ளவில்லை (19:10, 14).
இறுதியில், அமர்ந்த மெல்லிய சத்தத்தின் அர்த்தம் வல்லமை நிறைந்த, மென்மையான இயேசுவில் வெளிப்பட்டது. இயேசு “என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்” என்று சொன்னார். பின்பு அவர் சிலுவையில் அறையப்பட அமைதியாக தன்னை ஒப்புக்கொடுத்தார் – நம்மை நேசிக்கும் ஆண்டவரின் எதிர்பாராத, கருணை நிறைந்த செயலாகும்.