“நாங்கள் பார்க்கும்விதமாக எங்கள் நம் நகரத்தைப் பாருங்கள்.” மிஷிகனின் டெட்ராய்ட் நகரில் செயல்படும் நகர வளர்ச்சிக் குழு தங்கள் நகரின் எதிர்காலம் குறித்த திட்டத்தை ஆரம்பிக்க இந்த வாசகத்தை உபயோகித்தது. ஆனால் இந்த பிரச்சாரத்தில் ஒரு முக்கியமான அம்சம் இல்லை என்பதை அந்த ஊர் மக்கள் உணர்ந்தபோது, அந்தத் திட்டம் திடீரென்று நிறுத்தப்பட்டது. ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தைச் சேர்ந்தவர்கள் நகரின் ஜனத்தொகை மற்றும் பணியாளர்களில் பெரும்பான்மையானவர்கள். ஆனால் தாங்கள் பார்க்கும்விதமாக நகரைப் பார்க்கச் சொன்ன அந்தப் பிரச்சாரம் குறித்த விளம்பரங்களிலும், சுவரொட்டிகளிலும் தெரிந்த அநேக முகங்களில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் இடம்பெறவே இல்லை.

இயேசுவின் நாட்டில் இருந்தவர்களுக்கும் எதிர்காலம் குறித்து ஒரு குறுகிய மனப்பான்மை இருந்தது. ஆபிரகாமின் சந்ததியினராக, அவர்கள் யூத மக்களைக்குறித்து மட்டும் அக்கறை கொண்டிருந்தார்கள். சமாரியர்கள், ரோமப் போர்ச்சேவகர்கள், அல்லது தங்களை ஒத்த குடும்பப்பின்னணி இல்லாதவர்கள்,  மதகுருக்கள் அல்லது ஆராதனையைப் பின்பற்றாதவர்கள் குறித்து இயேசு கொண்டிருந்த அக்கறையை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.

டெட்ராய்ட், எருசலேம் மக்களின் குறுகிய மனப்பான்மை எனக்குப் புரிகிறது. யாருடைய வாழ்க்கை அனுபவங்கள் எனக்குப் புரிகிறதோ அவர்களை மட்டுமே நானும் பார்க்கிறேன். ஆனால் நம்முடைய வேறுபாடுகள் மத்தியில் நம்மில் ஒற்றுமையை எப்படி ஏற்படுத்துவது என்பதை ஆண்டவர் அறிந்திருக்கிறார். நாம் நினைப்பதைவிட நாம் ஒரேவிதமாக இருக்கிறோம்.

உலக மக்கள் அனைவருக்கும் ஆசீர்வாதத்தைப் பெற்றுத்தர, ஆபிராம் என்று பேர்கொண்ட ஒரு பாலைவன நாடோடியை நம் ஆண்டவர் தெரிந்துகொண்டார் (ஆதியாகமம் 12:1-3). நமக்கு இதுவரை தெரியாத அல்லது நேசிக்காத அனைவரையும் இயேசு அறிந்திருக்கிறார், நேசிக்கிறார். நாம் ஒருவரை ஒருவரும், நமது நகரங்களையும், அவர் ராஜ்யத்தையும், அவர் பார்க்கும்விதமாக நாமும் பார்க்க உதவும் தேவனின் இரக்கத்தாலும், கிருபையாலும் நாம் வாழ்கிறோம்.