கடலை ஒட்டி வசிக்கும் என் தோழியுடன் தொலைபேசியில் பேசும்போது, பின்னணியில் கேட்ட கடல் பறவைகளின் சத்தத்தைக் குறித்த என் சந்தோஷத்தை அவளிடம் தெரிவித்தேன். “அவற்றை நான் வெறுக்கிறேன்” என்றாள். ஏனென்றால் அவளுக்கு அந்தப் பறவைகள் தினமும் இடையூறு தருவதாக இருந்தன. லண்டன்வாசியான நான் நரிகளைப்பற்றி இதே மனப்பாங்கு கொண்டிருக்கிறேன். என் கண்களுக்கு அவை அழகிய விலங்குகளாகத் தெரிவதில்லை. மாறாக, தாங்கள் செல்லும் வழியில் அசிங்கம் செய்து நாற்றத்தை ஏற்படுத்தும் சுற்றித்திரியும் விலங்குகளாகப் பார்க்கிறேன்.

பழைய ஏற்பாட்டின் உன்னதப்பாட்டு புத்தகத்தில் நரிகளைப் பற்றிப் படிக்கிறோம். இதில் ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலான அன்பு வெளிப்படுகிறது. இது தேவனுக்கும் அவர் ஜனங்களுக்கும் இடையிலான அன்பை வெளிப்படுத்துவதாக சில வேதாகம விளக்க உரையாளர்கள் நம்புகிறார்கள். சிறு நரிகளைப் பற்றி எச்சரிக்கும் மணப்பெண், அவற்றைப் பிடிக்கும்படி மணமகனிடம் கூறுகிறாள் (2:15). ஏனென்றால் திராட்சப்பழங்களை விரும்பும் நரிகள், இளம் செடிகளை சேதப்படுத்தக்கூடும். தங்கள் திருமண வாழ்க்கையை எதிர்நோக்கி இருக்கும் மணப்பெண், தீங்கு விளைவிக்கும் எந்த விலங்கும் தங்கள் அன்பின் உடன்படிக்கைக்கு இடையூறு ஏற்படுத்துவதை விரும்பவில்லை.

“நரிகள்” எப்படி நமக்கும் ஆண்டவருக்கும் இடையிலான உறவை சேதப்படுத்தமுடியும்? என்னைப் பொறுத்தவரை, அநேக வேண்டுகோள்களுக்கு சரி  என்று சொல்லும்போது, என்னால் சமாளிக்க முடியாமல், மனதளவில் அதிக சோர்வுற்று மகிழ்ச்சியில்லாமல் இருப்பேன். அல்லது மனிதர்களுக்கு இடையிலான பிரச்சினைகளைப் பார்க்கும்போது, விரக்தி அல்லது கோபம் ஏற்படும். நான் அடைக்க மறந்த வாசல் வழியாக அல்லது வேறு ஏதோ வழியில் அவை உள்ளே நுழைந்துவிடும் இப்படிப்பட்ட “நரிகளின்” பின்விளைவுகளைக் கட்டுப்படுத்தும்படி நான் தேவனிடம் கேட்கும்போது – அவரது அன்பின் பிரசன்னத்தையும், வழிநடத்துதலையும் உணர்ந்து, அவரைக்குறித்த அன்பிலும், நம்பிக்கையிலும் வளர்கிறேன்.

நீங்கள் தேவனை கிட்டிச்சேராமல் தடுக்கும் விஷயங்களைக் குறித்து நீங்கள் எப்படி ஆண்டவரின் உதவியை நாடலாம்?