வகை  |  odb

தொடர்ந்து போய்க் கொண்டிரு

பல வகையான ஜனங்கள் நிறைந்த இவ்வுலகில் வெவ்வேறு திறமைகளும், வெவ்வேறு தலைமைத்துவ பண்பும் கொண்ட அநேகரோடு தொடர்புகொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இதில் பட்டணத்திற்கு வெளியே ஒரு மேற்பார்வையாளரால் நடத்தப்படும் ஒரு செயல்திட்டம் சற்று மாறுபட்டது. எங்களுடைய வேலையைக் குறித்து கடுமையாக குற்றம்சாட்டியதோடு, ஒவ்வொரு வார இறுதியிலும் எங்களோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இன்னும் அதிக வேலையைச் செய்யுமாறு கட்டாயப்படுத்தினார். இந்த குறுக்கீட்டால் நான் ஊக்கமிழந்தேன். பயம் என்னைத் தொற்றிக் கொண்டது. சில வேளைகளில் இதனை விட்டுவிடலாமா என்று கூட சிந்திக்கலானேன்.

இதேபோன்றுதான் மோசேயும் துன்பங்கள் சூழ்ந்த இருண்ட வேளையில், பார்வோனைச் சந்திக்காமல் போய்விட எண்ணியிருப்பான். தேவன் மேலும் எட்டு பேரழிவுகளை எகிப்தியர் மீது அனுப்பிய பின், பார்வோன் மோசேயிடம் 'என்னை விட்டு அப்பாலே பேர் நீ இனி என் முகத்தைக் காணாதபடி எச்சரிக்கையாயிரு நீ இனி என் முகத்தைக் காணும் நாளில் சாவாய்" என வெடிக்கின்றான் (யாத். 10:28).

இந்த மாதிரி எச்சரிப்பு இருந்தபோதிலும் இஸ்ரவேலரை பார்வோனின் கையிலிருந்து மீட்பதற்கு தேவன் மோசேயை பயன்படுத்தினார். 'விசுவாசத்தினாலே மோசே... ராஜாவின் கோபத்துக்கு பயப்படாமல் எகிப்தைவிட்டுப் போனான்" (எபி. 11:27). தேவன், தான் விடுவிப்பேன் என வாக்களித்ததை நிறைவேற்றுவார் என்று தேவன் மீது வைத்திருந்த நம்பிக்கையால் மோசே, பார்வோனை மேற்கொண்டான் (யாத். 3:17).

நம்முடைய வாழ்வின் எல்லா சூழ்நிலைகளிலும் தேவன் நம்மோடிருந்து, பரிசுத்த ஆவியானவர் மூலம் நம்மை வழி நடத்துவார் என்ற அவருடைய வாக்குத்தத்தத்தை உறுதியாகப் பற்றிக்கொள்வோம். 'தேவன் நமக்கு பயமுள்ள ஆவியைக் கொடாமல் பலமும், அன்பும், தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார் (2 தீமோ. 1:7) நம்முடைய வாழ்வில் தேவன் காட்டும் வழியில் தொடர்ந்து செல்ல தேவையான தைரியத்தை பரிசுத்த ஆவியானவர் தந்து நம்மை வழிநடத்துவார்.

ஒப்பிட முடியாத வாழ்வு

ஒரு டெலிவிஷன் நிகழ்ச்சியில், நடுத்தர வயதினர் உயர்நிலைப்பள்ளி மாணவர்களைப் போல நடித்தனர். இளைஞர்களின் வாழ்வை நன்கு புரிந்துகொள்வதற்காக அப்படிச் செய்தனர். இளைஞர்கள் தங்களுடைய சுயமதிப்பை அளப்பதில் சமுதாயத் தொடர்பு சாதனங்கள் முக்கிய பங்குவகிக்கின்றன. இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஒரு நபர், 'மாணவர்களின் சுயமதிப்பு, தொடர்பு சாதனங்களோடு இணைந்துள்ளது. தங்களுடைய ஒரு புகைப்படத்திற்கு எத்தனை 'விருப்பங்கள்" கொடுக்கப்பட்டுள்ளன என்பதையே அது சார்ந்துள்ளது" என்றார். மற்றவர்கள் தங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதன் தேவை, இளைஞர்களை அதிக நேரம் வலைதளங்களில் தொடர்புகொள்ளத் தூண்டுகின்றது.

நாம் மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற ஏக்கம் எப்பொழுதும் இளைஞர்களுக்குள் இருக்கின்றது. ஆதியாகமம் 29ல் லேயாள், தன்னுடைய கணவன் யாக்கோபின் அன்பினைப் பெற ஏங்குவதைப் புரிந்துகொள்ள முடிகின்றது. இதன் வெளிப்பாட்டை தன்னுடைய முதல் மூன்று குமாரரின் பெயர்களிலிருந்து அறிந்து கொள்ளலாம். அத்தனையும் அவளுடைய தனிமையை வெளிக்காட்டுகின்றன (வச. 31-34). ஆனால், வருத்தத்திற்குரியது என்னவெனில், யாக்கோபு தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவள் எதிர்பார்த்த எண்ணம் நிறைவேறியதாகத் தெரியவில்லை.

லேயாளுக்கு நான்காவது மகன் பிறந்தபோது அவள் தன் கணவனிடமல்ல, தேவனிடம் திரும்பி, தன் மகனுக்கு யூதா என்று பெயரிடுகின்றாள். அதற்கு 'கர்த்தரைத் துதிப்பேன்" என அர்த்தம் (வச. 35). லேயாள் தனக்குரிய முக்கியத்துவம் தேவனிடம் இருக்கிறது என்பதைக் கண்டு கொண்டாள். அவள் தேவனுடைய இரட்சிப்பின் வரலாற்றில் இடம் பெறுகின்றாள். தாவீது அரசனின் முன்னோர்களின் பட்டியலில் யூதா இடம்பெறுகின்றார். பின்;னர் இயேசு கிறிஸ்துவும் தாவீதின் வம்சத்தில் தோன்றுகின்றார்.

நாமும் நம்முடைய முக்கியத்துவத்தைப் பெற பலவகைகளில், பல வழிகளில் முயற்சிக்கலாம். ஆனால் இயேசு கிறிஸ்துவின் மூலமாக மட்டுமே, நாம் தேவனுடைய பிள்ளைகள், இயேசு கிறிஸ்துவின் சந்ததியின், பரலோகத் தந்தையோடு நித்தியமாக வாழப் போகின்றவர்கள் என்ற அடையாளத்தைப் பெற முடியும். பவுல் எழுதுவது போல, 'என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக் கொண்டிருக்கிறேன்" என்று நாமும் சொல்வோமாக (பிலி. 3:8).

வீடற்றவராக வாழ தேர்ந்து கொள்ளல்

1989 ஆம் ஆண்டு முதல் கெய்த்வாசர்மேன் ஒவ்வொரு ஆண்டிலும் ஒருசில நாட்களை வீடற்ற நிலையில் கழிக்க தேர்ந்து கொள்வார். தனக்குள்ளே அன்பையும் மனதுருக்கத்தையும் வளர்த்துக்கொள்ள, இது உதவியாயிருக்கிறதெனக் கருதுகின்றார். 'நற்செயல்கள்" என்ற நிறுவனத்தின் இயக்குனரான கெய்த், 'தெருக்களில் வசிப்பவர்களோடு வாழும்போது என்னுடைய கண்ணோட்டத்தையும், புரிந்துகொள்வதையும் விரிவாக்கிக்கொள்ள முடிகிறது" என்கின்றார்.

தான் பணியாற்றும் நபர்களோடு ஒருவராக தன்னை இணைத்துக் கொள்ளும் கெய்த்தின் இந்த அணுகுமுறை, இயேசு நிறைவேற்றிய பணியின் ஒரு சிறிய பகுதியைப் போன்றுள்ளது. இந்த அகில உலகையும் படைத்த தேவன் தாமே, இந்த கொடிய உலகில் குழந்தையாகப் பிறந்து, மனிதனாக வாழ்ந்து, நாம் அனுபவிக்கின்ற துன்பங்களைத் தானும் அனுபவிக்கவும், மனிதனின் கரத்தாலே மரிக்கவும் தன்னை அர்ப்பணித்தார். இதன்மூலம் நமக்கும் தேவனுக்குமுள்ள உறவை மீண்டும் ஏற்படுத்தினார்.

எபிரெயரை எழுதியவர், 'பிள்ளைகள் மாம்சத்தையும், இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார். மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கு...  அப்படியானார்" (2:14) எனக் குறிப்பிடுகின்றார். இயேசுவும் தேவதூதர்களைக் காட்டிலும் சிறியவராகத் தன்னைத் தாழ்த்தினார் (வச. 9). அவரே அவர்களை உருவாக்கியவராயிருந்தும் தன்னைத் தாழ்த்தினார். அவர் முடிவில்லாத வாழ்வுடையவராயிருந்தும் மனிதனாகப் பிறந்து, மரித்தார். அவர் சர்வ வல்லவராயிருந்தும் நமக்காகப் பாடுபட்டார். ஏன் அவர் இப்படிச் செய்ய வேண்டும்? ஏனெனில், நாம் சோதிக்கப்படும்போது நமக்கு உதவும் பொருட்டும் தேவனுக்கும் நமக்குமிடையே ஒப்புரவாகுதலை ஏற்படுத்தவும் தன்னை ஒப்புக்கொடுத்தார் (வச. 17-18).

இன்று நாம் அவருடைய அன்பை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். அவர் நம்முடைய மனிதத் தன்மையைப் புரிந்து கொள்கின்றார். நாமும் நம்முடைய பாவங்களிலிருந்து விடுதலைப் பெற்று தூய்மையடைய ஒரு வழியைத் திறந்துள்ளார்.

தாமதத்தை எதிர் பார்

நான் ஏற்கனவே தாமதமாகவே வந்திருக்கின்றேன், என்னிடம் விளையாட்டு காட்டுகின்றாயா? என எனக்குள்ளே பேசிக் கொண்டேன். எனக்கெதிரேயிருந்த சாலை குறியீட்டு விளக்கு என்னுடைய எதிர்ப்பை சற்று மாற்றிக் கொள்ளும்படி அறிவுறுத்துகின்றது. 'தாமதத்தை எதிர்பார்" என்பதே அந்த அறிவுறுத்தல். அனைத்து வாகனங்களும் மெதுவாகச் செல்கின்றன.

நான் சிரித்துக் கொண்டேன். நான் எந்த காரியத்தையும் சரியான நேரத்தில் செய்யவேண்டுமென எதிர்பார்ப்பவன். நான் இப்பகுதியில் சாலைபோடும் பணி நடைபெறுமென எதிர்பார்க்கவில்லை.

நம்முடைய ஆவிக்குரிய வாழ்விலும் நம்மில் சிலருடைய எதிர்காலத் திட்டங்கள் மெதுவாகச் செயல்படுகின்றன அல்லது வேறுபாதையில் நம் வாழ்வை செலுத்தும்படி திருப்பப்படுகின்றன. நான் இதனைக் குறித்து நினைக்கும் போது, என்னுடைய வாழ்விலும் அநேக நேரங்களில் சிறிய மற்றும் பெரிய காரியங்களில் திசை திருப்பப்படுவதையும், தாமதம் ஏற்படுவதையும் நினைவுகூர முடிகின்றது.

சாலொமோன் தன் வாழ்வில் 'தாமதத்தை எதிர்பார்" என்ற ஒரு செய்தியைச் சந்தித்ததேயில்லை. ஆனாலும் நீதிமொழிகள் 16ல் அவர் நம்முடைய திட்டங்களுக்கு எதிராக தேவனுடைய வழிநடத்துதல் அமைகிறது என்பதைத் தெரிவிக்கின்றார். வசனம் 1 கூறுகின்ற, 'மனதின் யோசனைகள் மனுஷனுடையது. நாவின் பிரதியுத்தரம் கர்த்தரால் வரும்" என்ற கருத்து இந்த மொத்த செய்தியையும் உள்ளடக்குகின்றது. இதனையே வசனம் 9, 'மனுஷனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும். அவனுடைய நடைகளை உறுதிப்படுத்துகிறவரோ கர்த்தர்" என்று கூறுகின்றது. இதனை இன்னும் தெளிவாகக் கூறுவோமாயின், நடக்கவேண்டிய காரியங்களைக் குறித்து திட்டங்களை நாம் போடலாம். ஆனால் தேவன் வேறொரு பாதையின் வழியே நம்மை நடத்திச் செல்லலாம்.

இந்த ஆவிக்குரிய உண்மை வழியை நாம் எவ்வாறு தவறவிடுகின்றோம்? நான் என்னுடைய திட்டங்களைப் போடுகின்றேன். தேவனுடைய திட்டம் என்னவென்பதை கேட்கத் தவறிவிடுகின்றேன். என்னுடைய திட்டத்தில் தடைகள் வரும்போது நான் விரக்தியடைகின்றேன்.

நாம் கவலைப்படுவதற்குப் பதிலாக, சாலொமோன் கற்றுத் தருவதைப் போன்று அவரை நம்பி வாழக் கற்றுக்கொள்வோம். நாம் ஜெபத்தில் அவரைத் தேடும் போதும் அவருடைய வழிநடத்துதலுக்காகக் காத்திருக்கும் போதும், தேவன் படிப்படியாக நம்மை வழிநடத்தி, தொடர்ந்து அவருடைய பாதையில் நடத்திச் செல்வார்.

அகற்றப்பட்டது

1770 ஆம் ஆண்டு வரை ரொட்டித் துண்டுகளே காகிதத்திலுள்ள தவறான பென்சில் எழுத்துக்களை நீக்க பயன்படுத்தப்பட்டு வந்தன. பிரிட்டனைச் சேர்ந்த எட்வர்ட் நெய்ர்ன் என்பவர் ஒரு ரொட்டித்துண்டு என எண்ணி தவறுதலாக ரப்பர் மரப் பாலின் ஒரு துண்டினைக் கொண்டு காகிதத்திலுள்ள எழுத்தினை அழித்தபோது, அது காகிதத்திலுள்ள பென்சில் எழுத்துக்களை நன்றாக நீக்கியதோடு, சில ரப்பர் துணுக்குகளையே மீதமாக விட்டது. ரப்பர், பென்சில் கோடுகளை எளிதில் அகற்றக்கூடியதாக இருப்பதைக் கண்ட அவர், அதன் விளைவாக பென்சில் அழிப்பானைக் கண்டுபிடித்தார்.

நம்முடைய வாழ்விலும் மிக மோசமான தவறுகளையும் அகற்றமுடியும். அது தேவனாலேயே கூடும். அவரே வாழ்வின் அப்பம். அவரே தம்முடைய வாழ்வின் மூலம் நம்முடைய பாவக்கறைகளை நீக்கி சுத்தமாக்கினார். நம்முடைய பாவங்களை மீண்டும் நினைப்பதில்லையெனவும் வாக்களித்துள்ளார். 'நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப் போடுகிறேன். உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன்" என ஏசாயா 43:25ல் சொல்கின்றார்.

இது தகுதியற்ற நமக்கு, கொடுக்கப்பட்டுள்ள மிகப் பெரிய சிலாக்கியம். அவர் நம்முடைய கடந்தகால பாவங்களை கார்மேகத்தைப் போல நம்மை விட்டு அகற்றிவிட்டார் என்பதை நம்புவதற்கு நமக்குக் கடினமாகத் தோன்றலாம். எல்லாவற்றையும் அறிந்திருக்கின்ற தேவன் என்னுடைய பாவங்களை எளிதில் மறந்து விடுவாரா என கேட்கத் தோன்றலாம்.

ஆனால், நாம் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் போது, இதுவே தேவன் நமக்குச் செய்யும் சிலாக்கியம். நம்முடைய பாவங்களை மன்னிக்கின்ற தேவன், இனி அவற்றை 'நினையாமலும் இருப்பேன்" என்கின்றார். நம்முடைய பரலோகத் தந்தை நம்மை பாவத்திலிருந்து விடுவித்து, நாம் அவரில் வளர உதவுகின்றார். நம்முடைய பழைய பாவ வாழ்வை எண்ணி நாம் சோர்ந்துபோகத் தேவையில்லை. நாம் தூய்மையாக்கப்பட்டவர்களாய், அவருக்கு இப்பொழுதும் எப்பொழுதும் பணிசெய்யலாம்.

பாவத்தின் விளைவுகளை நாம் சந்திக்கலாம். ஆனால் பாவத்தை தேவன் நம்மைவிட்டு அகற்றிவிட்டார். நாம் அவரிடம் திரும்பி, புதிய பரிசுத்த வாழ்வைப் பெற்றுக்கொள்ள அழைக்கின்றார். நம் பழைய பாவ வாழ்வு அகற்றப்பட அதைவிட சிறந்த வழி வேறெதுவுமில்லை.

மிகப்பெரிய மீட்புப் பணி

1952 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ஆம் நாள் ஒரு மிகப்பெரிய, வலிமையான புயல், எஸ்.எஸ். பென்டல்டன் என்ற எண்ணெய் கப்பலை இரண்டு துண்டாக உடைத்தது. மசாசுசெட் கடற்கரையிலிருந்து சுமார் பத்து மைல்களுக்கப்பால் இந்த நிகழ்வு ஏற்பட்டது. நாற்பதிற்கும் மேற்பட்ட பயணிகள் கடுமையான காற்றினாலும், கொடூரமான அலைகளாலும் மூழ்கிக் கொண்டிருந்த கப்பலில் அகப்பட்டுக் கொண்டனர்.

சாத்தம் என்ற இடத்திலுள்ள கடலோர காவற்படையினருக்கு இந்த செய்தி கிடைத்தபோது, மசாசுசெட்டிலிருந்து படகு சவாரியில் திறமைவாய்ந்த பெர்னி வெப்பர் மூன்று பேரை அழைத்துக் கொண்டு, ஓர் உயிர்காக்கும் படகில், தப்பிக்கமுடியாத சூழலில் அகப்பட்டு திகைத்து நின்ற கப்பல் பயணிகளை, முடியாத ஒரு நிலையிலிருந்து காப்பாற்றி கரை சேர்த்தார். இவர்களுடைய இந்த தைரியமான முயற்சி அமெரிக்க ஐக்கிய நாட்டின் கடலோரக் காவற்படையினரின் சரித்திரத்தில் மிகப்பெரிய மீட்பு செயலாகக் கருதப்பட்டது. அதுவே அந்த ஆண்டு 2016ல் திரைப்படத்துறையினரின் முக்கிய தலையங்கமாகக் கருதப்பட்டது.

லூக்கா 19:10ல் இயேசு தன்னுடைய மீட்புப் பணியை வெளிப்படுத்துகின்றார். 'இழந்து போனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார்" என்றார். சிலுவையும், உயிர்த்தெழுதலுமே அந்த மீட்பின் பிரதான வெளிப்பாடாக இருந்தது. இயேசு தாமே நம்முடைய பாவங்களை ஏற்றுக் கொண்டு, அவரை விசுவாசிப்பவர்களைப் பிதாவிடம் சேர்க்கவே இவ்வுலகிற்கு வந்தார். 2000 வருடங்களாக தேவன் தருகின்ற இந்த விலையேறப்பெற்ற மீட்பின் வாழ்வை இப்பொழுதும், பிற்பாடு நாம் அவரோடு நித்தியமாக வாழப்போகின்ற வாழ்வையும் ஏற்றுக் கொண்டு, அரவணைத்து வருகின்றனர், மீட்கப்பட்டவர்கள்!

இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களாகிய நாம் பரிசுத்த ஆவியானவரின் உதவியால் நமது இரட்சகரின் மிகப்பெரிய மீட்புப் பணியில் இணைந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றுள்ளோம். உன் வாழ்வில் நீ சந்திக்கின்ற யாருக்கு அவருடைய மீட்பின் அன்பு தேவையாயிருக்கின்றது?

அந்நியரை உபசரித்தல்

ஐரோப்பா கண்டத்திலேயே மிகவும் ஏழ்மையான நாடான மால்டோவாவிற்கு என்னுடைய சிநேகிதி சென்றிருந்தபோது, அங்குள்ள கிறிஸ்தவர்கள் அவர்களுக்குக் கொடுத்த மலர்ந்த வரவேற்பில் அகமகிழ்ந்து போனாள். ஒருமுறை அவள் சில துணிகளையும், வீட்டிற்குத் தேவையான சில பொருட்களையும் வாங்கிக் கொண்டு அங்குள்ள ஆலயத்தின் உறுப்பினரான ஓர் ஏழைத் தம்பதியினரைக் காண அவர்கள் இல்லத்திற்குச் சென்றபோது, அங்கு அவர்கள் அநேகக் குழந்தைகளைத் தத்தெடுத்து, பராமரித்து வருவதைக் கண்டு ஆச்சரியப்பட்டாள். அந்தத் தம்பதியினர் என்னுடைய சிநேகிதியை இன்முகத்தோடு வரவேற்று, டீ வழங்கினர். அத்தோடு சில தின்பண்டங்களையும் கொடுத்தனர். மேலும் தர்பூசணி, மேலும் சில பழவகைகள், காய்கனிகளை அவளுக்குக் கொடுத்து வழியனுப்பிவைத்தனர். அவர்களுடைய உபசரணையைப் பார்த்து வியந்துபோனாள்.

தேவன் தம் ஜனங்களாகிய இஸ்ரவேலரிடம் அந்நியரை உபசரிக்கும்படி சொன்னதை இந்த விசுவாசிகள் செயலில் காட்டுகின்றனர். தேவன் அவர்களிடம், 'நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளிளெல்லாம் நடந்து, அவரிடத்தில் அன்பு கூர்ந்து, உன் முழு இருதயத்;தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவித்து... (உபா. 10:12) என்பதாகக் கூறியுள்ளதை இஸ்ரவேலர் எவ்வாறு செயலில் காட்ட வேண்டும்? இன்னும் சில வசனங்களுக்கப்பால் இதற்கான பதில் வருகிறது. 'நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியராயிருந்தபடியால், அந்நியரைச் சிநேகிப்பீர்களாக" (வச. 19). அந்நியரை வரவேற்கும் போது அவர்கள் தேவனுக்குப் பணிசெய்து, அவரைக் கனம் பண்ணுகின்றனர். அந்நியரிடம் அன்பையும், கரிசனையையும் காண்பிப்பதால் தேவன் மீதுள்ள நம்பிக்கையை அவர்களுக்கு வெளிப்படுத்துகின்றனர்.

மால்டோவர்களிடமிருந்தும், இஸ்ரவேலிடமிருந்தும் நம்முடைய சூழ்நிலைகள் வேறுபட்டு காணப்படலாம். ஆனால் பிறரை உபசரிப்பதன் மூலம் தேவன் மீதுள்ள அன்பினைக் காட்ட முடியும். நம்முடைய வீட்டைப் பிறருக்குத் திறந்து கொடுப்பதன் மூலமாகவும், நம் எதிரே வருபவர்களிடம் புன்னகையோடு வாழ்த்து தெரிவிப்பதன் மூலமாகவும், தேவனுடைய அன்பைக் காட்டலாம். ஒருவரையொருவர் காயப்படுத்தும், தனிமைப்படுத்தும் இவ்வுலகில் தேவனுடைய கரிசனையையும், உபசரணையையும் காட்டுவோம்.

மென்மையானது ஆனால் வல்லமையுள்ளது

நெதர்லாந்து தேசத்தினுள் பகைவர்களின் குடியேற்றம் அதிகரித்தபோது, ஆனி பிராங்கும் அவள் குடும்பமும் தப்பித்துக்கொள்ள நினைத்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, அவர்கள் ஒரு இரகசிய இடத்தில் இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்தனர். அவர்கள்.

கண்டுபிடிக்கப்பட்ட போது, பொதுப் பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டனர். ஆனியின் பிரசித்திப்பெற்ற கையேட்டில் எழுதியிருந்தது, 'நீண்ட நாட்களுக்குப் பின் எல்லா ஆயுதங்களையும் விட கூரிய ஆயுதமாகச் செயல்பட்டது சாந்தமும், அமைதலுமான ஆவியே" என்பது.

நிஜ வாழ்வில் சாந்தத்தையும், அமைதியையும் செயல்படுத்துவது என்பது சிக்கலான காரியமாகத் தோன்றலாம்.

ஏசாயா 40ல் தேவனுடைய மென்மையான மற்றும் வல்லமையான குணாதிசயத்தைக் காண்கின்றோம். வசனம் 11ல், 'மேய்ப்பனைப் போல தமது மந்தையை மேய்ப்பார்.

ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து, கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார்"  எனவும் 'இதோ, கர்த்தராகிய ஆண்டவர் பராக்கிரமசாலியாக வருவார்; அவர் தமது புயத்தினால் அரசாளுவார்" (வச. 10) எனவும் காண்கின்றோம். அவர் முழுவதும் வல்லமையுள்ளவராகவும், பாதுகாக்கவேண்டிய இடத்தில் மென்மையானவராகவும் திகழ்கின்றார்.

தேவாலயத்தில் காசுக்காரருடைய பலகைகளையும் கவிழ்த்து, விற்கிறவர்களையும், கொள்கிறவர்களையும் துரத்திவிட சவுக்கை பயன்படுத்தியபோது அதிகாரமும், வல்லமையும் உடையவராகவும், சிறுபிள்ளைகளைத் தன்னோடு சேர்த்துக் கொண்டபோது மென்மையானவராகவும் செயல்பட்டார். அவர் அதிகாரமுடைய வார்த்தைகளால் பரிசேயரைக் கண்டிக்கின்றார் (மத். 23). இயேசுவின் கனிவான, இரக்கமுள்ள கண்கள் ஒரு பெண்ணை மன்னிக்கின்றது (யோவா. 8:1-11).

நாமும் வல்லமையோடு உறுதியாக பலவீனருக்காக நிற்கவும், நீதியை நிலைநிறுத்த சவால்களை ஏற்கவும் வேண்டிய சந்தர்ப்பங்கள் வரும். 'உங்களுடைய சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக (பிலி. 4:5). நாம் தேவனுக்குப் பணி செய்யும் போது, நம்முடைய மிகப்பெரிய பெலன் தேவையுள்ளவர்களிடம் காட்டப்படும் மென்மையான இருதயத்தால் விளங்கும்.

சத்தத்திலிருந்து தப்பித்துக் கொள்ளல்

அநேக ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கல்லூரியின் முதல்வர் தன் மாணவர்களை, அன்று மாலை நடைபெறும் 'வல்லமை இறங்கும்" நிகழ்வில் தன்னோடு கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். மாணவர்கள் சம்மதம் தெரிவித்தனர். ஆயினும் ஆர்வமில்லாதவர்களாக தங்கள் அலைபேசிகளைத் தள்ளி வைத்துவிட்டு, சிற்றாலயத்தினுள் நுழைந்தனர். முதலாம் மணி வேளையில் இசையும், ஜெபமும் இணைந்த ஆராதனையில் அமைதியாக அமர்ந்திருந்தனர். அதில் கலந்துகொண்ட ஒரு மாணவன் தன்னுடைய அனுபவத்தைக் குறித்து, 'அனைத்து பிற ஓலிகளையும் நிறுத்திவிட்ட ஓரிடத்தில் அமைதியாக இருக்கக் கிடைத்த ஓர் அற்புதமான வாய்ப்பு" எனத் தெரிவித்தார்.

சிலவேளைகளில் அதிகப்படியான ஓசைகளை தவிர்ப்பது என்பது கடினமாகக் தோன்றும். வெளியுலகிலிருந்தும் உள் உலகிலிருந்தும் வரும் ஒலி நம் காதுகளை செவிடாக்குவது போலவுள்ளது. ஆனால், நாம் நம்மைச் சுற்றியுள்ள ஓலியை நிறுத்திவிட்டால் தேவனைக் காணத் தேவையான அமைதியைப் பெறலாம். இதனையே சங்கீதக்காரனும் சங்கீதம் 46:10ல் கூறுகின்றார். 1 இராஜாக்கள் 19ல் தீர்க்கதரிசி எலியா தேவனைக் காணும்படித் தேடுகின்றார். பலத்த பெருங்காற்றில் தேவனைக் காணவில்லை, பூமி அதிர்ச்சியிலும் காணவில்லை, அக்கினியிலும் காணவில்லை (வச. 9-13). அதன் பின் தோன்றிய தேவனின் மெல்லிய சத்தத்தைக் கேட்டான்
(வச. 12).

அதிகப்படியான ஓசையை விழாக்காலங்களில் கட்டாயமாக நாம் கேட்கக்கூடும். குடும்ப நபர்கள், நண்பர்கள் ஒன்று சேரும் போது, அது உற்சாகமான உரையாடல்களும் அதிக உணவும், வேடிக்கைச் சிரிப்பும் தங்கள் அன்பினை வெளிப்படுத்தும் நேரமாக அமையும். ஆனால் நாம் அமைதியாக நம்முடைய இருதயத்தை தேவனுக்குத் திறந்தால் அந்த வேளை இன்னும் இனிமையானதாக இருக்கும். எலியாவைப் போன்ற அமைதியான நேரத்தில் நாமும் தேவனைச் சந்திக்கலாம். அமர்ந்து கவனிப்போமாகில் தேவனுடைய மெல்லிய குரலைக் கேட்கலாம்.