1770 ஆம் ஆண்டு வரை ரொட்டித் துண்டுகளே காகிதத்திலுள்ள தவறான பென்சில் எழுத்துக்களை நீக்க பயன்படுத்தப்பட்டு வந்தன. பிரிட்டனைச் சேர்ந்த எட்வர்ட் நெய்ர்ன் என்பவர் ஒரு ரொட்டித்துண்டு என எண்ணி தவறுதலாக ரப்பர் மரப் பாலின் ஒரு துண்டினைக் கொண்டு காகிதத்திலுள்ள எழுத்தினை அழித்தபோது, அது காகிதத்திலுள்ள பென்சில் எழுத்துக்களை நன்றாக நீக்கியதோடு, சில ரப்பர் துணுக்குகளையே மீதமாக விட்டது. ரப்பர், பென்சில் கோடுகளை எளிதில் அகற்றக்கூடியதாக இருப்பதைக் கண்ட அவர், அதன் விளைவாக பென்சில் அழிப்பானைக் கண்டுபிடித்தார்.

நம்முடைய வாழ்விலும் மிக மோசமான தவறுகளையும் அகற்றமுடியும். அது தேவனாலேயே கூடும். அவரே வாழ்வின் அப்பம். அவரே தம்முடைய வாழ்வின் மூலம் நம்முடைய பாவக்கறைகளை நீக்கி சுத்தமாக்கினார். நம்முடைய பாவங்களை மீண்டும் நினைப்பதில்லையெனவும் வாக்களித்துள்ளார். ‘நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப் போடுகிறேன். உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன்” என ஏசாயா 43:25ல் சொல்கின்றார்.

இது தகுதியற்ற நமக்கு, கொடுக்கப்பட்டுள்ள மிகப் பெரிய சிலாக்கியம். அவர் நம்முடைய கடந்தகால பாவங்களை கார்மேகத்தைப் போல நம்மை விட்டு அகற்றிவிட்டார் என்பதை நம்புவதற்கு நமக்குக் கடினமாகத் தோன்றலாம். எல்லாவற்றையும் அறிந்திருக்கின்ற தேவன் என்னுடைய பாவங்களை எளிதில் மறந்து விடுவாரா என கேட்கத் தோன்றலாம்.

ஆனால், நாம் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் போது, இதுவே தேவன் நமக்குச் செய்யும் சிலாக்கியம். நம்முடைய பாவங்களை மன்னிக்கின்ற தேவன், இனி அவற்றை ‘நினையாமலும் இருப்பேன்” என்கின்றார். நம்முடைய பரலோகத் தந்தை நம்மை பாவத்திலிருந்து விடுவித்து, நாம் அவரில் வளர உதவுகின்றார். நம்முடைய பழைய பாவ வாழ்வை எண்ணி நாம் சோர்ந்துபோகத் தேவையில்லை. நாம் தூய்மையாக்கப்பட்டவர்களாய், அவருக்கு இப்பொழுதும் எப்பொழுதும் பணிசெய்யலாம்.

பாவத்தின் விளைவுகளை நாம் சந்திக்கலாம். ஆனால் பாவத்தை தேவன் நம்மைவிட்டு அகற்றிவிட்டார். நாம் அவரிடம் திரும்பி, புதிய பரிசுத்த வாழ்வைப் பெற்றுக்கொள்ள அழைக்கின்றார். நம் பழைய பாவ வாழ்வு அகற்றப்பட அதைவிட சிறந்த வழி வேறெதுவுமில்லை.