1989 ஆம் ஆண்டு முதல் கெய்த்வாசர்மேன் ஒவ்வொரு ஆண்டிலும் ஒருசில நாட்களை வீடற்ற நிலையில் கழிக்க தேர்ந்து கொள்வார். தனக்குள்ளே அன்பையும் மனதுருக்கத்தையும் வளர்த்துக்கொள்ள, இது உதவியாயிருக்கிறதெனக் கருதுகின்றார். ‘நற்செயல்கள்” என்ற நிறுவனத்தின் இயக்குனரான கெய்த், ‘தெருக்களில் வசிப்பவர்களோடு வாழும்போது என்னுடைய கண்ணோட்டத்தையும், புரிந்துகொள்வதையும் விரிவாக்கிக்கொள்ள முடிகிறது” என்கின்றார்.

தான் பணியாற்றும் நபர்களோடு ஒருவராக தன்னை இணைத்துக் கொள்ளும் கெய்த்தின் இந்த அணுகுமுறை, இயேசு நிறைவேற்றிய பணியின் ஒரு சிறிய பகுதியைப் போன்றுள்ளது. இந்த அகில உலகையும் படைத்த தேவன் தாமே, இந்த கொடிய உலகில் குழந்தையாகப் பிறந்து, மனிதனாக வாழ்ந்து, நாம் அனுபவிக்கின்ற துன்பங்களைத் தானும் அனுபவிக்கவும், மனிதனின் கரத்தாலே மரிக்கவும் தன்னை அர்ப்பணித்தார். இதன்மூலம் நமக்கும் தேவனுக்குமுள்ள உறவை மீண்டும் ஏற்படுத்தினார்.

எபிரெயரை எழுதியவர், ‘பிள்ளைகள் மாம்சத்தையும், இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார். மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கு…  அப்படியானார்” (2:14) எனக் குறிப்பிடுகின்றார். இயேசுவும் தேவதூதர்களைக் காட்டிலும் சிறியவராகத் தன்னைத் தாழ்த்தினார் (வச. 9). அவரே அவர்களை உருவாக்கியவராயிருந்தும் தன்னைத் தாழ்த்தினார். அவர் முடிவில்லாத வாழ்வுடையவராயிருந்தும் மனிதனாகப் பிறந்து, மரித்தார். அவர் சர்வ வல்லவராயிருந்தும் நமக்காகப் பாடுபட்டார். ஏன் அவர் இப்படிச் செய்ய வேண்டும்? ஏனெனில், நாம் சோதிக்கப்படும்போது நமக்கு உதவும் பொருட்டும் தேவனுக்கும் நமக்குமிடையே ஒப்புரவாகுதலை ஏற்படுத்தவும் தன்னை ஒப்புக்கொடுத்தார் (வச. 17-18).

இன்று நாம் அவருடைய அன்பை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். அவர் நம்முடைய மனிதத் தன்மையைப் புரிந்து கொள்கின்றார். நாமும் நம்முடைய பாவங்களிலிருந்து விடுதலைப் பெற்று தூய்மையடைய ஒரு வழியைத் திறந்துள்ளார்.