உன் கூந்தலை அவிழ்த்து விடு
இயேசு சிலுவையில் அறையப்படும் சில நாட்களுக்கு முன்பு விலையேறப்பெற்ற நறு மண தைலத்தை மரியாள் எனும் பெயர் கொண்ட ஒரு பெண் இயேசுவின் பாதத்தில் ஊற்றினாள். அதனோடுகூட நிற்காமல், அதைக்காட்டிலும் இன்னும் அதிக துணிச்சலான தொரு செயலையும் செய்தாள். அவள் தன் கூந்தலை அவிழ்த்து அதைக்கொண்டு இயேசுவின் பாதத்தை துடைத்தாள் (யோவா. 12:3). அத்தைலம் தன் வாழ்நாள் சேமிப்பாக கூட இருக்கலாம். ஆனால் மரியாள் அதை மாத்திரம் அவருக்கு காணிக்கையாக செலுத்த வில்லை, தன்னுடைய நற்பெயரையும் கூட அதோடு சேர்த்து அவர் பாதத்தில் காணிக்கையாக செலுத்தினாள். ஏனெனில், முதலாம் நூற்றாண்டில் மத்திய கிழக்கத்திய கலாச்சாரத்தில், பெண்கள் பொது இடத்தில் தங்கள் கூந்தலை ஒருபோதும் கட்டவிழ்க்க மாட்டார்கள். அதை பண்பற்ற இழிவான செயலாகவே கருதினர். ஆனால் உண்மையான ஆராதனை என்பது மற்றவர்கள் நம்மைக்குறித்து என்ன நினைப்பார்கள் என்று நினையாதிருப்பதே ஆகும் (2 சாமு. 6:21-22). இயேசுவை ஆராதித்து வணங்க, பிறர் தன்னை அடக்கமற்றவள், ஒழுக்கங்கெட்டவள் என்றும்கூட சொன்னால் பரவாயில்லை என்று மரியாள் முடிவு செய்திருந்தாள்.
மற்றவர்கள் நம்மைக்குறித்து நல்லவிதமாக நினைக்க வேண்டும் என்பதற்காக சபைக்கு செல்லும் பொழுது நேர்த்தியாக செல்ல வேண்டும் என்கிற நெருக்கடியை ஏற்படுத்துகிற எண்ணம் நம்மில் அநேகருக்குண்டு. சபைக்குச் செல்லும் பொழுது ஒரு முடி கூட கலைந்து இல்லாதபடி தலையை நன்றாக வாரி, சீவி செல்கிறோம். இதையே உருவகப்படுத்தி கூறுவோமானால், நம்முடைய கூந்தலை அவிழ்த்துவிட்டு, பொய்யான வெளிப்புறத் தோற்றத்திற்கு பின்னால் மறைந்திருக்கும் குறைபாடுகளை பயமின்றி வெளிக்காட்ட உதவும் சபையே ஒரு ஆரோக்கியமான சபை. நம்முடைய குற்றங்களை எல்லாம் மறைத்துக் கொண்டு பலசாலிகளாய் காண்பிக்க முற்படுவதைவிட நம்முடைய பெலவீனங்களை கூறி பெலன் பெறக்கூடிய இடமாகவே சபை இருக்க வேண்டும்.
ஆராதனை என்பது எக்குறையும் இல்லாததுபோல நடந்துகொள்ளும் ஒரு ஒழுங்குமுறை அன்று. மாறாக, தேவனோடும் மற்றவர்களோடும் எல்லாவிதத்திலும் உண்மையாக இருப்பதே ஆகும். ஒருவேளை நம்முடைய பெலவீனங்களை வெளிக்காட்டுவதென்பதே நம்முடைய மிகப்பெரிய பயமாயிருந்தால், நாம் செய்யும் மிகப்பெரிய பாவம் அதை மறைப்பதே ஆகும்.
ஏன் மன்னிக்க வேண்டும்?
என்னுடைய தோழி ஒருத்தி எனக்கு நம்பிக்கை துரோகம் செய்தபொழுது மன்னிக்க வேண்டியதின் அவசியத்தை நான் அறிந்திருந்தும் அவளை என்னால் மன்னிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. ஏனெனில் அவளுடைய வார்த்தைகள் என்னுடைய இருதயத்தின் ஆழத்தில் ஊடுருவிச்சென்று என்னை வேதனையினாலும் கோபத்தினாலும் நிலைகுலையச் செய்தது. பின்பு இதைக்குறித்து நாங்கள் பேசினபொழுது, அவளை நான் மன்னித்து விட்டதாகக் கூறினேன். ஆனாலும் அதன்பிறகும், வெகுகாலம் அவளைக் காணும்பொழுதெல்லாம் வலியின் சுவடுகள் என்னுள் வெளிப்படுவதை உணர்ந்தேன். அவள்மீது இன்னும் மனக்கசப்பும் கோபமும் இருப்பதை அறிந்து கொண்டேன். இருப்பினும் ஒரு நாள் தேவன் என்னுடைய ஜெபத்திற்கு பதிலளித்து, நான் பற்றிக்கொண்டிருந்த மனக்கசப்பையும் கோபத்தையும் முற்றிலும் விட்டுவிட எனக்கு பெலனளித்தார். இறுதியாக நான் விடுதலை பெற்றேன்.
தான் சிலுவையில் மரிக்கும் தருவாயில் தொங்கிக்கொண்டிருந்த பொழுதும் மன்னிப்பை அளித்ததின் மூலம் கிறிஸ்துவ விசுவாசத்தின் நாடித் துடிப்பே மன்னிப்பதில் தான் உள்ளது என்பதை நமது இரட்சகர் விவரிக்கிறார். தன்னை சிலுவையில் அறைந்தவர்களையும் இயேசு நேசித்ததினால், அவர்களை மன்னிக்குமாறு பரமபிதாவிடம் வேண்டுதல் செய்கிறார். மனக்கசப்பையும் கோபத்தையும் பற்றிக்கொண்டிருப்பதற்குப் பதிலாக தனக்கு தீங்கிழைத்தவர்களுக்கு கிருபையையும் அன்பையும் ஈந்தளித்தார்.
இப்பொழுதும் கூட தேவன் முன்பு நம்மை நாமே நிதானித்து பார்த்து, நம்மை காயப்படுத்தி னவர்களை நாம் இன்னும் மன்னியாமல் இருப்போமானால், இயேசுவின் மாதிரியைப் பின் பற்றி அவர்களுக்கு அவருடைய அன்பை வெளிப்படுத்த நல்ல தருணம் இதுவே. நாம் மன்னிப்பதற்கு அதிக காலமாக சிரமப்படுக்கொண்டிருந்தாலும், பரிசுத்த ஆவியானவர் மூலம் பிதாவினிடத்தில் வேண்டுதல் செய்யும் பொழுது, நாம், மன்னியாமை என்னும் சிறையிருப்பிலிருந்து விடுதலையாக்கப்படுகிறோம்.
நமது சிறந்த தோழர்!
நான் 12 வயதாய் இருந்த பொழுது பாலைவனப் பகுதியில் உள்ள ஒரு நகரத்திற்கு எங்கள் குடும்பம் குடிபெயர்ந்தது. புதிய பள்ளியில், அனல் காற்றடிக்க உடற்பயிற்சி வகுப்புகளை முடித்துவிட்டு நாங்கள் அனைவரும் குடிநீர்க் குழாய்க்கு நேராய் விரைந்து ஓடுவோம். என் வகுப்பு பிள்ளைகளோடு ஒப்பிடும்பொழுது நான் அவர்களைவிடச் சிறியவனாகவும் மெலிந்தும் இருப்பதினால், வரிசையில் நிற்கும்பொழுது அநேகந்தரம் பிறர் என்னைத் தள்ளி விட்டு முன்சென்று விடுவார்கள். ஒருநாள், தன் வயதிற்கு மிஞ்சிய உடற் கட்டும் பெலனும் கொண்ட என் நண்பன் ஜோஸ் (Jose) இதைக் கண்டு, என் அருகில் வந்து தன் பலத்த கரத்தை விரித்து ஒருவனும் என்னை வந்து தள்ளாதபடி எனக்கு அரணாய் நின்றுகொண்டு, “ஏய், முதலில் பாங்க்ஸ் (Banks) தண்ணீர் குடிக்க வழிவிடுங்கள்”, என உரத்த சத்தமிட்டான். அன்றைய தினத்திற்கு பிறகு ஒரு நாளும் தண்ணீர் குடிக்க எனக்கு பிரச்சனை ஏற்பட்டதே இல்லை.
பிறர் நம்மை ஈவிரக்கமின்றி நடத்தும்பொழுது நாம் படும் வேதனையை இயேசு நன்கு அறிவார். ஏனெனில் நம் எல்லோரைக் காட்டிலும் மிக அதிகமாக அதை எதிர்கொண்டவர் அவரே. “அவர் அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்...,” என அவரைக்குறித்து வேதம் கூறுகிறது (ஏசா. 53:3). ஆனால் அவர் பாடுகளினால் பாதிக்கப்பட்ட வராய் மாத்திரம் இருந்துவிடாமல், இன்று நமக்காக பரிந்துபேசி வழக்காடுபவராகவும் இருக்கிறார். நாம் தேவனோடு ஒரு புதிய ஐக்கியத்திற்குள் பிரவேசிக்கும்படியாய், அவர் தமது ஜீவனையே நமக்காக தந்தருளி “புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை” நமக்கு உண்டு பண்ணியுள்ளார் (எபி 10:19). நம்மை நாமே இரட்சித்துக்கொள்ள முடியாதபடியினால், அவர் மீது விசுவாசம் வைத்து, நம்முடைய பாவத்திலிருந்து மனந்திரும்பினால், இலவசமாய் அவர் நமக்களித்துள்ள ஈவாகிய இரட்சிப்பை பெற்றுக்கொள்ளலாம்.
நமக்குக் கிடைக்கக்கூடிய உற்ற நண்பர் இயேசு ஒருவரே. அவர், “என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை”, எனக் கூறியுள்ளார் (யோவா. 6:37). மற்றவர்கள் நம்மை எப்பொழுதும் ஓரடி தூரத்திலேயே வைக்கலாம் அல்லது முழுவதும் ஒதுக்கியே விடலாம், ஆனால் சிலுவையில் நமக்காக தன் கரங்களை விரித்த தேவன் இன்றும்கூட நம்மை அழைக்கிறார். நம்முடைய இரட்சகர் எவ்வளவு வல்லமையானவர்!
நம்பிக்கை பயணம்
1880ஆம் ஆண்டு வெளிவந்த லியூ வாலஸ்ஸின் (Lew Wallace) பென் ஹர்: எ டேல் ஆப் கிறைஸ்ட் (Ben-Hur: A tale of Christ) என்ற கிறிஸ்துவைப் பற்றிய நாவல் இன்று வரை பிரசுரத் திலுள்ளது. இது 19ஆம் நூற்றாண்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய கிறிஸ்தவ புத்தகமாகக் கருதப்படுகிறது. இயேசுவின் வாழ்க்கை வரலாற்றோடு பின்னிப் பிணைக்கப்பட்ட யூதா பென் ஹர் (Judah Ben Hur) என்னும் யூதகுலப் பிரபுவின் கதை இன்றும் அனேக வாசகர்களை தன்வசப்படுத்தியுள்ளது.
அப்புத்தகத்தை எழுதியபொழுது தன் வாழ்கையே மாற்றமடைந்ததாக அப்புத்தகத்தின் ஆசிரியர் கூறியதாக ஹியுமனிட்டீஸ் (Humanities) என்னும் பத்திரிக்கையில் எமி லிஃப்சன் (Amy Lifson) தெரிவித்துள்ளார்: “இயேசு கிறிஸ்துவின் சிலுவைக்காட்சிகளின் ஊடாய் வாசகர்களை பென்-ஹர் வழிநடத்தியது போல, இயேசுவை விசுவாசிக்கும்படியாக லியூ வாலஸ்சையும் அவரண்டை நடத்திச்சென்றுள்ளான்.” வாலஸ் தாமே, “நான் நசரேனாகிய இயேசுவைக் கண்டேன்... வேறெந்த சாதாரண மனுஷனும் நடப்பிக்க முடியாத கிரியைகளை அவர் நடப்பிக்க கண்டேன்,” எனக் கூறியுள்ளார்.
சுவிசேஷங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள இயேசுவின் வாழ்க்கை, அவருடனேகூட நாம் நடந்து, அவருடைய வார்த்தைகளைக் கேட்கவும் அவருடைய அற்புதங்களைக் காணவும் நமக்கு உதவுகிறது. தான் எழுதிய சுவிசேஷ புத்தகத்தின் முடிவில், “இந்தப் புத்தகத்தில் எழுதியிராத வேறு அநேக அற்புதங்களையும் இயேசு தமது சீஷருக்கு முன்பாக செய்தார். இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும் இவைகள் எழுதப்படிருக்கிறது” என யோவான் எழுதியுள்ளார் (யோவா. 20:30-31).
லியூ வாலஸ் வேதாகமத்தை வாசித்து, ஆய்வு செய்து எழுதியதின் மூலம் இயேசுவை விசுவாசித்தது போலவே, அவருக்குள்ளும் அவரின் மூலமும் நாம் நித்திய வாழ்வை சுதந்தரித்துக்கொள்ளும் பொருட்டு அவருடைய வார்த்தை நம்முடைய மனதையும் இருதயத்தையும் மறுரூபமாக்குகிறது.
வாழ்நாள் மேய்ப்பன்
பள்ளியில் என்னுடைய மகன் புதிய வகுப்பிற்கு முன்னேறியபொழுது, தன்னுடைய பழைய வகுப்பின் ஆசிரியரை நினைத்து “என் வாழ்நாள் முழுவதும் எனக்கு அந்த ஆசிரியர்தான் வேண்டும்!” என அழுதான். அப்பொழுது, அவனுடைய வாழ்நாளில் பல ஆசிரியர்கள் வந்து போவார்கள் என்பதை அவனுக்கு புரியவைக்க வேண்டியதாயிற்று. இச்சம்பவம், நமது வாழ்நாள் முழுவதும் நிலைக்கக்கூடிய உறவு என்று ஏதேனும் உண்டோ என்று நம்மை நினைக்கத்தூண்டும்.
ஆனால் கோத்திரத் தலைவனாகிய யாக்கோபு அப்படியொருவர் இருப்பதைக் கண்டடைந்தான். பலவிதமான வியப்பளிக்கும் வாழ்வியல் மாற்றங்களை கண்டபொழுதும், வாழ்க்கைப் பயணத்தில் தனக்கு பிரியமானவர்களை இழக்க நேரிட்ட பொழுதிலும், அவன் வாழ்நாள் முழுவதும் ஒரு நிலையான பிரசன்னம் தன்னோடு இருந்துள்ளதை உணர்ந்தான். ஆகவே தான் “நான் பிறந்த நாள்முதல் இந்நாள்வரைக்கும் என்னை ஆதரித்து வந்த தேவன்... இந்தப் பிள்ளைகளை ஆசீர்வதிப்பாராக” என்று ஜெபித்தான் (ஆதி. 48:15-16).
யாக்கோபு மேய்ப்பனாயிருந்தபடியால், ஒரு மேய்ப்பனுக்கும் ஆடுகளுக்குமுள்ள உறவோடு தேவனோடுள்ள தன்னுடைய உறவை ஒப்பிட்டான். ஒரு ஆடு பிறந்த நாள்முதல் அதன் வாழ்நாள் முழுவதும் இரவுபகல் பாராமல் அதன் மேய்ப்பன் அதனைக் கண்ணும் கருத்துமாக பேணிவருவான். காலையில் அதற்கு நல்ல வழிகாட்டியாகவும் இரவில் நல்ல பாதுகாவலராயும் இருப்பான். தாவீதும் இதே கண்ணோட்டத்தைதான் கொண்டிருந்தான். ஆனால், “நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்” என்று கூறி தன்னுடைய அக்கண்ணோட்டத்திற்கு ஒரு நித்திய பரிமாணம் உண்டு என்பதை கோடிட்டுக் காட்டியுள்ளான் (சங். 23:6).
ஆசிரியர்கள் மாற்றம் என்பது நம் வாழ்வின் ஒரு பகுதியாகும். ஆனால் நம் வாழ்நாள் முழுவதும் நிலைக்கக்கூடிய ஒரு உறவு நமக்கு உண்டு என்பது எவ்வளவு நன்மையான தொரு காரியம். நாம் பூமியில் வாழும் ஒவ்வொரு நாளும் நம்மோடுகூட இருப்பதாக நல்ல மேய்ப்பர் வாக்குப்பண்ணியுள்ளார் (மத். 28:20). மேலும் இப்பூமியில் நம்முடைய வாழ்வு முடிந்த பின்பு, நித்தியத்திற்கும் அவருடன் மிக அருகில் இருப்போம்.
காட்லிமேன் தெரு
என் மனைவி கரோலினுடன் (Carolyn) லண்டன் சாலையில் நடந்து கொண்டிருந்தபோது, காட்லிமேன் தெரு(Godliman Street) என்ற ஓர் சாலையைக் கண்டேன். அங்கு வசித்த ஓர் புனிதரின் வாழ்வு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதால், அதை “புனிதர் வாழும் சாலை (கோட்லிமேன் தெரு)” என்று பெயரிட்டதாக தெரிவித்தனர். இது பழைய ஏற்பாட்டில் நடந்த ஓர் சம்பவத்தை நினைவூட்டியது.
சவுலின் தகப்பனார் காணாமற்போன கழுதைகளைக் கண்டுபிடித்து வருமாறு சவுலைத் தன் பணியாளனோடு அனுப்பினார். பல நாட்கள் தேடிய பின்பும் அவற்றைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
களைத்துப்போன சவுலும் வீட்டிற்குத் திரும்ப எண்ணினான். ஆனால் அவனுடன் இருந்த பணியாளனோ சாமுவேல் தீர்க்கதரிசி வசிக்கும் ராமாவை சுட்டிக்காட்டி “இதோ, இந்தப் பட்டணத்திலே தேவனுடைய மனுஷன் ஒருவர் இருக்கிறார்; அவர் பெரியவர்; அவர் சொல்லுகிறதெல்லாம் தப்பாமல் நடக்கும்; அங்கே போவோம்; ஒருவேளை அவர் நாம் போக வேண்டிய நம்முடைய வழியை நமக்குத் தெரிவிப்பார் என்றான்” (1 சாமு. 9:6).
சாமுவேல் தனது வாழ்நாள் முழுவதும் தேவனுடைய நட்பையும் ஐக்கியத்தையும் நாடி வந்தான். அதனால் அவனது வார்த்தை ஒவ்வொன்றும் சத்தியத்தினால் நிறைந்திருந்தது. அவன் தேவனுடைய தீர்க்கதரிசியென்று மக்களறிந்திருந்தனர். ஆகவே சவுலும் அவனது ஊழியக் காரனும் “தேவனுடைய மனுஷன் இருந்த அந்தப் பட்டணத்திற்குப் போனார்கள்” (வச.10).
இயேசுவைப் பிரதிபலிக்கும் வாழ்வை நாம் வாழ்ந்தால், நாம் வாழும் பகுதியில், நம்மைக் குறித்ததான தெய்வபக்தியின் நினைவுகளை முத்திரையாக விட்டுச் செல்லலாம்.
எது நிலைத்து நிற்கும்?
சமீபத்தில் பல கடினமான சூழ்நிலைகளை சந்தித்து வந்த என் நண்பர், இவ்வாறு எழுதினார், “கடந்த இரண்டு ஆண்டுகளை நான் எண்ணிப்பார்க்கையில் மிகவும் பயமாக இருக்கின்றது, என் கல்லூரி வாழ்வில் பல மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன... எதுவுமே நிலையானதல்ல.”
ஆம், பணிமாற்றம், புதிய நட்பு, வியாதி, சாவு போன்ற பல காரியங்களை இரண்டு வருடத்திற்குள் சந்திக்க நேரிடலாம். நல்லதோ கெட்டதோ, வாழ்க்கையையே புரட்டிப்போடக் கூடிய எதாவது ஓர் சம்பவம் நம்மீது பாயக் காத்துக்கொண்டிருக்கலாம்! அதைப் பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது. ஆனால், நமது அன்பான பரமபிதா மாறாதவராக இருகின்றார் என்பதை நினைக்கும்பொழுது எவ்வளவு ஆறுதலாக இருக்கின்றது!
“நீரோ மாறாதவராயிருக்கிறீர்: உமது ஆண்டுகள் முடிந்து போவதில்லை,” என்று சங்கீதக்காரன் கூறுகிறான் (சங். 102:27). எவ்வளவு மகத்தான சத்தியம் இது. தேவன் எப்பொழுதும் அன்பும், நீதியும், ஞானமும் நிறைந்தவராகவே இருக்கின்றார் என்று இந்த வசனம் நமக்கு சொல்கின்றது. “இந்த பிரபஞ்சத்தை உருவாக்கும் முன்னர் தேவனுடைய பண்புகள் எப்படி நிலையானதாக இருந்ததோ, அப்படியே இன்றும் அது என்றென்றும் மாறாமல் நிலைத்து நிற்கும்” என்று வேதாகம ஆசிரியர் ஆர்தர்.W.பிங்க் (Arthur.W. Pink) தேவனின் குணாதிசயத்தை அற்புதமாக விளக்குகின்றார்.
புதிய ஏற்பாட்டில், “நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை” (யாக். 1:17) என்று யாக்கோபு எழுதியுள்ளார். நமது நல்ல தேவன் மாத்திரம் தனது குணத்தை மாற்றிக்கொள்ளாமல் உறுதியுடன் இருப்பதே, நிலையற்ற நம் வாழ்வில் நம்பிக்கையூட்டும் ஒரே விஷயமா யிருக்கிறது. நன்மையான அனைத்திற்கும் அவரே ஆதாரமாக இருகின்றார். அவருடைய செயல்கள் அனைத்தும் நன்மையானைவைகளே.
எதுவுமே நிலைத்து நிற்காதது போல் தோன்றலாம், ஆனால் நம் தேவன் தம்முடைய பிள்ளைகள் மீது எப்போதும் நன்மை செய்பவராகவே திகழ்கின்றார்.
கொஸ்ஸியின் தைரியம்
டோகோ (togo) நாட்டில் மோனோ (mono) நதியில் ஞானஸ்நானம் எடுக்க காத்திருந்த கொஸ்ஸி(kossi), கீழே கிடந்த பழைய மரச்சிற்பம் ஒன்றை குனிந்து எடுத்தான். பல தலைமுறைகளாக அவனுடைய குடும்பத்தில் அச்சிற்பத்தை வணங்கி வந்துள்ளனர். இப்பொழுதோ, அக்கோரமான உருவப் பொம்மையை இத்தருணத்திற்கென்று ஆயத்தப்படுத்தியிருந்த நெருப்பில் கொஸ்ஸி தூக்கி எறிவதை அவனுடைய குடும்பத்தினர் உடனிருந்து கண்டனர். இனி ஒருபொழுதும் அவர்களுடைய கோழிகள் இக்கோரக் கடவுளுக்கு பலியாக படைக்கப்படபோவதில்லை.
மேற்கத்திய நாட்டிலுள்ள கிறிஸ்தவர்கள் தேவனுடைய ஸ்தானத்தில் வைக்கப்படும் அனைத்தையும் விக்கிரகமாக உருவகப்படுத்திக் கொள்வார்கள். ஆனால் மேற்கு ஆப்பிரிக்கா பகுதியிலுள்ள டோகோ தேசத்தில், பலியிட்டு திருப்திப்படுத்த வேண்டிய கடவுள்களாகவே இவ்விக்கிரகங்களை காண்கிறார்கள். ஆகவே, ஒன்றான மெய் தேவனுக்கு தன்னுடைய விசுவாசத்தைக் காண்பிக்க விரும்பும் ஒரு புதிய விசுவாசி, விக்கிரகத்தை எரித்து ஞானஸ்நானம் எடுப்பது மிகத்தைரியமான ஒரு பிரகடனமாகும்.
விக்கிரக ஆராதனையிலும் வேசித்தனத்திலும் மூழ்கியிருந்த ஒருகலாச்சார சூழ்நிலையில், எட்டு வயது யோசியா அரசனானான். யூதா தேசத்தின் மிக இழிவான வரலாற்றின் மிக மோசமான இரண்டு ராஜாக்கள் யோசியாவின் தகப்பனும் தாத்தாவுமே. ஆனால் யோசியா ராஜாவானபொழுது, பிரதான ஆசாரியர் ஆலயத்திலே நியாயப்பிரமானமாண புஸ்தகத்தை கண்டுபிடித்தான். அதை வாசித்த யோசியா அவ்வார்த்தைகளை தன் இருதயத்திலே பதித்துக்கொண்டான் (2 இரா. 22:8-13). பின்பு பாகாலுடைய பலிபீடங்களையும், விக்கிரக தோப்புகளையும் அங்கு படைக்கப்பட்ட சகலவிதமான அருவருப்பான பொருட்களையும் அழித்து, விபச்சாரச் சடங்குகளை நடப்பிக்கும் இலச்சையான புணர்ச்சிக்காரரின் வீடுகளையும் இடித்துப்போட்டான் (23ஆம் அதிகாரம்). இவ்வாறான எல்லா வழக்கங்களையும் ஒழித்துவிட்டு அவ்விடத்திலே பஸ்கா பண்டிகையை கொண்டாடினான் (23:21-23).
அறிந்தோ அறியாமலோ தேவனைச் சாராமல் பதில்களை எதிர்பார்ப்போமானால், நாம் பொய்யானதொரு கடவுளைப் பின்தொடர நேரிடும். ஆகவே, நாம் யாதொரு விக்கிரகத்தையாவது, உருவகங்கள் உட்பட, நெருப்பில் வீசவேண்டுவன எதுவோ என நம்மை நாமே கேட்டுக் கொள்வது ஞானமாக இருக்கும்.
அவருடைய வார்த்தையே முடிவான வார்த்தை
20ஆம் நூற்றாண்டின் மத்திய காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு வல்லமையான கிறிஸ்தவ தலைவரும், வேதவசனத்தை மனனம் செய்யும் நேவிகேட்டர்ஸ் (The Navigators) என்னும் முறைமையின் நிறுவனருமான திரு. டாசன் திராட்மான் (Dawson Trotman), ஒவ்வொரு கிறிஸ்தவனுடைய வாழ்விலும் வேதத்திற்கு இருக்கவேண்டிய முக்கியத்துவத்தைக் குறித்து வலியுறுத்தினார். ஒவ்வொரு நாளையும் “அவருடைய வார்த்தையே இறுதியான வார்த்தை” என்னும் செயல்முறையோடு நிறைவுசெய்யும் வழக்கத்தை அவர்கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் உறங்குவதற்கு முன்பு தான் மனனம் செய்த வசனத்தையோ அல்லது ஓர் பகுதியையோ தியானம் செய்து, தன் வாழ்வில் அவ்வார்த்தைக்குரிய மதிப்பையும் தாக்கத்தையும் குறித்து ஜெபித்துவிட்டு உறங்குவார். ஒவ்வொரு நாளும் தான் நினைக்கும் இறுதியான வார்த்தைகள் தேவனுடைய வார்த்தைகளாகவே இருக்கவேண்டும் என அவர் விரும்பினார்.
“என் படுக்கையின் மேல் நான் உம்மை நினைக்கும்பொழுது, இராச்சாமங்களில் உம்மைத் தியானிக்கிறேன். நீர் எனக்கு துணையாய் இருந்ததினால், உமது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன்,” என்று சங்கீதக்காரனாகிய தாவீது எழுதியுள்ளான் (63:6-7). நாம் மிகப்பெரிய கஷ்டத்தில் இருந்தாலும் சரி, சமாதானமான சூழ்நிலையை அனுபவித்துக் கொண்டிருந்தாலும் சரி, ஒவ்வொரு நாளும் உறங்கும் முன் தேவனுடைய வார்த்தையை தியானிப் போமானால், நம்முடைய மனம் ஆறுதலடைந்து இளைப்பாறுதளுக்குள் களிகூரும். அதுவே, மறுநாள் நாம் நல்ல மனநிலையோடு கண்விழிக்க உதவிடும்.
என்னுடைய நண்பரும் அவருடைய மனைவியும் அவர்களுடைய நான்கு பிள்ளைகளோடு சேர்ந்து ஒவ்வொரு நாளும், ஒரு வேதாகமப்பகுதி மற்றும் அனுதின தியானப்பகுதி ஒன்றையும் சத்தமாக வாசித்துவிட்டுதான் உறங்கச்செல்வார்கள். அதுமட்டுமன்றி, அவ்வேளை தங்கள் பிள்ளைகள் கேள்விகள் கேட்கவும், கருத்துகளைப் பரிமாறவும் ஊக்குவித்து, வீட்டிலும் பள்ளியிலும் கிருஸ்துவைப் பின்பற்றுவதைக் குறித்தும் பேசுவார்கள். இது ஒவ்வொரு நாளுக்குமுரிய அவர்களுடைய “அவர் வார்த்தையே இறுதியான வார்த்தை” முறையாகும். இது நம்முடைய நாளை நிறைவு செய்ய எவ்வளவு சிறந்த ஒரு முறை!