20ஆம் நூற்றாண்டின் மத்திய காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு வல்லமையான கிறிஸ்தவ தலைவரும், வேதவசனத்தை மனனம் செய்யும் நேவிகேட்டர்ஸ் (The Navigators) என்னும் முறைமையின் நிறுவனருமான திரு. டாசன் திராட்மான் (Dawson Trotman), ஒவ்வொரு கிறிஸ்தவனுடைய வாழ்விலும் வேதத்திற்கு இருக்கவேண்டிய முக்கியத்துவத்தைக் குறித்து வலியுறுத்தினார். ஒவ்வொரு நாளையும் “அவருடைய வார்த்தையே இறுதியான வார்த்தை” என்னும் செயல்முறையோடு நிறைவுசெய்யும் வழக்கத்தை அவர்கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் உறங்குவதற்கு முன்பு தான் மனனம் செய்த வசனத்தையோ அல்லது ஓர் பகுதியையோ தியானம் செய்து, தன் வாழ்வில் அவ்வார்த்தைக்குரிய மதிப்பையும் தாக்கத்தையும் குறித்து ஜெபித்துவிட்டு உறங்குவார். ஒவ்வொரு நாளும் தான் நினைக்கும் இறுதியான வார்த்தைகள் தேவனுடைய வார்த்தைகளாகவே இருக்கவேண்டும் என அவர் விரும்பினார்.

“என் படுக்கையின் மேல் நான் உம்மை நினைக்கும்பொழுது, இராச்சாமங்களில் உம்மைத் தியானிக்கிறேன். நீர் எனக்கு துணையாய் இருந்ததினால், உமது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன்,” என்று சங்கீதக்காரனாகிய தாவீது எழுதியுள்ளான் (63:6-7). நாம் மிகப்பெரிய கஷ்டத்தில் இருந்தாலும் சரி, சமாதானமான சூழ்நிலையை அனுபவித்துக் கொண்டிருந்தாலும் சரி, ஒவ்வொரு நாளும் உறங்கும் முன் தேவனுடைய வார்த்தையை தியானிப் போமானால், நம்முடைய மனம் ஆறுதலடைந்து இளைப்பாறுதளுக்குள் களிகூரும். அதுவே, மறுநாள் நாம் நல்ல மனநிலையோடு கண்விழிக்க உதவிடும்.

என்னுடைய நண்பரும் அவருடைய மனைவியும் அவர்களுடைய நான்கு பிள்ளைகளோடு சேர்ந்து ஒவ்வொரு நாளும், ஒரு வேதாகமப்பகுதி மற்றும் அனுதின தியானப்பகுதி ஒன்றையும் சத்தமாக வாசித்துவிட்டுதான் உறங்கச்செல்வார்கள். அதுமட்டுமன்றி, அவ்வேளை தங்கள் பிள்ளைகள் கேள்விகள் கேட்கவும், கருத்துகளைப் பரிமாறவும் ஊக்குவித்து, வீட்டிலும் பள்ளியிலும் கிருஸ்துவைப் பின்பற்றுவதைக் குறித்தும் பேசுவார்கள். இது ஒவ்வொரு நாளுக்குமுரிய அவர்களுடைய “அவர் வார்த்தையே இறுதியான வார்த்தை” முறையாகும். இது நம்முடைய நாளை நிறைவு செய்ய எவ்வளவு சிறந்த ஒரு முறை!