பள்ளியில் என்னுடைய மகன் புதிய வகுப்பிற்கு முன்னேறியபொழுது, தன்னுடைய பழைய வகுப்பின் ஆசிரியரை நினைத்து “என் வாழ்நாள் முழுவதும் எனக்கு அந்த ஆசிரியர்தான் வேண்டும்!” என அழுதான். அப்பொழுது, அவனுடைய வாழ்நாளில் பல ஆசிரியர்கள் வந்து போவார்கள் என்பதை அவனுக்கு புரியவைக்க வேண்டியதாயிற்று. இச்சம்பவம், நமது வாழ்நாள் முழுவதும் நிலைக்கக்கூடிய உறவு என்று ஏதேனும் உண்டோ என்று நம்மை நினைக்கத்தூண்டும்.

ஆனால் கோத்திரத் தலைவனாகிய யாக்கோபு அப்படியொருவர் இருப்பதைக் கண்டடைந்தான். பலவிதமான வியப்பளிக்கும் வாழ்வியல் மாற்றங்களை கண்டபொழுதும், வாழ்க்கைப் பயணத்தில் தனக்கு பிரியமானவர்களை இழக்க நேரிட்ட பொழுதிலும், அவன் வாழ்நாள் முழுவதும் ஒரு நிலையான பிரசன்னம் தன்னோடு இருந்துள்ளதை உணர்ந்தான். ஆகவே தான் “நான் பிறந்த நாள்முதல் இந்நாள்வரைக்கும் என்னை ஆதரித்து வந்த தேவன்… இந்தப் பிள்ளைகளை ஆசீர்வதிப்பாராக” என்று ஜெபித்தான் (ஆதி. 48:15-16).
யாக்கோபு மேய்ப்பனாயிருந்தபடியால், ஒரு மேய்ப்பனுக்கும் ஆடுகளுக்குமுள்ள உறவோடு தேவனோடுள்ள தன்னுடைய உறவை ஒப்பிட்டான். ஒரு ஆடு பிறந்த நாள்முதல் அதன் வாழ்நாள் முழுவதும் இரவுபகல் பாராமல் அதன் மேய்ப்பன் அதனைக் கண்ணும் கருத்துமாக பேணிவருவான். காலையில் அதற்கு நல்ல வழிகாட்டியாகவும் இரவில் நல்ல பாதுகாவலராயும் இருப்பான். தாவீதும் இதே கண்ணோட்டத்தைதான் கொண்டிருந்தான். ஆனால், “நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்” என்று கூறி தன்னுடைய அக்கண்ணோட்டத்திற்கு ஒரு நித்திய பரிமாணம் உண்டு என்பதை கோடிட்டுக் காட்டியுள்ளான் (சங். 23:6).

ஆசிரியர்கள் மாற்றம் என்பது நம் வாழ்வின் ஒரு பகுதியாகும். ஆனால் நம் வாழ்நாள் முழுவதும் நிலைக்கக்கூடிய ஒரு உறவு நமக்கு உண்டு என்பது எவ்வளவு நன்மையான தொரு காரியம். நாம் பூமியில் வாழும் ஒவ்வொரு நாளும் நம்மோடுகூட இருப்பதாக நல்ல மேய்ப்பர் வாக்குப்பண்ணியுள்ளார் (மத். 28:20). மேலும் இப்பூமியில் நம்முடைய வாழ்வு முடிந்த பின்பு, நித்தியத்திற்கும் அவருடன் மிக அருகில் இருப்போம்.