வகை  |  odb

புதிய நோக்கம்

ஜேக்கப் டேவிஸ் 1800ல் வாழ்ந்த ஒரு தையல்காரர். அவருக்கு ஒரு பிரச்சனை வந்தது. அந்த நாட்களில் அமெரிக்க மேற்கு மாகாணத்தில் தங்க சுரங்க வியாபாரம் ஓங்கியிருந்தது. அதில் வேலை செய்யும் வேலையாட்களின் கால் சட்டை (பாண்ட்) சீக்கிரத்தில் கிழிந்து போய்க்கொண்டிருந்தது, அதற்கு ஓர் தீர்வை காணவேண்டும் என்று துடித்தார். அதனால் அவர் ‘லெவி ஸ்டிராஸ்’ (Levi Strauss) நடத்திவரும் கம்பெனிக்கு சென்று, அவரிடம் இருந்து கூடாரம் செய்ய பயன்படும் துணியை வாங்கினார். அந்தத் துணி எளிதில் கிழியாத கனமான துனியாக இருந்தது. அத்துணியில் வேலையாட்களுக்கு ஏற்ற கால் சட்டையை தைத்துகொடுத்தார். அன்று தான் நீல நிற ஜீன்ஸ் பிறந்தது. இன்றைக்கு லெவியைத் தவிர்த்து பல வகையான ஜீன்ஸ் துணிகளை உலக சந்தையில் பார்க்கலாம். அதை பலர் மிகவும் விரும்பி அணியும் ஆடையாகவும் மாறிவிட்டது. ஒரு மனிதன் ஓர் சாதாரண கூடார துணிக்கு புது வடிவம் கொடுத்ததினால் இது நடந்தது.

சீமோனும் அவன் நண்பர்களும் கலிலேயா கடலில் மீன் பிடிக்கும் சாதாரண மீனவர்கள் தான். இயேசு வந்து, அவர்களை அழைத்து, அவர்களுக்கு ஒரு புதிய நோக்கத்தையும், தொடக்கத்தையும் கொடுத்தார். இனிமேல் அவர்கள் மீன்களை பிடிக்கப் போவதில்லை. ஏனெனில் “என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன்” ( மாற். 1:17) என்று இயேசு சொன்னார்.

இந்தப் புதிய நோக்கம் அவர்களுடைய வாழ்க்கையையே மாற்றிப் போட்டது. இயேசுவே அவர்களுக்கு எல்லாவற்றையும் போதித்தார். அதனால் அவர் உயிர்த்தெழுந்து பரலோகம் சென்ற போது அவர்கள் மூலமாக தேவன் மக்களின் மனங்களை தொட்டார். இயேசுவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் இவர்கள் உலகுக்கு எடுத்துச் சென்றனர். இன்று நாமும் அவர்களைப் போல கிறிஸ்துவின் அன்பையும், இரட்சிப்பையும் உலகுக்கு நற்செய்தியாய் எடுத்துச் செல்கிறோம்.

நம் வாழ்வில் இந்த தெய்வீக அன்பு வெளிப்படட்டும். ஏனெனில் அது பிறருடைய வாழ்க்கையையும், நோக்கங்களையும் நித்திய வாழ்வின் தீர்மானங்களில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.

உணர்வுகளும் அடையாளங்களும்

எனக்குத் தெரிந்த ஒரு வாலிபன் தேவனிடம் எப்போதும் அடையாளங்களைக் கேட்கும் பழக்கத்தில் இருந்தான். அது முற்றிலும் தவறல்ல. ஆனால் அவன் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவுகள் சரி என்பதற்கான அடையாளங்களை ஜெபத்தில் தேடினான். உதாரணமாக, அவன் “தேவனே நான் இந்தக் காரியத்தை செய்ய நீங்கள் விரும்பினால், நீங்கள் இந்த அடையாளத்தைக் காட்டும். அப்பொழுது அது தான் தேவ சித்தம் என்று அறிந்து கொள்வேன்” என்று ஜெபிப்பான்.

இது ஓர் இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தியது. இப்படியே உணர்ச்சிப்பட்டு ஜெபித்து பதில் பெறும் பழக்கம் இருப்பதினால் அவன் முன்பு தான் நேசித்த பெண்ணுடன் மீன்டும் சேர்ந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தான். ஆனால் அந்த பெண்ணோ இது தேவன் விரும்பும் காரியம் அல்ல என்று திடமாக இருந்துவிட்டாள்.

இயேசுவுடன் வாழ்ந்த மதத் தலைவர்கள்கூட அவரிடம் அற்புத அடையாளங்களை எதிர்பார்த்தனர் (மத். 16:1). நீர் மேசியா என்றால் ஓர் அற்புதத்தினால் அதை நிரூபியும் என்று வழக்காடினர். அவர்கள் தேவனின் வழிக்காட்டுதலை தேடவில்லை; மாறாக, அவருடைய தெய்வீக அதிகாரத்தையே சோதித்தனர். “இந்தப் பொல்லாத விபசார சந்ததியார் அடையாளம் தேடுகிறார்கள்” (வச. 4) என்று இயேசு கூறினார். தேவனுடைய வழிகாட்டுதலை எதிர்பார்த்து காத்திருக்கும் அனைவருக்கும் இந்த வாக்கியம் பொருந்தாது. பழைய ஏற்பாட்டில் பிரசங்கிக்கப்பட்ட மேசியாவாகிய கிறிஸ்து, அவர்கள் கண்முன் இருந்த போதும் அதைக் கண்டு கொள்ளாமல் அதைவிட பெரிய அடையாளத்தைக் கேட்டதினால் இயேசு அப்படி கடுமையாக பேசினார்.

ஜெபத்தில் அவருடைய வழிகாட்டுதலை நாம் தேட வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் (யாக். 1:5). அவருடைய வார்த்தையினாலும் (சங். 119:105), ஆவியானவரின் வழி நடத்துதலினாலும் (யோவா. 14:26) நம்மை வழிநடத்துகிறார். நமக்கு நல்ல போதகர்களையும், ஞானம் நிறைந்த தலைவர்களையும் தந்திருக்கிறார். அது மட்டுமல்ல, இயேசுவே நமக்கு மிகச்சிறந்த உதாரணமாக இருக்கிறார்.

ஆகவே தேவனிடத்தில் தெளிவான பதிலை நாம் தேடுவது நல்லது. ஆனால் நாம் எதிர்ப்பார்ப்பது போலவே அது இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறு. ஜெபத்தில் முக்கியமாக நேர்வது என்னவென்றால், நாம் தேவனுடைய மெய்யான இயல்பை அறிந்து அவருடன் உறவு கொள்வதே.

அதை பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது

ஒரு சபையை சார்ந்த உதவியாளர்கள் ஒரு சாயங்கால வேளையில் ஒன்று கூடி, குறைந்த வருமானம் உள்ள மக்கள் வசிக்கும் இடங்களுக்குச் சென்று உணவு பொருட்களை வழங்கினர். அப்படி உணவை பெற்றுக்கொண்ட ஒரு பெண் மிகவும் சந்தோஷமடைந்தாள். அவளுடைய வெறுமையான அலமாரியை திறந்து காட்டி, அந்த உதவியாளர்களே அவளுடைய ஜெபத்திறகான பதில் என்று கூறி நன்றி தெரிவித்தாள்.

உதவியாளர்கள் சபைக்குத் திரும்பிய போது, அவர்களில் ஒரு பெண் அழ ஆரம்பித்தாள். “நான் சிறு பிள்ளையாக இருந்த பொழுது, அந்தப் பெண்மணி தான் என்னுடைய ஞாயிறு பள்ளி ஆசிரியை. அவர் இந்த சபையில் தான் இருக்கிறார்கள். ஆனால் அவர் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் இருந்தது எங்களுக்கு தெரியவில்லையே!” என்று மனம் வருந்தினார்.

இந்த அன்பான உதவியாளர்கள் தங்களால் முடிந்த வகையில் பிறருடைய பாரங்களை சுமக்க முயன்றனர். இதைத் தான் பவுல் கலாத்தியர் 6:2ல் கூறியிருக்கிறார். ஆனால் எப்படியோ அவர்கள் அந்தப் பெண்மணியின் நிலையை அறியாமல் இருந்தனர். ஒவ்வொரு வாரமும் அப்பெண், சபைக்கு வந்தபோதும், அவள் யாரிடமும் தன்னிலையைச் சொல்லவில்லை. நம்மை சுற்றியுள்ள மக்களின் நிலையை அறிந்து கொள்வதைக் குறித்து, இந்த சம்பவம் நமக்கு நினைவுபடுத்துகின்றது. “யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம் (கலா. 6:10) என்று பவுல் கூறுகிறார்.

ஒன்றாய்க் கூடி ஆராதிக்கும் மக்களின் பெரும் பாக்கியம் என்னவென்றால் ஒருவருக்கொருவர் உதவியாய் இருப்பதே. இப்படி செய்யும் போது கிறிஸ்துவின் சரீரமாகிய சபையினர் கஷ்டத்தில் இருக்கும்பொழுது, ஒருவர்கூட உதவி செய்ய ஆளில்லாமல் தவிக்க வேண்டியது இல்லை. சபையில் ஒருவரை ஒருவர் நாம் சந்தித்து, பேசி, பழகி, அறிந்து அவர்கள் துன்பத்தில் உதவும் பொழுது, “அவர்களுக்கு பிரச்சனையா? அதைப்பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாதே” என்று சொல்வது இல்லாமல் போகும்.

ஒரு கடினமான மலை

இடாஹோ (Idaho) என்னும் இடத்திலுள்ள எங்கள் வீட்டிற்கு மேற்கில் ஜூக்கான்டால் (Jughandle) சிகரத்தின் மலைமடிப்புகளின் மத்தியில் ஒரு பனிப்பாள ஏரி உள்ளது. இந்த உறைந்த ஏரிக்குச் செல்லும் பாதை மிகவும் செங்குத்தான, பாதுகாப்பற்ற வழி. அதுமட்டுமன்றி வழியெங்கும் கற்பாறைகளும், சிதறுண்டு கிடக்கும் கற்களும் இருக்கும். அது ஒரு கடினமான மலையேற்றமாகும்.

ஆனால், இந்த மலையின் அடிவாரத்தில் ஒரு ஓடை உள்ளது. பாசிபடர்ந்த லேசான மணற்பரப்பிலிருந்து நீருற்று கசிந்து ஒரு பசுமையான புல்வெளியின் ஊடாய் ஓடுகின்றது. இது கடினமான மலையேற்றத்திற்குமுன் நன்கு நீர் அருந்தி, நம்மை தயார்படுத்திக் கொள்ள ஏற்ற ஒரு அமைதியான இடம்.

கிறிஸ்தவ வாழ்வை சிறப்பாக உருவகப்படுத்திய ஜான் பனியனின் “மோட்சப் பிரயாணம்” (The Pilgrim’s Progress) என்னும் இலக்கியத்தில், ‘கடின மலை’ என்று அழைக்கப்படும்; செங்குத்தான மலையின் அடிவாரத்திற்கு கிறிஸ்தியான் வருகிறான். “அந்த அடிவாரத்தில் ஓர் ஓடை இருந்தது. கிறிஸ்தியான் அந்த ஓடைக்கு சென்று நீர் அருந்தி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, மலையேறத் தொடங்கினான்.”

ஒரு வேளை நீங்கள் எதிர்கொள்ளும் அந்தக் கடினமான மலை உங்கள் முரட்டாட்டமான பிள்ளையாக இருக்கலாம் அல்லது ஒரு முக்கியமான மருத்துவ சோதனையின் முடிவாக இருக்கலாம். நீங்கள் எதிர்கொள்ளும் சவால் உங்களால் தாங்க முடியாத ஒன்றாகத் தோன்றலாம்.

ஆகவே நீங்கள் உங்களுடைய அடுத்த முக்கியமான பணியை மேற்கொள்ளும் முன்பு, புத்துணர்வளிக்கும் நீருற்றுக்கு செல்லுங்கள். அதாவது தேவனிடம் செல்லுங்கள். உங்களுடைய பெலவீனம், சோர்வு, உதவியற்ற நிலை, பயம், சந்தேகம் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு அவரிடம் சென்று அவருடைய  வல்லமையை, பெலத்தை, ஞானத்தை நிறைவாய்ப் பருகுங்கள். தேவன், உங்களுடைய எல்லா சூழ்நிலைகளையும் அறிவார், ஆவிக்குரிய பெலத்தையும், சமாதானத்தையும் அளவில்லாமல் அளிப்பார். அவர் உன் தலையை உயர்த்தி, நீ செல்லுவதற்கு வேண்டிய பெலத்தை உனக்களிப்பார்.

ஒரு பாதுகாப்பான இடம்

ஜப்பானிய இளைஞன் ஒருவனுக்கு ஒரு பிரச்சனை இருந்தது. அவனுக்கு வீட்டை விட்டு வெளியே செல்ல பயம். மற்றவர்களை சந்திக்காமல் இருக்க பகல் முழுவதும் தூங்கி, இரவு முழுவதும் டிவி பார்த்து கொண்டிருந்தான்; அவன் ஒரு ‘ஹிக்கிகோமோரி’ (hikikomori). அதாவது, நவீன காலத் துறவி. இந்தப் பிரச்சனை அவன் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் பள்ளிக்கு செல்வதை நிறுத்திய பொழுது ஆரம்பித்ததுதான். சமுதாயத்திற்கு ஏற்றவன் அல்ல என்ற எண்ணம் மேலோங்கியது. இறுதியில் அவன் தன் குடும்பத்தினருடனும் மற்றும் நண்பர்களிடமும் முழுமையாகத் தொடர்பை துண்டித்துக் கொண்டான். இந்த பிரச்சனையிலிருந்து மீண்டு வர டோக்கியோவில் (Tokyo) உள்ள ஐபாஷோ (Ibasho) என்னும் வாலிபர் சங்கத்திலே சேர்ந்து உதவி பெற்றுக்கொண்டான். ‘ஐபாஷோ’ என்றால் பாதுகாப்பான இடம் என்று அர்த்தம். அதாவது, சமுதாயத்திற்குள், உடைந்துபோன மக்கள் தங்களை மீண்டுமாய் சமுதாயத்தில் இணைத்துக்கொள்ள, பாதுகாப்பான ஓர் இடம்.

நம்முடைய சபையை ‘ஐபாஷோ’ போலவும், அல்லது அதற்கும் மேலாகவும் எண்ணிக் கொண்டால் எப்படி இருக்கும்? சந்தேகமின்றி உடைந்து போன மக்களைக் கொண்ட சமுதாயம் தான் நம் சமுதாயம். அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்து சபைக்கு எழுதும் பொழுது, அவர்களுடைய பழைய வாழ்வு, சமுதாயத்திற்கு எதிரானதும், அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஆபத்து விளைவிக்கக் கூடியதுமாயிருந்தது என்று குறிப்பிடுகிறார் (1 கொரி. 6:9-10). ஆனால் கிறிஸ்துவுக்குள் அவர்கள் புது சிருஷ்டிகளாக்கப்பட்டு முழுமையானார்கள். விடுவிக்கப்பட்ட இவர்களைப் பார்த்து பவுல், ஒருவரை ஒருவர் நேசிக்கவும், பொறுமையாயிருக்கவும், தயவு பாராட்டவும், பொறாமை, பெருமை மற்றும் கோபமின்றி இருக்கவும் உற்சாகப்படுத்தினார் (13:4-7).

எப்பேர்ப்பட்ட பிரச்சனைகளையோ, மனமுறிவுகளையோ எதிர்கொண்டாலும், தேவனுடைய அன்பை அறிந்து கொண்டு, அநுபவிக்கும் ஐபோஷா போன்ற இடமாக சபை இருக்க வேண்டும். காயப்பட்டிருக்கிற இந்த உலக மக்கள், கிறிஸ்துவின் மனதுருக்கத்தை அவரை பின்பற்றுகிற அனைவரிடமிருந்தும் பெற்றுக்கொள்வார்களாக.

செயல்படும் அன்பு

“ஏதாவது சில துணிகள் துவைக்க வேண்டி இருந்தால், துவைத்துத் தரட்டுமா?” என லண்டனில் உள்ள எங்கள் வீட்டிற்கு வந்த விருந்தினரைப் பார்த்துக் கேட்டேன். உடனே அவருடைய முகம் பிரகாசமாகி, அப்பொழுது எங்களைக் கடந்து சென்ற அவருடைய மகளைப் பார்த்து, “உன் அழுக்குத் துணிகளை எல்லாம் கொண்டு வா. எமி நம்முடைய துணியையெல்லாம் துவைக்கப் போகிறாள்!” என்றார். சில துணிகள் மாத்திரமே துவைக்கும்படி உதவ நினைத்து, இப்பொழுது ஒரு அழுக்கு மூட்டையையே துவைக்க ஏற்பட்ட நிலையைக் குறித்து நான் புன்னகைத்தேன்.

பின்பு அத்துணிகளை கொடியிலே காயப்போட்டுக் கொண்டிருந்தபொழுது, அன்று காலை வாசித்த வேத பகுதியிலுள்ள ஒரு வசனம் என் நினைவுக்கு வந்தது. அது “மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்” (பிலி. 2:3). பவுல், பிலிப்பியருக்கு எழுதிய கடிதத்தை நான் படித்துக் கொண்டிருந்தேன். அதில் அவர் பிலிப்பியர்களை நோக்கி தேவனுடைய அழைப்பின் மகிமைக்கேற்ப, நாம் ஒற்றுமையுடன் ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழும்படியாய் உபதேசித்து உற்சாகப்படுத்துகிறார். உபத்திரவப்பட்டு கொண்டிருந்த அவர்களைப் பார்த்து பவுல் ஒரே மனதுடையவர்களாய் இருக்கும்படி உற்சாகப்படுத்துகிறார். ஏனெனில் கிறிஸ்துவுக்குள்ளான அவர்களுடைய ஐக்கியத்தின் விளைவாகப் பிறக்கும் அவர்களுடைய ஒற்றுமை, ஒருவருக்கொருவர் உதவி செய்வதின்மூலம் வெளிப்பட்டு, விசுவாசத்திலே அவர்களை பலப்படச் செய்யும் என்பதை பவுல் நன்கு அறிந்திருந்தார்.

நாம் சுயநலமான நோக்கமோ அல்லது வீண் பெருமையோ இல்லாமல் பிறரை நேசிப்பதாகக் கூறலாம், ஆனால், நம் இருதயத்தின் உண்மையான நிலை, நம்முடைய அன்பை செயலில் காட்டும்பொழுது தான் வெளிப்படுகிறது. அவ்வளவு துணிகளைத் துவைக்கும்போது முறுமுறுக்கத் தோன்றியது. ஆனால் கிறிஸ்துவை பின்பற்றுபவளாக என்னுடைய அன்பை, சுத்த இருதயத்துடனே, செயலிலே என் நண்பர்களுக்கு வெளிப்படுத்தும்படியாகவே அழைக்கப்பட்டிருக்கிறேன்.

தேவனுடைய மகிமைக்கென்று நாம் நம்முடைய குடும்பத்தினர், நண்பர் மற்றும் அருகில் இருப்பவர்களுக்கு உதவ வழிகளை கண்டடைவோம்.

பலசாலியான வெற்றிவீரன்

நம்மில் அநேகர் ஒரு நல்ல அரசாங்கம் வர வேண்டும் என எதிர்பார்க்கிறோம். ஆகவே நாம் நீதியென்றும், நியாயமென்றும் எண்ணும் காரியங்களுக்காக ஓட்டுப் போடுகிறோம், சேவை செய்கிறோம் மற்றும் அதற்காக குரல் கொடுக்கவும் செய்கிறோம். ஆனால் நம்முடைய இருதய நிலையை மாற்றக் கூடிய வல்லமை அரசியல் தீர்வுகளுக்குக் கிடையாது.

இயேசுவை பின்பற்றிய அநேகர், தங்களைக் கடுமையாக, தன் பலத்த கைக்குள் அடக்கி ஆண்ட ரோம சாம்ராஜ்யத்திற்கு பலமான பதிலடி கொடுக்கக்கூடிய மேசியாவையே எதிர்பார்த்திருந்தனர். பேதுருவும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆகவேதான், ரோம சேவகர்கள் இயேசுவை கைது செய்ய வந்தபொழுது, பேதுரு தன்னுடைய பட்டயத்தை வீசி பிரதான ஆசாரியனுடைய வேலையாளின் காதை வெட்டி வீசினான்.

ஆனால், பேதுருவின் இந்த ‘ஒரு மனித யுத்தத்தை’ இயேசு தடுத்து, “உன் பட்டயத்தை உறையிலே போடு; பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம் பண்ணாதிருப்பேனோ” (யோவா. 18:11) என்று கூறினார். சில மணி நேரங்கள் கழித்து, “என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே” (வச. 36), என பிலாத்துவினிடம் இயேசு கூறுகிறார்.

இப்பூமியில் தேவனுடைய பணியின் தீவிரத்தை நாம் அறிந்துகொள்ளும் பொழுது, தான் மரணத்தை நெருங்கிய அவ்வேளையிலும் கூட, இயேசு காட்டிய சுயக்கட்டுப்பாடு நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. ஆனால் எதிர்காலத்தில் ஒரு நாள் பரலோக சேனையை யுத்தத்திற்குள் கூட்டிச் செல்வார். “அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார்” என்று யோவான் எழுதியுள்ளார் (வெளி. 19:11).

ஆனால், அவர் தன்னுடைய கைது, விசாரணை மற்றும் சிலுவை மரணத்தின் கடுமையான வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்த பொழுது, தன்னுடைய பிதாவின் சித்தத்தையே தன் முன் நிறுத்தியிருந்தார். சிலுவையிலே மரணத்தை தழுவினதால், உண்மையாகவே இருதயங்களை மறுரூபமாக்கும் சம்பவங்கள் சங்கிலி போல் ஒன்றன் பின் ஒன்றாக தொடரச் செய்துவிட்டார். இந்த தொடர் செயலில், நம்முடைய பலசாலியான வெற்றிவீரர் மரணத்தையே வென்று விட்டார்.

அன்புடன் வழிநடத்துதல்

“திறமை” மற்றும் “சாமர்த்தியம்” என்னும் பண்புகளின் முக்கியத்துவத்தை தன்னுடைய “ஆவிக்குரிய தலைமைத்துவம்” என்னும் புத்தகத்தில் ஜெ. ஆஸ்வல்டு சான்டர்ஸ் (J. Oswald Sanders) ஆராய்ந்துள்ளார். “இந்த இரண்டு வார்த்தைகளை ஒருங்கிணைக்கும் நோக்கம், எதிர்மறையான கண்ணோட்டங்களைக் குற்றப்படுத்தாமல், அதே சமயம் தமது கொள்கையையும் விட்டுக்கொடுக்காமலும் சமரசம் செய்யும் திறனை வெளிப்படுத்துவதே ஆகும்” என சான்டர்ஸ் கூறுகிறார்.

பவுல், ரோமாபுரியில் வீட்டிலேயே சிறைக் கைதியாக இருந்த பொழுது, பிலேமோன் என்னும் தன்னுடைய எஜமானிடமிருந்து தப்பியோடி வந்த ஒநேசிமு என்னும் அடிமைக்கு ஆவிக்குரிய வழிகாட்டியும் நெருங்கிய நண்பருமானார். இந்த ஒநேசிமசை கிறிஸ்துவுக்குள் சகோதரனாக ஏற்றுக்கொள்ளும்படி, கோலோசே பட்டணத்து சபையின் தலைவர்களுள் ஒருவரான பிலேமோனுக்கு எழுதிய கடிதத்தில், திறமையையும் சாமர்த்தியத்தையும் பவுல் வெளிப்படுத்தியுள்ளார். “நீர் செய்யத்தக்கதை உமக்குக் கட்டளையிடும்படிக்குக் கிறிஸ்துவுக்குள் நான் துணியத்தக்கவனாயிருந்தாலும், அப்படிச் செய்யாமல், அன்பினிமித்தம் மன்றாடுகிறேன். எனக்கு அவன் (ஒநேசிமு) பிரியமான சகோதரனானால், உமக்கு சரீரத்தின்படியேயும் கர்த்தருக்குள்ளும் எவ்வளவு பிரியமுள்ளவனாயிருக்கவேண்டும்” (பிலே. 9,16) என்று மன்றாடினார்.

ஆதி திருச்சபையிலே மிகவும் மரியாதைக்குரிய தலைவரான பவுல், இயேசுவை பின்பற்றி வருபவர்களுக்கு அநேக சமயங்களில் தெளிவான கட்டளைகளை அளிப்பார். ஆனால், இந்த காரியத்திலோ சமத்துவம், நட்பு மற்றும் அன்பின் அடிப்படையில் பிலேமோனிடம் மன்றாடுகிறார். “ஆனாலும் நீர் செய்யும் நன்மையைக் கட்டாயத்தினாலல்ல, மனப்பூர்வமாய்ச் செய்யதக்கதாக, நான் உம்முடைய சம்மதியில்லாமல் ஒன்றும் செய்ய எனக்கு மனதில்லை” (வச. 14) என்றெழுதினான்.

நம்முடைய எல்லா உறவுகளிலும் ஒற்றுமையையும், கொள்கையையும் பாதுகாக்க அன்பின் ஆவியை நாடுவோம்

ஜாக்கிரதையுடனும் விழிப்புடனும்

எங்கள் அக்கம் பக்கத்தை நன்கு காணக்கூடிய ஜன்னலருகே என் மேஜை இருந்தது. அங்குள்ள மரங்களில் வந்து அமரும் பறவைகளை ஜன்னலருகிலிருந்து நன்றாகக் காண முடிந்தது. சில பறவைகள் ஜன்னலருகே வந்து ஜன்னல் திரையிலுள்ள பூச்சிகளைச் சாப்பிடும்.

அப்பறவைகள் சாப்பிட அமரும் முன்பு, சுற்றும் முற்றும் நன்கு கவனித்துப் பார்த்து விட்டு, ஆபத்து ஏதும் இல்லை என உணர்ந்த பின்பே உட்காரும். அப்படி இருந்தும், சில நொடிகளுக்கு ஒரு முறை, சுற்றும் முற்றும் கவனித்துப் பார்க்கும்.

இப்பறவைகள் காட்டும் ஜாக்கிரதையுடன் கூடிய விழிப்புணர்வு, கிறிஸ்தவர்கள் எவ்வாறு விழித்திருக்க வேண்டும் என்று வேதம் கூறுவதை நினைவுபடுத்துகிறது. இவ்வுலகத்தில் சோதனைகள் பல உள்ளதால், அதினால் உண்டாகும் ஆபத்துகளை மறவாதிருக்க நாம் எப்பொழுதும் விழிப்புடன் இருக்க வேண்டும். ஆதாம், ஏவாளைப் போல நாமும் “புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது” (ஆதி. 3:6) என்று உலகக் காரியங்களினால் கவர்ந்திழுக்கப்பட்டு சுலபமாய் மாட்டிக்கொள்கிறோம்.

ஆகவே தான் பவுல், “விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்” (1 கொரி. 16:13) என எச்சரிக்கிறார். அதைப்போலவே பேதுருவும், “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைத்தேடிச் சுற்றித்திரிகிறான்” (1 பேது. 5:8) எனக் கூறுகிறார்.

நம்முடைய அன்றாட உணவிற்காக உழைக்கும் பொழுது, நாம் மேற்கொள்ளக்கூடிய காரியங்களைக் குறித்து விழிப்புடன் இருக்கிறோமா? நாம் தேவனையே சார்ந்து, சுயத்தின்மீதோ, தன்னிச்சையான செயல்பாட்டின்மீதோ சார்ந்திராமல் எப்பொழுதும் ஜாக்கிரதையாயிருக்கிறோமா?