“ஏதாவது சில துணிகள் துவைக்க வேண்டி இருந்தால், துவைத்துத் தரட்டுமா?” என லண்டனில் உள்ள எங்கள் வீட்டிற்கு வந்த விருந்தினரைப் பார்த்துக் கேட்டேன். உடனே அவருடைய முகம் பிரகாசமாகி, அப்பொழுது எங்களைக் கடந்து சென்ற அவருடைய மகளைப் பார்த்து, “உன் அழுக்குத் துணிகளை எல்லாம் கொண்டு வா. எமி நம்முடைய துணியையெல்லாம் துவைக்கப் போகிறாள்!” என்றார். சில துணிகள் மாத்திரமே துவைக்கும்படி உதவ நினைத்து, இப்பொழுது ஒரு அழுக்கு மூட்டையையே துவைக்க ஏற்பட்ட நிலையைக் குறித்து நான் புன்னகைத்தேன்.

பின்பு அத்துணிகளை கொடியிலே காயப்போட்டுக் கொண்டிருந்தபொழுது, அன்று காலை வாசித்த வேத பகுதியிலுள்ள ஒரு வசனம் என் நினைவுக்கு வந்தது. அது “மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்” (பிலி. 2:3). பவுல், பிலிப்பியருக்கு எழுதிய கடிதத்தை நான் படித்துக் கொண்டிருந்தேன். அதில் அவர் பிலிப்பியர்களை நோக்கி தேவனுடைய அழைப்பின் மகிமைக்கேற்ப, நாம் ஒற்றுமையுடன் ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழும்படியாய் உபதேசித்து உற்சாகப்படுத்துகிறார். உபத்திரவப்பட்டு கொண்டிருந்த அவர்களைப் பார்த்து பவுல் ஒரே மனதுடையவர்களாய் இருக்கும்படி உற்சாகப்படுத்துகிறார். ஏனெனில் கிறிஸ்துவுக்குள்ளான அவர்களுடைய ஐக்கியத்தின் விளைவாகப் பிறக்கும் அவர்களுடைய ஒற்றுமை, ஒருவருக்கொருவர் உதவி செய்வதின்மூலம் வெளிப்பட்டு, விசுவாசத்திலே அவர்களை பலப்படச் செய்யும் என்பதை பவுல் நன்கு அறிந்திருந்தார்.

நாம் சுயநலமான நோக்கமோ அல்லது வீண் பெருமையோ இல்லாமல் பிறரை நேசிப்பதாகக் கூறலாம், ஆனால், நம் இருதயத்தின் உண்மையான நிலை, நம்முடைய அன்பை செயலில் காட்டும்பொழுது தான் வெளிப்படுகிறது. அவ்வளவு துணிகளைத் துவைக்கும்போது முறுமுறுக்கத் தோன்றியது. ஆனால் கிறிஸ்துவை பின்பற்றுபவளாக என்னுடைய அன்பை, சுத்த இருதயத்துடனே, செயலிலே என் நண்பர்களுக்கு வெளிப்படுத்தும்படியாகவே அழைக்கப்பட்டிருக்கிறேன்.

தேவனுடைய மகிமைக்கென்று நாம் நம்முடைய குடும்பத்தினர், நண்பர் மற்றும் அருகில் இருப்பவர்களுக்கு உதவ வழிகளை கண்டடைவோம்.