ஜப்பானிய இளைஞன் ஒருவனுக்கு ஒரு பிரச்சனை இருந்தது. அவனுக்கு வீட்டை விட்டு வெளியே செல்ல பயம். மற்றவர்களை சந்திக்காமல் இருக்க பகல் முழுவதும் தூங்கி, இரவு முழுவதும் டிவி பார்த்து கொண்டிருந்தான்; அவன் ஒரு ‘ஹிக்கிகோமோரி’ (hikikomori). அதாவது, நவீன காலத் துறவி. இந்தப் பிரச்சனை அவன் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் பள்ளிக்கு செல்வதை நிறுத்திய பொழுது ஆரம்பித்ததுதான். சமுதாயத்திற்கு ஏற்றவன் அல்ல என்ற எண்ணம் மேலோங்கியது. இறுதியில் அவன் தன் குடும்பத்தினருடனும் மற்றும் நண்பர்களிடமும் முழுமையாகத் தொடர்பை துண்டித்துக் கொண்டான். இந்த பிரச்சனையிலிருந்து மீண்டு வர டோக்கியோவில் (Tokyo) உள்ள ஐபாஷோ (Ibasho) என்னும் வாலிபர் சங்கத்திலே சேர்ந்து உதவி பெற்றுக்கொண்டான். ‘ஐபாஷோ’ என்றால் பாதுகாப்பான இடம் என்று அர்த்தம். அதாவது, சமுதாயத்திற்குள், உடைந்துபோன மக்கள் தங்களை மீண்டுமாய் சமுதாயத்தில் இணைத்துக்கொள்ள, பாதுகாப்பான ஓர் இடம்.

நம்முடைய சபையை ‘ஐபாஷோ’ போலவும், அல்லது அதற்கும் மேலாகவும் எண்ணிக் கொண்டால் எப்படி இருக்கும்? சந்தேகமின்றி உடைந்து போன மக்களைக் கொண்ட சமுதாயம் தான் நம் சமுதாயம். அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்து சபைக்கு எழுதும் பொழுது, அவர்களுடைய பழைய வாழ்வு, சமுதாயத்திற்கு எதிரானதும், அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஆபத்து விளைவிக்கக் கூடியதுமாயிருந்தது என்று குறிப்பிடுகிறார் (1 கொரி. 6:9-10). ஆனால் கிறிஸ்துவுக்குள் அவர்கள் புது சிருஷ்டிகளாக்கப்பட்டு முழுமையானார்கள். விடுவிக்கப்பட்ட இவர்களைப் பார்த்து பவுல், ஒருவரை ஒருவர் நேசிக்கவும், பொறுமையாயிருக்கவும், தயவு பாராட்டவும், பொறாமை, பெருமை மற்றும் கோபமின்றி இருக்கவும் உற்சாகப்படுத்தினார் (13:4-7).

எப்பேர்ப்பட்ட பிரச்சனைகளையோ, மனமுறிவுகளையோ எதிர்கொண்டாலும், தேவனுடைய அன்பை அறிந்து கொண்டு, அநுபவிக்கும் ஐபோஷா போன்ற இடமாக சபை இருக்க வேண்டும். காயப்பட்டிருக்கிற இந்த உலக மக்கள், கிறிஸ்துவின் மனதுருக்கத்தை அவரை பின்பற்றுகிற அனைவரிடமிருந்தும் பெற்றுக்கொள்வார்களாக.