எங்கள் அக்கம் பக்கத்தை நன்கு காணக்கூடிய ஜன்னலருகே என் மேஜை இருந்தது. அங்குள்ள மரங்களில் வந்து அமரும் பறவைகளை ஜன்னலருகிலிருந்து நன்றாகக் காண முடிந்தது. சில பறவைகள் ஜன்னலருகே வந்து ஜன்னல் திரையிலுள்ள பூச்சிகளைச் சாப்பிடும்.

அப்பறவைகள் சாப்பிட அமரும் முன்பு, சுற்றும் முற்றும் நன்கு கவனித்துப் பார்த்து விட்டு, ஆபத்து ஏதும் இல்லை என உணர்ந்த பின்பே உட்காரும். அப்படி இருந்தும், சில நொடிகளுக்கு ஒரு முறை, சுற்றும் முற்றும் கவனித்துப் பார்க்கும்.

இப்பறவைகள் காட்டும் ஜாக்கிரதையுடன் கூடிய விழிப்புணர்வு, கிறிஸ்தவர்கள் எவ்வாறு விழித்திருக்க வேண்டும் என்று வேதம் கூறுவதை நினைவுபடுத்துகிறது. இவ்வுலகத்தில் சோதனைகள் பல உள்ளதால், அதினால் உண்டாகும் ஆபத்துகளை மறவாதிருக்க நாம் எப்பொழுதும் விழிப்புடன் இருக்க வேண்டும். ஆதாம், ஏவாளைப் போல நாமும் “புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது” (ஆதி. 3:6) என்று உலகக் காரியங்களினால் கவர்ந்திழுக்கப்பட்டு சுலபமாய் மாட்டிக்கொள்கிறோம்.

ஆகவே தான் பவுல், “விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்” (1 கொரி. 16:13) என எச்சரிக்கிறார். அதைப்போலவே பேதுருவும், “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைத்தேடிச் சுற்றித்திரிகிறான்” (1 பேது. 5:8) எனக் கூறுகிறார்.

நம்முடைய அன்றாட உணவிற்காக உழைக்கும் பொழுது, நாம் மேற்கொள்ளக்கூடிய காரியங்களைக் குறித்து விழிப்புடன் இருக்கிறோமா? நாம் தேவனையே சார்ந்து, சுயத்தின்மீதோ, தன்னிச்சையான செயல்பாட்டின்மீதோ சார்ந்திராமல் எப்பொழுதும் ஜாக்கிரதையாயிருக்கிறோமா?