வகை  |  odb

காண்பதெல்லாம் உண்மையல்ல

ஸ்காட்லாந்து (Scotland) தேசத்தின் தெற்கு லனார்க்ஷைர் (Lanarkshire) என்னும் இடத்திலுள்ள கால்நடை பண்ணையில் டான் (Don) என்னும் காவல் நாய் வாழ்ந்து வந்தது. ஒரு நாள் காலை, டான் தன்னுடைய எஜமானாகிய டாம்முடன் (Tom) விலங்குகளை கண்காணிப்பதற்காக, ஒரு சிறிய சரக்கு வண்டியிலே பயணித்து சென்றது. அவ்விடத்தை சென்றடைந்ததும், வண்டியை விட்டு கீழே இறங்கின டாம், பிரேக் போட மறந்து விட்டான். அதனால், வண்டி தானாக அம்மலைரோட்டையும், அதிக வாகனங்கள் செல்லக்கூடிய வேறு இரண்டு சாலைகளையும் கடந்து சென்றது. எனினும் வண்டி பத்திரமாக நின்றது. அவ்வண்டி கடந்து செல்லும் பொழுது, பார்ப்பவர்களுக்கு ஒரு நாய் வண்டி ஓட்டி செல்வது போல இருந்தது. ஏனெனில் டான் அப்பொழுது ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்தது. சொல்லப்போனால், நாம் காண்பதெல்லாம் உண்மையல்ல.

எலிசாவையும் அவன் வேலைக்காரனையும் சிறைப்பிடித்துப் போகும்படியாய் சீரிய தேசத்து ராஜா குதிரைகளையும், இரதங்களையும், பலத்த இராணுவத்தையும் அனுப்பி அப்பட்டணத்தை சூழ்ந்து கொண்டான். அதைக்கண்ட எலிசாவின் வேலைக்காரன், தங்களுக்கு அழிவு நிச்சயம் என நினைத்து கலங்கினான். ஆனால் எலிசா, “பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப்பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்” (2 இரா. 6:16) என்று கூறி, தேவனை நோக்கி, தன் வேலைக்காரனுடைய கண்களைத் திறக்கும்படியாக வேண்டுதல் செய்தான். உடனே அவன் கண்கள் திறக்கப்பட்டு, தங்களைப் பாதுகாக்கும் திரளான பரலோக சேனை அவர்களை சூழ்ந்திருக்க கண்டான்.

நம்பிக்கையற்றதாக நாம் கருதும் நிலைமைகள் அனைத்தும் நாம் எண்ணுவது போல் அல்ல. மிஞ்சும் அளவிற்கு நாம் அமிழ்ந்து போகக்கூடிய நிலைமையில் இருந்தாலும், தேவன் நம்மோடு கூட நம் பக்கத்தில் இருக்கிறார் என்பதை நினைவுகூருவோம். “உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்” (சங். 91:11).

நிறைவான பரிசு

கிறிஸ்துமஸ் பண்டிகைக்குப் பிறகு வரும் வாரங்கள் அமெரிக்காவிலுள்ள வியாபாரிகளுக்கு மிகவும் பரபரப்பான நாட்கள் ஆகும். ஏனெனில் தாங்கள் பெற்ற வேண்டாத பரிசுப் பொருட்களை திரும்ப கொடுத்து அதற்கு மாறாக வேண்டிய பொருட்களை வாங்கிக் கொள்ள அநேகர் வருவார்கள். ஆனாலும், நிறைவான பரிசுப் பொருளை கொடுக்கக்கூடிய சிலரை நீங்கள் அறிந்திருக்கலாம். ஒரு நபர் விரும்பும் பொருளை ஏற்ற தருணத்தில் அளிக்க அவர்களுக்கு மாத்திரம் எப்படி தெரியும்? நிறைவான சிறந்த பரிசை அளிப்பதற்கு பணம் பிரதானமானதல்ல; மாறாக தனிப்பட்ட விதத்தில் அவர்கள் மேல் அக்கறை கொண்டு, அவர்களுடைய விருப்பங்களைக் கவனித்து அறிந்து கொள்வதே முழுநிறைவான பரிசளிப்பதற்கான திறவுகோல்.

இது நம்முடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் பொருந்தும். ஆனால் தேவனுக்கும் இது பொருந்துமா? அர்த்தமுள்ள அல்லது மதிப்புமிக்க பரிசை அவருக்கு நாம் கொடுக்க முடியுமா? அவரிடம் இல்லாததென்று ஏதேனும் உள்ளதா?

தேவனுடைய அளவற்ற ஞானம், அறிவு மற்றும் மகிமையை எண்ணி அவரை ஆராதிக்கும்படியாய் ரோமர் 11:33-36 வசனங்களும் அதைத் தொடர்ந்து, “நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக் கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை (12:1). இந்த உலகத்தினால் நாம் வனையப்படாமல், “மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்” என்றும் கூறுகிறது (வச. 12).

இன்று தேவனுக்கு நாம் அளிக்கக் கூடிய சிறந்த பரிசு எது? மனத்தாழ்மையோடும், நன்றியுள்ள இருதயத்தோடும் நம்முடைய மனம், சிந்தை, சித்தம் என்று நம்மையே முழுமையாக அவருக்கு ஒப்புக்கொடுக்கலாம். நம் ஒவ்வொருவரிடமிருந்து தேவன் பெற விரும்பும் பரிசு இதுவே.

நன்றியுள்ள ஜீவியம்

தன்னுடைய ஆவிக்குரிய வாழ்வில் முதிர்ச்சி அடையவும், இன்னும் அதிகமாக நன்றியறிதலுடன் இருக்கவும் விரும்பி, “நன்றியுள்ள ஜீவ ஜாடி” என்ற முறையை சூ (Sue) தொடங்கினாள். அதாவது, ஒவ்வொரு நாள் சாயங்காலமும், தான் தேவனுக்கு நன்றி தெரிவிக்க விரும்பும் ஒரு காரியத்தை ஒரு சிறு தாளில் எழுதி அதை அந்த ஜாடியில் போட்டு விடுவாள். ஒரு சில நாட்கள் துதி செலுத்தும்படி அநேக காரியங்கள் இருந்தன. ஆனால், கடினமான நாட்களில், நன்றி செலுத்த ஒரு காரியத்தை குறிப்பிடுவதுகூட மிக சிரமமாக இருந்தது. அந்த வருடத்தின் முடிவில் அந்த ஜாடியில் உள்ள எல்லா சீட்டுகளையும் எடுத்து வாசித்து பார்த்தபொழுது மறுபடியுமாக தான் தேவனுக்கு நன்றி தெரிவிப்பதை உணர்ந்தாள். ஏனெனில் தேவன் தனக்கு அளித்த ஒரு அருமையான சூரிய அஸ்தமன காட்சி மற்றும் ஒரு அருமையான மாலை வேளையை பூங்காவில் கழிக்கும் சந்தர்ப்பம், ஒரு கடினமான நிலைமையை எதிர்கொள்ள போதுமான கிருபை, மேலும் ஒரு ஜெபத்திற்கான பதில் ஆகியவை அதன் காரணம்.

சூவின் இந்த மனநிலைமை, சங்கீதக்காரனாகிய தாவீதின் மனநிலைமையை எனக்கு நினைவுபடுத்துகிறது (சங். 23). தேவன் அவனை ‘புல்லுள்ள இடங்களிலும்’, ‘அமர்ந்த தண்ணீர்களண்டையிலும்’ (வச. 2-3) திருப்தியாக்கினார். மேலும் அவர் அவனைப் பாதுகாத்து, ஆறுதல் அளித்து, வழிநடத்தினார் (வச. 3-4). “என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்” (வச. 6) என்று தாவீது அச்சங்கீதத்தை நிறைவு செய்கிறான்.

நான், இந்த வருடம் ஒரு “நன்றியுள்ள ஜீவ ஜாடி” முறையை செய்யப் போகிறேன். ஒருவேளை நீங்களும் அதை செய்ய நினைக்கலாம். நமக்கு தேவன் அளித்த ஈவாகிய நம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்காக நன்றி செலுத்தலாம் அல்லது நம்முடைய அன்றாட தேவைகள் சந்திக்கப்பட்டதற்காகவும் நன்றி செலுத்தலாம். நாம் அவருக்கு நன்றி செலுத்த அநேக காரணங்கள் உண்டு. தேவனுடைய நன்மையும், அன்பும் நம் வாழ்வில் ஒவ்வொரு நாளும் நம்மை பின்தொடர்வதை நாம் காணலாம்.

இப்பொழுதே அந்த நாள்

நர்சரி வகுப்பில் படிக்கும் என் பேத்தி மேகியும் கிண்டர்கார்டன் படிக்கும் அவளது சகோதரி கேட்டியும் சில போர்வைகளை தூக்கிக்கொண்டு வீட்டின் பின்புறம் நோக்கிச் சென்றனர். அங்கு போர்வையால் கூடாரம் அமைத்து அதில் விளையாட முயன்றனர். கொஞ்ச நேரம் கழித்து மேகி தனது தாயாரை அழைக்கும் சத்தம் கேட்டது.

“அம்மா, இங்கே சீக்கிரம் வாங்க!” என கத்தினாள். “நான் இயேசுவை எனது உள்ளத்தில் அழைக்க விரும்புகிறேன், அதற்கு உதவி செய்யுங்கள்” என்று பின்பு கூறினாள். விளை யாடிக்கொண்டிருந்த பொழுது திடீரென அவள் தன் வாழ்விற்கு இயேசு மிகவும் தேவை என்பதை உணர்ந்து அவர் மேல் அவளது விசுவாசத்தை வைக்க முடிவுசெய்தாள்.

இயேசுவை விசுவாசிக்க உதவியை நாடிய மேகியின் அவசர தொனியில் ஒலித்த குரலானது
2 கொரிந்தியர் 6ல் பவுல் இரட்சிப்பை பற்றிக் கூறிய வார்த்தைகளை நமக்கு நினைவு படுத்துகிறது. மேசியாவாகிய கிறிஸ்து நிச்சயமாகவே பூமியில் வந்துவிட்டார் என்றும், அவரது மரணமும், உயிர்த்தெழுதலின் மூலமும், “அநுக்கிரக காலம்” ஆரம்பித்ததை குறித்தும் போதித்து வந்தார். நாம் அப்படிப்பட்ட கால கட்டத்தில் தான் வாழ்ந்து வருகிறோம். இன்று இரட்சிப்பு அனைவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. “இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணிய நாள்” (2 கொரி. 6:2) என்று அவர் கூறினார். யாரெல்லாம் பாவமன்னிப்பிற்காக இயேசுவை இன்னும் விசுவாசிக்க வில்லையோ, உங்களுக்கு இதுவே சரியான நேரம் ஆகும். மிகச் சீக்கிரமாக இந்த முடிவை எடுப்பது மிகவும் அவசியமாகும்.

ஒருவேளை பரிசுத்த ஆவியானவர் நீங்கள் இயேசுவின் மேல் விசுவாசம் வைப்பதற்கான தேவையை உங்கள் உள்ளத்தில் தோன்றச் செய்திருக்கலாம். மேகியைப் போல் நீங்களும் உடனே ஏற்றுக்கொள்ளுங்கள். இயேசுவண்டை ஓடி வாருங்கள். இன்றே அந்த நாள்.

தேவனோடு தனித்திருத்தல்

அன்றைய தினத்தில் காலைவேளையில் சபையின் ஓர் அறை மிகவும் பரபரப்புடன் காணப்பட்டது. ஒரு டஜன் குழந்தைகள் ஓடி விளையாடிக் கொண்டிருந்தனர். அங்கு நான் உதவியாளராய் இருந்தேன். சற்று நேரத்தில் அறையின் சீதோஷண நிலைமாறி வெப்பம் அதிகரித்தது. அதனால் நான் கதவைத் திறந்து வைத்தேன். ஒரு சிறுவன் இந்த சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக்கொண்டு யாரும் பார்க்காத வேளையில் தப்பித்து ஓடினான். நானும் பின் தொடர்ந்து ஓடினேன். அப்பொழுது அவன் தன் தந்தையிடம் ஓடிச் சென்றதைக் கண்டு நான் ஆச்சரியம் அடையவில்லை.

பரபரப்பான வாழ்க்கையில் நாம் சிக்கிக் கொள்ளும்போது அந்த சிறுவன் செய்ததைதான் நாமும் செய்ய வேண்டும். அதாவது அவன் தன் தந்தையிடம் சென்றான். இயேசு தன்னுடைய பரலோக பிதாவோடு நேரம் செலவிடவும் ஜெபிக்கவும் வாய்ப்புகளைத் தேடினார். மாம்சத்தில் அவரது பெலனை எல்லாம் ஊழியத்திற்கு செலவிட்ட போது இப்படி தனித்திருந்து தான் அவர் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார் என்று சிலர் கூறுவதுண்டு. மத்தேயு எழுதின சுவிசேஷத்தில், இயேசு தனித்திருக்க எண்ணி தனிமையான இடத்தை நோக்கிச் செல்வதைக் காணலாம். அப்போது அவரை மக்கள் சூழ்ந்து கொண்டு பின் தொடர்ந்தனர். அவர்களது தேவை அறிந்த இயேசு அற்புதமாய் சுகமும் உணவும் அளித்தார். “அவர் ஜனங்களை அனுப்பிவிட்ட பின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார்” (மத். 14:23).

இயேசு திரும்ப திரும்ப அநேக ஜனங்களுக்கு உதவி செய்தார். ஆனால் அவர் பரபரப்புடனோ, சோர்வுடனோ காணப்படவில்லை. அவர் தேவனோடு கொண்ட நல்லுறவை ஜெபத்தினால் எப்போதும் ஸ்திரப்படுத்திக் கொண்டேயிருந்தார். நீங்கள் எப்படி செயல்படுகின்றீர்கள்? தேவனை அநுபவித்து அவரது அன்பையும், பெலனையும், முழுமையையும் அறிந்து கொள்ள ஆர்வத்துடன் அவரோடு நேரம் செலவிடவும், தனித்திருக்கவும் செய்கிறீர்களா?

முத்திரை மோதிரம்

வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு நண்பரை நான் முதன் முதலாக சந்தித்த பொழுது, மிடுக்காக தொனித்த அவரது ஆங்கில உச்சரிப்பையும், அவரது சிறு விரலில் அணிந்திருந்த மோதிரத்தையும் நான் கவனித்தேன். பின்னர் அது வெறும் அலங்கார அணிகலன் அல்ல என்பதை அறிந்து கொண்டேன். அதில் பொறிக்கப்பட்ட சின்னம் அவரது குடும்பத்தின் வரலாற்றை வெளிப்படுத்தியது.

சொல்லப்போனால், ஆகாய் புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட முத்திரை மோதிரம் போல அதை எண்ணலாம். இந்த சிறிய பழைய ஏற்பாட்டு புத்தகத்தில் ஆகாய் தீர்க்கதரிசி தேவ ஜனத்தை மீண்டுமாய் ஆலயத்தை கட்டும்படி அழைக்கிறார். அகதிகளாய் இருந்தவர்கள் தங்களது தாய் நாட்டிற்கு திரும்பிய பின் அவர்கள் மீண்டும் தேவாலயத்தை கட்டிக்கொண்டிருக்கும் போது, எதிரிகள் மூலமாய் பிரச்சனை கிளம்பியது. அவர்களது எதிர்ப்பால் கட்டும் பணிகள் முடங்கியது. அப்போது ஆகாய் தீர்க்கதரிசி செருபாபேலை நோக்கி தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட யூதாவின் தலைவராகவும், தேவனுடைய முத்திரை மோதிரமாகவும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருப்பதை அவர் செருபாபேலுக்கு நினைப்பூட்டினார்.

ஆதிகாலத்தில் முத்திரை மோதிரம் ஓர் அடையாளச் சின்னமாக விளங்கியது. அவர்களது கையெழுத்திற்கு பதிலாக அவர்கள் அணிந்த முத்திரை மோதிரத்தை உருக்கிய மெழுகிலோ அல்லது மிருதுவான களிமண்ணிலோ அழுத்தி அதன் அடையாளத்தை எடுப்பார்கள். கிறிஸ்துவின் நற்செய்தியை நாம் பகிர்ந்து கொள்ளும் போதும், அவரது கிருபையை நம்மை சுற்றியுள்ள அயலானிடத்தில் வெளிப்படுத்தும் போதும், தீமையின் கட்டுகளில் இருந்து மக்களை விடுவிக்க போராடும் போதும் நாம் அனைவரும் தேவனுடைய பிள்ளைகளான அடையாளத்தை இவ்வுலகத்தில் முத்திரை பதிக்கிறோம்.

நாம் ஒவ்வொருவரும் தனித்துவம் வாய்ந்தவர்கள். நமது தாலந்துகளையும், ஆசைகளையும், ஞானத்தையும் நாம் வெளிப்படுத்தும் போது அது மற்றவரைப் போல் இல்லாமல் தனித்துவம் வாய்ந்ததாய் அமைகின்றது. அப்படி செய்கையில் நாம் தேவனின் சாயலை புதுமையான விதத்தில் வெளிப்படுத்துகின்றோம். இந்த பூமியில் தேவனுடைய முத்திரை மோதிரமாய் விளங்குவது நமக்குக் கொடுக்கப்பட்ட மிகப்பெரிய சிலாக்கியமாகும்.

அன்பிற்குள் அடைக்கப்பட்டு

ஜூன் 2015ல் பாரீஸ் நகரில் உள்ள பான்ட் டெஸ் ஆர்ட்ஸ் (Pont des Arts) நடைபாலத்தில் உள்ள கம்பிகளில் இருந்து 45டன் எடை கொண்ட பூட்டுகளை நீக்கினர். அன்பின் நினைவுச்சின்னமாக தம்பதிகள் தங்களது பெயர்களை ஓர் பூட்டில் எழுதி, பாலத்தின் கம்பியில் அதை பூட்டி சாவியை கீழே ஓடும் சியன் (River Seine) ஆற்றில் போட்டுவிடுவர்.

ஆயிரக்கணக்கான மக்கள் இச்செயலில் ஈடுபட்டத்தினால், அந்த “அன்பின்” கனத்தை அப்பாலத்தினால் தாங்க முடியவில்லை. கடைசியில் நகர நிர்வாகம், பாலத்தை பாது காப்பதற்காக இந்த “அன்பு பூட்டு” களை நீக்கியது.

முடிவில்லா அன்பின் அடையாளச் சின்னமாக அந்த பூட்டுகள் எண்ணப்பட்டது. ஆனால் உலகப்பிரகாரமான அன்பு கடைசி வரை நீடிப்பதில்லை. நெருங்கிய நண்பர்களுக்கு இடையே கூட மனக்கசப்பு ஏற்பட்டு மன்னிக்காமல் கூட இருந்தும் விடலாம். குடும்பத்தினரிடையே சண்டை ஏற்பட்டு வாக்குவாதங்கள் முளைக்கலாம். அவர்கள் மற்றொருவரை மன்னிக்காமலேயே இருந்து விடலாம். எதற்காக திருமணம் செய்தோம் என்ற எண்ணத்தையே மறந்துபோன நிலையில் மனதளவில் பிரிந்த நிலையில் கணவனும், மனைவியும் வாழலாம். காரணம் மனிதனின் அன்பு நிலையற்றது.

ஆனால் சகலத்தையும் தாங்கும் நிலையான அன்பு ஒன்று உள்ளது-அதுதான் தேவனின் அன்பு. “கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை (அன்பு) என்றுமுள்ளது.” நித்தியத்திற்கும் நிலைத்திருக்கும் முடிவில்லாத தேவனின் அன்பை எடுத்துரைக்கும் வாக்குத்தத்தங்கள் வேதம் முழுவதிலும் நிறைந்திருப்பதைக் காணலாம். அவரது அன்பின் மிகச்சிறந்த அடையாளச் சின்னமாய் விளங்குவது அவரது குமாரனின் சிலுவை மரணம் தான். அதைக் கண்டு அவர்மேல் விசுவாசம் வைப்பவர் நித்திய வாழ்வை பெறுவர். அதன் பின்னர் ஒருவராலும் அவரது அன்பை விட்டு நம்மை பிரிக்க முடியாது (ரோம. 8:38-39).

அன்பான விசுவாசிகளே, நித்தியத்திற்கும் நாம் தேவனின் அன்பிற்குள் ‘பூட்டப்பட்டிருக்கிறோம்.’

எளிமையான வார்த்தைகளில் உள்ள வல்லமை

மருத்துவமனையில் இருந்த என் தந்தையின் அறையில் இருந்து பலத்த சிரிப்பு சத்தம் எழும்பியது. வேறொன்றுமில்லை, எனது தந்தையைச் சந்திக்க அவருடைய நண்பர்களான லாரி ஓட்டுநர்கள் இரண்டு பேரும், அருகிலிருந்த வயல்களிலிருந்த இரண்டு பெண் மணிகளும் நானும் அங்கிருந்தேன். லாரி ஓட்டுநர்களில் ஒருவர் இளவயதில் கிராமிய பாடல்கள் பாடி வந்தவர், மற்றொருவர் தச்சுவேலை செய்து வந்தவர்.

“பின்பு அவர் அந்த கண்ணாடி பாட்டிலை என் தலைமேல் போட்டு உடைத்தார்” என்று அந்த தச்சுவேலைக்காரர் மதுபான விடுதி ஒன்றில் நடந்த கதையைக் கூறி முடித்தார்.

நகைச்சுவையுடன் கூறப்பட்ட பழங்கதையைக் கேட்டு அறையே சிரிப்பு வெள்ளத்தில் மூழ்கியது. நுரையீரல் புற்றுநோயால் அவதியுற்ற என் தந்தை சுவாசிக்க கடினப்பட்டாலும் நன்கு சிரித்து மகிழ்ந்தார். பின்னர் அனைவருக்கும் ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்தினார். “ராண்டி ஒரு போதகர்” எனக் கூறி அனைவரும் கவனமாய் பேச வேண்டும் என்பது போல் வேடிக்கையாய் சொன்னார். இரண்டு விநாடிகளுக்கு அமைதி நிலவியது, அதன் பின்னர் இந்த புதிய செய்தியைக் கேட்டு அறையே சிரிப்பில் வெடித்து சிதறியது.

இவ்வாறாக நாற்பது நிமிடங்கள் சென்றிருக்கும். அப்பொழுது திடீரென அந்த தச்சுவேலை செய்பவர் தன் தொண்டையை சரி செய்து, தந்தையின் பக்கம் திரும்பி, “சரி ஹோவர்ட் (Howard) இத்தோடு குடியும், மதுபானச் சண்டையும் எனக்கு கிடையாது. அந்நாட்கள் முடிந்து போயிற்று. இன்றைக்கு நான் வாழ்வதற்கு ஒரு நோக்கம் இருக்கிறது. என்னுடைய மீட்பரும் இரட்சகருமாகிய இயேசுவைப் பற்றி உன்னிடம் பேச வேண்டும்”

பின்னர் அவர் அதைப் பற்றி பேச ஆரம்பித்தார். முதலில் லேசாக வேண்டாம் என மறுத்த என் தந்தை பின்னர் கேட்கத் தொடங்கினார். அதைவிட இனிமையாய், அழகாய், அமைதியாய் நற்செய்தியை பிரசங்கித்து நான் கேட்டதில்லை. என் தந்தை அதை கூர்ந்து கேட்டு கவனித்தார். சில வருடங்கள் கழிந்த பின்பு இயேசுவை விசுவாசித்தார்.

ஓர் பழைய நண்பர் அவரது எளிமையான வாழ்வில் இருந்து பகிர்ந்த மிக எளிமையான சாட்சி அது. எளிமை என்பது பெலவீனமானதோ அல்லது மூடத்தனமானதோ அல்ல, மாறாக அது ஒளிவுமறைவின்றி நேர்மையானது என்பதை நான் அன்று அறிந்து கொண்டேன்.

இயேசுவைப் போல. அவரது இரட்சிப்பைப் போல.

ஏற்ற வேளையில்

“ஏற்ற வேளையில்” என்ற தலைப்பில் ஓர் புத்தகத்தை எழுதப்போகிறேன் என்று விளையாட்டாய் நான் கூறுவதுண்டு. என்னைப் பற்றி நன்கு அறிந்த சிலர் உடனே சிரித்து விடுவர். ஏனெனில் நான் அடிக்கடி காலதாமதமாய் வரும் பழக்கம் உடையவள். முயற்சி செய்யாதினால் அல்ல எனது உற்சாகத்தினாலும் நம்பிக்கையின் மிகுதியாலும் தான் கால தாமதம் ஏற்பட்டது என்று கூறுவேன். “இந்த முறை” நான் நிறைய காரியத்தை குறுகிய காலகட்டத்திற்குள் எளிதாய் செய்துமுடிப்பேன் என்று ஒரு தவறான நம்பிக்கையை நான் உறுதியாய் பற்றிக்கொண்டிருந்தேன். ஆனால் அது சாத்தியமாகவில்லை. சொன்னதை நான் செய்ததும் கிடையாது. இதனால் எப்போதும் போலவே காலதாமதமாய் முடித்த வேலைக்காக மன்னிப்பு கோருவேன்.

ஆனால் இதற்கு மாறாக தேவன் எப்போதும் சரியான நேரத்தில் காரியங்களைச் செய்கிறார். அவர் தாமதமாய் செயல்படுகின்றார் என்று நாம் எண்ணலாம், ஆனால் அவர் அப்படி செயல்படுபவர் அல்ல. வேதம் முழுவதிலும் அநேக மக்கள் தேவன் நிர்ணயித்த காலத்தை குறித்து பொறுமை இழந்துபோவதைக் காணலாம். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட மேசியாவின் வரவிற்காக அநேக காலம் காத்திருந்த இஸ்ரவேலர்கள் நம்பிக்கை இழந்தனர். ஆனால் சிமியோனும், அன்னாளும் அப்படி செயல்படவில்லை. அவர்கள் இருவரும் தினந்தோறும் ஆலயத்தில் ஜெபித்து மேசியாவுக்காக காத்திருந்தனர். அவர்களுடைய விசுவாசத்திற்கு பலன் கிடைத்தது. மரியாளும், யோசேப்பும் குழந்தை இயேசுவை பிரதிஷ்டை பண்ண ஆலயத்திற்கு அழைத்து வந்த போது அவர்கள் கண்கள் மேசியாவைக் கண்டன.

அநேக நேரங்களில் நமது கால அட்டவணைக்குள் தேவன் பதில் அளிக்கவில்லை என்று நாம் சோர்ந்து போகின்றோம். ஆனால் கிறிஸ்துமஸ், “காலம் நிறைவேறினபோது... தம்முடைய குமாரனைத் தேவன் அனுப்பினார்.., மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக..,” (கலா. 4:5-6) என்ற வசனம் தேவனுடைய இயல்பை நமக்கு விவரிக்கின்றது. தேவனுடைய நேரம் எப்பொழுதும் நேர்த்தியானது, அதற்காக காத்திருப்பதே பாக்கியமாகும்.