“ஏற்ற வேளையில்” என்ற தலைப்பில் ஓர் புத்தகத்தை எழுதப்போகிறேன் என்று விளையாட்டாய் நான் கூறுவதுண்டு. என்னைப் பற்றி நன்கு அறிந்த சிலர் உடனே சிரித்து விடுவர். ஏனெனில் நான் அடிக்கடி காலதாமதமாய் வரும் பழக்கம் உடையவள். முயற்சி செய்யாதினால் அல்ல எனது உற்சாகத்தினாலும் நம்பிக்கையின் மிகுதியாலும் தான் கால தாமதம் ஏற்பட்டது என்று கூறுவேன். “இந்த முறை” நான் நிறைய காரியத்தை குறுகிய காலகட்டத்திற்குள் எளிதாய் செய்துமுடிப்பேன் என்று ஒரு தவறான நம்பிக்கையை நான் உறுதியாய் பற்றிக்கொண்டிருந்தேன். ஆனால் அது சாத்தியமாகவில்லை. சொன்னதை நான் செய்ததும் கிடையாது. இதனால் எப்போதும் போலவே காலதாமதமாய் முடித்த வேலைக்காக மன்னிப்பு கோருவேன்.

ஆனால் இதற்கு மாறாக தேவன் எப்போதும் சரியான நேரத்தில் காரியங்களைச் செய்கிறார். அவர் தாமதமாய் செயல்படுகின்றார் என்று நாம் எண்ணலாம், ஆனால் அவர் அப்படி செயல்படுபவர் அல்ல. வேதம் முழுவதிலும் அநேக மக்கள் தேவன் நிர்ணயித்த காலத்தை குறித்து பொறுமை இழந்துபோவதைக் காணலாம். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட மேசியாவின் வரவிற்காக அநேக காலம் காத்திருந்த இஸ்ரவேலர்கள் நம்பிக்கை இழந்தனர். ஆனால் சிமியோனும், அன்னாளும் அப்படி செயல்படவில்லை. அவர்கள் இருவரும் தினந்தோறும் ஆலயத்தில் ஜெபித்து மேசியாவுக்காக காத்திருந்தனர். அவர்களுடைய விசுவாசத்திற்கு பலன் கிடைத்தது. மரியாளும், யோசேப்பும் குழந்தை இயேசுவை பிரதிஷ்டை பண்ண ஆலயத்திற்கு அழைத்து வந்த போது அவர்கள் கண்கள் மேசியாவைக் கண்டன.

அநேக நேரங்களில் நமது கால அட்டவணைக்குள் தேவன் பதில் அளிக்கவில்லை என்று நாம் சோர்ந்து போகின்றோம். ஆனால் கிறிஸ்துமஸ், “காலம் நிறைவேறினபோது… தம்முடைய குமாரனைத் தேவன் அனுப்பினார்.., மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக..,” (கலா. 4:5-6) என்ற வசனம் தேவனுடைய இயல்பை நமக்கு விவரிக்கின்றது. தேவனுடைய நேரம் எப்பொழுதும் நேர்த்தியானது, அதற்காக காத்திருப்பதே பாக்கியமாகும்.