Archives: ஜனவரி 2017

பேசும் மரம்

ஆங்கில இலக்கியத்தின் ஆதி கால கிறிஸ்தவ கவிதைகளில் “த டிரீம் ஆப் த ரூட்” (சிலுவையின் கனவு) என்னும் கவிதையுண்டு. ரூட் (Rood) என்னும் வார்த்தை பழைய ஆங்கில வார்த்தையாகிய ‘ராட்’ (Rod) அல்லது ‘போல்’ (Pole) என்னும் வார்த்தையில் இருந்து வந்தது. அது கிறிஸ்து அறையப்பட்ட சிலுவையை குறிக்கிறது. இந்த பழைய கவிதை இயேசுவின் சிலுவை மரணத்தை சிலுவையின் கண்ணோட்டத்தில் இருந்து கூறுகிறது. சிலுவை செய்ய பயன்படுத்தப்படும் மரம், தான் தேவகுமாரன் கொல்லப்படுவதற்கு பயன்படப்போவதை அறிந்து, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஆனாலும் கிறிஸ்து தன்னை விசுவாசிக்கிற அனைவருக்கும் மீட்பளிக்கும்படி அம்மரத்தின் உதவியை நாடி அப்பணியில் அதனை சேர்த்துக் கொள்கிறார்.

ஏதேன் தோட்டத்திலே, நம்முடைய ஆவிக்குரிய பெற்றோர் தடை செய்யப்பட்ட பழத்தை உண்டு மனுக்குலம் பாவத்திற்குள் விழ ஒரு மரம்தான் ஆதாரமாக விளங்கியது. மேலும் தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்து மனுக்குலத்தின் பாவம் போக்க தன்னுடைய பரிசுத்த இரத்தத்தை சிந்தினபொழுது, அவர் நம் சார்பில் சிலுவை மரத்திலே அறையப்பட்டார். கிறிஸ்து, “தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்”
(1 பேதுரு 2:24).

இரட்சிக்கப்படும்படி கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைக்கும் அனைவருக்கும், சிலுவை தான் திருப்புமுனை. மேலும் கிறிஸ்துவின் மரணத்திற்குப்பின், இது நம்மை பாவத்திலிருந்தும், மரணத்திலிருந்தும் விடுதலையாக்கிய தேவகுமாரனுடைய தியாகபலியை குறிப்பிடும் பிரசித்திபெற்ற சின்னமாக விளங்குகிறது. நம் மேல் தேவன் வைத்துள்ள சொல்லி முடியாத அதிசயமான அன்பின் சான்றாக சிலுவை விளங்குகிறது.

மறுபடியும் கட்டி எழுப்புதல்

எட்வர்ட் க்ளீ (Edward Klee) பல ஆண்டுகள் கழித்து பெர்லின் (Berlin) பட்டணத்திற்கு திரும்பி வந்த பொழுது, தான் நேசித்து நினைவுகூர்ந்த எதுவும் அங்கில்லை என கண்டான். அவனைப்போலவே அப்பட்டணமும் வியத்தகுவிதம் கணிசமாக மாறியிருந்தது. ஹெமிஸ்பியர்ஸ் (Hemispheres) பத்திரிக்கையில் அதைக்குறித்து க்ளீ “நீங்கள் மிகவும் நேசித்த பட்டணத்திற்கு திரும்பி செல்வது எதிர்பாராத விளைவை உண்டாக்கலாம், நீங்கள் ஏமாற்றமுமடையலாம்” என எழுதியிருந்தான். முந்தையகாலத்தில் நாம் வாழ்ந்த இடங்களுக்கு செல்லும் பொழுது, அவை நமக்குள் துக்கத்தையும் ஏதோவொன்றை இழந்தது போன்ற உணர்வையும் உண்டாக்கலாம். ஆனால் உண்மையென்னவெனில் நம்முடைய வாழ்வில் முக்கியமான பங்கு வகித்த அவ்விடம் மாறியிருப்பது போலவே நாமும் மாறிவிட்டோம்.

இஸ்ரவேலிலிருந்து நாடு கடத்தப்பட்ட நெகேமியா, அநேக ஆண்டுகள் கழித்து, எருசலேம் பட்டணத்தின் பேரழிவையும், அங்குள்ள மக்களின் மோசமான நிலையையும் கேள்விப்பட்டான். ஆகவே, தான் எருசலேமிற்கு திரும்பிச்சென்று மதில்களை மறுபடியும் கட்டியெழுப்ப பெரிசிய ராஜாவாகிய அர்தசஷ்டாவிடம் அனுமதி கேட்டான். ஒரு இரவு முழுவதும் அப்பட்டணத்தின் நிலைமையை பார்வையிட்டு திரும்பிய நெகேமியா (2:13-15) பின்பு அங்கு வசிப்பவர்களை நோக்கி, “எருசலேம் பாழாயிருக்கிறதையும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டுக்கிடக்கிறதையும், நாம் இருக்கிற சிறுமையையும் பார்க்கிறீர்களே; நாம் இனி நிந்தைக்குள்ளாயிராதபடிக்கு, எருசலேமின் அலங்கத்தைக் கட்டுவோம் வாருங்கள்,” என்று கூறினான் (வச. 17).

நெகேமியா கடந்த காலத்தை நினைத்து துக்கித்து இருக்கவில்லை, மாறாக மறுபடியும் கட்டி எழுப்பவே திரும்ப வந்தான். நம்முடைய வாழ்விலும் பழுதுபட்டிருக்கும் பாகங்களை சீர்படுத்தும்பொழுது இந்த வல்லமையான பாடத்தை நாம் நினைவிற் கொள்வோமாக. கிறிஸ்துவுக்குள் உள்ள நம்முடைய விசுவாசமும், அவருடைய வல்லமையும், நாம் பின்னோக்கி பாராமல், முன்னோக்கிச் செல்லவும், மறுபடியும் கட்டி எழுப்பவும் நமக்கு உதவிடும்.

காலத்திற்கு அப்பாற்பட்ட இரட்சகர்

2015ஆம் ஆண்டு, ஜூன் மாதம், தன்னுடைய 116வது வயதில் மரித்த ஜரலியன் டால்லி (Jaralean Talley) அன்றைய தினத்தில் உலகத்திலேயே வயதான நபராக கருதப்பட்டார். 1995ஆம் ஆண்டு எருசலேம் நகரம் தன்னுடைய மூன்றாயிரமாவது பிறந்த நாளை கொண்டாடியது. ஒரு மனுஷனை பொறுத்தமட்டில் 116 என்பது மிக அதிகமான வயது, அதேபோல ஒரு பட்டணத்திற்கு 3000 என்பதும் மிக அதிகமான ஆண்டுகள். ஆனால் இதையும் விட அதிக ஆண்டுகள் வாழக்கூடிய மரங்கள் உள்ளன. கலிபோர்னியாவில் உள்ள மலைகளில் இருக்கும் தேவதாரு மரங்கள் 4,800 ஆண்டுகளுக்கும் மேலாக பழைமை வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன. அது நம்முடைய கோத்திரத் தலைவனாகிய ஆபிரகாமைக் காட்டிலும் 800 ஆண்டுகள் பழைமையானது.

தன்னைக் குறித்து யூத மதத்தலைவர்கள் விசாரித்த பொழுது, தான் ஆபிரகாமுக்கும் முன்னதாகவே இருப்பவராக இயேசு தெரிவித்தார். “ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்கு சொல்லுகிறேன்” என்றார் (யோவா. 8:58). அவருடைய உறுதியான அறிக்கை அவரை எதிர்கொண்டவர்களை அதிர்ச்சிக்குள்ளாகியது. அவர்கள் அவரை கல்லெறிந்து கொல்ல வழி தேடினார்கள். ஏனென்றால், இயேசு தன்னுடைய வயதை குறித்து பேசவில்லை என்பதை அவர்கள் அறிந்துகொண்டார்கள். மாறாக தன்னை நித்தியவாசியாக அறிவித்ததின் மூலம் “இருக்கிறவராக இருக்கிறேன்” (பார்க்கவும் யாத. 3:14) என்கிற தேவனுடைய ஆதிப் பெயரோடு தன்னை இணைத்ததால் அவர்கள் கோபமடைந்தார்கள். ஆனால், திரித்துவத்தின் நபராக இயேசு முறையாகவே அந்நாமத்தை உரிமைபாராட்ட முடியும்.

யோவான் 17:3ல், “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்” என இயேசு ஜெபித்தார். நாம் என்றென்றும் அவரோடு ஜீவிப்பதற்காக, காலத்திற்க்கு அப்பாற்பட்டவர் காலத்திற்குள் கடந்து வந்தார். அவர் நம்முடைய இடத்திலே மரித்து உயிர்ந்தெழுந்ததின் மூலம் நித்திய வாழ்வை நமக்களித்துள்ளார். அவர் தம்மையே ஜீவபலியாக ஒப்புக்கொடுத்ததினாலே, காலத்தினால் வரையறுக்கப்படாத நித்திய வாழ்வை நாம் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். அங்கு காலத்திற்கு அப்பாற்ப்பட்டவரோடு நித்தியத்தை கழிப்போம்.

எப்பொழுதும் நேசிக்கப்பட்டு, எப்பொழுதும் மதிக்கப்பட்டிருக்கிறோம்

நாம் செய்யும் வேலையைக் காட்டிலும் நம்மையே அதிகமாய் நேசிக்கும் தேவனையே நாம் சேவிக்கிறோம்.

நாம் வேலை செய்து நம்முடைய குடும்பங்களை போஷிக்கவும், தான் சிருஷ்டித்த இவ்வுலகை பொறுப்போடு பராமரிக்கவும் தேவன் விரும்புவது உண்மையே. சொல்லப் போனால் நம்மை சுற்றியுள்ள பெலனற்றவர்கள், பசியுள்ளவர்கள், வஸ்திரமில்லாதவர்கள், தாகமாயிருப்பவர்கள் மற்றும் மனமுடைந்த அனைவருக்கும் ஊழியஞ்செய்து, அதே சமயத்தில் பரிசுத்த ஆவியானவருடைய அழைப்பை இன்னும் தங்கள் வாழ்வில் ஏற்றுக் கொள்ளாதவர்களை குறித்து விழிப்புடன் இருக்குமாறும் தேவன் நம்மிடம் எதிர்பார்க்கிறார்.

ஆனாலும், நாம் செய்யும் வேலையைக் காட்டிலும் நம்மையே அதிகமாய் நேசிக்கும் தேவனையே நாம் சேவிக்கிறோம்.

இதை நாம் ஒருநாளும் மறக்கக்கூடாது. ஏனென்றால் “தேவனுக்காக செய்ய” உதவும் நம்முடைய பெலன் சுகவீனத்தினாலோ, தோல்வியினாலோ, எதிர்பாராத பேரழிவினாலோ நம்மிடமிருந்து கிழித்தெறியப்படும் காலமும் வரலாம். அப்பொழுது நாம் தேவனுக்காக செய்யும் வேலைக்காக அவர் நம்மை நேசியாமல், நாம் அவருடைய பிள்ளைகளாய் இருப்பதினால் நம்மை நேசிக்கிறார் என்பதை நினைவில் கொள்ளும்படி தேவன் விரும்புகிறார்! இரட்சிப்படையும்படி கிறிஸ்துவின் நாமத்தை அழைத்தது முதல், “உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, பட்டயமோ, கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்க முடியாது” (ரோம. 8:36,39).

நம்மால் செய்ய முடிந்த எல்லாவற்றையும் பறித்துக்கொண்டாலும் அல்லது நம்மிடமுள்ள அனைத்தையும் நாம் இழந்து போனாலும், தேவன் நம்மிடம் எதிர்பார்பது ஒன்றைத் தான். அது அவருக்குள் உள்ள நம்முடைய அடையாளத்தில் இளைப்பாறுவதையே.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தூதர் துணை

பரிசோதனைமேல் பரிசோதனை செய்துகொண்டேயிருக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டபடியால், பினு மிகவும் சோர்வாகவும் பாரமாகவும் கருதினாள். அவளுடைய உடம்பில் ஏதாவது புற்றுநோய் கட்டிகள் இருக்கிறதா என்பதை பரிசோதிப்பதாக மருத்துவர்கள் அவளிடம் தெரிவித்தனர். ஒவ்வொரு நாளும் தேவன் தம்முடைய பிரசன்னத்தின் வாக்குறுதிகளாலும், அவள் ஜெபிக்கும்போது அல்லது வேதத்தைப் படிக்கும்போது ஓர் நித்திய சமாதானத்தையும் கொண்டு அவளை ஊக்கப்படுத்தினார். அவள் நிச்சயமற்ற மனநிலையுடன் போராடினாள். மேலும் தேவனிடத்தில், ஒருவேளை “இப்படியிருந்தால்...” என்று தன்னுடைய பயத்தை அதிகமாய் பகிர ஆரம்பித்தாள். தீவிர அறுவை சிகிச்சைக்கு முன் ஒரு நாள் காலை பினு தன்  கண்ணில்பட்ட யாத்திராகமம் 23ல் ஒரு வசனத்தை வாசித்தாள். அது: “வழியில் உன்னைக் காக்கிறதற்கும்... இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்” (வச. 20)

அந்த வார்த்தைகளை தேவன் மோசேயின் மூலம் தம்முடைய மக்களாகிய இஸ்ரவேலருக்குக் கூறினார். தம்முடைய ஜனங்கள் பின்பற்றும்படியாக தேவன் நியாயப்பிரமாணங்களைக் கொடுத்து, அவர்களைப் புதிய தேசத்திற்கு அழைத்துச் சென்றார் (வச. 14-19). ஆனால் அவர்களுடைய பாததையில் அவர்களை பாதுகாப்பதற்காக, “ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்” என்று கூறுகிறார். பினுவின் வாழ்க்கை நிலைமை இதுவாக இல்லாவிட்டாலும், தேவ தூதர்களைக் கொண்டு கர்த்தர் தம்முடைய ஜனத்தை பாதுகாப்பதை மற்ற வேதப்பகுதிகளின் மூலம் அவள் அறிந்தாள். சங்கீதம் 91:11, “உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்” என்று சொல்லுகிறது. மேலும் எபிரெயர் 1:14, “இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா?” என்று குறிப்பிடுகிறது. 

நாம் கிறிஸ்துவை அறிந்திருந்தால், நமக்கும் ஊழியம் செய்ய ஒரு துதன் அனுப்பப்படுகிறார் என்பதை விசுவாசிப்போம்.

 

கவலைகளை களையெடுக்கவும்

எனது வீட்டு முற்றத்தில் உள்ள ஒரு நடவு இயந்திரத்தின் மூலம் சில விதைகளை விதைத்துவிட்டு, அதன் விளைச்சலைப் பார்க்க காத்திருந்தேன். பத்து முதல் பதினான்கு நாட்களுக்குள் விதைகள் முளைக்கும் என்று அறிந்து, நான் அதற்கு நீர் பாய்ச்சி பராமரித்தேன். விரைவில் சில பச்சை இலைகள் மண்ணிலிருந்து வெளியேறுவதைக் கண்டேன். ஆனால் அவை களைகள் என்று எனது கணவர் என்னிடம் சொன்னபோது நான் பதற்றமடைந்தேன். நான் வளர்க்க முயற்சிக்கும் செடிகளை அவை நெரித்துவிடாதபடி விரைவாக அவைகளை வெளியே இழுக்கும்படி எனது கணவர் என்னை ஊக்குவித்தார்.

நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சியைத் தடுக்கக்கூடிய ஊடுருவல்காரர்களைக் கையாள்வதன் முக்கியத்துவத்தையும் இயேசு அறிவிக்கிறார். அவர் தனது உவமையின் ஓர் பகுதியை இவ்வாறு விளக்கினார்: விதைப்பவன் ஒருவன் தன்னுடைய விதைகளை விதைத்தபோது, அவற்றுள் “சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது” (மத்தேயு 13:7). முட்களும் களைகளும் தாவரங்களின் வளர்ச்சியை வெகுவாய் பாதிக்கக்கூடியவைகள் (வச. 22). அதுபோல கவலைகள் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். வேதத்தை வாசிப்பதும் ஜெபிப்பதும் நமது விசுவாசத்தை வளர்ப்பதற்கான சிறந்த வழிகள். ஆனால் கவலையின் முட்களைக் களையெடுப்பதில் நான் கவனம்செலுத்தவேண்டும் என்பதை உணர்ந்தேன். அவைகள் என்னுள் விதைக்கப்பட்ட நல்ல வசனத்தை நெருக்கி, தவறாய் என்னை திசைதிருப்பக்கூடும். 

வேதத்தில் காணப்படும் ஆவியின் கனிகளானது, அன்பு, சந்தோஷம், சமாதானம் போன்றவற்றை உள்ளடக்கியது (கலாத்தியர் 5:22). ஆனால் நாம் அந்த பலனைக் கொடுப்பதற்கு, தேவனுடைய வல்லமையோடு நம்மைத் திசைதிருப்பக்கூடிய அல்லது நம்முடைய கவனத்தை மாற்றக்கூடிய சந்தேகம் போன்ற கவலையின் களைகளை புறம்பாக்கிட வேண்டும். 

 

இணைந்து இயேசுவுக்கு ஊழியம் செய்தல்

மைக்ரோனேசியாவில் உள்ள ஓர் தீவில் சிக்கித்தவிக்கும் இரண்டு ஆண்களுக்கு உதவ மீட்புப் பணியாளர்கள் பிரயாசப்பட்டனர். அவர்களுக்கு சுகாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பு அவர்களை விரைந்து காப்பாற்றுவதற்கு குழுவாய் செயல்படவேண்டியது அவசியமாய் தோன்றியது. அவர்களை முதலில் கண்டுபிடித்த விமானி, அவர்களின் அருகாமையிலிருந்த ஆஸ்திரேலிய கப்பலுக்கு செய்தியனுப்பினார். கப்பல், இரண்டு ஹெலிகாப்டர்களை அனுப்பியது, அவை உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ சேவைகளை வழங்கின. பின்னர், அமெரிக்க கடலோர காவல்படை அங்கு வந்து ஆட்களை சரிபார்த்து தகவல் அளித்தனர். இறுதியாக, ஓர் மைக்ரோனேசிய ரோந்துப் படகு அவர்களை பத்திரமாக அழைத்துக்கொண்டு வந்துவிட்டது.

நாம் இணைந்து செயல்பட்டால் நிறைய சாதிக்க முடியும். பிலிப்பிய விசுவாசிகள் அப்போஸ்தலர் பவுலை ஆதரிக்க தங்கள் முயற்சிகளை ஒருங்கிணைத்தனர். லீதியாளும் அவரது குடும்பத்தினரும் அவரை தங்கள் வீட்டிற்குள் வரவேற்றனர் (அப்போஸ்தலர் 16:13-15). கிலேமெந்து, எயோதியாள் மற்றும் சிந்திகேயாள் (இவர்கள் ஒத்துப்போகவில்லை) அனைவரும் நற்செய்தியைப் பரப்புவதற்கு அப்போஸ்தலருடன் நேரடியாக வேலை செய்தனர் (பிலிப்பியர் 4:2-3). பின்னர், பவுல் ரோமில் சிறையில் அடைக்கப்பட்டபோது, தேவாலயம் (விசுவாசிகள்) அவரது பராமரிப்புக்குத் தேவைப்படும் பொருளாதாரத்தை சேகரித்து, எப்பாபிராத்து மூலம் (வச. 14-18) விநியோகித்தது. பவுல் அப்போஸ்தலரின் ஊழியத்திற்காக பிலிப்பிய திருச்சபை தொடர்ந்து ஜெபத்தில் தரித்திருந்திருக்கக் கூடும் (1:19).

இந்த பண்டைய திருச்சபை விசுவாசிகள் ஒன்றாக இணைந்து ஊழியம் செய்ததற்கான எடுத்துக்காட்டுகள் இன்று நம்மை ஊக்குவிக்கும். தேவன் நம்மை வழிநடத்தி, நமக்கு அதிகாரம் கொடுத்ததால், ஜெபிக்கவும் மற்றவர்களுக்கு ஊழியம்செய்யவும், சக விசுவாசிகளுடன் ஒத்துழைக்கவும், நம்மால் இயன்றதைவிட அதிகமாக செய்யமுடிகிறது. “தனித்து வேலை செய்தால் நாம் ஒரு துளி, ஆனால் இணைந்து வேலை செய்தால் நாம் சமுத்திரம்.”