மருத்துவமனையில் இருந்த என் தந்தையின் அறையில் இருந்து பலத்த சிரிப்பு சத்தம் எழும்பியது. வேறொன்றுமில்லை, எனது தந்தையைச் சந்திக்க அவருடைய நண்பர்களான லாரி ஓட்டுநர்கள் இரண்டு பேரும், அருகிலிருந்த வயல்களிலிருந்த இரண்டு பெண் மணிகளும் நானும் அங்கிருந்தேன். லாரி ஓட்டுநர்களில் ஒருவர் இளவயதில் கிராமிய பாடல்கள் பாடி வந்தவர், மற்றொருவர் தச்சுவேலை செய்து வந்தவர்.

“பின்பு அவர் அந்த கண்ணாடி பாட்டிலை என் தலைமேல் போட்டு உடைத்தார்” என்று அந்த தச்சுவேலைக்காரர் மதுபான விடுதி ஒன்றில் நடந்த கதையைக் கூறி முடித்தார்.

நகைச்சுவையுடன் கூறப்பட்ட பழங்கதையைக் கேட்டு அறையே சிரிப்பு வெள்ளத்தில் மூழ்கியது. நுரையீரல் புற்றுநோயால் அவதியுற்ற என் தந்தை சுவாசிக்க கடினப்பட்டாலும் நன்கு சிரித்து மகிழ்ந்தார். பின்னர் அனைவருக்கும் ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்தினார். “ராண்டி ஒரு போதகர்” எனக் கூறி அனைவரும் கவனமாய் பேச வேண்டும் என்பது போல் வேடிக்கையாய் சொன்னார். இரண்டு விநாடிகளுக்கு அமைதி நிலவியது, அதன் பின்னர் இந்த புதிய செய்தியைக் கேட்டு அறையே சிரிப்பில் வெடித்து சிதறியது.

இவ்வாறாக நாற்பது நிமிடங்கள் சென்றிருக்கும். அப்பொழுது திடீரென அந்த தச்சுவேலை செய்பவர் தன் தொண்டையை சரி செய்து, தந்தையின் பக்கம் திரும்பி, “சரி ஹோவர்ட் (Howard) இத்தோடு குடியும், மதுபானச் சண்டையும் எனக்கு கிடையாது. அந்நாட்கள் முடிந்து போயிற்று. இன்றைக்கு நான் வாழ்வதற்கு ஒரு நோக்கம் இருக்கிறது. என்னுடைய மீட்பரும் இரட்சகருமாகிய இயேசுவைப் பற்றி உன்னிடம் பேச வேண்டும்”

பின்னர் அவர் அதைப் பற்றி பேச ஆரம்பித்தார். முதலில் லேசாக வேண்டாம் என மறுத்த என் தந்தை பின்னர் கேட்கத் தொடங்கினார். அதைவிட இனிமையாய், அழகாய், அமைதியாய் நற்செய்தியை பிரசங்கித்து நான் கேட்டதில்லை. என் தந்தை அதை கூர்ந்து கேட்டு கவனித்தார். சில வருடங்கள் கழிந்த பின்பு இயேசுவை விசுவாசித்தார்.

ஓர் பழைய நண்பர் அவரது எளிமையான வாழ்வில் இருந்து பகிர்ந்த மிக எளிமையான சாட்சி அது. எளிமை என்பது பெலவீனமானதோ அல்லது மூடத்தனமானதோ அல்ல, மாறாக அது ஒளிவுமறைவின்றி நேர்மையானது என்பதை நான் அன்று அறிந்து கொண்டேன்.

இயேசுவைப் போல. அவரது இரட்சிப்பைப் போல.