வகை  |  odb

கற்பாறையின் மேல் கட்டப்பட்ட வீடு

பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்ற தன்னுடைய வீட்டின் முன்னறை இறங்கிக் கொண்டிருக்கின்றது, சுவரில் வெடிப்புகள் தோன்றியுள்ளன, அவ்வறையின் ஜன்னல் திறக்க முடியாததாகிவிட்டது என என்னுடைய நண்பன் கூறினான். இந்த அறை அஸ்திபாரமிடாமல் சேர்க்கப்பட்ட அறையென பின்னர் தெரிந்துகொண்டோம். இந்த கீழ்த்தரமான வேலையை சரி செய்வதற்கு, கட்டுமானர் பல மாதங்கள் வேலை செய்து ஒரு புதிய அஸ்திபாரத்தைப் போட்டார்.

அவர்கள் அந்த வேலையை முடித்த பின்னர், நான் அதைப் பார்வையிட்ட போது சுவரிலிருந்த வெடிப்பு மறைந்து, ஜன்னல் திறக்கக்கூடியதாக இருந்தது. மற்றபடி எந்த ஒரு மாறுபாட்டையும் நான் அதில் காண முடியவில்லை. ஆனால், ஓர் உறுதியான அஸ்திபாரம் போடப்பட்டுள்ளது என்பதை உணர முடிந்தது.

இந்த உண்மை நம் வாழ்க்கைக்கும் பொருத்தமானது.

இயேசு தன்னுடைய உபதேசத்திற்குச் செவி கொடுக்காததின் விளைவை விளக்க, ஒரு புத்திசாலியும் ஒரு முட்டாளும் ஆகிய இரு கட்டுமானர்களைப் பற்றிய உவமையைச் சொல்கின்றார் (லூக். 6:46-49). இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு அதை அப்படியே விட்டு விடுகிறவர்களைப் போலல்லாமல், இயேசுவின் வார்த்தைகளுக்குச் செவி கொடுத்துக் கீழ்ப்படிகிறவன் கற்பாறையின் மேல் தன் வீட்டைக் கட்டின மனிதனுக்கு ஒப்பாயிருக்கிறான். புயல் காற்று வீசிய பொதும் அந்த வீட்டை அசைக்கக் கூடாமற் போயிற்று. அப்படியே அவர்களுடைய விசுவாசமும் எந்நிலையிலும் அசைக்கப்படுவதில்லை.

இயேசுவின் வார்த்தைகளை கவனித்து, கீழ்படிந்தால் மெய்யான சமாதானத்தைப் பெற்றுக் கொள்வோம். அவர் நம் வாழ்விற்கு ஓர் உறுதியான அஸ்திபாரமாயிருக்கிறார். வேத வசனங்களை வாசிப்பதன் மூலமும், ஜெபத்தின் வழியாகவும், பிற கிறிஸ்தவர்களிடமிருந்து கற்றுக் கொள்வதன் மூலமாயும் அவர் மீதுள்ள நமது அன்பை உறுதிப்படுத்துவோம். பெருவெள்ளம் போல நீரோட்டம் நம் வீட்டின் மீது மோதினாலும், நாம் காட்டிக் கொடுக்கப்படுவதாலோ, வேதனையாலோ அல்லது ஏமாற்றத்தாலோ எதுவாயினும் நம்முடைய உறுதியான அஸ்திபாரத்தை அசைக்க முடியாது என்ற நம்பிக்கையோடிருப்போம். நமது இரட்சகர் நமக்குத் தேவையான ஆதரவைத் தருவார்.

நீ என்னை நேசிக்கிறாயா?

நான் வாலிபனாக இருந்தபோது, என் தாயார் என்னை அதிகாரப்படுத்துவதை முற்றிலும் எதிர்ப்பவனாகக் காணப்பட்டேன். நான் பெரியவனாகும் முன்பே என் தந்தை மரித்துப் போனார். எனவே என் தாயார், கொந்தளிக்கும் அலைகளின் ஊடே வாழ்க்கைப் படகை செலுத்தும் பொறுப்பை முழுவதுமாக ஏற்க வேண்டியதாயிற்று.

நான் நினைவுபடுத்திப் பார்க்கும் போது, என் தாயார் என்னை எந்த பொழுதுபோக்கிற்கும் அனுமதித்ததேயில்லை, என்னை நேசித்ததுமில்லையென்றே கருதுவேன். ஏனெனில், நான் எதைக் கேட்டாலும் அவளுடைய பதில் இல்லை என்றேயிருக்கும். அவர்கள் என்னை அதிகம் நேசித்தபடியால், எனக்கு நல்லதல்லவெனக் கருதியவற்றைத்தான் தடுத்திருக்கிறார்களென இப்பொழுது எனக்குப் புரிகிறது.

பாபிலோனுக்கு சிறைபிடிக்கப்பட்டு போன இஸ்ரவேலர், தேவன் அவர்களை எவ்வளவு நேசிக்கிறாரென கேள்வி கேட்கின்றனர். அவர்கள் தொடர்ந்து தேவனுக்கு விரோதமாகக் கலகம் செய்தபடியால், அவர்களைத் திருத்தும்படி, அவர்களைத் தேவன் சிறைப்படுத்தினார். இப்பொழுது தேவன் அவர்களிடம் மல்கியா தீர்க்கதரிசியை அனுப்புகின்றார். அவர் மூலம் தேவன் தரும் முதல் வார்த்தையே, “நான் உங்களைச் சிநேகித்தேன்” என்பது தேவன் தங்களை எப்படிச் சிநேகித்தார் என இஸ்ரவேலர் சந்தேகத்தோடு கேட்கின்றனர். “உண்மையாகவா?” என்கின்றனர். மல்கியாவைக் கொண்டு தேவன் தன்னுடைய அன்பை விளங்கச் செய்கின்றார். தேவன் இஸ்ரவேலரை, ஏதோமியரைக் காட்டிலும் தேர்ந்து கொண்டார் எனச் சொல்கின்றார்.

நாம் அனைவருமே வாழ்வில் கஷ்டமான காலங்களைக் கடந்து செல்வோம். அப்படிப்பட்ட காலங்களில் நமக்கும் தேவன் நம்மை நேசிக்கின்றாரா என கேட்கத் தோன்றும். வேறுபட்ட வகைகளில் தேவன் தன்னுடைய மாறாத அன்பை நமக்குக் காட்டியதை நினைத்துப் பர்ப்போம். அவருடைய நன்மைகளை நாம் நினைக்க மறந்த போதும், அவர் நம்மை நேசிக்கின்ற தந்தையாகவேயுள்ளார்.

நம்பிக்கையோடிருக்கக் கற்றுக்கொள்ளல்

நான் வாலிபனாக இருந்த போது, என்னுடைய தாயார் நான் விசுவாசத்தில் வளர வேண்டுமென என்னை ஊக்கப்படுத்துவார்கள். “தேவனை நம்பு, அவர் உன்னைக் கவனித்துக் கொள்வார்” என என்னுடைய தாயார் சொல்வதுண்டு. “அது அத்தனை எளிதானதல்ல, அம்மா!” என நான் கத்துவேன். “முயற்சி செய்பவர்களுக்குத்தான் தேவன் உதவுவார்” என்பேன்.

ஆனால், “முயற்சி செய்பவர்களுக்குத்தான் தேவன் உதவுவார்” என்று வேதாகமத்தில் எங்குமே காணப்படவில்லை. நம்முடைய அனுதின தேவைகளுக்கும் தேவனையே சார்ந்து வாழும்படி தேவனுடைய வார்த்தைகள் சொல்கின்றன. “ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப் பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை; அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார். அவைகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களல்லவா? (மத். 6:26-27) என இயேசு சொல்கின்றார்.

நாம் அநுபவிக்கின்ற யாவும், நம் வாழ்க்கையில் சம்பாதிப்பதற்குத் தேவையான பெலனும், நம்முடைய முயற்சிகள் யாவும் நம்மை நேசித்து, நம்முடைய தகுதிக்கும் மேலாக நம்மை கனப்படுத்துகின்ற நம்முடைய பரலோகத் தந்தையின் கொடைகளாகும்.

என்னுடைய தாயார் தங்களுடைய வாழ்வின் இறுதியையடைந்த போது ‘அல்சைமர்’ என்ற நோயால் தாக்கப்பட்டு தன்னுடைய நியாபகச்சக்தியையும், சிந்திக்கிற திறனையும் இழந்தார்கள். ஆனால் தேவன் மீது வைத்திருந்த நம்பிக்கைமட்டும் குறையவில்லை. அவர்கள் எங்கள் வீட்டிலிருந்த நாட்களில், தேவன் அவர்களுடைய தேவைகளையெல்லாம் எதிர்பாராத விதமாகச் சந்தித்ததையும், அதனால் அவள் வாழ்க்கையில் கொண்டிருந்த நம்பிக்கை சரியானதே என்பதைக் காணும் சந்தர்ப்பம் பெற்றேன். கவலைப்படுவதற்குப் பதிலாக அவர் தன்னை தேவனுடைய பாதுகாப்பில் வைத்துவிட்டார். தேவன் அவர்களுக்கு உண்மையுள்ளவராகவே இருந்தார்.

இடைவிடாமல் சேவைசெய்

இளைஞர்களிடம் தாலந்துகளை எப்படி உருவாக்குவது என்பதைக்குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த கல்வியியல் உளவியலாளர் பென்ஜமின் புளும் என்பவர், விளையாட்டு, ஓவியம், கல்வி என வெவ்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 120 பேரின் இளமைப் பருவத்தைக் குறித்து ஆராய்ந்தார். அனைவரிடமும் இருந்த ஒரு பொதுவானப் பண்பைக் கண்டறிந்தார். அனைவருமே தீவிரமான பயிற்சியை நீண்ட காலம் எடுத்துள்ளனர் என்பதைக் கண்டு கொண்டார்.

ஓவ்வொருவரும் தம் வாழ்வில் ஏதாவது ஒரு பகுதியில் வளர்ச்சியடைய வேண்டுமாயின், அதற்கு ஒழுங்கும், கிரமுமான பயிற்சி தேவை என புளும் தனது ஆராய்ச்சியின் முடிவைத் தெரிவித்தார். நாம் தேவனோடு செலவிடும் நேரத்திலும் ஓர் ஒழுக்கத்தைக் கையாளுவதன் மூலம் ஆவிக்குரிய ஒழுக்கத்திலிருப்பது, நாம் அவர் மீதுள்ள நம்பிக்கையில் வளர வழிவகுக்கும்.

தேவனோடு ஒழுங்கு முறையைக் கையாண்டதில் தானியேல் ஒரு முக்கிய எடுத்துக்காட்டாகும். தானியேல் இளைஞனான போதிலும் கவனமாகவும், ஞானமாகவும் தீர்மானம் எடுக்க முடிந்தது (1:8). அவன் ஜெபம் செய்யவும் ஒழுங்கைக் கடைபிடித்தான். “தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்தினான்” (6:10).

அவன் அடிக்கடி தேவனைத் தேடிய போது, அவனுடைய விசுவாச வாழ்க்கையை அவனைச் சுற்றியிருந்தவர்கள். எளிதாகப் புரிந்து கொள்ள முடிந்தது. தரியு அரசன் தானியேலைக் குறித்து, “ஜீவனுள்ள தேவனுடைய தாசனே” (வச. 20) எனவும், இடைவிடாமல் தேவனை ஆராதிக்கிறவன் எனவும் இருமுறை குறிப்பிடுகின்றான் (வச. 16,20).

தானியேல் போன்று நமக்கும் தேவனுடைய உதவி மிகவும் தேவை. தேவன் நம்மில் கிரியை செய்கிறார், எனவே நாம் அவரோடு நேரத்தைச் செலவிட விரும்புகிறோம் என்பது எத்தனை இன்பமானது! (பிலி. 2:13) எனவே நாம் ஒவ்வொரு நாளும் அவருடைய பிரசன்னத்தில் வந்து அவரோடு நேரத்தைச் செலவிடும்போது, அவர்மீதுள்ள அன்பில் நிரம்பி வழியச் செய்வார், நமது ரட்சகரை புரிந்துகொள்வதிலும் அறிந்து கொள்வதிலும் வளர்வோம் (1:9-11).

மன்னித்து மறபோம்

மனம் பொருந்துதல் பற்றி ஒரு வட்ட மேசை விவாதத்தை ஆரம்பித்தபோது, ஒரு பங்காளர், “மக்கள் குற்றங்களை காலத்தில் உறையச் செய்யாதீர்கள்” என ஞானமாய் கூறினார். நாம் மக்கள் செய்யும் தவறுகளை நினைவில் வைத்துக் கொள்கிறோம். ஆனால், அவர்கள் மாற்றமடைய வாய்ப்பு கொடுப்பதில்லை என அவர் கூறினார்.

பேதுருவின் வாழ்க்கையில் எத்தனையோ வேளைகளில் தேவன் அவரைப் “புறக்கணித்திருக்கலாம்.” ஆனால், தேவன் அவ்வாறு செய்யவில்லை. துடிப்பான சீடனான பேதுரு இயேசுவைத் “திருத்துகின்றான்”, விளைவாக இயேசுவிடமிருந்து வன்மையான கடிந்து கொள்ளலைச் சந்திக்கின்றான். (மத். 16:21-23). அவன் யாவருமறிய இயேசுவை மறுதலிக்கின்றான் (யோவா. 18:25-27). பின்னர், மனம்வருந்தி மீண்டெழுகிறான் (21:15-19). ஒரு முறை சபையில் ஜாதிபிரிவினைக்குக் காரணமாகிறான்.

கேபா என்றழைக்கப்படும் பேதுரு தன்னை புறஜாதியாரிடமிருந்து பிரித்து, விலக்கிக் கொண்டபோது இந்தக் காரியம் நிகழ்ந்தது (கலா. 2:11-12). சமீபத்தில் அவன் புறஜாதியாரோடே தன்னை ஐக்கியப்படுத்தியிருந்தான். ஆனால், சில யூதர்கள் வந்து, கிறிஸ்துவைப் பின்பற்றும் விசுவாசிகளுக்கும் விருத்தசேதனம் அவசியம் என்று போதித்த போது, விருத்தசேதனமில்லாத புறஜாதியாரை பேதுரு தவிர்த்தான். இது மோசேயின் நியாயப்பிரமாணத்தை நோக்கி, அவரது அபாயகரமானத் திரும்புதலைக் குறிக்கிறது. போதுருவின் இந்த நிலையை “மாய்மாலம்” என பவுல் குறிப்பிடுகின்றார் (வச. 13). பவுல் தைரியமாக எதிர்த்ததால், இந்தக் காரியம் தீர்க்கப்பட்டது. தேவன் நமக்களித்துள்ள அழகிய ஒரு மனதின் ஆவியைக் பெற்றவனாகப் பேதுரு தேவப் பணியைத் தொடர்ந்தான்.

ஒருவரும் தங்களுடைய மோசமான நேரங்களால் புறக்கணிக்கப்படுவதில்லை. தேவ கிருபையால் நாம் ஒருவரையொருவர் தழுவி, ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக் கொண்டு, தேவைப்படும் இடங்களில் ஒருவரையொருவர் எதிர்த்து தேவ அன்பில் இணைந்து வளர்வோம்.

தாராளமாய்க் கொடுப்பவர்கள்

எங்களுடைய ஆலயச் சரித்திரத்தில், தேவன் தந்துள்ளவற்றையெல்லாம் திருப்பிப் பார்த்து, எங்கள் சபைத் தலைவர், ஒரு புது தேவையை முன்வைத்தார். அது ஓர் உடற்பயிற்சிக் கூடம். எங்களுடைய சமுதாயத்தினருக்கு இன்னும் அதிகமாகச் சேவைசெய்ய, அது உதவியாக இருக்கும் என்றார். அந்தக் கட்டுமானத் தொகைக்காக, தலைவர்களின் அணி தங்கள் வாக்குறுதித் தொகையை முதலாவது எழுதினர். தன்னலம் என் இருதயத்தை நெருட, நான் ஏற்கனவே கொடுக்க நினைத்ததைத் தவிர அதிகமாக கொடுக்கப்போவதில்லை என சொல்லிக் கொண்டு ஜெபித்தேன். ஆனால், நானும் என் கணவனும் இத்திட்டத்திற்காக ஜெபிப்பதாக ஒத்துக் கொண்டோம். ஆனால், தேவன் எங்களுக்குத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டேயிருப்பதை நினைத்து, நாங்கள் மாதந்தோறும் ஒரு தொகையை இத்திட்டத்திற்குக் கொடுக்கத் தீர்மானித்தோம். எங்கள் சபையிலுள்ள குடும்பத்தினரின் கொடைகளால், அந்த முழுகட்டடமும் கட்டி முடிக்கப்பட்டது.

இந்த உடற்பயிற்சி கூடம் திறப்பு விழாவின்போது, கர்த்தருடைய ஊழியத்திற்கென்றே திறந்த போதிலும் அதனை பல்வேறு சமுதாய நிகழ்வுகளுக்கும் தேவன் பயன்படுத்தி வருவதைக் குறித்து நன்றியோடிருக்கிறோம். மற்றொரு தாராளமான கொடையாளர், தாவீது அரசனைக் குறித்து நினைவுகூருகின்றேன். தேவன் அவரைத் தேவனுடைய ஆலயத்தைக் கட்டும்படித் தெரிந்து கொள்ளவில்லையெனினும், தாவீது தன்னுடைய வருமானம் அனைத்தையும் அத்திட்டத்திற்கென சேமித்தான் (1 நாளா. 29:1-5) அவனோடு பணிபுரிந்த பிரபுக்களும், ஜனங்களும் மனப்பூர்வமாய் கொடுத்தனர் (வச. 6-9). நம்மைப் படைத்தவரும், தாங்கி வழி நடத்துபவரும், எல்லாவற்றிற்கும் சொந்தக்காரருமான தேவன், முன்பு தங்களுக்குக் கொடுத்ததிலிருந்து, மனப்பூர்வமாய் கொடுத்ததை ராஜா சேகரித்தான் (வச. 10-16).

நமக்குள்ளதெல்லாம் தேவனுக்கே சொந்தமானதென நாம் உணரும் போது, நன்றியோடும், தாராளமாயும், உண்மையாயும் மற்றவர் நலனுக்காகக் கொடுக்க முன்வருவோம். தேவன் மீண்டும் தருவார் என நம்புவோம். இந்த மனப்பூர்வமான கொடையால், நம்முடைய தேவைகளையும் பிறர் தாங்குவார்கள் என்பதையும் நம்புவோம்.

நாம் இயேசுவைக் காண்போம்

நான் எனது பிரசங்க பீடத்திலிருந்து அடக்க ஆராதனைக்கான ஜெபங்களைச் சொல்லிக் கொண்டே கீழே நோக்கிய போது ஒரு பித்தளை தகட்டில் யோவான் 12:21ல் உள்ள வாசகம் பதிக்கப்பட்டிருந்ததைக் கண்டேன், “ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம்” என்பதே அந்த வாசகம். நாம் கண்ணீரோடும், புன்னகையோடும் நினைவுகூர்ந்து கொண்டிருக்கும் இந்தப் பெண், இதற்கு எத்தனைப் பொருத்தமானவள், நாம் இயேசுவை அவளில் கண்டோமே என நான் நினைத்துப்பார்த்தேன். அவள் தன் வாழ்வில், அநேக ஏமாற்றங்களையும், சவால்களையும் சந்தித்த போதும், கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையை ஒருபோதும் கைவிட்டதேயில்லை. தேவனுடைய ஆவியானவர் அவளில் வாசம் பண்ணியதாலேயே நாம் இவளில் இயேசுவைக் காண முடிந்தது.

இயேசு எருசலேமிற்குள் பயணம் செய்த போது, நடந்தவற்றை, யோவான் நினைவிற்குக் கொண்டுவருகிறான் (யோவா. 12:12-16). சில கிரேக்கர்கள் இயேசுவின் சீடனான பிலிப்புவிடம் வந்து, “ஐயா, இயேசுவைக்காண விரும்புகிறோம்” (வச. 21). என்றனர். அவர்கள் இயேசுவின் சுகமளிக்கும் வல்லமையும், அவர் செய்த அற்புதங்களையும் குறித்துக் கேள்விப்பட்டிருக்கலாம். எனவே அவரைக் காண ஆவலாய் இருந்தனர். அவர்கள் யூதரல்லாததால் தேவாலயத்தின் உட்பிரகாரத்தினுள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்களுடைய வேண்டுதல் இயேசுவை அடைந்த போது, அவர் நான் மகிமைப்படும் நேரம் வந்துவிட்டது என தெரிவிக்கின்றார் (வச. 23). இதன் மூலம் அவர் அநேகருடைய பாவங்களுக்காக மரிக்கப் போகிறார் எனபதைக் குறிப்பிட்டார். அவர் தன்னுடைய பணியை நிறைவேற்றுவது யூதர்களுக்காக மட்டுமல்ல,
புறஜாதியினருக்காகவும் தான். (வச. 20). அப்பொழுது அவர்கள் இயேசுவைக் காண்பார்கள்.

இயேசு மரித்தபின்பு, அவரைப் பின்பற்றுபவர்களில் வாசம் பண்ணும்படி பரிசுத்த ஆவியானவரை அனுப்பினார் (14:16-17). அவர் நம்மில் வாசம் பண்ணி, செயல்படுவதாலேயே அவரில் அன்புகூரவும், அவருக்குப் பணி செய்யவும் முடிகிறது. நம்மைச் சுற்றியிருப்பவரும் நம்மில் இயேசுவைக் காண்கின்றனர். என்ன ஆச்சரியம்!

நிலைத்திருக்கும் மகிழ்ச்சி

நம்முடைய சொந்த வழியில் செயல்களைச் செய்வதாலேயே மகிழ்ச்சி கிடைக்கும் என சொல்லக் கேட்டிருப்போம். ஆனால், அது உண்மையல்ல. அப்படிச் செய்வது வெறுமையையும், பதட்டத்தையும், தலைவலியையுமே தரும்.

மக்கள், தாங்கள் ஏதோ ஒன்றிலிருந்து தப்பித்துக் கொள்வதே மகிழ்ச்சி எனக் கருதுவதாகக் கவிஞர் W.H. ஆடன் கூறுகின்றார். “பேய்கள் நிறைந்த காட்டில் தொலைந்து போனவர்கள், இரவைக் கண்டு பயந்த குழந்தைகள், இது வரை மகிழ்ச்சியையும், நல்லதையும் காணாதவர்கள்” என இவர்களைப் பற்றி எழுதுகின்றார்.

நம்முடைய பயத்திற்கும், மகிழ்ச்சியின்மைக்கும் தீர்வு என்ன என்பதை சங்கீதக்காரன் தாவீது பாடலாகத் தருகின்றார். “நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவி கொடுத்து, என்னுடைய எல்லா பயத்துக்கும் என்னை நீங்கலாக்கி விட்டார்” (சங். 34:4). தேவன் விரும்பும் வகையில் காரியங்களைச் செய்வதே மகிழ்ச்சியாகும். இந்த உண்மையை நாம் ஒவ்வொரு நாளும் சரிபார்க்க முடியும். “அவரை நோக்கிப் பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்;” என தாவீது எழுதுகின்றார் (வச. 5). இதனை நீ முயற்சி செய்து பார், நீயே தெரிந்து கொள்வாய். இதனையே “கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்” (வச. 8) என தாவீது கூறுகின்றார்.

“காண்பவை நம்பக் கூடியவை” என நாம் சொல்கின்றோம். இப்படித்தான் இவ்வுலகக் காரியங்களை நாம் தெரிந்து கொள்கின்றோம். அதற்கான நிரூபணத்தைக் காட்டு, நான் நம்புகிறேன் என்கின்றோம். ஆனால், தேவன் அதனை மாற்றிச் சொல்கின்றார். நம்புகிறவற்றையே நாம் காண்கின்றோம். “ருசிபார் அப்பொழுது உனக்குத் தெரியும்” என்கின்றார் தேவன்.

தேவனுடைய வார்த்தையை நம்பு, தேவன் உனக்கு என்ன கட்டளையிடுகிறாரோ, அதைச் செய், அப்பொழுது காண்பாய். சரியானவற்றைச் செய்ய அவருடைய கிருபையைத் தருகின்றார். அதற்கும் மேலாக அவர் உனக்காகத் தம்மையே தந்தார். அது ஒன்றுதான் நன்மைக்கெல்லாம் ஊற்று. அதிலிருந்துதான் நிலையான மகிழ்ச்சி கிடைக்கும்.

தேவன் நம்மைப் பராமரிக்கின்றார்

என்னுடைய சிறிய பேரன்கள் தாங்களாகவே உடையணிந்து கொள்ள விரும்புவர். சில வேளைகளில் அவர்கள் சட்டையை பின்புறமாக போட்டுக்கொள்வர், இளையவன் அடிக்கடி தன்னுடைய ஷ_வை மாற்றி போட்டிருப்பான். நான் எப்பொழுதுமே அதனைச் சுட்டிக்காட்ட விரும்புவதில்லை. ஆனால். நான் அவர்களின் கபடமற்ற செயலை நேசிப்பேன்.

நான், அவர்களுடைய கண்களின் வழியே இவ்வுலகைக் காண விரும்புவேன். அவர்களுக்கு எல்லாமே வினோதமாகத் தெரியும். கீழே விழுந்த மரத்தின் மீது நடப்பதும், ஒரு கட்டையின் மீதமர்ந்து சூரியக் கதிரைப் பெறும் ஒரு ஆமையைக் கண்டுபிடிப்பதும், தீ அணைப்பு வாகனம் உறுமிக் கொண்டு செல்வதை ஆர்வத்தோடு கவனிப்பதும் அவர்களுக்கு வினோதமானவை. ஆனால், என்னுடைய சிறிய பேரன்கள் முற்றிலும் கபடற்றவர்களல்ல. அவர்கள் இரவில் தங்கள் படுக்கையிலிருந்து இறங்குவதற்கும், அடுத்தவனின் விளையாட்டுச் சாமானைப் பறித்துக் கொள்வதற்கும் ஒரு டஜன் காரணங்களைக் கூறுவர், ஆனாலும் நான் அவர்களை அதிகம் நேசிக்கின்றேன்.

தேவனுடைய முதல் மக்களான ஆதாமையும், ஏவாளையும் நினைத்துப் பார்க்கின்றேன். அவர்களும் தேவனுக்கு என்னுடைய பேரப்பிள்ளைகளைப் போன்றேதான் இருந்திருப்பர். அவர்கள் தேவனோடு உலாவந்தபோது அந்தத் தோட்டத்தில் கண்ட ஒவ்வொன்றும் அவர்களுக்கு அதிசயமாகத்தான் தோன்றியிருக்கும். ஆனால், ஒரு நாள் அவர்கள் மனமறிய, தேவனுடைய வார்த்தையை மீறி கீழ்படியாதவராயினர். அவர்களுக்கு விலக்கப்பட்ட ஒரு மரத்தின் கனியை உண்டனர் (ஆதி. 2:15-17, 3:6). அந்த கீழ்படியாமை அவர்களைப் பொய்க்கும், மற்றவரைக் குற்றப்படுத்தவும் வழிவகுத்தது (3:8-13).

அப்படியிருந்தும் தேவன் அவர்களை நேசித்து, அவர்கள் மீது கரிசனை கொண்டார். அவர்களை உடுத்துவிப்பதற்காக மிருகங்களை பலியாக்கினார் (வச. 21). பின்னர், தன்னுடைய ஒரே மகனை பலியாகக் கொடுத்து அதன் மூலம் எல்லா பாவிகட்கும் ஒரு மீட்பின் வழியைக் கொடுத்தார் (யோவா. 3:16). அவர் நம்மை அவ்வளவு நேசிக்கின்றார்!