என்னுடைய சிறிய பேரன்கள் தாங்களாகவே உடையணிந்து கொள்ள விரும்புவர். சில வேளைகளில் அவர்கள் சட்டையை பின்புறமாக போட்டுக்கொள்வர், இளையவன் அடிக்கடி தன்னுடைய ஷ_வை மாற்றி போட்டிருப்பான். நான் எப்பொழுதுமே அதனைச் சுட்டிக்காட்ட விரும்புவதில்லை. ஆனால். நான் அவர்களின் கபடமற்ற செயலை நேசிப்பேன்.

நான், அவர்களுடைய கண்களின் வழியே இவ்வுலகைக் காண விரும்புவேன். அவர்களுக்கு எல்லாமே வினோதமாகத் தெரியும். கீழே விழுந்த மரத்தின் மீது நடப்பதும், ஒரு கட்டையின் மீதமர்ந்து சூரியக் கதிரைப் பெறும் ஒரு ஆமையைக் கண்டுபிடிப்பதும், தீ அணைப்பு வாகனம் உறுமிக் கொண்டு செல்வதை ஆர்வத்தோடு கவனிப்பதும் அவர்களுக்கு வினோதமானவை. ஆனால், என்னுடைய சிறிய பேரன்கள் முற்றிலும் கபடற்றவர்களல்ல. அவர்கள் இரவில் தங்கள் படுக்கையிலிருந்து இறங்குவதற்கும், அடுத்தவனின் விளையாட்டுச் சாமானைப் பறித்துக் கொள்வதற்கும் ஒரு டஜன் காரணங்களைக் கூறுவர், ஆனாலும் நான் அவர்களை அதிகம் நேசிக்கின்றேன்.

தேவனுடைய முதல் மக்களான ஆதாமையும், ஏவாளையும் நினைத்துப் பார்க்கின்றேன். அவர்களும் தேவனுக்கு என்னுடைய பேரப்பிள்ளைகளைப் போன்றேதான் இருந்திருப்பர். அவர்கள் தேவனோடு உலாவந்தபோது அந்தத் தோட்டத்தில் கண்ட ஒவ்வொன்றும் அவர்களுக்கு அதிசயமாகத்தான் தோன்றியிருக்கும். ஆனால், ஒரு நாள் அவர்கள் மனமறிய, தேவனுடைய வார்த்தையை மீறி கீழ்படியாதவராயினர். அவர்களுக்கு விலக்கப்பட்ட ஒரு மரத்தின் கனியை உண்டனர் (ஆதி. 2:15-17, 3:6). அந்த கீழ்படியாமை அவர்களைப் பொய்க்கும், மற்றவரைக் குற்றப்படுத்தவும் வழிவகுத்தது (3:8-13).

அப்படியிருந்தும் தேவன் அவர்களை நேசித்து, அவர்கள் மீது கரிசனை கொண்டார். அவர்களை உடுத்துவிப்பதற்காக மிருகங்களை பலியாக்கினார் (வச. 21). பின்னர், தன்னுடைய ஒரே மகனை பலியாகக் கொடுத்து அதன் மூலம் எல்லா பாவிகட்கும் ஒரு மீட்பின் வழியைக் கொடுத்தார் (யோவா. 3:16). அவர் நம்மை அவ்வளவு நேசிக்கின்றார்!