நம்முடைய சொந்த வழியில் செயல்களைச் செய்வதாலேயே மகிழ்ச்சி கிடைக்கும் என சொல்லக் கேட்டிருப்போம். ஆனால், அது உண்மையல்ல. அப்படிச் செய்வது வெறுமையையும், பதட்டத்தையும், தலைவலியையுமே தரும்.

மக்கள், தாங்கள் ஏதோ ஒன்றிலிருந்து தப்பித்துக் கொள்வதே மகிழ்ச்சி எனக் கருதுவதாகக் கவிஞர் W.H. ஆடன் கூறுகின்றார். “பேய்கள் நிறைந்த காட்டில் தொலைந்து போனவர்கள், இரவைக் கண்டு பயந்த குழந்தைகள், இது வரை மகிழ்ச்சியையும், நல்லதையும் காணாதவர்கள்” என இவர்களைப் பற்றி எழுதுகின்றார்.

நம்முடைய பயத்திற்கும், மகிழ்ச்சியின்மைக்கும் தீர்வு என்ன என்பதை சங்கீதக்காரன் தாவீது பாடலாகத் தருகின்றார். “நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவி கொடுத்து, என்னுடைய எல்லா பயத்துக்கும் என்னை நீங்கலாக்கி விட்டார்” (சங். 34:4). தேவன் விரும்பும் வகையில் காரியங்களைச் செய்வதே மகிழ்ச்சியாகும். இந்த உண்மையை நாம் ஒவ்வொரு நாளும் சரிபார்க்க முடியும். “அவரை நோக்கிப் பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்;” என தாவீது எழுதுகின்றார் (வச. 5). இதனை நீ முயற்சி செய்து பார், நீயே தெரிந்து கொள்வாய். இதனையே “கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்” (வச. 8) என தாவீது கூறுகின்றார்.

“காண்பவை நம்பக் கூடியவை” என நாம் சொல்கின்றோம். இப்படித்தான் இவ்வுலகக் காரியங்களை நாம் தெரிந்து கொள்கின்றோம். அதற்கான நிரூபணத்தைக் காட்டு, நான் நம்புகிறேன் என்கின்றோம். ஆனால், தேவன் அதனை மாற்றிச் சொல்கின்றார். நம்புகிறவற்றையே நாம் காண்கின்றோம். “ருசிபார் அப்பொழுது உனக்குத் தெரியும்” என்கின்றார் தேவன்.

தேவனுடைய வார்த்தையை நம்பு, தேவன் உனக்கு என்ன கட்டளையிடுகிறாரோ, அதைச் செய், அப்பொழுது காண்பாய். சரியானவற்றைச் செய்ய அவருடைய கிருபையைத் தருகின்றார். அதற்கும் மேலாக அவர் உனக்காகத் தம்மையே தந்தார். அது ஒன்றுதான் நன்மைக்கெல்லாம் ஊற்று. அதிலிருந்துதான் நிலையான மகிழ்ச்சி கிடைக்கும்.