நான் வாலிபனாக இருந்தபோது, என் தாயார் என்னை அதிகாரப்படுத்துவதை முற்றிலும் எதிர்ப்பவனாகக் காணப்பட்டேன். நான் பெரியவனாகும் முன்பே என் தந்தை மரித்துப் போனார். எனவே என் தாயார், கொந்தளிக்கும் அலைகளின் ஊடே வாழ்க்கைப் படகை செலுத்தும் பொறுப்பை முழுவதுமாக ஏற்க வேண்டியதாயிற்று.

நான் நினைவுபடுத்திப் பார்க்கும் போது, என் தாயார் என்னை எந்த பொழுதுபோக்கிற்கும் அனுமதித்ததேயில்லை, என்னை நேசித்ததுமில்லையென்றே கருதுவேன். ஏனெனில், நான் எதைக் கேட்டாலும் அவளுடைய பதில் இல்லை என்றேயிருக்கும். அவர்கள் என்னை அதிகம் நேசித்தபடியால், எனக்கு நல்லதல்லவெனக் கருதியவற்றைத்தான் தடுத்திருக்கிறார்களென இப்பொழுது எனக்குப் புரிகிறது.

பாபிலோனுக்கு சிறைபிடிக்கப்பட்டு போன இஸ்ரவேலர், தேவன் அவர்களை எவ்வளவு நேசிக்கிறாரென கேள்வி கேட்கின்றனர். அவர்கள் தொடர்ந்து தேவனுக்கு விரோதமாகக் கலகம் செய்தபடியால், அவர்களைத் திருத்தும்படி, அவர்களைத் தேவன் சிறைப்படுத்தினார். இப்பொழுது தேவன் அவர்களிடம் மல்கியா தீர்க்கதரிசியை அனுப்புகின்றார். அவர் மூலம் தேவன் தரும் முதல் வார்த்தையே, “நான் உங்களைச் சிநேகித்தேன்” என்பது தேவன் தங்களை எப்படிச் சிநேகித்தார் என இஸ்ரவேலர் சந்தேகத்தோடு கேட்கின்றனர். “உண்மையாகவா?” என்கின்றனர். மல்கியாவைக் கொண்டு தேவன் தன்னுடைய அன்பை விளங்கச் செய்கின்றார். தேவன் இஸ்ரவேலரை, ஏதோமியரைக் காட்டிலும் தேர்ந்து கொண்டார் எனச் சொல்கின்றார்.

நாம் அனைவருமே வாழ்வில் கஷ்டமான காலங்களைக் கடந்து செல்வோம். அப்படிப்பட்ட காலங்களில் நமக்கும் தேவன் நம்மை நேசிக்கின்றாரா என கேட்கத் தோன்றும். வேறுபட்ட வகைகளில் தேவன் தன்னுடைய மாறாத அன்பை நமக்குக் காட்டியதை நினைத்துப் பர்ப்போம். அவருடைய நன்மைகளை நாம் நினைக்க மறந்த போதும், அவர் நம்மை நேசிக்கின்ற தந்தையாகவேயுள்ளார்.