நம்முடைய முதலீட்டின் பிரதிபலன்
1995 ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பங்கு சந்தையின் முதலீட்டாளர்கள் மிக அதிகமான பலனைப் பெற்றனர். சராசரியாக 37:6 சதவீத அபார பலனைத் தந்தது. 2008 ஆம் ஆண்டில் முதலீட்டாளர்கள் அதே அளவு இழப்பைச் சந்தித்தனர். அதாவது 37.0 சதவீதம் இழப்பு. இவற்றிற்கிடையேயுள்ள வருடங்களில் மாறுபட்ட பலன் கிடைத்தது. சந்தையில் பணத்தோடுள்ளவர்கள் சிலவேளைகளில் அதிசயிக்கும் வண்ணமும், சிலவேளை பயப்படும் வகையிலும் இருந்தது.
தங்களுடைய வாழ்வை இயேசுவுக்காக முதலீடு செய்பவர்களுக்கு நம்பமுடியாத அளவு பிரதிபலன் கிடைக்குமென, இயேசு தம் சீடர்களுக்கு உறுதியளித்துள்ளார். அவர்கள், 'எல்லாவற்றையும் விட்டு உம்மைப் பின்பற்றினோமே" (வச. 28) என்று சொல்லத் தொடங்கினர். தங்கள் வீட்டையும், வேலையையும் அந்தஸ்தையும், குடும்பத்தையும் விட்டுத் தங்கள் வாழ்வை இயேசுவுக்காக முதலீடு செய்தனர் (வச.28). செல்வந்தனான ஒருவன் உலக ஆஸ்தியின் மீதுள்ள பற்றுதலை விட்டுவிட மனதில்லாதிருந்ததைக் கண்டபோது, தங்களுடைய முதலீடும் பலனற்றதாகிவிடுமோ என எண்ணத் தொடங்கினர். இயேசு அவர்களை நோக்கி, யாராகிலும் இயேசுவுக்காக தியாகம் செய்ய தயாராக இருந்தால் அவன், 'இம்மையிலே துன்பங்களோடே கூட நூறத்தனையாக வீடுகளையும் சகோதர சகோதரிகளையும்... மறுமையிலே நித்திய ஜீவனையும் அடைவான்" (வச. 30) என்று சொன்னார். இந்த பிரதிபலன் எந்த பங்குச் சந்தையாலும் கொடுக்கக்கூடாத மிகப் பெரிய பலனாகும்.
நம்முடைய ஆவிக்குரிய வாழ்வில் நம்முடைய முதலீட்டின் வட்டி விகிதத்தைக் குறித்துக் கவலைகொள்ள வேண்டாம். தேவன் எதனோடும் ஒப்பிடமுடியாத உறுதியைத் தருகின்றார். பணத்தைக் கொண்டு மிக அதிகமான பொருளாதார லாபத்தைப் பெற நாம் முயற்சிக்கின்றோம். ஆனால், தேவன் நமக்குத் திருப்பித்தருவதோ டாலர் மதிப்புகளால் அளவிட முடியாதவை. அவரை அறிந்து கொள்வதால் வரும் மகிழ்ச்சி இப்பொழுதும், எப்பொழுதும் நிலையானது. அதனை நாம் பிறரோடு பகிர்ந்துகொள்ள முடியும்.
நீ தேர்ந்தெடுக்கப்படாதபோது
என்னுடைய நண்பனின் முகநூல் பதிவு, அவன் தன்னுடைய செயல் திட்டத்தை முடித்துவிட்டதைத் தெரிவித்தது. அநேகர் அவனுக்குப் பாராட்டுகள் தெரிவித்திருந்தனர். ஆனால், அவனுடைய இந்த பதிப்பு என் இருதயத்தை நெருடியது. அந்த செயல்திட்டம் என்னுடையது. ஏன் நான் அதனை நழுவவிட்டேனெனப் புரியவில்லை.
யோசேப்பின் நிலையும் இப்படித்தான் இருந்தது. தேவன் அவனை கவனிக்கத் தவறிவிட்டார். அது அவனுக்கு நன்றாகத் தெரியும். யூதாஸின் இடத்தைப் பிடிக்க ஓடிய இருவரில் ஒருவன் தான் யோசேப்பு. சீடர்கள் ஜெபித்தனர். "எல்லாருடைய இருதயங்களையும் அறிந்திருக்கிற கர்த்தாவே... இவ்விரண்டு பேரில் தேவரீர் தெரிந்து கொண்டவனை எங்களுக்குக் காண்பித்தருளும்" (அப். 1:24-25). ஆனால், தேவன் மற்றவனாகிய மத்தியாவைத் தெரிந்து கொண்டார். 'சீட்டு மத்தியாவின் பேருக்கு விழுந்தது. தேவன் தமது சித்தத்தைக் கூட்டத்தினருக்கு அறிவித்தார் (வச. 26).
எல்லா சீடர்களும் மத்தியாவிற்குப் பாராட்டு தெரிவித்தனர். நான் யோசேப்பைக் குறித்து ஆச்சரியப்பட்டேன். அவர், தான் நிராகரிக்கப்பட்டதை எவ்வாறு ஏற்றுக்கொண்டார்? கைவிடப்பட்டதாக எண்ணி அவர் அதிர்ந்து போனாரா? சுய அனுதாபத்தால் துவண்டு போனாரா? சீடர்களை விட்டுத் தன்னைப் பிரித்துக் கொண்டாரா? அல்லது தேவன் மீதுள்ள விசுவாசத்தில் சோர்ந்துபோகாமல் மற்றவர்களோடு சேர்ந்து மகிழ்ச்சியோடு தேவ பணியில் ஆதரவாக இருந்தாரா?
இதில் எது சிறந்ததென எனக்குத் தெரியும். நானாக இருந்திருந்தால் இதில் எதைச் செய்திருப்பேனெனவும் எனக்குத் தெரியும். எத்தனை சங்கடமான சூழ்நிலை! உங்களுக்கு நான் தேவையில்லை. நல்லது நானில்லாமல் நீங்கள் எப்படிச் செய்கிறீர்களெனப் பார்ப்போம். இந்த முடிவு ஒரு வேளை நல்லதாகத் தோன்றலாம். ஆனால், அது தன்னலமான முடிவு.
இதற்குப் பின்னர் வேதாகமத்தில் யோசேப்பைக் குறித்து எங்குமே குறிப்பிடப்படவில்லை. அதனால், அவர் எவ்வாறு செயல்பட்டாரெனத் தெரியவில்லை. நாம் தேர்ந்தெடுக்கப்படாமாலிருக்கும் போதும் நாம் எவ்வாறு செயல்படுகிறோமென்பதே மிக முக்கியமானது. நமக்குக் கொடுக்கப்பட்ட பணியில் நாம் எவ்வாறு வெற்றிகரமாக செயல்படுகிறோமென்பதைவிட எவ்வாறு மகிழ்ச்சியொடு பணி செய்கிறோமென்பதையே இயேசுவின் இராஜ்ஜியம் எதிர்பார்க்கிறது என்பதை நினைவில் கொள்வோம்.
சரியான நேரத்தில் நம்மோடிருப்பவர்
அவள் அந்த அலமாரியின் மேலடுக்கினையே நோக்கிக் கொண்டிருந்தாள். அங்குதான் கண்ணாடி ஜாடிகளில் பழக்கூழ் தயாரிப்புகள் வைக்கப்பட்டிருந்தன. நான் அவளருகில், அந்தப் பகுதியில் நின்று அலமாரியின் மேல் பகுதியைப் பார்த்தேன். எதை வாங்கலாமென யோசித்துக் கொண்டிருந்தேன். நான் நிற்பதை அவள் அறியாமல் தன் யோசனையிலேயே மூழ்கியிருந்தாள். எனக்கு மேலடுக்கிலிருந்து பொருட்களையெடுப்பதில் எந்த சிரமமும் இல்லை. ஏனெனில் நான் நல்ல உயரமான மனிதன். ஆனால், அவளோ மிகவும் குறைந்த உயரம். நான் அவளிடம் பேசி உதவ முன்வந்தேன். அதிர்ச்சியடைந்தவளாய், "நீங்கள் இங்கு நிற்பதை நான் கவனிக்கவில்லை. தயவுகூர்ந்து உதவுங்கள்" என்றாள்.
இயேசுவின் சீடரும் இத்தகைய ஒரு சூழலில் தான் இருந்தனர். பசியோடிருக்கும் ஒரு கூட்டத்தினர், தனிமையான இடம், நேரமும் கடந்து கொண்டிருந்தது. மிகவும் பிந்திய மாலைப்பொழுது, சீடர்கள் இயேசுவிடம், “ஜனங்கள் கிராமங்களுக்குப் போய்த் தங்களுக்கு போஜன பதார்த்தங்களைக் கொள்ளும்படி அவர்களை அனுப்பிவிட வேண்டும்" என்கின்றனர் (மத். 14:15). ஆனால், இயேசு அவர்களிடம், 'நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள்" என்றார். அப்பொழுது அவர்கள், 'இங்கே எங்களிடத்தில் ஐந்து அப்பமும், இரண்டு மீன்களுமேயல்லாமல் வேறொன்றும் இல்லை" என்றார்கள் (வச. 17). சீடர்கள் பார்த்ததெல்லாம் தங்களுடைய இயலாமையையே. ஆனால், அவர்களுக்கருகில் நிற்பவர் இயேசு. வெறுமனே அப்பங்களை பெருகச் செய்பவராக மட்டுமல்ல, அவரே நம் வாழ்வின் அப்பமாக நிற்கின்றார்.
நம்முடைய சவால்களை எப்படி சமாளிப்பது என்ற யோசனையில் மூழ்கி நம்முடைய குறுகிய கண்ணோட்டத்தோடு நாம் நம்மோடிருக்கின்ற உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை சார்ந்துகொள்ள நாம் தவறிவிடுகின்றோம். தனித்த மலைப் பிரதேசத்திலிருந்து மளிகைக் கடை வரை எந்த இடமாயினும் தேவன் நம்மோடிருக்கின்றார். தேவன் நம்முடைய தேவையின் போது அவ்விடத்திலிருக்கின்றார். நம் துன்பத்தின் மத்தியில் தவறாது வந்திருந்து உதவும் தேவனவர்.
வேதனையில் ஒர் நோக்கமுண்டோ?
தன்னுடைய சிறுநீரகங்கள் செயலிழந்து விட்டன, இனி வாழ்நாள் முழுவதும் டயலிஸிஸ் செய்துகொள்ள வேண்டுமென தெரிந்து கொண்டபோது ஸ்யூ ஃபென், அந்த சிகிச்சையைத் தொடர விரும்பவில்லை. பணி ஓய்வுபெற்று, தனியாக, ஆனால், நீண்ட நாட்களாக இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தில் வாழும் அவர், தன்னுடைய வாழ்நாளை நீடித்துக் கொள்ள விரும்பவில்லை. ஆனால், நண்பர்களின் விடாப்பிடியான முயற்சியால் டயலிஸிஸ் செய்ய சம்மதித்ததோடு, தேவன் அவளுக்கு உதவி செய்வார் என்ற நம்பிக்கையையும் பெற்றுக் கொண்டாள்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், தான் செல்லும் ஆலயத்தில் பெலவீனப்படுத்தும் ஒரு வியாதியோடு போராடிக் கொண்டிருந்த ஒரு சிநேகிதியைச் சந்தித்த போது ஸ்யூ தன்னுடைய அனுபவத்திற்கு ஒரு பயன் வந்ததைக் கண்டாள். அந்தப் பெண்ணும் தனிமையில், தன்னை உண்மையாய் புரிந்துகொள்ளக் கூடியவர்கள் யாருமின்றி தவித்தாள். ஸ்யூ அவளுடைய உடல், மனரீதியானத் தேவைகளை புரிந்து கொண்டதோடு, அவளுக்குத் தனிப்பட்ட முறையில் உதவவும் முன்வந்தாள். ஸ்யூ தான் சென்ற பாதையின் அனுபவம், அந்தப் பெண்ணோடு அவளுடைய பாதையில் துணையாகச் செல்ல உதவியது. வேறெந்த நபராலும் கொடுக்கமுடியாத ஆறுதலை அவளால் கொடுக்க முடிந்தது. 'தேவன் என்னை எப்படி பயன்படுத்த முடியுமென்பதைத் தெரிந்து கொண்டேன்" என்று கூறினாள்.
நாம் ஏன் கடினமான பாதையில் வழிநடத்தப் படுகிறோம் என்பதைப் புரிந்துகொள்வது கடினம். ஆனால், தேவன் நம்முடைய துன்பங்களை வேறுவகையில் பயன்படுத்துகின்றார். நம்முடைய சோதனையின் மத்தியில் அவரின் ஆறுதலையும் அன்பையும் தேடி அவரிடம் திரும்புவோமாயின், நாம் பிறருக்கு உதவியாயிருக்கும்படி நம்மை பெலப்படுத்துவார். பவுலும் தன்னுடைய சோதனைகளின் வழியே தேவனுடைய திட்டத்தைத் தெரிந்து கொண்டார். அது அவருக்கு தேவனிடமிருந்து ஆறுதலைப் பெற்றுக்கொள்ளவும், பிறருக்கு ஆசீர்வாதமாக அதை பயன்படுத்தவும் வாய்ப்பளித்தது (2 கொரி. 1:4). நமக்கு வரும் துன்பங்களையும், வேதனைகளையும் நாம் தடுத்துவிட முடியாது. ஆனால், துன்பத்தின் வழியே தேவனுடைய வல்லமையைப் பெற்று, அதனை நன்மையான பணிக்கு பயன்படுத்துவோமாக.
பொக்கிஷத்தைத் தேடிப்பார்த்தல்
புதையுண்ட பொக்கிஷம் - இது கேட்பதற்கு ஏதோ குழந்தைகளின் கதைப்புத்தகத்தில் வருவது போல தோன்றுகிறது. ஆனால், வினோத குணம் படைத்த, கோடீஸ்வரரான ஃபாரஸ்ட் ஃபென் இரண்டு மில்லியன் டாலர் மதிப்புடைய நகைகளும், தங்கமும் நிரம்பப்பெற்ற பெட்டகமொன்றை பாறைகள் நிறைந்த மலைப்பகுதியில் போட்டுவிட்டதாகக் கூறுகின்றார். அநேகர் அதனைத் தேடிச் சென்றனர். இந்த மறைந்த செல்வத்தைத் தேடிச் சென்ற நான்கு பேர் தங்கள் உயிரையும் இழந்தனர்.
நீதிமொழிகளை எழுதியவர் நம்மை நின்று சற்று யோசிக்குமாறு சொல்கின்றார். இத்தகையத் தேடலுக்கு உகந்ததுதானா இந்த பொக்கிஷம்? நீதிமொழிகள் 4ல் ஒரு தந்தை தன் மகனுக்கு, அவன் நன்றாய் வாழ்வதற்குத் தேவையானவற்றைக் குறித்து எழுதுகின்றார். எல்லாவற்றையும் காட்டிலும் ஞானமே தேடிக் கண்டடைய உகந்ததென குறிப்பிடுகின்றார் (வச. 7). ஞானத்தின் வழியில் ஒருவன் நடந்தால், அவன் நடைகளுக்கு இடுக்கண் வருவதில்லை, அவைகளில் ஓடினாலும் இடறமாட்டார்கள், அது அவன் தலைக்கு அலங்காரமான முடியைக் கொடுக்கும்
(வச. 8-12) என்கின்றார்.
பல நூறு ஆண்டுகளுக்குப் பின் இயேசுவின் சீடனான யாக்கோபு ஞானத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றார். 'பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும், சாந்தமும் இணக்கமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும் மாயமற்றதாயுமிருக்கிறது (யாக். 3:17). நாம் ஞானத்தைத் தேடும்போது எல்லா நன்மைகளும் நம் வாழ்வில் செழித்தோங்குமெனக் குறிப்பிடுகின்றார்.
ஞானத்தைத் தேடுவது என்பது எல்லா ஞானத்திலும், அறிவிற்கும் காரணரான தேவனைத் தேடுவதற்குச் சமம். இவ்வுலகில் புதைந்துள்ள அனைத்து பொக்கிஷங்களையும் விட பரத்திலிருந்து வருகின்ற ஞானமே விலையேறப் பெற்றது.
பிறரோடு ஒப்பிடாதே
'ஒரு நாள் நான் எல்லாவற்றையும் குறித்து முகநூலில் பதிவிடப் போகிறேன் - நல்லவைகளை மட்டுமல்ல!" என என்னுடைய சிநேகிதி ஸ்யூ தன்னுடைய கணவனோடு உணவுவேளையில் பேசிக்கொண்டிருக்கையில் தெரிவித்தாள். இதனைக் கேட்ட நான் சத்தமாக சிரித்ததோடு, சிந்திக்கவும் ஆரம்பித்தேன். சமூக ஊடகங்கள் நல்லவைதான். நாம் பலமைல்களுக்கப்பாலுள்ள நண்பர்களோடு பல ஆண்டுகள் கழித்து தொடர்பு கொள்ளவும், அவர்களுக்காக ஜெபிக்கவும் உதவுகின்றன. ஆனால், நாம் அவற்றை கவனத்தோடு பயன்படுத்தாவிடில், வாழ்வைப் பற்றிய ஒரு மாயையை உருவாக்கிவிடும். ஒருவர் தம் வாழ்விலுள்ள மிகச் சிறந்த காரியங்களையே முகநூலில் பதிப்பதால், இதனைக் காணும் நாம் அவர்கள் வாழ்வில் பிரச்சனைகளேயில்லை எனவும், நம்முடைய வாழ்வு மட்டும் எங்கோ தவறுதலாகப் போய்க்கொண்டிருக்கிறது எனவும் நினைக்கும்படிச் செய்கின்றது.
நம்முடைய வாழ்வைப் பிறருடைய வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்ப்பது மகிழ்ச்சியைக் குலைக்கும் ஒரு செயல். இயேசுவின் சீடர்களும் ஒருவரோடொருவர் ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்தபோது (லூக். 9:46;22:24), இயேசு உடனே அதனைத் தடுத்தார். இயேசு உயிர்த்தெழுந்த பின்னர் பேதுருவிடம், கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தின் பொருட்டு அவர் எவ்வளவாய் பாடுபட வேண்டுமென தெரிவித்தார். உடனே அவன் யோவான் பக்கமாய் திரும்பி, 'ஆண்டவரே, இவன் காரியம் என்ன?" என்று கேட்டான். அதற்கு இயேசு 'நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால் உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா" என்றார் (யோவா. 21:21-22).
தேவையற்ற ஒப்பிட்டுப் பார்த்தலை பேதுரு தவிர்க்கும்படி, இயேசு வழிகாட்டுகின்றார். நம்முடைய இருதயமும், தேவன் மீதும் அவர் நமக்குச் செய்துள்ளவற்றின் மீதும் மட்டும் திருப்பப்படுமாயின் தன்னலமான எண்ணங்கள் தானாக விலகிவிடும், நாம் இயேசுவைப் பின்பற்ற விரும்புவோம். போட்டிகளின் அழுத்தத்தாலும் பளுவினாலும் நாம் இழுக்கப்படுவதற்குப் பதிலாக, அவர் நமக்கு அவருடைய அன்பு பிரசன்னத்தையும் சமாதானத்தையும் தருவார். தேவன் தரும் சமாதானத்திற்கு ஒப்பானது எதுவுமில்லை.
பெரிய செய்தி!
எங்களுடைய உள்ளுர் செய்தித்தாளில் வந்த ஒரு செய்தி குறுகியதாயிருந்தாலும் இருதயத்திற்கு இதமாய் இருந்தது. விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டு, உறுதியான குடும்ப பிணைப்பை ஏற்படுத்தும்படி நடத்தப்பட்ட ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர், சிறைச்சாலையில் வாழும் ஒரு குழுவினருக்கு ஓர் அரிய வாய்ப்பளிக்கப்பட்டது. அவர்கள் தங்கள் குடும்பத்தினரை வெளிப்படையாகச் சந்திக்கலாம் என்பதே அந்த வாய்ப்பு. சிலர் தங்கள் குழந்தைகளை பல ஆண்டுகளாகப் பார்த்ததேயில்லை. ஒரு கண்ணாடித் தகட்டின் வழியே பேசிக்கொள்வதற்குப் பதிலாக அவர்கள் தாங்கள் நேசிக்கும் நபரைத் தொட்டு பிடித்துக் கொள்ளலாம். அந்த குடும்பங்கள் நெருக்கமாக வந்த போது, அவர்களின் கண்களில் கண்ணீர் வழிந்தது. அவர்களுடைய உள்காயங்கள் ஆற ஆரம்பித்தன.
அநேக வாசகர்களுக்கு இது வெறும் கதையாக இருந்திருக்கலாம். ஆனால், அந்த குடும்பங்களுக்கு, அது ஒரு வாழ்வை மாற்றும் நிகழ்வு. சிலருக்கு அது மன்னிப்பதற்கும் மனம் பொருந்தலுக்கும் ஆரம்பமாயிருந்தது.
தேவன் நம்முடைய பாவங்களை மன்னித்ததும், நம்மோடு ஒப்புரவை ஏற்படுத்திக் கொண்டதும் அவருடைய குமாரன் மூலமாகவே நடைபெற்றது. இது கிறிஸ்தவ நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட, மேம்பட்ட ஓர் உண்மை. அந்த செய்தித் தாளில் வெளியான மனம் பொருந்துதலின் செய்தி, இயேசுவின் தியாகத்தின் மூலம் இவ்வுலகிற்கு மட்டுமல்ல, உனக்கும் எனக்கும் கொடுத்துள்ள ஒப்புரவாகுதலின் மிகப் பெரிய செய்தியை நமக்கு நினைப்பூட்டுகின்றது.
நாம் நடப்பித்த ஏதோ ஒரு பாவச் செயலின் குற்ற உணர்வினால், நாம் மேற்கொள்ளப்பட்டவர்களாயிருக்கும் நேரத்தில் நாம் பற்றிக்கொள்ள வேண்டிய செய்தி அது தேவனுடைய அளவற்ற இரக்கம் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்ற உண்மையே அந்த செய்தி. நம்முடைய மீறுதல்களினிமித்தம் இயேசு மரித்தார். எனவே நாம் நம்முடைய பாவங்கள் கழுவப்பட்டவர்களாகத் தந்தையிடம் வருவோம். இயேசு நம்மை, 'உறைந்த மழையிலும் வெண்மையாய்" (சங். 51:7) நம்மைக் கழுவுகின்றார். நாம் தேவனுடைய இரக்கத்தைப் பெற தகுதியற்றவர்களென நினைக்கும் நேரங்களில் நாம் சார்ந்திருக்கக் கூடிய ஒரே காரியத்தை நாம் பற்றிக் கொள்வோம். அது தேவனுடைய கிருபையும், மாறாத மிகுந்த இரக்கமுமே (வச. 1).
பாலகர் வாயினால்
பத்து வயது நிரம்பிய வயோலா ஒரு மரக் கொப்பை மைக்ரோபோன் போல பாவித்து, ஒரு போதகரைப் போன்று பிரசங்கம் செய்து கொண்டிருந்ததை கவனித்த மிச்சேல், கிராம ஊழியத்தின் போது வயோலாவிற்கு பிரசங்கம் செய்ய ஒரு வாய்ப்பளிக்கத் தீர்மானித்தாள். வயோலாவும் அதற்குச் சம்மதித்தாள். மிச்சேல், தெற்கு சூடானில் ஊழியம் செய்யும் ஒரு மிஷனரி. 'அந்தக் கூட்டம் அதிக மகிழ்ச்சியினால் நிரப்பப்பட்டது... கைவிடப்பட்ட ஒரு சிறு பெண் அந்தக் கூட்டத்தினருக்கு முன்பாக ராஜாதி ராஜாவின் மகளாக அதிகாரத்தோடு நிற்கின்றாள். தேவனுடைய இராஜ்யத்தின் உண்மையை வல்லமையாக, அவர்களோடு பகிர்ந்து கொள்கின்றாள். பாதி கூட்டத்தினர் இயேசுவை தங்களுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ள முன் வந்தனர்" என்று மிச்சேல் தன்னுடைய 'அன்பிற்கு ஒரு முகமுண்டு" என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளாள். அந்தக் கூட்டத்தினர். அன்று ஒரு குழந்தையின் வாயினால் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படும் என எதிர்பார்க்கவில்லை. இந்த நிகழ்வு என்னுடைய மனதில் சங்கீதம் 8ல் காணப்படுகின்ற 'குழந்தைகள், பாலகர் வாயினால்" என்ற சொற்றொடரை நினைவிற்குக் கொண்டு வந்தது. தாவீது 'உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள், பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணினீர்" என எழுதுகின்றார் (8:2). இதனையே இயேசு மத்தேயு 21:16ல் குறிப்பிடுகின்றார். தேவாலயத்தில் ஆர்ப்பரிக்கின்ற பிள்ளைகளை பிரதான ஆசாரியரும், வேதபாரகரும் கண்டு கோபமடைந்தபோது இயேசு இந்த வசனத்தை அவர்களுக்குச் சுட்டிக் காட்டுகின்றார். அந்த தலைவர்களுக்கு குழந்தைகள் இடறுதலாகக் காணப்பட்டனர். ஆனால், இயேசு அவர்களுக்கு வேத வாக்கியத்தைச் சுட்டிக் காண்பித்து, தேவன் குழந்தைகளின் துதியைப் பெரிதாகக் கருதுவதாகக் கூறுகின்றார். அந்தத் தலைவர்கள் செய்வதற்கு மறுத்த ஒன்றை குழந்தைகள் நிறைவேற்றினர். தாங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த மேசியாவை குழந்தைகள் மகிமைப்படுத்தினர்.
வயோலாவும் தேவாலயத்தில் இருந்த குழந்தைகளும் காண்பித்தது போல, தேவன் ஒரு சிறு குழந்தையைக் கூட தனக்கு மகிமையுண்டாக பயன்படுத்த முடியும். குழந்தைகளின் உள்ளத்திலிருந்து மனமார்ந்த துதி வெள்ளம் போல வந்தது.
தவறான தகவல்களைச் செயல்படுத்தாதே
சமீபத்தில் நான் நியூயார்க் பட்டணத்திற்குச் சென்றிருந்தபோது, என் மனைவியும் நானும் ஒரு பனிபொழிவின் சாயங்காலத்தில், தைரியமாக அதனூடே செல்ல விரும்பினோம். எனவே நாங்கள் எங்கள் விடுதியிலிருந்து கியூபன் சிற்றுண்டியகம் வரையிலும் மூன்று மைல் பயணத்திற்கு ஒரு வாடகை கார் ஒன்றினை எடுத்தோம். வாடகைக் கார் சேவை பதிவில் விளக்கங்களைப் பார்த்த போது, நான் அதிர்ச்சியடைந்தேன். ஒரு சிறிய தொலைவு பயணத்திற்கு 1547.26 டாலர்கள் என குறிப்பிட்டிருந்தனர். அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு, மேலும் பார்த்த போது தான், நான் தவறுதலாக எங்கள் வீட்டிற்கு திரும்புவதற்கு எனப் பதித்திருந்ததைக் கவனித்தேன். அது பல நூறு மைல்களுக்கு அப்பாலுள்ள இடம்!
நீ தவறான செய்தியின் மீது செயல்பட்டுக் கொண்டிருந்தால் அதன் முடிவு எப்பொழுதும் அழிவுக்கு நேராகத்தானிருக்கும். எனவேதான் நீதிமொழிகள், 'உன் இருதயத்தை புத்திமதிக்கும், உன் செவிகளை அறிவின் வார்த்தைகளுக்கும் சாய்ப்பாயாக" என வலியுறுத்துகின்றது (நீதி. 23:12). அறிவிலிகளிடமும், தங்களுக்கு அதிகம் தெரியுமென நடிப்பவர்களிடமும், தேவனுக்கு தங்கள் முதுகைக் காட்டுபவர்களிடமும் ஆலோசனையைத் தேடுவாயானால், நிச்சயமாகப் பிரச்சனைகளையே சந்திக்க நேரிடும். 'மூடன்... உன் வார்த்தைகளின் ஞானத்தை அசட்டை பண்ணுவான்" (வச. 9) அவர்கள் நம்மை வழிவிலகிப்போகப் பண்ணுவார்கள், உதவமாட்டார்கள், தவறாக வழிகாட்டுவார்கள், இன்னும் அழிவுக்குள்ளாக்கும் ஆலோசனைகளையே தருவர்.
ஆனால், உன் செவியை 'அறிவின் வார்த்தைகளுக்குச் சாய்ப்பாயாக" (வச. 12) நம்முடைய இருதயத்தை தேவனுடைய விடுதலை தரும் ஆலோசனைகளுக்கும் தெளிந்த நம்பிக்கையின் வார்த்தைகளுக்கும் திறபப்பாயாக. தேவனுடைய ஆழமான வழியைக் கண்டுபிடித்தவர்களுக்கு செவி கொடுப்போமாகில் அவர்கள் நம்மை தேவ ஞானத்தைப் பெறவும், அதனைப் பின்பற்றவும் உதவுவர். தேவ ஞானம் ஒரு போதும் நம்மை பாதை தவற விடாது. ஆனால், அது நம்மை ஜீவனுக்கு நேராகச் செல்ல ஊக்கப்படுத்தி, முடிவுபரியந்தம் வழிநடத்தும்.