என்னுடைய நண்பனின் முகநூல் பதிவு, அவன் தன்னுடைய செயல் திட்டத்தை முடித்துவிட்டதைத் தெரிவித்தது. அநேகர் அவனுக்குப் பாராட்டுகள் தெரிவித்திருந்தனர். ஆனால், அவனுடைய இந்த பதிப்பு என் இருதயத்தை நெருடியது. அந்த செயல்திட்டம் என்னுடையது. ஏன் நான் அதனை நழுவவிட்டேனெனப் புரியவில்லை.

யோசேப்பின் நிலையும் இப்படித்தான் இருந்தது. தேவன் அவனை கவனிக்கத் தவறிவிட்டார். அது அவனுக்கு நன்றாகத் தெரியும். யூதாஸின் இடத்தைப் பிடிக்க ஓடிய இருவரில் ஒருவன் தான் யோசேப்பு. சீடர்கள் ஜெபித்தனர். “எல்லாருடைய இருதயங்களையும் அறிந்திருக்கிற கர்த்தாவே… இவ்விரண்டு பேரில் தேவரீர் தெரிந்து கொண்டவனை எங்களுக்குக் காண்பித்தருளும்” (அப். 1:24-25). ஆனால், தேவன் மற்றவனாகிய மத்தியாவைத் தெரிந்து கொண்டார். ‘சீட்டு மத்தியாவின் பேருக்கு விழுந்தது. தேவன் தமது சித்தத்தைக் கூட்டத்தினருக்கு அறிவித்தார் (வச. 26).

எல்லா சீடர்களும் மத்தியாவிற்குப் பாராட்டு தெரிவித்தனர். நான் யோசேப்பைக் குறித்து ஆச்சரியப்பட்டேன். அவர், தான் நிராகரிக்கப்பட்டதை எவ்வாறு ஏற்றுக்கொண்டார்? கைவிடப்பட்டதாக எண்ணி அவர் அதிர்ந்து போனாரா? சுய அனுதாபத்தால் துவண்டு போனாரா? சீடர்களை விட்டுத் தன்னைப் பிரித்துக் கொண்டாரா? அல்லது தேவன் மீதுள்ள விசுவாசத்தில் சோர்ந்துபோகாமல் மற்றவர்களோடு சேர்ந்து மகிழ்ச்சியோடு தேவ பணியில் ஆதரவாக இருந்தாரா?

இதில் எது சிறந்ததென எனக்குத் தெரியும். நானாக இருந்திருந்தால் இதில் எதைச் செய்திருப்பேனெனவும் எனக்குத் தெரியும். எத்தனை சங்கடமான சூழ்நிலை! உங்களுக்கு நான் தேவையில்லை. நல்லது நானில்லாமல் நீங்கள் எப்படிச் செய்கிறீர்களெனப் பார்ப்போம். இந்த முடிவு ஒரு வேளை நல்லதாகத் தோன்றலாம். ஆனால், அது தன்னலமான முடிவு.

இதற்குப் பின்னர் வேதாகமத்தில் யோசேப்பைக் குறித்து எங்குமே குறிப்பிடப்படவில்லை. அதனால், அவர் எவ்வாறு செயல்பட்டாரெனத் தெரியவில்லை. நாம் தேர்ந்தெடுக்கப்படாமாலிருக்கும் போதும் நாம் எவ்வாறு செயல்படுகிறோமென்பதே மிக முக்கியமானது. நமக்குக் கொடுக்கப்பட்ட பணியில் நாம் எவ்வாறு வெற்றிகரமாக செயல்படுகிறோமென்பதைவிட எவ்வாறு மகிழ்ச்சியொடு பணி செய்கிறோமென்பதையே இயேசுவின் இராஜ்ஜியம் எதிர்பார்க்கிறது என்பதை நினைவில் கொள்வோம்.