அவள் அந்த அலமாரியின் மேலடுக்கினையே நோக்கிக் கொண்டிருந்தாள். அங்குதான் கண்ணாடி ஜாடிகளில் பழக்கூழ் தயாரிப்புகள் வைக்கப்பட்டிருந்தன. நான் அவளருகில், அந்தப் பகுதியில் நின்று அலமாரியின் மேல் பகுதியைப் பார்த்தேன். எதை வாங்கலாமென யோசித்துக் கொண்டிருந்தேன். நான் நிற்பதை அவள் அறியாமல் தன் யோசனையிலேயே மூழ்கியிருந்தாள். எனக்கு மேலடுக்கிலிருந்து பொருட்களையெடுப்பதில் எந்த சிரமமும் இல்லை. ஏனெனில் நான் நல்ல உயரமான மனிதன். ஆனால், அவளோ மிகவும் குறைந்த உயரம். நான் அவளிடம் பேசி உதவ முன்வந்தேன். அதிர்ச்சியடைந்தவளாய், “நீங்கள் இங்கு நிற்பதை நான் கவனிக்கவில்லை. தயவுகூர்ந்து உதவுங்கள்” என்றாள்.

இயேசுவின் சீடரும் இத்தகைய ஒரு சூழலில் தான் இருந்தனர். பசியோடிருக்கும் ஒரு கூட்டத்தினர், தனிமையான இடம், நேரமும் கடந்து கொண்டிருந்தது. மிகவும் பிந்திய மாலைப்பொழுது, சீடர்கள் இயேசுவிடம், “ஜனங்கள் கிராமங்களுக்குப் போய்த் தங்களுக்கு போஜன பதார்த்தங்களைக் கொள்ளும்படி அவர்களை அனுப்பிவிட வேண்டும்” என்கின்றனர் (மத். 14:15). ஆனால், இயேசு அவர்களிடம், ‘நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள்” என்றார். அப்பொழுது அவர்கள், ‘இங்கே எங்களிடத்தில் ஐந்து அப்பமும், இரண்டு மீன்களுமேயல்லாமல் வேறொன்றும் இல்லை” என்றார்கள் (வச. 17). சீடர்கள் பார்த்ததெல்லாம் தங்களுடைய இயலாமையையே. ஆனால், அவர்களுக்கருகில் நிற்பவர் இயேசு. வெறுமனே அப்பங்களை பெருகச் செய்பவராக மட்டுமல்ல, அவரே நம் வாழ்வின் அப்பமாக நிற்கின்றார்.

நம்முடைய சவால்களை எப்படி சமாளிப்பது என்ற யோசனையில் மூழ்கி நம்முடைய குறுகிய கண்ணோட்டத்தோடு நாம் நம்மோடிருக்கின்ற உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை சார்ந்துகொள்ள நாம் தவறிவிடுகின்றோம். தனித்த மலைப் பிரதேசத்திலிருந்து மளிகைக் கடை வரை எந்த இடமாயினும் தேவன் நம்மோடிருக்கின்றார். தேவன் நம்முடைய தேவையின் போது அவ்விடத்திலிருக்கின்றார். நம் துன்பத்தின் மத்தியில் தவறாது வந்திருந்து உதவும் தேவனவர்.