‘ஒரு நாள் நான் எல்லாவற்றையும் குறித்து முகநூலில் பதிவிடப் போகிறேன் – நல்லவைகளை மட்டுமல்ல!” என என்னுடைய சிநேகிதி ஸ்யூ தன்னுடைய கணவனோடு உணவுவேளையில் பேசிக்கொண்டிருக்கையில் தெரிவித்தாள். இதனைக் கேட்ட நான் சத்தமாக சிரித்ததோடு, சிந்திக்கவும் ஆரம்பித்தேன். சமூக ஊடகங்கள் நல்லவைதான். நாம் பலமைல்களுக்கப்பாலுள்ள நண்பர்களோடு பல ஆண்டுகள் கழித்து தொடர்பு கொள்ளவும், அவர்களுக்காக ஜெபிக்கவும் உதவுகின்றன. ஆனால், நாம் அவற்றை கவனத்தோடு பயன்படுத்தாவிடில், வாழ்வைப் பற்றிய ஒரு மாயையை உருவாக்கிவிடும். ஒருவர் தம் வாழ்விலுள்ள மிகச் சிறந்த காரியங்களையே முகநூலில் பதிப்பதால், இதனைக் காணும் நாம் அவர்கள் வாழ்வில் பிரச்சனைகளேயில்லை எனவும், நம்முடைய வாழ்வு மட்டும் எங்கோ தவறுதலாகப் போய்க்கொண்டிருக்கிறது எனவும் நினைக்கும்படிச் செய்கின்றது.

நம்முடைய வாழ்வைப் பிறருடைய வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்ப்பது மகிழ்ச்சியைக் குலைக்கும் ஒரு செயல். இயேசுவின் சீடர்களும் ஒருவரோடொருவர் ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்தபோது (லூக். 9:46;22:24), இயேசு உடனே அதனைத் தடுத்தார். இயேசு உயிர்த்தெழுந்த பின்னர் பேதுருவிடம், கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தின் பொருட்டு அவர் எவ்வளவாய் பாடுபட வேண்டுமென தெரிவித்தார். உடனே அவன் யோவான் பக்கமாய் திரும்பி, ‘ஆண்டவரே, இவன் காரியம் என்ன?” என்று கேட்டான். அதற்கு இயேசு ‘நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால் உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா” என்றார் (யோவா. 21:21-22).

தேவையற்ற ஒப்பிட்டுப் பார்த்தலை பேதுரு தவிர்க்கும்படி, இயேசு வழிகாட்டுகின்றார். நம்முடைய இருதயமும், தேவன் மீதும் அவர் நமக்குச் செய்துள்ளவற்றின் மீதும் மட்டும் திருப்பப்படுமாயின் தன்னலமான எண்ணங்கள் தானாக விலகிவிடும், நாம் இயேசுவைப் பின்பற்ற விரும்புவோம். போட்டிகளின் அழுத்தத்தாலும் பளுவினாலும் நாம் இழுக்கப்படுவதற்குப் பதிலாக, அவர் நமக்கு அவருடைய அன்பு பிரசன்னத்தையும் சமாதானத்தையும் தருவார். தேவன் தரும் சமாதானத்திற்கு ஒப்பானது எதுவுமில்லை.