நான் உன்னோடு இருக்கிறேன்
ஒரு கிறிஸ்தவப் பத்திரிக்கைக்கு இளநிலை உதவியாளராக நான் பணியாற்றி வந்தபொழுது, கிறிஸ்தவனாக மாறின ஒருவரைப்பற்றிய கதையை அதில் எழுதினேன். ஆச்சரியப்படத்தக்க விதமாக, அவன் அவனது பழைய வாழ்க்கையை முற்றிலுமாக விட்டுவிட்டு, இயேசுவை அவனுடைய புதிய எஜமானாக ஏற்றுக்கொண்டான். அந்தப் பத்திரிக்கை வெளியான சில நாட்களில், “டார்மனி, ஜாக்கிரதையாக இருங்கள், நாங்கள் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம். இப்படிப்பட்ட கதைகளை நீங்கள் எழுதினால், இந்த ஊரில் உங்கள் உயிருக்கு ஆபத்துள்ளது,” என்று பெயர் அறிவிக்கப்படாத ஒருவர் என்னை தொலைபேசியில் கூப்பிட்டு பயமுறுத்தினார்.
மக்களுக்கு கிறிஸ்துவை அறிவித்ததினால் நான் பயமுறுத்தப்பட்டது, அது முதல் தடவை அல்ல. ஒருமுறை நான் கிறிஸ்துவைப் பற்றிய கைப்பிரதியை, ஒரு மனிதனிடம் கொடுத்தபொழுது உடனே என் கைப்பிரதிகளோடே ஓடிவிடாவிட்டால் விளைவுகள் வேறாக இருக்குமென்று அவன் பயமுறுத்தினான். அந்த இரு தடவைகளிலும் நான் பயத்தினால் பின் வாங்கினேன். ஆனால், இவை வார்த்தைகளினால் உண்டாக்கப்பட்ட பயமுறுத்தல்கள்தான். அநேக கிறிஸ்தவர்கள் இப்படிப்பட்ட பயமுறுத்தல்களை சந்தித்து வருகின்றனர். சில சமயங்களில் மிகச் சாதாரணமாக தெய்வ பக்தியுள்ள வாழ்க்கையை நடத்துவதுகூட மக்களிடம் எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியதுள்ளது.
“நான் உன்னை அனுப்புகிற எல்லாரிடத்திலும் நீ போய், நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளை யெல்லாம் நீ பேசுவாயாக” (எரே. 1:7) என்று கர்த்தர் எரேமியாவிடம் கூறினார். இயேசுவும் சீஷர்களிடம் “ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்” (மத். 10:16) என்று கூறினார். ஆம், நாம் பயமுறுத்தல்களையும், வாழ்க்கைப் பிரச்சனைகளையும், துன்புறுத்தல்களையும், வேதனைகளையும் கூட அனுபவிக்கலாம். ஆனால் “நான் உன்னுடனே இருக்கிறேன்”(எரேமியா 1:8) என்று தேவன் எரேமியாவிடம் உறுதிபடக் கூறுகிறார். அப்படியே இயேசுவும் “சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” (மத். 28:20) என்று அவரைப் பின்பற்றினவர்களிடம் உறுதியுடன் கூறினார்.
கர்த்தருக்காக வாழ நாம் முயற்சி எடுக்கும்பொழுது, எந்த விதமான கஷ்டங்களை சந்தித்தாலும் கர்த்தருடைய பிரசன்னம் எப்பொழுதும் நம்முடன் கூட இருக்கிறது என்பதை நாம் நம்பலாம்.
என்னுடைய சகோதர சகோதரிகள்
சில ஆண்டுகளுக்கு முன்பாக தெற்கு கலிபோர்னியாவில் பொருளாதார நிலை சரியத் தொடங்கிய பொழுது, போதகர் பாப் ஜான்சன், அந்தக்கால கட்டத்திலிருந்த நெருக்கடியான சூழ்நிலைகளை மட்டும் பார்க்காமல் அவற்றின் ஊடாக இருந்த நல்ல வாய்ப்புகளையும் கண்டார். ஆகவே, அவர் அந்த நகரத்தின் மாநகரத் தந்தையைச் (mayor) சந்தித்து, “எங்களுடைய திருச்சபை உங்களுக்கு எந்த விதங்களில் உதவிசெய்ய இயலும்?” என்று கேட்டார். மாநகரத்தந்தை மிகவும் ஆச்சரியப்பட்டார். ஏனெனில், பொதுவாக மக்கள் அவரிடம் உதவிகேட்டுத்தான் வருவார்கள். இப்பொழுது ஒரு போதகர் அவருடைய திருச்சபை மக்கள் அனைவரோடும் கூட உதவிசெய்ய முன்வந்துள்ளார். இது அவருக்கு ஆச்சரியத்தை அளித்தது.
மாநகரத்தந்தையும், போதகரும் இணைந்து அந்த நாட்களில் மிகவும் தேவையாக இருந்த காரியங்களை குறித்துப்பேசி அவற்றை எவ்வாறு சந்திக்கலாம் என்று திட்டமிட்டார்கள். அவர்களது ஊரில் மட்டும் 20,000 மூத்த குடிமக்களை அதற்க்கு முந்தின ஆண்டில் ஒரு பார்வையாளர்கூட சென்று பார்க்காத சூழ்நிலை இருந்தது. நூற்றுக்கணக்கான ஆதரவற்ற குழந்தைகளுக்கு, அவர்களை வளர்க்கத்தக்க குடும்பங்கள் தேவைப்பட்டன. மேலும் அநேக குழந்தைகள் படிப்பில் முன்னேற அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்க ஆட்கள் தேவைப்பட்டது.
இந்தத் தேவைகளில் சிலவற்றை அதிக பணம் செலவழிக்காமல் சந்திக்க இயலும். ஆனால் அவை அனைத்திலும் ஈடுபடும் மக்கள் ஆர்வமுடையவர்களாகவும், அவர்களது நேரத்தை செலவழிக்கக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். அதைத்தான் திருச்சபை மக்கள் செய்யவேண்டியதிருந்தது.
எதிர்காலத்தைப்பற்றி இயேசு அவருடைய சீஷர்களிடம் கூறினபொழுது, அவரை உண்மையாகப் பின்பற்றுகிறவர்களைப் பார்த்து, “வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே,… ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்” (மத். 25:34) என்று கூறுவேன் என்றார். அவர்களுக்கு அவர் அளிக்கும் மேற்கூறப்பட்ட வெகுமதிகளைக் குறித்து அவர்கள் ஆச்சரியப்படுவார்கள் என்று இயேசு கூறினார். அப்பொழுது அவர் “சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்” (மத். 25:40) என்று அவர்களிடம் கூறுவார்.
நாம் நமது நேரத்தை, அன்பை, தேவன் நமக்கு அருளியுள்ள பொருட்களை தாராளமாக கொடுக்கும்பொழுது, தேவனுடைய ராஜ்யத்தின் காரியங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
மாறாத அன்பு
சமீபகாலத்தில் நான் மேற்கொண்ட விமானப் பயணத்தில் விமானம் தரை இறங்குவது சற்று கடினமாக இருந்ததினால், விமானம் ஓடுதளத்தில் ஓடினபொழுது, விமானத்திற்குள்ளிருந்த நாங்கள் அங்கும் இங்குமாக அலைக்கப்பட்டோம். சில பயணிகள் மிகவும் பயத்துடன் இருந்தார்கள். ஆனால் எனக்குப்பின் அமர்ந்திருந்த சிறுமிகள் “ஆம், நாம் மறுபடியும் முன்புபோல வலது இடதுபுறமாக அசைவோம்” என்று மகிழ்ச்சியுடன் கூறினபொழுது அந்த பயம் நிறைந்த சூழ்நிலை மாறிவிட்டது.
பொதுவாக குழந்தைகள் வாழ்க்கையில் ஏற்படும் வழக்கத்திற்கு மாறான செயல்களை ஆச்சரியத்தால் விரிந்த கண்களுடனும், எளிய திறந்த மனதுடனும் ஏற்றுக்கொள்ளுகிறார்கள். “சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்” (மாற். 10:15) என்று இயேசு கூறினபொழுது, குழந்தைகளின் இத்தன்மையை மனதில் வைத்துதான் ஒருவேளை அவர் அப்படி கூறியிருக்கலாம்.
வாழ்க்கையில் சவால்களும், இருதயத்தை நொறுக்கக்கூடிய நிகழ்ச்சிகளும் ஏற்படலாம். “அழும் தீர்க்கதரிசி” என்று அழைக்கப்படும் எரேமியா இதைக்குறித்து, நாம் அறிந்ததை விட அதிகமாக அறிந்திருந்தான். ஆனால் எரேமியாவின் கஷ்டங்கள் மத்தியில் “அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரியதாயிருக்கிறது”(புலம். 3:22–23) என்ற ஓர் ஆச்சரியமான உண்மையை அவனிடம் கூறி தேவன் அவனை ஊக்குவித்தார்.
நம்முடைய வாழ்க்கையில், தேவனுடைய புதிய கிருபைகள் எந்த நேரத்திலும் அருளப்படலாம். அவருடைய கிருபை எப்பொழுதுமே உள்ளது. ஆனால், தேவன் ஒருவரால் மட்டுமே செய்யப்படக்கூடிய காரியங்களுக்காக, சிறுபிள்ளைத்தனமான எதிர்பார்ப்புடன், விழிப்புடன் காத்திருக்கும்பொழுது மட்டுமே அவரது கிருபைகளை நம்மால் பார்க்க இயலும். நமது உடனடியான சூழ்நிலைகளை வைத்து தேவனுடைய நன்மைத் தன்மையை விளக்க இயலாது என்றும், வாழ்க்கையின் மிகக்கடினமான பகுதிகளை விட அவருடைய உண்மை பெரிதென்றும் எரேமியா அறிந்திருந்தான். இன்று, தேவனுடைய புதிய கிருபைகளைத் தேடி கண்டுபிடியுங்கள்.
உங்களது பயணம்
1960ம் ஆண்டுகள் பொதுவாக ஒழுக்கநெறிகளை எதிர்க்கும் மனப்பான்மை உடைய காலமாக இருந்தது. நான் அந்தக்காலத்தில் வளர்ந்து வந்தபடியால், நானும் மதசம்பந்தமான காரியங்களை புறக்கணித்தேன். என் வாழ்நாள் முழுவதும் ஆலயத்திற்கு சென்று வந்திருக்கிறேன். ஆனால், நான் 20 வயது கடந்த காலகட்டத்தில், ஒரு பயங்கரமான விபத்தை சந்தித்த பின்புதான் விசுவாசத்திற்குள் வந்தேன். அப்பொழுதிலிருந்து எனது நடுத்தர வயதினை, மனிதராகிய நம்மிடம், இயேசு காண்பித்த அன்பினைப்பற்றி பிறருக்கு அறிவித்து வருவதில் செலவிட்டு வந்தேன். அது ஒரு பயணமாக இருந்து வருகிறது.
குறைபாடுகள் நிறைந்த இவ்வுலகில் வாழும் வாழ்க்கையை “பயணம்” என்ற சொல் குறிக்கிறது. பயணம் செய்யும்பொழுது வழியில், நாம், மலைகள், பள்ளத்தாக்குகள், ஆறுகள், சமவெளிகள், போக்குவரத்து நிறைந்த நெடுஞ்சாலைகள், ஆள் அரவமற்ற அமைதியான சாலைகள் - உயர்வுகள், தாழ்வுகள், மகிழ்ச்சிகள், துக்கங்கள், போராட்டங்கள், இழப்புகள், நொறுங்கின இருதயம், தனிமை ஆகியவைகளை சந்திக்கின்றோம். நமக்கு முன்னால் உள்ள பாதையை நம்மால் பார்க்க இயலாது. நாம் விரும்புகிறபடி அப்பாதை அமையாவிட்டாலும் அது இருக்கிறவண்ணமாகவே அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் ஒருபொழுதும் இப்பயணத்தை தனிமையாக சந்திப்பது இல்லை. தேவனுடைய பிரசன்னம் நம்மோடு கூட எப்பொழுதும் இருப்பதை வேதாகமம் நமக்கு நினைப்பூட்டுகிறது. தேவன் இல்லாத இடமே கிடையாது (சங். 139:7-12). அவர் நம்மை விட்டு விலகுவதுமில்லை, கைவிடுவதுமில்லை (உபா. 31:6; எபி. 13:5). அவர் போனபின்பு பரிசுத்தாவியை அனுப்புவேன் என்று இயேசு அவருடைய சீஷர்களுக்கு வாக்களித்து, “நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன்” (யோவா. 14:18) என்று கூறினார்.
நாம் நமது பயணத்தில் சந்திக்கும் சவால்களையும், வாய்ப்புகளையும் மன உறுதியோடு சந்திக்கலாம். ஏனெனில், நம்மை ஒருபொழுதும் கைவிடாமல், நம்மோடுகூட எப்பொழுதும் இருப்பேன் என்று தேவன் வாக்களித்துள்ளார்.
பாலைவனத் தனிமை
உட்டாவில் ஆர்ச்சஸ் தேசிய பூங்கா என்று அழைக்கப்படுகிற பகுதியில் கண்காணிப்பாளராக இருந்த எட்வர்ட் ஆபி என்பவர் கோடைக் காலத்தில் அப்பகுதியில் அவர் அனுபவித்த அனுபவங்களை பாலைவனத் தனிமை என்ற புத்தகமாக எழுதியுள்ளார். ஆபியின் உயர்ந்த எழுத்து நடைக்காகவும், அமெரிக்க ஐக்கிய நாட்டின் தென்மேற்கு பகுதியைப்பற்றி அவர் தெளிவாக எழுதியுள்ள விவரங்களுக்காகவும் அந்தப் புத்தகம் வாசிப்பதற்கு தகுதியானது.
ஆனால், அனைத்து திறமைகள் அவரிடம் இருந்தாலும் ஆபி ஒரு நாஸ்திகன். அதனால் அவர் அப்பகுதியில் வெளிப்படையாகக் காணப்பட்ட அழகை மட்டும்தான் அவரால் காணமுடிந்தது. எவ்வளவு வருத்தமான காரியம்! அவர் கண்ட வெளிப்படையான அழகை மட்டும் வாழ்நாள் முழுவதும் புகழ்ந்து விட்டு அவை எல்லாவற்றிற்கும் மேலான காரியத்தை தவற விட்டுவிட்டான்.
பொதுவாக ஆதிகால மனிதர்களின் சிருஷ்டிப்பைப்பற்றிய கோட்பாடுகள், புராணக்கதைகள், கற்பனைக்கதைகள், பாடல் இவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கும். ஆனால் சிருஷ்டிப்பைப் பற்றிய இஸ்ரவேல் மக்களின் கதை தனிச்சிறப்பு வாய்ந்தது. நாம் சிறு குழந்தைகளைப்போல மகிழ்ச்சியடையவும், சந்தோஷப்படவும், அழகான சிருஷ்டிப்பை சிருஷ்டித்த தேவனைப்பற்றி அது கூறுகிறது. தேவன், இப்பிரபஞ்சத்தை சிருஷ்டிக்க எண்ணினார். வார்த்தையினால் அதை சிருஷ்டித்தார். பின்பு அது “அழகாக” இருக்கிறதென்று அவர் கூறினார். (எபிரேய மொழியில் நல்லது என்ற சொல் அழகு என்பதையும் குறிக்கிறது). பின்பு தேவன் பரதீஸை சிருஷ்டித்து, மனிதராகிய நம்மையும் உருவாக்கி, ஏதேன் தோட்டத்தில் வைத்து மகிழ்ச்சியுடன் “அனுபவியுங்கள்” என்று கூறினார்!
சிலர், அவர்களைச் சுற்றியுள்ள சிருஷ்டிகர் சிருஷ்டித்த சிருஷ்டிகளின் அழகை ரசித்து மகிழ்கிறார்கள். ஆனால், “அவரை தேவன் என்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்தரியாமலும் இருந்து தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்கள் இருதயம் இருளடைந்தது” (ரோம. 1:21).
உள்ளான இருதயத்திலிருந்து
இழப்பிற்காகவோ, சத்தமிட்டு அழவும், கதறவும், உடுத்தியிருக்கும் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, துக்கத்தை வெளிப்படுத்தவும், சில கலாச்சாரங்களில் ஏற்றுக்கொள்ளப்படும் செயல்களாக உள்ளன. பழைய ஏற்பாட்டுக் காலத்தில் வாழ்ந்த இஸ்ரவேல் மக்கள் கர்த்தரிடமிருந்து வழிவிலகிப்போனதற்காக, மனம் வருந்தி துக்கப்படும்பொழுது, மேலே கூறப்பட்ட முறைகளில் துக்கத்தை வெளிப்படையாக வெளிப்படுத்தி வந்தார்கள்.
மனந்திரும்புதலை அப்படிப்பட்ட முறைகளில் வெளிப்படுத்துவது, உள்ளான உள்ளத்திலிருந்து வருவதாக இருந்தால், அது உண்மையிலேயே நல்ல விளைவுகளை ஏற்படுத்துகிற வழிமுறைகளாக இருக்கும். விசுவாசிகள் என்று அழைக்கப்படும் கிறிஸ்தவர்கள் மத்தியில் கூட, எந்தவித உள்ளான மனமாற்றம் இல்லாமல் வெறுமையாக சரீர அசைவுகள் மட்டும் காணப்படலாம்.
யூதா தேசத்தை வெட்டுக்கிளிகள் அழித்து நாசம் பண்ணினபின்பு, மேலும் அதிகமாக அவர்கள் தேவனால் தண்டிக்கப்படாமல் இருக்க அவர்கள் உண்மையாக மனந்திரும்ப வேண்டுமென்று தேவன், யோவேல் தீர்க்கதரிசியின் மூலமாக யூதா மக்களிடம் கூறினார். “நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும் அழுகையோடும் புலம்பலோடும் உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (யோவேல் 2:12).
உள்ளான உள்ளத்திலிருந்து செயல்படுமாறு யோவேல் யூதா மக்களிடம் கூறினார். “நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக்கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர்கள் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார்” (யோவேல் 2:13). உண்மையான மனமாற்றம் உள்ளத்தின் ஆழத்திலிருந்து வருகிறது.
நாம் நமது பாவங்களை தேவனிடம் அறிக்கையிட்டு, அவரது மன்னிப்பை ஏற்றுக்கொண்டு அவரை நாம் நமது முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும், முழு பலத்தோடும் அவரை நேசித்து, அவருக்கு ஊழியம் செய்ய வேண்டுமென்று தேவன் மிகவும் ஆவலாக இருக்கிறார்.
நாம் செய்யத்தான் வேண்டுமா?
ஜோய், சிறுவர்களுக்கான நிகழ்ச்சியை ஜெபத்துடன் ஆரம்பித்தாள். சிறு பிள்ளைகளுடன் சேர்ந்து பாட்டுக்களைப் பாடினாள். ஆரோன் என்பவரை அச்சிறுவர்களுக்கான ஆசிரியர் என்று ஜோய் அறிமுகப்படுத்திவிட்டு மறுபடியும் ஜெபித்தபொழுது, 6 வயது இம்மானுவேல் அவனது இருக்கையில் நெளிந்து கொண்டிருந்தான். பின்பு ஆரோன் பேசத்துவங்கி, பேச்சை ஜெபத்தோடு ஆரம்பித்து ஜெபத்தோடு முடித்தான். உடனே இம்மானுவேல், “இத்துடன் இது நாலாவது ஜெபம். அவ்வளவு நேரம் என்னால் இருக்கையில் அமர்ந்திருக்க இயலாது” என்று புகார் செய்தான்.
இம்மானுவேலுக்கு இருந்த நிலை கடினமானதுதான் என்று நீங்கள் எண்ணினால், “இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்,” என்று 1 தெசலோனிக்கேயர் 5:17ல் கூறப்பட்டதைக் கவனியுங்கள். அல்லது எப்பொழுதும் ஜெப ஆவியுடன் இருங்கள் என்பதையும் கவனியுங்கள். பெரியவர்களாகிய நம்மில் சிலருக்குக் கூட ஜெபம் சலிப்புண்டாக்கும் செயலாக இருக்கலாம். ஏனென்றால் நாம் ஜெபத்தில் கூறவேண்டிய காரியங்களை அறியாமல் இருக்கலாம். அல்லது ஜெபம் என்பது நாம் நம்முடைய பரலோகப் பிதாவுடன் உரையாடும் நிகழ்ச்சி என்று அறியாமல் கூட இருக்கலாம்.
17ம் நூற்றாண்டில், ஃபிராங்காயிஸ் ஃபெனிலோன் ஜெபத்தைப்பற்றி எழுதிய சில வார்த்தைகள் எனக்கு மிகவும் உதவியாக இருந்தன. “ஒரு சிநேகிதனிடம் உங்களது இருதயத்திலுள்ள பாரங்களை அதாவது, உங்கள் உள்ளத்திலுள்ள சந்தோஷமான, வேதனையான காரியங்கள் அனைத்தையும் கூறுவதுபோல தேவனிடம் கூறுங்கள். உங்களைச் சோதிக்கும் சோதனைகளை அவரிடம் கூறுங்கள். அவர் அவைகளிலிருந்து உங்களை மறைத்துப் பாதுகாப்பார். உங்களது இருதயத்திலுள்ள காயங்களை அவரிடத்தில் காண்பியுங்கள். அவர் உங்களது காயங்களைக் குணப்படுத்துவார். இப்படியாக உங்கள் பலவீனங்கள், தேவைகள், கஷ்டங்கள் அனைத்தையும் அவரிடம் ஊற்றும்போது, ஜெபத்தில் என்ன கூறவேண்டும் என்பதற்கு குறைவே இருக்காது.”
நற்கிரியைகளைத் தொடருங்கள்
எனது மகனுக்கு புத்தகம் வாசித்தல் மிகவும் விருப்பமான செயலாகும். பள்ளிக்கூடத்தில் கட்டாயமாக வாசிக்க வேண்டும் என்று கூறப்பட்ட புத்தகங்களுக்கு மேலாக, அவன் அதிகமான புத்தகங்களை வாசித்தால், அவனுக்கு ஒரு பரிசுச் சான்றிதழ் அளிக்கப்படும். அந்த சிறிய அளவிலான ஊக்கப்படுத்துதல், அந்த நல்ல செயலை தொடர்ந்து செய்ய அவனைத் தூண்டியது.
பவுல் தெசலோனிக்கியாவிலுள்ளவர்களுக்கு எழுதினபொழுது, பரிசுகள் அளிப்பது மூலம் அவர்களைத் தூண்டாமல், ஊக்கமளிக்கும் வார்த்தைகளால் அவர்களைத் தூண்டினார். “அன்றியும், சகோதரரே, நீங்கள் இன்னின்ன பிரகாரமாய் நடக்கவும், தேவனுக்குப் பிரியமாயிருக்கவும் வேண்டுமென்று, நீங்கள் எங்களால் கேட்டு ஏற்றுக்கொண்டபடியே, அதிகமதிகமாய்த் தேறும்படிக்கு, கர்த்தராகிய இயேசுவுக்குள் உங்களை வேண்டிக்கொண்டு புத்திசொல்லுகிறோம்”
(1 தெச. 4:1) என்று கூறினார். தெசலோனிக்கேயாவிலுள்ள கிறிஸ்தவர்கள் அவர்களது வாழ்க்கையின் மூலம் தேவனைப் பிரியப்படுத்தினார்கள். தேவனுக்காக, இன்னமும் அதிகமான ஈடுபாட்டுடன் தொடர்ந்து வாழ பவுல் அவர்களை உற்சாகப்படுத்தினார்.
ஒருவேளை இன்று நீங்களும், நானும் நமது பரமபிதாவை அறிந்து, நேசித்து அவருக்குப் பிரியமாக வாழ நம்மால் முடிந்த அளவு சிறப்பாக செயல்படலாம். நமது விசுவாசத்தில் தொடர்ந்து வாழ பவுலுடைய வார்த்தைகளை நாமும் ஏற்றுக்கொள்வோம்.
ஆனால் அதற்கும் மேலாக சிறப்பாக செயல்படுவோம். இன்று பவுலுடைய வார்த்தைகளைக் கூறி யாரை ஊக்கப்படுத்தப் போகிறோம்? உண்மையாகவே ஊக்கத்துடன் தேவனைப் பின்பற்றி அவரைப் பிரியப்படுத்த வேண்டும் என்று எண்ணுபவர்கள், யாராவது உங்கள் மனதில் தோன்றுகிறார்களா? உடனே அந்த நபருக்கு ஒரு குறிப்பை அனுப்பியோ அல்லது தொலைபேசியின் மூலம் அழைத்தோ தேவனோடு கூட இணைந்த அவரது விசுவாசப் பயணத்தைத் தொடர அவரை ஊக்கப்படுத்துங்கள். நீங்கள் கூறும் அந்த ஆலோசனை, அவர்கள் இயேசுவைப் பின்பற்றி அவருக்கு ஊழியம் செய்வதற்கு தேவையான வார்த்தைகளாக இருக்கலாம்.
வாழ்நாள் முழுவதும் ரசிகர்
ஓக்லஹாமாவில் வாழ்ந்துவந்த கேட் போப் என்ற 12 வயது சிறுவன், அமெரிக்க ஐக்கிய நாட்டின் தேசிய கால்பந்தாட்டக் குழுவில் பொறுப்பாளர்களாயிருந்த 32 அதிகாரிகளுக்கு, அவன் கைப்பட கடிதங்கள் எழுதி அனுப்பினான். அதில் “நானும் என் குடும்பத்தாரும் கால்பந்து விளையாட்டை அதிகமாக ரசிப்பவர்கள். எங்களுக்குள்ளாக நாங்கள் கற்பனையில் கால்பந்து விளையாடுவோம். ஒவ்வொரு வார இறுதியிலும் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளை விரும்பிப் பார்ப்போம். தேசிய கால்பந்தாட்ட குழுவிலுள்ள ஏதாவது ஓர் அணிக்கு என் வாழ்நாள் முழுவதும் உற்சாகப்படுத்துபவனாக இருக்க நான் ஆயத்தமாக உள்ளேன்” என்று கேட் எழுதினான்.
கரோலினா பான்தர்ஸ் (Carolina Panthers) கால்பந்து விளையாட்டு அணிக்கு உரிமையாளரான ஜெரி ரிச்சட்சன் அவரது கைப்பட கேட்டுக்கு பதில் கடிதம் எழுதி அனுப்பினார். அக்கடிதத்தின் முதல் வரி “எங்களுடைய அணி உங்களது அணியோடு சேர்வதில் பெருமிதம் அடைகிறோம். உன்னை பெருமைப்படுத்த விரும்புகிறோம்” என்று இருந்தது. மேலும் ரிச்சட்சன் அவரது அணியிலுள்ள சில விளையாட்டு வீரர்களை புகழ்ந்து எழுதியுள்ளார். அவரது கடிதம் தனிப்பட்ட முறையிலும் அன்போடும் கூட கேட்டுக்கு எழுதப்பட்டிருந்தது. அவன் எழுதின 32 கடிதங்களுக்கு இவரிடமிருந்து மட்டும்தான் பதில் கடிதம் கிடைக்கப்பெற்றான். ஆகவே கேட், கரோலினா பான்தர்ஸ் அணியின் விசுவாசமுள்ள ரசிகனாக மாறிவிட்டதில் எந்தவித ஆச்சரியமுமில்லை.
சங்கீதம் 86ல் தாவீது உண்மையான மெய்தேவன் மேல் அவனுக்குள்ள விசுவாசத்தைப் பற்றிக் கூறியுள்ளான். “நான் துயரப்படுகிற நாளில் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; நீர் என்னைக் கேட்டருளுவீர். ஆண்டவரே, தேவர்களுக்குள்ளே உமக்கு நிகருமில்லை” (சங். 86:7, 8) என்று கூறியுள்ளான். தேவனைக் குறித்த நமது பக்தி அவரது சிறந்த குணாதிசயங்களாலும், நம்மீது அவருக்குள்ள கரிசனையினாலும் உருவாகிறது. அவர் நமது ஜெபங்களுக்கு பதில் அளிப்பதாலும், அவருடைய ஆவியினாலும், அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மரணம், உயிர்த்தெழுதல் மூலமாகவும் நம்மை வழிநடத்துகிறார். நமது வாழ்நாள் முழுவதும் நமது விசுவாசத்திற்கு அவர் உரியவராக இருக்கிறார்.