வகை  |  odb

அழகான ஒற்றுமை

மூன்று பெரிய மாமிசம் உண்ணும் கொடிய விலங்குகள் ஒன்றையொன்று கட்டித் தழுவி விளையாடுவதைக் காண்பது அரிதான ஒன்று. ஆனால் சரியாகச் சொல்ல வேண்டுமானால், ஜார்ஜியாவில் (Georgia) உள்ள ஒரு விலங்குகள் சரணாலயத்தில் இது தான் தினமும் நடக்கிறது. கொடுமைப்படுத்தப்பட்டு சரியான கவனிப்பின்றி இருந்த ஒரு சிங்கம், ஒரு வங்காள புலி (Bengal Tiger) மற்றும் கருங்கரடி ஆகியவை நோவாவின் பேழை விலங்குகள் சரணாலயத்தால் 2001ஆம் ஆண்டு மீட்கப்பட்டது. “நாங்கள் அவைகளை பிரித்திருக்கலாம், ஆனால் அவை ஒரு குடும்பம் போல காணப்பட்டதால் அவைகளை பிரிக்காமல் ஒன்றாக வைத்திருக்க முடிவு செய்தோம்” என்று அச்சரணாலயத்தின் துணை இயக்குனர் கூறினார். தாங்கள் கொடுமை படுத்தபட்ட நாட்களில் அம்மூன்று விலங்குகளும் ஒருவரில் ஒருவர் ஆறுதலடைந்ததால், அவர்களுக்குள்ள வேறுபாடுகளைக் கடந்து, அவை சமாதானத்தோடு ஒற்றுமையாக வாழ்கின்றன.

ஒற்றுமை என்பது அழகான ஒன்று. ஆனால் ஏபேசு பட்டணத்து விசுவாசிகளுக்கு எழுதிய கடிதத்தில் பவுல் குறிப்பிட்டுள்ள ஒற்றுமை விசேஷமானது. கிறிஸ்துவினுடைய சரீரத்தின் அவையவங்களாக அழைக்கப்பட்ட அழைப்பிற்கேற்ப வாழும் படியாக எபேசு விசுவாசிகளை அவர் உற்சாகப்படுத்துகிறார் (எபே. 4:4-5). மனத்தாழ்மை, சாந்தம் மற்றும் பொறுமையிலே அவர்கள் வளரும் பொழுது, பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினாலே அவர்கள் ஒற்றுமையாய் வாழ்வார்கள். இந்த சுபாவங்கள், நம் அனைவருக்கும் பொதுவான இயேசு கிறிஸ்துவின் “அன்பினால் ஒருவரை ஒருவர் தாங்கி” வாழ வழி செய்கிறது. வேறுபாடுகள் இருப்பினும், நம்முடைய இரட்சகரின் மரணத்தின் மூலம் நாம் தேவனோடு ஒப்புரவாக்கப்பட்டு, நம் வாழ்வில் நிறைவேறிக் கொண்டிருக்கும் கிரியைகள் மூலம் ஒருவரோடு ஒருவர் ஒப்புரவாக்கப்பட்டு தேவனின் குடும்பத்தில் அவையவங்களாக இணைக்கப்பட்டிருக்கிறோம்.

நிலையான தயவு

நான் சிறுபிள்ளையாக இருந்தபொழுது, எல். ஃபிரான்க் பாம் (L. Frank Baum) அவர்களுடைய ஓஸ் தேசம் (Land of Oz) புத்தகங்களின் தீவிர வாசகனாக இருந்தேன். சமீபத்தில், அசல் வரைபடங்கள் அடங்கிய ‘ஓஸ் தேசத்தில் ரின்கிடின்க்’ (Rinkitink in Oz) என்னும் புத்தகத்தை படிக்கநேர்ந்தது. அதில் உண்மைமிக்க கட்டுக்கடங்காத நல்ல இருதயமுள்ளவரான ரின்கிட்டின்க் (Rinkitink) ராஜாவின் கோமாளித்தனமான சேட்டைகளை வாசித்து சிரித்தேன். “அவன் இளகிய மனமும், தயவும் நிறைந்தவன். ஞானமாய் இருப்பதைக் காட்டிலும் இது சிறந்தது,” என அவனைக் குறித்து இளவரசன் இன்கா (Prince Inga) விவரிக்கிறார்.

எவ்வளவு எளிமையும், விவேகமுள்ள கூற்று இது! ஆயினும், நமக்கு பிரியமானவரின் இருதயத்தை ஒரு கடினவார்த்தையினால் காயப்படுத்தாதவன் யார்? அப்படிசெய்யும் பொழுது, சமாதானத்தைக் கலைத்துப் போடுவது மட்டுமின்றி, நாம் நேசிப்பவர்களுக்கு நாம் செய்த நன்மைகளை கடினவார்த்தைகளினால் நாமே ரத்துசெய்துவிடுகிறோம். 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹான்னா மோர் (Hannah More) என்னும் ஆங்கில எழுத்தாளர், “ஒரு சிறிய அன்பற்ற தன்மை பெரிய குற்றமாகும்,” என கூறியுள்ளார்.

நற்செய்தி என்னவெனில், யார் வேண்டுமானாலும் இரக்கமுள்ளவனாகலாம். ஒரு எழுச்சியூட்டும் பிரசங்கத்தை பிரசங்கிக்க அல்லது கடினமான கேள்விகளுக்கு பதில் கூற அல்லது பெரும் கூட்டத்திற்கு சுவிசேஷம் கூற திராணியில்லாமல் போகலாம். ஆனால், நாம் இரக்கமுள்ளவர்களாய் இருக்கமுடியும். அது எப்படி? ஜெபத்தின் மூலம். நம் இருதயங்களை இளகச்செய்யும் ஒரே வழி அதுவே. “கர்த்தாவே, என் வாய்க்குக் காவல் வையும்; என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும்” (சங். 141:3-4) என்று ஜெபிப்பதே.

அன்பு தணிந்துபோன இவ்வுலகில் தேவனுடைய இருதயத்திலிருந்து பொங்கும் இரக்கத்தைக் கொண்டுதான் பிறருடைய காயங்களை குணமாக்கி உதவமுடியும்.

கிறிஸ்துமஸ் விளக்குகள்

சிங்கப்பூரின் சுற்றுலா பகுதியாகக் கருதப்படும் ஆர்சர்ட் ரோட் (ORCHARD ROAD) ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி பல வாரங்கள் வண்ணமயமான மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அதிசய உலகமாக மாறிவிடும். இந்த ஒளி அலங்காரமெல்லாம் வியாபாரத்திற்கு பெயர் போன அம்மாதத்தில், ஜனங்களைக் கவர்ந்து, அங்குள்ள கடைகளில் அவர்கள் பணத்தை செலவழிக்க வைப்பதற்கே அலங்கரிக்கப்பட்டுள்ளது. மக்கள் இந்த கேளிக்கைகளைக் கண்டுகளித்து, பாடற்குழுவினர் பாடும் கிறிஸ்துமஸ் பாடல்களைக் கேட்டு மகிழ்ந்து, நடிகர்களின் நடிப்பை கண்டுகளித்து மகிழ அங்கு வருவார்கள்.

முதலாம் கிறிஸ்துமஸ் ஒளி அலங்காரம், மின்சார கம்பிகளால் அல்லது மின்னும் பொருட்கள் அல்லது நியான் (Neon) விளக்குகளால் உண்டாகவில்லை. மாறாக “கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது” (லூக். 2:9). எந்த சுற்றுலா பயணியும் இதைக் காணவில்லை, சாதாரண மந்தை மேய்ப்பவர்களே இக்காட்சியைக் கண்டனர். அதுமட்டுமன்றி அதைத் தொடர்ந்து, பரலோக தூதர் சேனை பாடிய “உன்னததத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும்,” என்கிற பாடலையும் கேட்டு மகிழ்ந்தனர் (வச. 14).

பின்பு அத்தேவ தூதர்கள் கூறியது உண்மைதானா என்று உறுதி செய்து கொள்ள அம்மேய்ப்பர்கள் பெத்லேகம் சென்றார்கள் (வச. 15). அவை அனைத்தும் உண்மை என்று அறிந்து கொண்டபொழுது, அவர்கள் கேட்டதையும், கண்டதையும் குறித்துப் பிறருக்குச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. “கண்டு, அந்தப் பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம்பண்ணினார்கள்” (வச. 17).

நம்மில் அநேகர் இந்த கிறிஸ்துமஸ் கதையை அநேகந்தரம் கேட்டதுண்டு. இந்த கிறிஸ்துமஸ் நன்நாளிலே, “உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்” (யோவான் 8:12) என்கிற கிறிஸ்து ஏற்கனவே வந்துவிட்டார் என்கிற நற்செய்தியை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாலாமே.

ஏழாம் கல்லறையில் உள்ள பொக்கிஷம்

1932ஆம் ஆண்டு ஆக்ஸகாவில் (Oaxaca) உள்ள மான்டே ஆல்பன் (Monte Alban) என்னும் இடத்திலுள்ள ஏழாம் கல்லறையை மெக்ஸிகன் நாட்டு தொல்பொருள் ஆய்வாளர் அல்போன்சோ காசோ (Alfonso Caso) கண்டு பிடித்தார். “மான்டே ஆல்பனின் பொக்கிஷம்” என்று அவர் பெயர் சூட்டிய நூற்றுக்கும் அதிகமான ஸ்பானிய காலத்திற்கும் முந்தைய ஆபரணங்கள் உட்பட நானூறுக்கும் அதிகமான தொல்பொருள்களை கண்டுபிடித்தார். இது மெக்ஸிகன் நாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியின் மகத்தான கண்டு பிடிப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மிக சுத்தமான பச்சை மாணிக்க கல்லினால் செய்யப்பட்ட குவளையை கையில் பிடித்துக் கொண்டிருந்த பொழுது, காசோவிற்கு எவ்வளவு உற்சாகமாக இருந்திருக்கும் என்பதை நாம் கற்பனை தான் செய்து பார்க்க முடியும்.

தங்கத்தையும், படிகக்கல்லையும் காட்டிலும் மிகவும் விலையேறப்பெற்ற பொக்கிஷத்தைக் குறித்து சங்கீதக்காரன் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே எழுதியுள்ளான். “மிகுந்த கொள்ளையுடைமையைக் கண்டுபிடிக்கிறவன் மகிழுகிறது போல, நான் உமது வார்த்தையின் பேரில் மகிழுகிறேன்” (சங். 119:162) என்று கூறியுள்ளான். தேவனுடைய கட்டளைகளும், வாக்குத்தத்தங்களும் எவ்வளவு விலையேறப்பெற்றவை என்பதை அவன் அறிந்திருந்த படியினால், ஒரு மாவீரனின் வெற்றிக்கரங்களில் வந்து சேரும் மகத்தான பொக்கிஷத்தோடு அதை ஒப்பிட்டு கூறுகிறான்.

ஏழாம் கல்லறையில் தான் கண்டுபிடித்த பொக்கிஷங்களுக்காக இன்றும் நாம் காசோவை நினைவுகூருகிறோம். ஆக்ஸகாவிலுள்ள அருங்காட்சியத்திற்கு சென்றால், அவற்றை கண்டுகளிக்கலாம். ஆனால், சங்கீதக்காரனின் பொக்கிஷமோ நமது விரல் நுனிகளில் உள்ளது. தினந்தோறும் வேதத்திலிருந்து வாக்குத்தத்தங்கள் என்னும் வைரங்களையும், நம்பிக்கை என்னும் மாணிக்கக் கற்களையும், ஞானம் என்னும் மரகதக் கற்களையும், நாம் கண்டடையதக்க மிக பெரிய பொக்கிஷம், இவ்வேதத்தின் ஆசிரியராகிய இயேசுவே.

நம்மை வளப்படுத்தக்கூடிய மிகப்பெரிய பொக்கிஷம் இதுவே, என்கிற நம்பிக்கையுடன் நாம் கருத்தாய் தேடக்கடவோம். ஏனெனில், சங்கீதக்காரன் சொன்னது போல, “உம்முடைய சாட்சிகளை நித்திய சுதந்தரமாக்கிக்கொண்டிருக்கிறேன், அவைகளே என் இருதயத்தின் மகிழ்ச்சி” (வச. 111).

கேட்பவர்களும், செயல்படுத்துகிறவர்களும்

ஊழியக்காராகிய என் கணவருக்கு, இரவு நேரத்தில் தொலைபேசியில் அழைப்பு வந்தது. எங்கள் சபையிலே ஜெப வீரராக இருந்த மூதாட்டி ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு 70 வயதிற்கு மேலிருக்கும். அவர் தனியாக வாழ்ந்து வந்தார். எதுவும் சாப்பிடவும், குடிக்கவும் முடியாத அளவிற்கு சுகவீனமாய் இருந்தார். மேலும் அவரால் பார்க்கவோ, நடக்கவோ இயலவில்லை. அவர் பிழைப்பாரோ அல்லது மரித்து விடுவாரோ என்று விளங்காமல், அவருடைய நல் வாழ்விற்காக தேவனிடம் அவருடைய இரக்கத்தையும், உதவியையும் நாடினோம். அவர்களை கவனித்துக் கொள்வதற்காக உடனடியாக சபையிலே ஒரு செயல்திட்டம் வகுத்து, இருபத்தினான்கு மணிநேரமும் அவர்களோடு யாராவது ஒருவர் இருக்கும்படியாக செயல்படுத்தப்பட்டது. இதனால், அவருக்கு மாத்திரம் சேவை செய்வதோடல்லாமல் கிறிஸ்தவ அன்பை அங்குள்ள மற்ற வியாதியஸ்தர்களுக்கும், அவர்களை விசாரிக்க வந்தவர்களுக்கும், மருத்துவ ஊழியர்களுக்கும் காண்பிக்க முடிந்தது.

சபையானது திக்கற்றவர்களுக்கு உதவுமாறு ஆதி கிறிஸ்தவர்களுக்கு யாக்கோபு தான் எழுதிய கடிதத்தில் அவர்களை உற்சாகப்படுத்துகிறார். விசுவாசிகள், கேட்பதோடு மாத்திரம் நின்று விடாமல், தாங்கள் கேள்விப்பட்டதை செயல்படுத்தும்படியாக அவர் விரும்பினார் (1:22-25). ஆதி நாட்களில், அனாதைகளையும், விதவைகளையும் கவனிக்க வேண்டியது (வச. 27) அவரவர் குடும்பங்களின் கடமையாக கருதப்பட்டது. அதாவது, அனாதைகளும், விதவைகளும் அவர்கள் குடும்பத்தையே எல்லாவற்றிக்கும் எதிர்பார்த்திருந்த பெலவீனமான ஒரு கூட்டம். ஆகவே தான் யாக்கோபு அவர்களை விசாரிக்குமாறு கூறகிறார்.

நம்முடைய சபையிலோ அல்லது சமுதாயத்திலோ பாரமாக கருதப்படுகிறவர்களுக்கு நாம் எப்படி பதிலளிக்கிறோம்? விதவைகளையும், திக்கற்ற பிள்ளைகளையும் விசாரிப்பது நம்முடைய விசுவாச வாழ்வின் அதிமுக்கியமான அங்கமாக நாம் கருதுகிறோமா? தேவையில் இருக்கும் மக்களுக்கு உதவி செய்ய நம் முன் இருக்கும் சந்தர்ப்பங்களை காண நம் கண்களை தேவன் திறந்தருளுவாராக.

அமைதியான உரையாடல்கள்

நீங்கள் எப்பொழுதாவது உங்களிடமே பேசிக்கொள்வதுண்டா? நான் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது சில சமயங்களில் அவ்வேலையிலுள்ள தவறுகளை சரி செய்வதற்கான வாய்ப்புகளை சத்தமாக நான் என்னிடமே சொல்லிக்கொள்வேன். பொதுவாக நான் என் கார் இஞ்சின் மூடிக்கடியில் (Bonnet / hood) இருக்கும் பொழுது இது நடக்கும். நம்மிடமே நாம் பேசிக்கொள்ளும் பழக்கம் அன்றாட வழக்கமாக நம் அனைவருக்கும் இருந்தாலும், என்னுடைய ‘உரையாடலை’ யாரவது கேட்க நேர்ந்தால் எனக்கு சங்கடமாக இருக்கும்.

சங்கீதப் புஸ்தகத்திலுள்ள சங்கீதக்காரர்கள் பொதுவாக அவர்களிடமே அவர்கள் பேசிக்கொள்வார்கள். 116வது சங்கீதத்தின் ஆசிரியரும் இதற்கு விதிவிலக்கல்ல. ஏழாம் வசனத்தில், “என் ஆத்துமாவே, கர்த்தர் உனக்கு நன்மை செய்தபடியால், நீ உன் இளைப்பாறுதலுக்குத் திரும்பு” என்று எழுதுகிறார். கடந்த காலத்திலே தேவன் தமக்கு பாராட்டின கிருபையையும், நீதியையும் தனக்குத்தானே நினைவூட்டிக் கொள்வது நிகழ்காலத்திற்கு ஏற்ற ஆறுதலும், துணையுமாகும். இப்படிப்பட்ட “உரையாடல்களை” நாம் அதிகமாக சங்கீதப் புஸ்தகத்தில் காணலாம். 103வது சங்கீதத்தில், தாவீது, “என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி
(வச. 1) என்று தன்னிடமே கூறிக்கொள்கிறான். மேலும், 62ம் சங்கீதம் 5ம் வசனத்திலே, “என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும்” என்று தன்னைத்தானே திடப்படுத்துகிறார்.

தேவன் உண்மையுள்ளவர் என்பதையும், அவரின் மேல் உள்ள நம்முடைய நம்பிக்கையையும் நமக்கு நாமே நினைவுகூர்வது நல்லது. சங்கீதக்காரனைப் பின்பற்றி, கர்த்தர் நமக்கு செய்த நன்மைகளை சொல்லி நன்றி செலுத்தலாம். அப்படி செய்யும் பொழுது, நாம் பெலனடைவோம். கடந்த காலத்திலே நமக்கு உண்மையுள்ளவராய் இருந்த தேவன், நம்முடைய எதிர்காலத்திலும் அவருடைய அன்பை விளங்கச் செய்வார்.

400 மைல்களுக்கு அப்பால் கண்ட காட்சி

“முதல் முறை நான் விண்வெளிக்கு சென்ற பொழுது, பூமியை குறித்ததான என்னுடைய கண்ணோட்டம் வியத்தகு வண்ணம் மாறியது,” என்று விண்வெளி வீரர் சார்லஸ் ஃபிராங்க் போல்டன் ஜூனியர் (Charles Frank Bolden Jr.) கூறினார். பூமியிலிருந்து நானூறு மைல்களுக்கு அப்பால், எல்லாம் அமைதியாகவும், அழகாகவும் அவருக்கு காட்சியளித்தது. ஆனால் மத்திய கிழக்கு நாடுகளை கடந்து சென்றபொழுது, அங்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் சச்சரவுகளை நினைவு கூர்ந்த பொழுது, “நிஜம் அவரை உலுக்கியது.” அத்தருணத்தைக் குறித்து தயாரிப்பாளர் ஜாரெட் லேடோ (Jared Leto) பேட்டிகண்ட பொழுது, அத்தருணத்திலே, பூமி எவ்வாறு இருக்க வேண்டும் என்ற உணர்வும், அதை செவ்வைப்படுத்த வேண்டும் என்ற வைராக்கியத்தையும் உணர்ந்ததாக தெரிவித்தார்.

இயேசு பெத்லகேமிலே பிறந்த பொழுது, இந்த பூமி தேவன் விரும்பிய வண்ணம் இருக்கவில்லை. ஒழுக்கமின்றி, ஆவிக்குரிய இருளில் இருந்த நம் அனைவருக்கும், இயேசு, ஜீவனையும், வெளிச்சத்தையும் கொண்டு வந்தார் (யோவா. 1:4). இந்த உலகம் அவரை அறிந்துகொள்ளவில்லை என்றாலும், “அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்” (வச. 12).

குடும்பங்களில் பிரிவினைகள் ஏற்படும் பொழுது, பிள்ளைகள் பட்டினியாய் இருக்கும் பொழுது, உலகத்தில் யுத்தங்கள் ஏற்படும் பொழுது, மொத்தத்தில் நம்முடைய வாழ்வு இருக்க வேண்டிய வண்ணம் இல்லாத பொழுது, நமக்கு மிகுந்த வருத்தம் ஏற்படுகிறது. ஆனால் நாம் அனைவரும் கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைத்து, ஒரு புதிய வழியில் பயணிக்க முடியும் என்று தேவன் நமக்கு வாக்களிக்கிறார்.

உலக இரட்சகராகிய இயேசு, தம்மை ஏற்றுக்கொண்டு, பின்பற்றுகிற அனைவருக்கும் தன் ஜீவனையும், வெளிச்சத்தையும் ஈவாகக் கொடுக்கிறார் என்பதை இந்த கிறிஸ்துமஸ் காலம் நமக்கு நினைவூட்டுகிறது.

உங்களுடைய மதிப்பு என்ன?

கி.மு. 75ல் ஜூலியஸ் சீஸர் என்ற இளம் ரோம பிரபுவை கடற்கொள்ளையர்கள் பணத்திற்காகக் கடத்திச் சென்றதாக ஒரு கதை சொல்வார்கள். அவனை விடுவிக்க பணமாக 20 தாலந்து வெள்ளியைக் கேட்டனர். (இன்றைய மதிப்பு 6,00,000 அமெரிக்கா டாலர்களாகும்). இந்த தொகையை கேட்டபொழுது சீஸர் நகைத்து மீட்பு பணத்தை 50 தாலந்துகளாக உயர்த்தும்படிக் கூறினான். ஏனெனில் அவன் 20 தாலந்துகளுக்கு மேலாக விலையேறப்பட்டவன் என்பதை அவன் நன்கு உணர்ந்திருந்தான். அவர்களோ அவன் யார் என்பதை அறிந்திருக்கவில்லை.

சீஸர் கர்வத்துடன் தன் மதிப்பை பணத்தினால் நிர்ணயித்து கொண்டதற்கும், தேவன் நம் ஒவ்வொருவர் மேலும் வைத்துள்ள மதிப்பிற்கும் எத்தனை பெரிய வித்தியாசம்! நம்முடைய மதிப்பை பணத்தினால் அளந்து விட முடியாது. நமது பரம பிதா நமக்காக என்ன செய்தார் என்பதே நமது மதிப்பை காட்டுகின்றது.

என்ன விலைக் கிரயம் செலுத்தி நம்மை இரட்சித்தார்? தம்முடைய ஒரே பேறான குமாரனை சிலுவையில் ஜீவ பலியாக ஒப்புக்கொடுத்தார். பாவங்களில் இருந்து மீட்க பிதாவாகிய தேவன் விலைக்கிரயம் செலுத்தினார். “உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்துவந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே” (1 பேது. 1:18-19).

தேவன் நம்மேல் வைத்த அளவற்ற அன்பினால் தம்முடைய ஒரே குமாரனை சிலுவை மரணத்திற்கு ஒப்புக் கொடுத்துக் குமாரனின் இரத்தத்தையே நமக்கு விலைக் கிரயமாக செலுத்தி நம்மை மீட்டுக் கொண்டு, மரணத்தை மேற்கொண்டு உயிர்த்தெழுந்தார். அந்த அளவிற்கு நீங்கள் அவரில் விலையேறப் பெற்றவர்கள்.

நான் ஐசுவரியவான்!

நீங்கள் இந்தக் காட்சியை டிவி விளம்பரத்தில் பார்த்திருக்கலாம். கதவு தட்டும் சத்தம் கேட்டு ஒருவர் கதவை திறப்பார். வெளியில் இருந்து ஓர் மனிதர் உள்ளே வந்து, மிகப் பெரிய தொகை எழுதப்பட்டிருக்கும் ஓர் காசோலையை கொடுப்பார். அதைப் பெற்றுக்கொண்ட மனிதர் ஆடிப்பாடி, குதித்து, மகிழ்ந்து காண்பவர் எல்லோரையும் கட்டி அணைப்பார். “நான் வெற்றி பெற்றுவிட்டேன்! நான் பணக்காரனாகிவிட்டேன்! என்னால் இதை நம்பமுடியவில்லை. என் கஷ்டமெல்லாம் தீர்ந்துவிட்டது!” என்று குதூகலிப்பார். திடீரென செல்வம் நம்மை தேடி வந்தால் நாம் இப்படித் தான் கட்டுக்கடங்கா உணர்ச்சிகளை வெளிப்படுத்துவோம்.

வேதாகமத்தில் மிகவும் நீளமான அதிகாரமாகிய சங்கீதம் 119ல் ஓர் அற்புதமான வசனத்தை காணலாம். “திரளான செல்வத்தில் களிகூருவதுபோல, நான் உமது சாட்சிகளின் வழியில் களிகூருகிறேன்” (வச. 14). என்ன அருமையான ஒரு ஒப்பிடுதல்! பெரும் அதிர்ஷ்டத்தை பெற்றுக் கொள்ளும் பொழுது, நாம் குதூகலிப்பது போல் தேவனுடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து நாம் வாழும் பொழுதும் ஆனந்தக் களிப்படைய முடியும்! 16ஆம் வசனத்திலும் இதையே திருப்பி சொல்கிறார். கர்த்தர் கொடுத்த கட்டளைகளுக்காய் நன்றியுள்ள இருதயத்துடன் தன் மகிழ்ச்சியை தெரிவிக்கிறார் சங்கீதக்காரன். “உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன்; உமது வசனத்தை மறவேன்”.

ஆனால், பொக்கிஷத்தைப் பெற்றுக்கொள்ளும்போது ஏற்படும் சந்தோஷத்தைப் போல, தேவனுடைய கட்டளைகளை பெற்றுக்கொள்ளும்பொழுதும் அதே உணர்வுடன் நாம் இல்லாவிட்டால்? தேவனுடைய கட்டளைகள் பொக்கிஷத்தைப் போல எப்படி சந்தோஷப்படுத்தும்? அது யாவும் நன்றியுள்ள இருதயத்தில் தான் தொடங்கும். அப்படிப்பட்ட குணாதிசயத்தை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதன்மேல் தான் நாம் கவனம் செலுத்துவோம். எப்பொழுது தேவனுடைய ஈவுகளுக்காய் நன்றி செலுத்த ஆரம்பிக்கிறோமோ, அப்பொழுதே நம் ஆத்துமாக்கள் பெலனடைய ஆரம்பித்து விடும். அவரது ஜீவ வார்த்தையாகிய களஞ்சியத்தலிருந்து ஞானம், அறிவு மற்றும் சமாதானத்தை காண வேண்டிக்கொள்வோம்.

ஒவ்வொரு நாளும், நாம் இயேசுவை அதிகமாக நேசிக்கும் பொழுது, நிச்சயமாக நாம் ஐஸ்வரியவான்கள் தான்.