கி.மு. 75ல் ஜூலியஸ் சீஸர் என்ற இளம் ரோம பிரபுவை கடற்கொள்ளையர்கள் பணத்திற்காகக் கடத்திச் சென்றதாக ஒரு கதை சொல்வார்கள். அவனை விடுவிக்க பணமாக 20 தாலந்து வெள்ளியைக் கேட்டனர். (இன்றைய மதிப்பு 6,00,000 அமெரிக்கா டாலர்களாகும்). இந்த தொகையை கேட்டபொழுது சீஸர் நகைத்து மீட்பு பணத்தை 50 தாலந்துகளாக உயர்த்தும்படிக் கூறினான். ஏனெனில் அவன் 20 தாலந்துகளுக்கு மேலாக விலையேறப்பட்டவன் என்பதை அவன் நன்கு உணர்ந்திருந்தான். அவர்களோ அவன் யார் என்பதை அறிந்திருக்கவில்லை.

சீஸர் கர்வத்துடன் தன் மதிப்பை பணத்தினால் நிர்ணயித்து கொண்டதற்கும், தேவன் நம் ஒவ்வொருவர் மேலும் வைத்துள்ள மதிப்பிற்கும் எத்தனை பெரிய வித்தியாசம்! நம்முடைய மதிப்பை பணத்தினால் அளந்து விட முடியாது. நமது பரம பிதா நமக்காக என்ன செய்தார் என்பதே நமது மதிப்பை காட்டுகின்றது.

என்ன விலைக் கிரயம் செலுத்தி நம்மை இரட்சித்தார்? தம்முடைய ஒரே பேறான குமாரனை சிலுவையில் ஜீவ பலியாக ஒப்புக்கொடுத்தார். பாவங்களில் இருந்து மீட்க பிதாவாகிய தேவன் விலைக்கிரயம் செலுத்தினார். “உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்துவந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே” (1 பேது. 1:18-19).

தேவன் நம்மேல் வைத்த அளவற்ற அன்பினால் தம்முடைய ஒரே குமாரனை சிலுவை மரணத்திற்கு ஒப்புக் கொடுத்துக் குமாரனின் இரத்தத்தையே நமக்கு விலைக் கிரயமாக செலுத்தி நம்மை மீட்டுக் கொண்டு, மரணத்தை மேற்கொண்டு உயிர்த்தெழுந்தார். அந்த அளவிற்கு நீங்கள் அவரில் விலையேறப் பெற்றவர்கள்.