சிங்கப்பூரின் சுற்றுலா பகுதியாகக் கருதப்படும் ஆர்சர்ட் ரோட் (ORCHARD ROAD) ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி பல வாரங்கள் வண்ணமயமான மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அதிசய உலகமாக மாறிவிடும். இந்த ஒளி அலங்காரமெல்லாம் வியாபாரத்திற்கு பெயர் போன அம்மாதத்தில், ஜனங்களைக் கவர்ந்து, அங்குள்ள கடைகளில் அவர்கள் பணத்தை செலவழிக்க வைப்பதற்கே அலங்கரிக்கப்பட்டுள்ளது. மக்கள் இந்த கேளிக்கைகளைக் கண்டுகளித்து, பாடற்குழுவினர் பாடும் கிறிஸ்துமஸ் பாடல்களைக் கேட்டு மகிழ்ந்து, நடிகர்களின் நடிப்பை கண்டுகளித்து மகிழ அங்கு வருவார்கள்.

முதலாம் கிறிஸ்துமஸ் ஒளி அலங்காரம், மின்சார கம்பிகளால் அல்லது மின்னும் பொருட்கள் அல்லது நியான் (Neon) விளக்குகளால் உண்டாகவில்லை. மாறாக “கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது” (லூக். 2:9). எந்த சுற்றுலா பயணியும் இதைக் காணவில்லை, சாதாரண மந்தை மேய்ப்பவர்களே இக்காட்சியைக் கண்டனர். அதுமட்டுமன்றி அதைத் தொடர்ந்து, பரலோக தூதர் சேனை பாடிய “உன்னததத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும்,” என்கிற பாடலையும் கேட்டு மகிழ்ந்தனர் (வச. 14).

பின்பு அத்தேவ தூதர்கள் கூறியது உண்மைதானா என்று உறுதி செய்து கொள்ள அம்மேய்ப்பர்கள் பெத்லேகம் சென்றார்கள் (வச. 15). அவை அனைத்தும் உண்மை என்று அறிந்து கொண்டபொழுது, அவர்கள் கேட்டதையும், கண்டதையும் குறித்துப் பிறருக்குச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. “கண்டு, அந்தப் பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம்பண்ணினார்கள்” (வச. 17).

நம்மில் அநேகர் இந்த கிறிஸ்துமஸ் கதையை அநேகந்தரம் கேட்டதுண்டு. இந்த கிறிஸ்துமஸ் நன்நாளிலே, “உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்” (யோவான் 8:12) என்கிற கிறிஸ்து ஏற்கனவே வந்துவிட்டார் என்கிற நற்செய்தியை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாலாமே.