மூன்று பெரிய மாமிசம் உண்ணும் கொடிய விலங்குகள் ஒன்றையொன்று கட்டித் தழுவி விளையாடுவதைக் காண்பது அரிதான ஒன்று. ஆனால் சரியாகச் சொல்ல வேண்டுமானால், ஜார்ஜியாவில் (Georgia) உள்ள ஒரு விலங்குகள் சரணாலயத்தில் இது தான் தினமும் நடக்கிறது. கொடுமைப்படுத்தப்பட்டு சரியான கவனிப்பின்றி இருந்த ஒரு சிங்கம், ஒரு வங்காள புலி (Bengal Tiger) மற்றும் கருங்கரடி ஆகியவை நோவாவின் பேழை விலங்குகள் சரணாலயத்தால் 2001ஆம் ஆண்டு மீட்கப்பட்டது. “நாங்கள் அவைகளை பிரித்திருக்கலாம், ஆனால் அவை ஒரு குடும்பம் போல காணப்பட்டதால் அவைகளை பிரிக்காமல் ஒன்றாக வைத்திருக்க முடிவு செய்தோம்” என்று அச்சரணாலயத்தின் துணை இயக்குனர் கூறினார். தாங்கள் கொடுமை படுத்தபட்ட நாட்களில் அம்மூன்று விலங்குகளும் ஒருவரில் ஒருவர் ஆறுதலடைந்ததால், அவர்களுக்குள்ள வேறுபாடுகளைக் கடந்து, அவை சமாதானத்தோடு ஒற்றுமையாக வாழ்கின்றன.

ஒற்றுமை என்பது அழகான ஒன்று. ஆனால் ஏபேசு பட்டணத்து விசுவாசிகளுக்கு எழுதிய கடிதத்தில் பவுல் குறிப்பிட்டுள்ள ஒற்றுமை விசேஷமானது. கிறிஸ்துவினுடைய சரீரத்தின் அவையவங்களாக அழைக்கப்பட்ட அழைப்பிற்கேற்ப வாழும் படியாக எபேசு விசுவாசிகளை அவர் உற்சாகப்படுத்துகிறார் (எபே. 4:4-5). மனத்தாழ்மை, சாந்தம் மற்றும் பொறுமையிலே அவர்கள் வளரும் பொழுது, பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினாலே அவர்கள் ஒற்றுமையாய் வாழ்வார்கள். இந்த சுபாவங்கள், நம் அனைவருக்கும் பொதுவான இயேசு கிறிஸ்துவின் “அன்பினால் ஒருவரை ஒருவர் தாங்கி” வாழ வழி செய்கிறது. வேறுபாடுகள் இருப்பினும், நம்முடைய இரட்சகரின் மரணத்தின் மூலம் நாம் தேவனோடு ஒப்புரவாக்கப்பட்டு, நம் வாழ்வில் நிறைவேறிக் கொண்டிருக்கும் கிரியைகள் மூலம் ஒருவரோடு ஒருவர் ஒப்புரவாக்கப்பட்டு தேவனின் குடும்பத்தில் அவையவங்களாக இணைக்கப்பட்டிருக்கிறோம்.