என் தந்தையின் ஆலோசனை
ஒரு பத்திரிக்கை ஆசிரியர் வேலையிலிருந்து நான் நிறுத்தப்பட்ட பின்பு, தேவனை நோக்கி ஒரு புதிய வேலை கிடைக்க உதவுமாறு ஜெபித்தேன். வாரங்கள் சென்றன. ஒன்றும் கிடைக்கவில்லை. நான் வலைதளங்களில் தேடுவதிலும், விண்ணப்பப்படிவங்களை நிரப்புவதிலும் சலிப்படைந்து, “எனக்கொரு வேலைமிக முக்கியமானது என்பது உமக்குத் தெரியாதா?” என தேவனைக் கேட்டேன். என் ஜெபங்களுக்கு பதில் கிடைக்கவில்லை என்பதால் தேவனுக்கு நேராக நீட்டப்பட்ட என்கரங்களை மடக்கி கொண்டேன்.
நான் என்னுடைய தந்தையோடு பேசிக்கொள்ளும் போதெல்லாம், அவர் அடிக்கடி தேவனுடைய வாக்குத்தத்தங்களின் மீது நம்பிக்கையோடிருக்கச் சொல்வார். என்னுடைய வேலையைக் குறித்து அவர், “தேவன் என்ன சொல்கின்றாரோ அதன் மீது நம்பிக்கையோடிருக்கும்படி நான் உன்னிடம் எதிர்பார்க்கின்றேன்” என்றார்.
என்னுடைய தந்தையின் ஆலோசனை எனக்கு நீதிமொழிகள் 3ஆம் அதிகாரத்தை நினைவுபடுத்தியது. அது ஒரு தந்தை தன் அன்பு மகனுக்கு கொடுக்கும் ஞானமுள்ள ஆலோசனைகள். இந்தப் பகுதி என்னுடைய சூழ்நிலைக்கு மிகவும் பொருத்தமாயிருக்கின்றது. “உன் சுய புத்தியின் மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைக் செவ்வைப்படுத்துவார்” (நீதி. 3:5-6) உன்பாதைகளைச் செவ்வைப்படுத்துவார் என்பது தேவன் நாம் வளரும்படி நம்மை அவருடைய சித்தத்திற்கு நேராக வழிநடத்துவார் என்பதும், அவருடைய முழுமையான இலக்கு எதுவெனின் நான் அவரைப் போல மாற வேண்டும் என்பதுவுமே.
அப்படியானால் அவர் தேர்ந்தெடுக்கும் பாதைகள் வெகு இலகுவானவை என்பதல்ல. ஆனால், அவருடைய வழிநடத்துதலும், அவருடைய நேரமும் எனக்கு முற்றிலும் நன்மையாகவே இருக்கும் என நான் அவரையே நம்பியிருக்கத் தேர்ந்துகொண்டேன்.
நீயும், தேவன் உனக்கு பதிலளிக்க வேண்டுமென காத்திருக்கின்றாயா? தேவனையே நம்பி அவர் உன்னை வழி நடத்துவார் என்ற உறுதியோடு அவரோடு நெருங்கி செல்ல தேர்ந்து கொள்.
மனமார்ந்த வரவேற்பு
யார் அனைவரையும் கட்டித் தழுவுவார்?”
என்னுடைய நண்பன் ஸ்டீவ் தனக்குப் புற்றுநோய் என்ற செய்தியைக் கேட்டபோது, சில நாட்களுக்குத் தன்னால் ஆலயத்திற்கு வரமுடியாது என்று எண்ணியபோது இக்கேள்வியைக் கேட்டான். ஸ்டீவ் அனைவரையும் அன்போடு வரவேற்பவர், நட்புணர்வோடு வாழ்த்துபவர், உள்ளார்ந்த அன்போடு கைகுலுக்கி, சிலரை பரிசுத்த கட்டிப்பிடித்தலோடும் வரவேற்று ரோமர் 16:16ல் குறிப்பிட்டுள்ள, “ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள்” என்ற வார்த்தையைச் செயல்படுத்திக் காட்டுபவராக காணப்பட்டார்.
இப்பொழுது நாங்கள் ஸ்டீவ் குணமடைந்து விட வேண்டுமென ஜெபிக்கின்றோம். தான், அறுவை சிகிச்சை, மேலும் சில சிகிச்சைகளுக்குட்பட வேண்டியுள்ளதால் சிலகாலம் ஆலயத்திற்கு வரமுடியாது எனக் கூறியுள்ளார். அவருடைய மனமார்ந்த வரவேற்பையும் வாழ்த்துக்களையும் நாங்கள் இழந்து நிற்கின்றோம்.
நம்மில் அனைவரும் ஸ்டீவைப் போன்று வெளிப்படையாக ஒருவரையொருவர் வாழ்த்த முன் வருவதில்லை. ஆனால், பிறர்மீதுள்ள அவருடைய கரிசனை நமக்கு ஒரு நல்ல முன்மாதிரியை நினைவுபடுத்துகின்றது. பேதுரு சொல்வதைக் கனிப்போமாகில், “முறுமுறுப்பில்லாமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள்” (1 பேது. 4:9; பிலிப். 2:16) என்கின்றார். இவையாவும் அன்பையே அடிப்படையாகக்கொண்டது. முதலாம் நூற்றாண்டின் உபசரணையில், வழிப்போக்கர்களுக்கும் தங்குவதற்கு இடமளித்து வரவேற்று வாழ்த்தினர்.
நாம் பிறரோடு அன்போடு உறவாடும்போதும், அன்போடு அரவணைக்கும் போதும் அல்லது ஒரு புன்முறுவல் செய்யும் போதும், “எல்லாவற்றிலேயும் இயேசு கிறிஸ்து மூலமாய் தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக” (1 பேது. 4:11) என்பதை நிறைவேற்றுபவர்களாவோம்.
சம்பூரண தந்தை
கூட்டம் நிறைந்த ஒரு கடையின் நடைப்பாதையில் நின்று கொண்டு, தந்தையர் தினத்திற்கு பொருத்தமான வாழ்த்து அட்டை ஒன்றை கண்டுபிடிக்கப் போராடிக் கொண்டிருந்தேன். பல ஆண்டுகளாக இருந்த உடைக்கப்பட்ட உறவை சரி செய்து, மீண்டும் நாங்கள் மனம் பொருந்தியிருந்தாலும் நான் என் தந்தையோடு மிக நெருக்கமான உறவை உணர்ந்ததில்லை.
என்னருகில் நின்ற ஒரு பெண்மணி முனகிக் கொண்டே தான் வாசித்துக் கெண்டிருந்த அட்டையை மீண்டும் அது இருந்த இடத்திலேயே தள்ளினாள். “தங்கள் தந்தையோடு சரியான உறவிலில்லாமல், ஆனால், அதைச் சரி செய்ய முயற்சிக்கும் மக்களுக்கென்று பொருத்தமான அட்டையை ஏன் இவர்கள் செய்யவில்லை?”
அவளை நான் சமாதானப்படுத்த முயற்சிக்குமுன் வெளியேறிவிட்டாள். எனவே நான் அவளுக்காக ஜெபித்தேன். தேவன் ஒருவரே சம்பூரணத் தந்தையாக இருப்பதற்காக நன்றி கூறிவிட்டு, என்னுடைய தந்தையோடுள்ள உறவை வலுப்படுத்தித் தருமாறு தேவனிடம் கேட்டேன்.
நான் என் பரலோகத் தந்தையோடு ஆழ்ந்த உறவை ஏற்படுத்திக்கொள்ள விரும்புகின்றேன். தேவனுடைய மாறாத பிரசன்னத்தையும், அவருடைய வல்லமையையும், பாதுகாப்பையும் தாவீது பெற்றுக் கொண்டது போல நானும் பெற்றுக்கொள்ள விரும்புகின்றேன் (சங். 27:1-6)
தாவீது தேவனை நோக்கி உதவிக்காகக் கூப்பிட்டபோது, அவன் தேவனிடமிருந்து உத்தரவை எதிர்பார்த்தான் (வச. 7-9) உலகப்பிரகாரமான பெற்றோர் தங்கள் பிள்ளைகளைத் தள்ளிவிடவும், கைவிட்டு விடவும் அல்லது நிராகரித்தும் விடும்போது, தேவன் நம்மை நிபந்தனையற்று சேர்த்துக் கொள்வதை தாவீது வெளிப்படுத்துகின்றார் (வச. 10) தேவன் தன்னை செவ்வையான பாதையில் நடத்துகின்றார். என்ற உறுதியைப் பெற்றுக்கொண்டார் (வச. 10) தேவன் தன்னை செவ்வையான பாதையில் நடத்துகின்றார் என்ற உறுதியைப் பெற்றுக்கொண்டார். (வச. 11-13) நம்மில் அநேகரைப் போன்று தாவீதும் சிலவேளைகளில் போராடினார். ஆனால், பரிசுத்த ஆவியானவர், அவரை அவருடைய நம்பிக்கையிலும் தேவனைச் சார்ந்து வாழ்வதிலும் நிலைத்திருக்கும்படி உதவினார் (வச. 14)
அந்த நடைப்பாதையில் நான் சந்தித்தப் பெண்மணியைப் போன்று, நாமும் நம்முடைய நித்திய வாழ்வுக்கு நேரானப் பாதையில் கடினமான உறவுகளைச் சந்திக்க நேரிடும். ஆனால், மக்கள் நம்மை விழத்தள்ளி, கைவிட்டு, காயப்படுத்தினாலும் நம்முடைய சம்பூரணத் தந்தை இன்னமும் நம்மை முழுமையாக நேசிக்கின்றார், பாதுகாக்கின்றார்.
முகங்கள்
எங்களுடைய பேத்தி சாரா மிகவும் சிறியவளாக இருந்தபோது, நாம் மரித்தபின் என்ன நடக்கும் என்று எனக்கு விளக்கினாள். “உங்களுடைய முகம் மட்டும்தான் மோட்சத்திற்குச் செல்லும். உங்கள் சரீரம் செல்வதில்லை. அங்கு உங்களுக்கு ஒரு புதிய சரீரம் கொடுக்கப்படும். ஆனால், அதே முகம்தான் இருக்கும்: என்றாள்.
நித்திய வாழ்வினைக் குறித்து சாராவின் புரிந்து கொள்ளல் குழந்தைத்தனமானது. ஆனாலும், அவள் உள்ளான ஓர் உண்மையை நன்கு புரிந்து கொண்டிருக்கின்றாள். ஒரு வகையில் நம்முடைய முகங்கள்தான், காணப்படாத நம் ஆன்மாவின் ஒரு பிரதிபலிப்பாகும்.
நம்முடைய தொடர்ச்சியான கோபமான பார்வை சில நாட்களில் நம் முகத்தில் படிந்துவிடும் என்று என் தாயார் சொல்வதுண்டு. அவர்கள் ஞானத்தோடுதான் கூறியிருக்கிறார்கள். கவலை தோய்ந்த புருவங்கள், கோபம் நிறைந்த வாய், அலட்சியப்பார்வை ஆகியவை பரிதாபநிலையிலிருக்கின்ற ஆன்மாவை வெளிப்படுத்துகின்றன. மாறாக, வெளிப்புற சுருக்கங்களும், தழும்புகளும், மற்ற தோற்றத்தில் மாற்றங்கள் யாவும் இருப்பினும், கனிவான கண்களும், மென்மையான தோற்றமும், மலர்ந்த வரவேற்கும் புன்னகையுமே உள்ளார்ந்த மாற்றத்தின் வெளிப்பாடுகளாகும்.
நாம் பிறக்கும் போதிருந்த முகத்தை மாற்ற முடியாது. ஆனால், நாம் எத்தகைய மனிதனாக வளர்கிறோம் என்பதை மாற்ற முடியும். நாம் தாழ்மை, பொறுமை, இரக்கம், சகிப்புத்தன்மை, நன்றியுணர்வு, மன்னிப்பு, சமாதானம் மற்றும் அன்பு (கலா. 5:22-26) ஆகியவற்றைப் பெற்றுக்கொள்ள ஜெபிப்போம்.
தேவனுடைய கிருபையினால் அவருடைய சித்தமான நேரத்தில் நானும் நீயும் அவரைப் போல உள்ளான மாற்றத்தைப் பெற்றுக்கொள்வோம். அவருடைய தன்மையை நம்முடைய வயதான முகங்கள் பிரதிபலிக்கும் என்று ஜான்டோன் (1572-1631) என்ற ஆங்கில கவிஞர் “நம்முடைய வயதான நாட்களிலேயே நம்முடைய அழகு வெளிப்படும்” என்று கூறினார்.
உண்மையோடு
பல ஆண்டுகளுக்கு முன்பு வெவ்வேறு தேசத்தைச் சேர்ந்த இருவர் திருமணம் செய்துகொண்ட நிகழ்வில் கலந்து கொண்டேன். வெவ்வேறு கலாச்சாரங்கள் இணைவது அழகானது தான், ஆனால், இந்த வைபவத்தில் கிறிஸ்தவ பாரம்பரியம், அநேக தெய்வங்களை வணங்கும் நம்பிக்கையுடைய சடங்காச்சாரங்களோடு கலந்ததைக் கண்டேன்.
தீர்க்கதரிசி செப்பனியா, உண்மையான தேவன் மீதுள்ள நம்பிக்கை, மற்ற மதங்களோடு கலப்பதைக் கண்டிக்கின்றார். யூத ஜனங்கள் உண்மையான தேவனை ஆராதிப்பவர்கள், ஆனால், மல்காமின் என்ற பிற தெய்வத்தையும் சார்ந்து வாழ்ந்தனர் (செப்பனியா 1:5) செப்பனியா அவர்கள் கைக்கொள்ளுகின்ற, தேவன் இல்லை என்கின்ற கலாச்சாரத்தையும் (வச. 6,12) கண்டிக்கின்றார். அதன் விளைவாக தேவன் யூத ஜனங்களை அவர்களுடைய தேசத்திலிருந்து துரத்திவிட்டார்.
ஆனாலும், தேவன் தன் ஜனங்கள் மீது செலுத்தும் அன்பினை விட்டுவிடவில்லை. அவருடைய எண்ணமெல்லாம், அந்த ஜனங்கள் தன்னிடம் திரும்ப வேண்டும் என்பதே. எனவே “தாழ்மையைத் தேடுங்கள்” (2:3) என்கின்றார். அப்பொழுது தேவன் அவர்களிடம் கனிவான வார்த்தைகளைப் பேசி, மீண்டும் அவர்களைச் சேர்த்துக் கொள்வதாகக் கூறுகின்றார். “அக்காலத்திலே உங்களைச் சேர்த்துக் கொள்வேன். உங்கள் கண்காண நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்புவேன்” (3:20) என்கின்றார்.
நான் சென்றிருந்த திருமணத்தில் நடந்த சமய இணைப்பை கண்டிப்பது எளிது. ஆனால், உண்மையில் நாம் அனைவரும் தேவனுடைய உண்மையை நம்முடைய கலாச்சார ஊகங்களோடு எளிதாக இணைத்து விடுகின்றோம். தேவனுடைய உண்மையான வார்த்தைகளுக்கு எதிரான நம்பிக்கைகளை நாம் சோதித்து அறியும்படி பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதல் நமக்குத் தேவை. பரிசுத்த ஆவியானவரின் உதவியால் தான் நாம் உண்மையினை உறுதியாகவும், உண்மையோடும் தொழுதுகொள்ளும் போது தேவன் நம்மை அன்போடு அரவணைத்துக் கொள்வார் (யோவா. 4:23-24).
ஒருவரோடொருவர் இணைந்து
பழங்காலத்தில் ஒரு பட்டணத்தின் சுற்றுச் சுவர் உடைக்கப்பட்டதாகக் காணப்படின், அது தோற்றுபோன மக்களையும், ஆபத்திற்கும் வெட்கத்திற்குமுள்ளாக்கப்பட்ட ஜனங்களையும் கொண்டுள்ளதாகக் கருதப்படும். எனவேதான் யூத ஜனங்கள் எருசலேமின் அலங்கத்தை மீண்டும் கட்டுகின்றார்கள். எப்படி? ஒருவரோடொருவர் இணைந்து கட்டுகின்றார்கள். இது நெகேமியா 3 ஆம் அதிகாரத்தில் விளக்கப்பட்டுள்ளது.
இந்த 3ஆம் அதிகாரத்தை வாசிக்கும் போது முதலில் அது நமக்குச் சற்று ஆர்வமில்லாத பகுதியாகத் தோன்றும். யார், எந்த பகுதியை எடுத்துக் கட்டினான் எனத் தெரிவிக்கின்றது. ஆனால், சற்று ஆழந்து பார்ப்போமாகில், மக்கள் எவ்வாறு இணைந்து வேலை செய்தனர் என்பதைக் தெரிந்து கொள்வோம். ஆசாரியர்களும் பிரபுக்களோடு இணைந்து வேலை செய்கின்றனர். அருகிலுள்ள பட்டணங்களில் வாழ்பவர்களும் வந்து உதவுகின்றனர். மற்றவர்கள் தங்கள் வீடுகளுக்கு எதிரேயிருக்கிற பகுதியைப் பழுது பார்கின்றனர். சல்லூமின் குமாரத்திகளும் பிறரோடு இணைந்து வேலை செய்தனர் (3:11) தெக்கோவா ஊரார் இரண்டு பகுதிகளை பழுது பார்க்கின்றனர் (வச. 5,27).
இந்த பகுதியிலிருந்து இரண்டு காரியங்களை நாம் தெரிந்து கொள்ளலாம். ஓன்று அவர்களெல்லாரும் ஒரு பொதுவான நோக்கத்திற்காக இணைந்து வேலை செய்கிறார்கள். இரண்டாவதாக எவ்வளவு வேலை செய்தனர், மற்றவர்களைக் காட்டிலும் குறைவாகத்தான் வேலை செய்தனர் என்பதான பாகுபாடின்றி, அவர்கள் அனைவரும் இந்த வேலையில் பங்கு பெற்றதற்காகப் பாராட்டப்படுகின்றனர். செய்த வேலையின் அளவல்ல; பங்கெடுத்தலே போற்றத்தக்கது.
இன்றைய நாட்களில் நாம் பாதிக்கப்பட்ட குடும்பங்களையும், உடைந்துபோன சமுதாயத்தையும் பார்க்கின்றோம். வாழ்வு மாற்றத்தைக் கொடுப்பதன் மூலம் தேவனுடைய இராஜ்ஜியத்தைக் கட்டும்படியாக இயேசு கிறிஸ்து உலகத்தில் வந்தார். நாம் நம்முடைய அண்டை வீட்டாரின் வாழ்வை மாற்றும்படி, அவர்களுக்கு இயேசு தரும் புதிய வாழ்வையும், நம்பிக்கையையும் காட்டுவோம். நாம் அனைவரும் ஏதாவது ஒன்றைச் செய்யும்படி இடம் இருக்கிறது. எனவே நாம் ஒருவரோடொருவர் இணைந்து பெரிதோ, சிறிதோ நம்முடைய வேலையைச் செய்து, ஓர் அன்பான சமுதாயத்தை உருவாக்கும்படி, ஒவ்வொருவரும் இயேசுவைக் கண்டுகொள்ள உதவுவோம்.
வேத வார்த்தைகளை நாம் புரிந்துகொள்ளும்படிச் செய்ய தேவனாலேயே முடியும்.
சில வருடங்களுக்கு முன் என்னோடு பயணம் செய்த ஒருவர், நான் தூரத்துப் பொருட்களைப் பார்க்கச் சிரமப்படுவதைக் கவனித்து ஒன்று செய்தார். அவர் செய்தது ஒரு சிறிய காரியமாயினும் அது என் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அவர் தன்னுடைய கண்ணாடியை கழற்றி அதை என்னைப் போட்டுப் பார்க்கும்படி கூறினார். நான் அவற்றை பயன்படுத்திய போது, என்ன ஆச்சரியம்! என்னுடைய மங்கலான பார்வை மறைந்து தெளிவாகப் பார்க்க முடிந்தது. உடனடியாக நான் ஒரு கண் மருத்துவரை அணுகினேன். அவர் என் பார்வையை சரிசெய்யக் கூடிய ஒரு கண்ணாடியை எனக்குப் பரிந்துரைத்தார்.
இன்றைய வேதாகமம் பகுதி லூக்கா 18, முற்றிலும் பார்வையிழந்த ஒரு மனிதனைப் பற்றி குறிப்பிடுகிறது. முழுவதும் இருளிலேயே வாழ்ந்து வருகின்ற அவன் தன்னுடைய வாழ்வுக்காக வேண்டும்படி தூண்டப்படுகின்றான். பிரசித்திப் பெற்ற போதகர், அற்புதம் நிகழ்த்துபவர் என்று இயேசுவைக் குறித்த செய்தி அந்த குருட்டுப் பிச்சைக்காரனின் செவிகளை அடைகிறது. அந்த குருடன் அமர்ந்திருக்கின்ற வழியே இயேசு வந்தபோது, அவனுடைய இருதயத்தினுள் நம்பிக்கை எரியத் துவங்குகிறது. “இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும்!” (வச. 37) எனக் கூப்பிடுகின்றான். அவன் வெளியுலகைப் பார்க்கக்கூடாதிருந்தும், அவனுடைய ஆவியின் கண்கள் இயேசுவின் உண்மையான அடையாளத்தை கண்டு கொண்டன. அவனுக்குள்ளிருந்த நம்பிக்கை அவனுடைய தேவையைச் இயேசு சந்திப்பார் என்றது. அவனுடைய நம்பிக்கையின் தூண்டுதலால், இன்னும் சத்தமாக கூப்பிடுகின்றான். “தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும்!” (வச. 38) விளைவு என்ன? அவனுடைய குருட்டுத் தன்மை மாறியது. தன்னுடைய வாழ்விற்காகப் பிச்சையெடுத்தலை விட்டுவிட்டு, தேவனை மகிமைப்படுத்திக் கொண்டே அவருக்குப் பின் சென்றான் (வச. 43), ஏனெனில், இப்பொழுது அவனால் பார்க்க முடிகிறது.
உன் வாழ்வின் இருண்ட காலங்களில் நீ எங்கே செல்கின்றாய்? எதை நோக்கி அல்லது யாரைக் கூப்பிடுகின்றாய்? கண் கண்ணாடிக்கான பரிந்துரை ஒருவரின் பார்வையை மேம்படுத்திக்கொள்ள உதவலாம். ஆனால், இயேசுவின், தேவனுடைய குமாரனின் கிருபை நிறைந்த தொடுதல் மக்களை ஆவியின் இருளிலிருந்து வெளிச்சத்திற்குள் கொண்டு வருகிறது.
என் கண்களைத் திறந்தருளும்
நான் முதன்முதலாக இஸ்டான்புல் என்ற இடத்திலுள்ள, மிக அழகான சோரா தேவாலயத்திற்குச் சென்றேன். அந்த தேவாலயத்தின் கூரையில் அமைந்துள்ள சித்திரவேலைகள், கற்களிலுள்ள வேலைப்பாடுகளின் மூலம் சில வேதாகமக் கதைகளைப் புரிந்து கொண்டேன். ஆனால், அநேகக் காரியங்களை என்னால் யூகிக்க முடியவில்லை. இரண்டாவது முறை நான் அங்கு சென்ற போது என்னோடு ஒரு வழிகாட்டியும் இருந்தார். அவர் நான் முந்தின முறை பார்க்கத் தவறியவற்றையெல்லாம் காட்டி விளக்கினார். அப்பொழுதுதான் அவையெல்லாம் எத்தனை அர்த்தமுள்ளவையெனப் புரிந்துகொண்டேன். எடுத்துக்காட்டாக, முதல் நுழையும் பகுதியில் லூக்கா சுவிசேஷத்தில் குறிப்பிட்டுள்ளபடி இயேசுவின் வாழ்வு படங்கள் மூலம் விளக்கிக் காட்டப்பட்டுள்ளன.
சில வேளைகளில் நாம் வேதாகமத்தை வாசிக்கும் போது அடிப்படை கதையைமட்டும் புரிந்து கொள்வோம். ஆனால், வேதாகமத்தின் வெவ்வேறு பகுதிகளிலுள்ள விளக்கங்களைக் சரியாகப் பிணைத்து முழுமையான ஒரு சரித்திரத்தைத் தருவது யார்? நமக்கு வேதாகம விளக்கவுரைகளும் கற்பிக்கும் கருவிகளும் இருக்கின்றன. ஆனால், ஒரு வழிகாட்டியால் தான் நம்முடைய அகக் கண்களைத் திறந்து தேவனைப் பற்றிய அதிசயங்களை வெளிப்படுத்திக் காட்ட முடியும். நம்முடைய வழிகாட்டி பரிசுத்த ஆவியானவரே, அவரே நமக்கு “எல்லாவற்றையும்” (யோவா. 14:26) கற்றுத் தருவார். “ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக் காண்பிக்கின்றோம்” (1 கொரி. 2:13) என பவுல் எழுதியுள்ளார்.
புத்தகத்தை எழுதியவரே அவற்றை விளக்கிக் காண்பிப்பதென்பது எத்தனை ஆச்சரியமானது. தேவன் நமக்கு அவருடைய வார்த்தைகளையும் வெளிப்பாடுகளையும் தந்துவிட்டு, அத்தோடு விட்டு விடவில்லை. அவற்றைப் புரிந்துகொள்ள, அவர் நமக்குக் கற்றும் தருகிறார். எனவே நாமும் சங்கீதக்காரனோடு சேர்ந்து கோள்வோம். “உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும் (சங். 119:18).
கடிகாரங்களும், நாட்காட்டிகளும்
என்னுடைய தந்தை தன்னுடைய 58வது வயதில் மரித்தார். அதிலிருந்து நான் அந்த நாளைக் கடக்கும் போதெல்லாம் அவரையும், அவர் என் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கத்தையும் நினைக்கத் தவறியதில்லை. நான் என் வாழ்க்கையை நினைத்துப் பார்த்தபோது, நான் அவரோடு செலவிட்ட நாட்களை விட அவரில்லாமல் வாழ்ந்த நாட்களே அதிகம். நான் எனது குறுகியகால வாழ்க்கையைக் குறித்துக் சிந்திக்கலானேன்.
நாம் சிந்தித்துப் பார்க்கும்போது, ஒரு காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளும், அது ஏற்படுத்திய உணர்வுகளும் நமக்குள்ளே போராட்டங்களை ஏற்படுத்தி நம்மைக் கலங்கச் செய்கின்றன. நாம் காலத்தை கடிகாரம் மற்றும் நாட்காட்டிகள் மூலம் அறிந்தாலும், சில காலங்களை, அதில் ஏற்பட்ட நிகழ்வுகள் மூலமாகவே நினைவுகூருகின்றோம். நம்முடைய வாழ்க்கையில் ஆழமான உணர்வுகள் தூண்டப்படுகின்ற வேளைகளில் நாம் மகிழ்ச்சி, இழப்பு, ஆசீர்வாதம், வலி, வெற்றி, தோல்விகளை அநுபவித்திருக்கலாம்.
வேதாகமம் நம்மை ஊக்குவிப்பதென்னவெனின், “ஜனங்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள், தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார்” (சங். 62:8) இந்த நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைத் தாவீது இலேசான நேரத்தில் எழுதவில்லை. தாவீது தன்னை எதிரிகள் சூழ்ந்து கொண்டபோது இவற்றை எழுதுகின்றார் (வச. 3-4). அவர் தேவ சமூகத்தில் அமைதியாகக் காத்திருக்கின்றார். (வச. 1,5). நாம் எதிர்நோக்குகின்ற போராட்டம் நிறைந்த நேரங்களை விட அவருடைய மாறாத அன்பு பெரிதென்று நினைவுபடுத்துகின்றார் (வச. 12).
தேவன் நம்மோடு இருக்கிறார், வாழ்வின் எல்லா நேரங்களிலும் நம்மைச் சுமந்து, வழிநடத்த அவர் போதுமானவராக இருக்கின்றார் என்ற நம்பிக்கை நம் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் நமக்கு உறுதியைத் தருகிறது. ஒருவேளை வாழ்வில் சில நேரங்கள் நம்மை மேற்கொள்ளுவது போல பயமுறுத்தினாலும் அவருடைய உதவி சரியான நேரத்தில் நமக்கு வரும்.