என்னுடைய பிரியமான நண்பனுக்கு
அப்போஸ்தலனாகிய யோவான் அவனுடைய நண்பன் காயுவுக்கு முதலாம் நூற்றாண்டில் செய்தது, இப்பொழுது இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டில் மரித்துக் கொண்டிருக்கின்ற ஒரு செயலாகும். யோவான் அவனுக்கு கடிதம் எழுதுகின்றார்.
நியூயார்க் டைம்ஸ் என்ற பத்திரிக்கையின் ஆசிரியர்களில் ஒருவரான கேத்தரின் பீல்ட் என்பவர், “கடிதம் எழுதுவது பழைய கால கலைகளில் ஒன்றாகிவிட்டது. கடிதங்களைப் பற்றி எண்ணும் போது, தர்ஷீசு பட்டணத்தானாகிய பவுல் நம் மனதில் வருகின்றார்” என எடுத்துக்காட்டாகக் கூறினார். அவரோடு நாம் அப்போஸ்தலனாகிய யோவானையும் சேர்த்துக் கொள்ளலாம்.
அப்போஸ்தலனாகிய யோவான் காயுவுக்கு எழுதிய கடிதத்தில் “உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்’ என நம்பிக்கையைக் கொடுக்கின்றார். காயுவின் உண்மையைக் குறித்து ஊக்கம் தரும் வார்த்தைகளையும் சபையின் மீது அவன் வைத்திருக்கின்ற அன்பையும் குறித்து எழுதுகின்றார். சபையிலுள்ள ஒரு பிரச்சனையைக் குறித்தும் யோவான் குறிப்பிடுகின்றார். ஆனால், அதனைப்பற்றி பின்னர் தனித்தனியாக எழுதுவதாக வாக்களித்துள்ளார். தேவ நாம மகிமைக்காக நல்லவற்றைச் செய்வதின் கனத்தையும் பற்றி எழுதுகின்றார் எல்லாவற்றிற்கும் மேலாக இது தன் நண்பனை ஊக்கப்படுத்தும்படி சவாலாக எழுதப்பட்ட ஒரு கடிதம்.
மின்னணு தொடர்பு சாதனம் வந்த பின்பு கடிதம் எழுதும் பண்பாடு மறைந்து கொண்டிருக்கிறது. ஆனால், இது நாம் பிறரை ஊக்கப்படுத்துவதிலிருந்து நம்மைத் தடுத்துவிடக்கூடாது. பவுல் ஊக்கமளிக்கும் கடிதங்களை தோல் சுருள்களில் எழுதினார். நாமும் பிறரை வேறுபல வகைகளில் ஊக்கப்படுத்தலாம். இதன் உள்ளான கருத்து, நாம் எவ்வகையில் பிறரை ஊக்கப்படுத்துகிறோம் என்பதல்ல, ஆனால், பிறரை ஊக்கப்படுத்தும்படி ஒரு சிறிய நேரத்தைக் கொடுத்து, இயேசுவின் நாமத்தினால் அவர்கள் மீது நாம் அக்கறை கொள்கிறோம் என்பதைத் தைரியப்படுத்துவதாகும்.
யோவானின் கடிதத்தைத் திறந்த காயு அநுபவித்த ஊக்கத்தை நினைத்துப் பாருங்கள். நாமும் ஊக்கத்தை கொடுக்கும்படி ஒரு தொலைபேசித் தொடர்பு மூலமாகவோ அல்லது சிந்திக்கச் செய்யும் ஓர் எழுத்தின் மூலமாகவோ தேவனுடைய அன்பை நம்முடைய நண்பர்கள் மீது பிரகாசிக்கச் செய்வோமா?
சுகம் தரும் வெள்ளம்
இடியோடு கூடிய மழையென்றால் எனக்கு மிகவும் விருப்பம். மிகப் பெரிய புயல், இடி முழக்கத்தோடு தண்ணீரைக் கொட்டிக் கொண்டிருக்கும் போதெல்லாம், சிறுமியாக இருந்த நான், எனது உடன் பிறப்புகளுடன், எங்கள் வீட்டின் வெளியே அங்கும் இங்குமாக ஓடி, வழுக்கி விழுந்து, சறுக்கி விளையாடி மகிழ்வேன். நாங்கள் வீட்டிற்குத் திரும்பும் போது எங்கள் எலும்புவரை நனைந்ததைப் போன்றிருப்போம்.
அந்த சில நிமிடங்கள் நாங்கள் மிகவும் உற்சாகமாகவும், மிகவும் வலிமையான ஒன்றினுள் மூழ்கியிருப்பதைப் போன்றும் உணர்வோம். அது ஒரு விளையாட்டா அல்லது பயங்கரமானதாவென நாங்கள் அறியோம்.
சங்கீதம் 107ல் கூறப்பட்டுள்ளபடி கர்த்தர் அவாந்தரவெளியைத் தண்ணீர்த்தடாகமாகவும், வறண்ட நிலத்தை “நீரூற்றுகளாகவும்” மாற்றுவார் (வச. 35) என்பதை வாசிக்கும் போது என்னுடைய இளமைப்பருவ இந்நிகழ்வு என் மனதிற்கு வந்தது. இவ்வாறு ஒரு பாலைவனத்தைச், சோலைவனமாக ஒரு மழை மாற்றியதெனில், அது ஒரு சாதாரண மழையல்ல, கொட்டித் தீர்த்த பெரு மழை, வறண்ட நிலத்தின் ஒவ்வொரு வெடிப்பின் வழியேயும் சென்று, அந்நிலத்திற்கு ஒரு புதிய வாழ்வு கொடுத்த மழை.
நாமும் இத்தகைய புதுப்பித்தலுக்காகத் தான் ஏங்கிக் கொண்டிருக்கிறோமல்லவா? நம்முடைய வாழ்வும் பசியோடும், தாகத்தோடும் ஆத்துமா தொய்ந்ததாகவும் வனாந்திரத்திலே அவாந்தரவழியாய் அலைந்து திரிந்தும் தாபரிக்கும் ஊரைக் காணமலிருப்பதைப் போன்றிருக்கின்றதோ? (வச. 4-5). நமக்கு நம்பிக்கைக்கும் மேலான ஒன்று தேவை. நம்மில் வேரூன்றிவிட்ட பாவம் நம்மை அந்தகாரத்திலும் மரண இருளிலும் அழித்திவிட்டதோ? (வச. 10-11). நம்முடைய இருதயத்தில் ஒரு மாற்றம் தேவை.
இத்தகைய மாற்றத்தை நம்முடைய தேவனாலேயே தர முடியும் (வச. 20). நம்முடைய கட்டுகளின் சங்கிலிகளை உடைக்க வல்லவரிடம் நம்முடைய பயங்களையும், அவமானங்களையும் கொண்டு வருவோம். அவர் நம் இருளை அகற்றி ஒளிமயமாக்குவார் (வச. 13-14).
நாம் பயப்படும் பொது ஒரு நங்கூரம்
நீங்கள் கவலைப்படுபவரா? நானும் அப்படித்தான். நான் அநேகமாக எல்லா நாட்களிலும் பதட்டத்தோடு போராடிக் கொண்டிருப்பவன். நான் பெரிய காரியங்களைக் குறித்தும் கவலைப்படுவேன், சிறிய காரியங்களைக் குறித்தும் கவலைப்படுவேன், சிலவேளைகளில் எல்லாவற்றைக் குறித்தும் கவலைப்படுவேன். என்னுடைய வாலிபப்பருவத்தில் ஒருமுறை என்னுடைய பெற்றோர் வர 4 மணி நேரம் தாமதமான போது, நான் காவல்துறையை அழைத்துவிட்டேன்.
வேதாகமம் நம்மை பயப்பட வேண்டாமென அடிக்கடி சொல்லுகிறது. தேவனுடைய நன்மையும், வல்லமையும் நமக்கிருப்பதால், அவர் இயேசுவை நமக்காக பலியாக அனுப்பியதால் பரிசுத்த ஆவியானவரை நமக்கு வழிகாட்டும்படி தந்துள்ளதால், நம்முடைய வாழ்வை பயம் மேற்கொள்ளத் தேவையில்லை. நாம் கடினமான சூழல்களையும் எளிதாக சந்திக்கலாம். தேவன் நம்முடைய சூழ்நிலைகளில் நம்மோடுவருவதாக வாக்களித்துள்ளார்.
நான் மிகவும் பயப்பட்ட நேரங்களில் எனக்கு மிகவும் உதவிய பகுதி ஏசாயா 51:12-16. இப்பகுதியில், மிக அதிகமாக வேதனைகளை அனுபவித்த அவருடைய ஜனங்களிடம் தேவன் இன்னும் அவர்களோடு இருப்பதாக நினைப்பூட்டுகின்றார். நாம் எத்தகைய கடினமான வேளைகளை சந்தித்தாலும் அவருடைய ஆறுதலளிக்கும் பிரசன்னம் நம்மோடிருப்பது உண்மை. “நான் நானே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்” என ஏசாயா தீர்க்கன் மூலமாக உரைக்கின்றார்.
நான் இந்த வாக்குத்தத்தத்தை நேசிக்கின்றேன், இந்த வார்த்தைகள் என் ஆன்மாவையும், உணர்வுகளையும் வலுப்படுத்துகின்ற நங்கூரம், என்னுடைய பயம் என் மேல் விழுந்து என்னை அமுக்குகையில், என் வாழ்வின் துயரங்கள் என்னை மேற்கொள்ள முயற்சிக்கும் போது, நான் இந்த வாக்கைப் பற்றிக்கொள்வேன் (வச. 13). இந்தப் பகுதியின் மூலம் நாம் நம்பிக்கையோடு அவரைச் சார்ந்து “வானங்களை விரித்தவரை”, நம்மை ஆறுதல் செய்கிறவரை, நோக்கி நம் கண்களை உயர்த்திப் பார்க்கும்படி நம்மையழைக்கின்றார் (வச. 13).
எல்லையில்லா அன்பு
ஒரு புத்திசாலியான நண்பன் என்னிடம் “நீ எப்பொழுதும்” அல்லது “நீ ஒரு போதும்” என்ற வார்த்தைகளை என்னுடைய சம்பாஷணைகளில் தவிர்த்துவிடுமாறும், முக்கியமாக என்னுடைய குடும்பத்தினரோடு பேசும் போதும் தவிர்க்கும்படியும் கூறினான். நாம் நேசிப்பவர்களிடம் கூட அன்பற்ற வார்த்தைகளைக் கூறி அவர்களை எளிதாக விமர்சனம் செய்துவிடுகின்றோம். ஆனால், நம்முடைய தேவன் நம்மீது வைத்திருக்கும் எல்லையில்லா அன்பில் ஒருபோதும் மாற்றமேயில்லை.
சங்கீதம் 145ல் “யாவரும்”, “எல்லாம்” “எல்லாரும்” என்ற வார்த்தைகள் அதிகம் உள்ளன. “கர்த்தர் எல்லார்மேலும் தயவுள்ளவர்; அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாக் கிரியைகளின் மேலுமுள்ளது” (வச. 9) “கர்த்தர் விழுகிற யாவரையும் தாங்கி, மடங்கடிக்கப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகிறார்” (வச. 14) “கர்த்தர் தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரும், தமது கிரியைகளிலெல்லாம் கிருபையுள்ளவருமாயிருக்கிறார்” (வச. 17). “கர்த்தர் தம்மில் அன்புகூருகிற யாவரையும் காப்பாற்றி, துன்மார்க்கர் யாவரையும் அழிப்பார்” (வச. 20).
இந்த சங்கீதம், தேவனுடைய அன்பு எல்லையில்லாதது, அவர் பாரபட்சமில்லாமல் எல்லார் மேலும் அன்பு கூருகின்றார் என அநேகமுறை கூறுகின்றது. புதிய ஏற்பாட்டில் இந்த அன்பின் வெளிப்பாட்டை இயேசு கிறிஸ்துவில் காண்கின்றோம். “தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்” (யோவா. 3:16).
சங்கீதம் 145ல், “தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் கர்த்தர் சமீபமாயிருக்கிறார். அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களை இரட்சிக்கிறார்” (வச. 18-19) எனக் காண்கின்றோம்.
தேவன் நம்மீது வைத்திருக்கின்ற அன்பு என்றும் நிலையானது, அது ஒருபோதும் ஒழியாது.
நம்மைப் போன்ற பாவிகள்
என்னுடைய சிநேகிதியின் பெயர் ஈடித். அவர் தான் இயேசுவைப் பின்பற்ற தீர்மானம் செய்த நாளைக் குறித்து எனக்குச் சொன்னாள்.
ஈடித் தேவனைப் பற்றி எந்த அக்கறையும் கொண்டவளல்ல. ஒரு நாள் தன் ஆன்மாவில் ஏற்பட்ட விரக்தியோடு, அந்த ஞாயிறு காலை, தன் வீட்டின் அருகிலுள்ள ஆலயத்தினுள் சென்றாள். அன்றைய தினம் போதகர் வேதாகமத்திலிருந்து வாசித்த பகுதி லூக்கா 15:1-2 “சகல ஆயக்காரரும் பாவிகளும அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள். அப்பொழுது பரிசேயரும், வேதபாரகரும் முறுமுறுத்து, அவர் பாவிகளை ஏற்றுக் கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள்” என்பதாக வாசிக்கப்பட்டது. ஆனால், அது ஈடித்தின் காதில் “இவர் பாவிகளை ஏற்றுக் கொண்டு அவர்களோடு ஈடித்தையும் ஏற்றுக் கொண்டார்” என்பதாக விழுந்தது. உடனே அவள் தன் இருக்கையில் நிமிர்ந்து உட்கார்ந்தாள். சற்று நேரத்தில் தான் தவறாகப் புரிந்து கொண்டதை உணர்ந்து கொண்டாள். ஆனால். இயேசு பாவிகளை ஏற்றுக் கொண்டார் என்ற எண்ணமும் அதில் ஈடித்தும் அடங்குவாள் என்ற எண்ணமும் அவளில் தங்கி விட்டது. அன்று மாலை அவள் இயேசுவை நெருங்கி வரத் தீர்மானித்தாள். அவரின் வார்த்தைக்குச் செவி கொடுத்தாள். சுவிசேஷங்களை வாசிக்க ஆரம்பித்தாள். தன்னுடைய நம்பிக்கையை இயேசுவின் மீது வைத்து அவரைப் பின் தொடர்ந்தாள்.
இயேசுவின் நாட்களில் இருந்த வேதபாரகர்கள், இயேசு பாவிகளோடு உணவருந்தினார், அநியாயக்காரரோடு சாப்பிட்டார் என்ற உண்மையை அவதூறான செய்தியாகப் பரப்பினர். அவர்களுடைய சட்டம் அவர்களை அத்தகைய ஜனங்களோடு பழகுவதைத் தடுத்தது. ஆனால், இயேசு அவர்கள் உருவாக்கிக் கொண்ட சட்டத்திற்கு எந்த கவனமும் செலுத்தவில்லை அவர் புறக்கணிக்கப்பட்டவர்களையும், தள்ளப்பட்டவர்களையும், அவர்கள் எவ்வளவு தூரம் விலகியிருந்தாலும் தன்னோடு சேர்த்துக் கொண்டார்.
இப்பொழுதும் இது உண்மை. இயேசு பாவிகளை ஏற்றுக் கொள்கின்றார்;. உன்னையும் ஏற்றுக் கொள்கின்றார்.
சவால்களை மேற்கொள்ளல்
நாங்கள் ஒவ்வொரு மாதமும், ஒவ்வொருவரும் தங்களின் தனிப்பட்ட இலக்கினை அடைந்தனரா என்பதைக் குறித்த கணக்கைக் கொடுக்கும்படி ஒன்று கூடுவதுண்டு. என்னுடைய சிநேகிதி மேரி தன்னுடைய சாப்பாட்டு அறையின் நாற்காலிகளின் இருக்கைகளை அந்த ஆண்டு இறுதிக்குள் புதுப்பிக்க விரும்பினாள். எங்களுடைய நவம்பர் மாதக் கூடுதையில், அக்டோபர் மாதத்திலிருந்து தன் வேலையின் முன்னேற்றத்தை அவர் வேடிக்கையாகத் தெரிவித்தாள். “என்னுடைய நாற்காலிகளைப் புதிப்பிப்பதற்குப் பத்து மாதங்களும் இரண்டு மணி நேரமும் ஆனது” என்றாள். பல மாதங்களாக அந்த வேலைக்கான பொருட்கள் கிடைக்கவில்லை, சரியான நேரம் அமையவில்லை, தன்னுடைய குழந்தைகளின் தேவைகளைப் பார்க்க வேண்டியிருந்தது எனப் பல காரணங்கள் அவ்வேலையைத் தடுத்தன. ஆனால், அந்த வேலைக்கென இரண்டு மணி நேரம் மட்டுமே செலவழித்து, முடிக்க முடிந்தது, என்றாள்.
தேவன் நெகேமியாவை ஒரு பெரிய வேலைக்கென்று அழைக்கின்றார். எருசலேமின் அலங்கம் இடிக்கப்பட்டு பல ஆண்டுகளாக பாழடைந்து கிடக்கின்றது. அதனைக் கட்டி எழுப்ப நெகேமியாவை அழைக்கின்றார் (நெகே. 2:3-5,12).
அவர் ஜனங்களை இந்த வேலையில் வழிநடத்தும்போது, ஜனங்கள் பிறரின் கேலிப் பேச்சையும், தாக்குதலையும், கவனச் சிதறலையும் பாவச் சோதனைகளையும் சந்திக்க நேர்ந்தது (4:3,8; 6:10-12)). ஆனாலும், தேவன் அவர்கள் தங்கள் வேலையில் உறுதியாகவும், தீர்மானத்தோடு முயற்சி செய்யவும், சோர்ந்து போகாமல் தங்கள் வேலையை ஐம்பத்திரண்டு நாட்களில் முடிக்க பெலனளித்தார்.
இத்தகைய சவால்களை மேற்கொள்ள ஒரு தனிப்பட்ட ஆர்வமும் இலக்கையும் விட இன்னும் அதிகமாக ஒன்று தேவை. இந்த வேலை தேவனால் கொடுக்கப்பட்டது என்ற புரிந்து கொள்ளலே நெகேமியாவிற்கு இந்த வேலையை முடிப்பதற்குத் தேவையான ஆற்றலைத் தந்தது. தேவனுடைய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற உணர்வு, அவருடைய ஜனங்களுக்கு எதிர்ப்பையும் மேற்கொண்டு அவருடைய தலைமையின் கீழ் வேலை செய்ய பெலனீந்தது. தேவன் நம்முடைய ஒரு செயலைச் செய்து முடிக்கும்படி பணிக்கும்போது, ஓர் உறவைச் சரிசெய்யும்படி அல்லது அவர் செய்த நன்மைகளை பிறரோடு பகிர்ந்துகொள்ள அழைக்கும் போது, அவர் நமக்குத் தேவையான திறமையையும், பெலத்தையும் கொடுத்து அவர் சொன்னதை நிறைவேற்றி முடிக்கச் செய்கின்றார். நம் பாதையில் நாம் எத்தனை சவால்களைச் சந்திக்க நேரிட்டாலும் அவர் சொன்னதை நிறைவேற்றுவார்.
துக்கத்தில் நம்பிக்கை
நான் பத்தொன்பது வயதாயிருந்த போது என்னுடைய நெருங்கிய சிநேகிதி ஒரு கார் விபத்தில் மரித்துக் போனாள். அதன் பின்னர் வாரங்கள், மாதங்களாக ஒவ்வொரு நாளும் நான் துக்கத்தின் பாதையில் நடந்தேன். ஓர் அற்புதமான சிநேகிதியை இளம் வயதில் இழந்ததினால் ஏற்பட்ட வேதனை என் பார்வையை மறைத்தது. நான் சில வேளைகளில் என்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதையே உணராதிருந்தேன். துக்கமும், வேதனையும் என் கண்களைக் குருடாக்கி, தேவனைக் காணக் கூடாதவாறு செய்தன.
லூக்கா 24ல், இயேசுவின் மரணத்திற்கு பின் இரு சீடர்கள் குழப்பமடைந்தவர்களாய், இருதயம் நொறுங்குண்டவர்களாய் நடந்து செல்கையில், தாங்கள் உயிர்த்தெழுந்த இயேசுவோடு நடந்து செல்கின்றோம் என்பதையே உணராதிருந்தனர். இயேசு அவர்களுக்கு வேதாகமத்திலிருந்து அவர்களுடைய இரட்சகர் ஏன் மரிக்க வேண்டும், உயிர்த்தெழ வேண்டும் என்பதை அவர்களுக்கு விளக்கிக் காண்பித்தார். பின்னர் அவர் அப்பத்தை எடுத்துப் பிட்ட போதுதான் அவர் இயேசு என்று தெரிந்து கொண்டனர் (வச. 30-31). இயேசு கிறிஸ்துவின் பாடுகளையும், மரணத்தையும் நேரடியாகப் பார்த்த இயேசுவின் சீடர்களுக்கு இயேசு தன்னை மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தவராகக் காண்பித்து அவர்கள் மீண்டும் நம்பிக்கை பெறச் செய்தார்.
அந்த சீடர்களைப் போன்று நாமும் குழப்பத்தாலோ, கவலையினாலோ சோர்ந்து காணப்படலாம். ஆனால். இயேசுகிறிஸ்து உயிரோடிருக்கிறார். இவ்வுலகிலும், நம்மிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்ற உண்மை நமக்கு நம்பிக்கையையும் ஆறுதலையும் தருகிறது. நாம் இன்னமும் இருதய வேதனையையும் வலியையும் சந்தித்துக் கொண்டிருக்கும் போது நாம் இயேசுவை நம்மோடு நம்முடைய வேதனையின் பாதையில் நடந்து வரும்படி அழைப்போம். இயேசு உலகிற்கு ஒளியாயிருக்கிறார் (யோவா. 8:12). அவரே நம் பாதையை மறைக்கும் பனிமூட்டத்தினூடே நம்பிக்கையின் ஒளியைத் தருபவர்.
தேனீக்களும், பாம்புகளும்
சில பிரச்சனைகள் என்றால் தந்தையின் பெயர் அங்கு எழுதப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக, சமீபத்தில் என்னுடைய குழந்தைகள் எங்கள் வீட்டின் முன் தாழ்வாரத்தின் பகுதியில், சுவரில் ஏற்பட்ட விரிசலில் தேனீக்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். எனவே நான் பூச்சி விரட்டும் மருந்தோடு, தேனீக்களோடு போராட சென்றேன். ஐந்து முறை தேனீக்களால் கொட்டப்பட்டேன்.
பூச்சிகளால் கொட்டப்படுதல் எனக்கு விருப்பமில்லாத செயல்தான். ஆனால், என் பிள்ளைகளையோ, மனைவியையோ அவை கடிப்பதைவிட என்னைக் கடிப்பதே மேல். என் குடும்பத்தினரின் நல்வாழ்வுதான் என்னுடைய வேலையின் பிரதான நோக்கமாயிருக்கும். என் குழந்தைகளுக்கு ஒரு தேவையிருந்தால், அவர்கள் என்னைக் கொண்டே செய்யவிரும்புவார்கள். அவர்கள் பயப்படும் காரியங்களில் அவர்களைப் பாதுகாக்க அவர்கள் என்னை நம்பினார்கள்.
மத்தேயு 7ல், இயேசு நமக்குப் போதிப்பது என்னவெனின், நம்முடைய தேவைகளைக் குறித்து தேவனிடம் நம்பிக்கையோடு வேண்டிக் கொள்ள வேண்டும். இதனைப் புரிந்து கொள்ள இயேசு ஒரு விளக்கத்தைத் தருகின்றார். “உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா?” (வச. 9-10) ஓர் அன்பு பெற்றோர் எதைக் கொடுப்பார் என நாம் அறிந்திருக்கின்றோம். ஆனால், இயேசு நம் பிதாவின் தயாள குணத்தின் மீதுள்ள நம்பிக்கையை விட்டுவிடக் கூடாதென்பதற்காக “ஆகையால் பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும் போது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?” (வச. 11) என்றார்.
நான் என்னுடைய குழந்தைகளை இதையும் விட அதிகமாக நேசிக்க முடியாதென நினைக்கின்றேன். ஆனால், தேவன் நம்மீது வைத்திருக்கும் அன்பில் மறைந்து போகும் என இயேசு கூறுகின்றார்.
அளவில்லாத அன்பின் வெளிப்பாடு
எங்களுடைய திருமண நாளில் என்னுடைய கணவன் ஆலன் பெரிய மலர்கொத்து ஒன்றைப் பரிசாகக் கொடுத்தார். அவர் வேலை செய்த கூட்டுறவின் சீர்திருத்தத்தின் போது தன் வேலையை இழந்ததால், நான் இந்த அவசியமற்ற வீணான அன்பின் வெளிப்பாடு தொடர்வதை விரும்பவில்லை. ஆனால், எங்களது பத்தொன்பதாவது திருமணநாளில் வண்ண மலர்கள் எங்களது சாப்பாட்டு மேசையிலிருந்து ஜொலித்து என்னை வரவேற்றுக் கொண்டிருந்தன. இந்த வருடாந்திர வழக்கத்தைத் தொடர்வதற்கு அவர் விரும்பியதால், ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய தொகையைச் சேமித்து தன்னுடைய தனிப்பட்ட அன்பை வெளிப்படுத்த போதுமானதாக வைத்திருப்பார்.
என்னுடைய கணவனின் கரிசனையான திட்டமிடல் அவருடைய தாராள குணத்தை வெளிப்படுத்தியது. இது பவுல் கொரிந்து சபையினரை ஊக்கப்படுத்தியதைப் போன்றிருந்தது. இங்கு பவுல் அப்போஸ்தலன் அந்த சபையினரின் உதாரத்துவமான காணிக்கையைக் குறித்துப் புகழ்ந்துள்ளார் (2 கொரி. 9:2,5). உற்சாகமாய் கொடுக்கிறவர்கள் பேரில் தேவன் பிரியமாயிருக்கிறார் என அவர்களுக்குச் சொல்கின்றார் (வச. 6-7). ஆனால், ஒருவரும் நம்முடைய அன்புத் தந்தையைவிட அதிகமாகக் கொடுப்பதில்லை, அவரே நம்முடைய தேவையனைத்திற்கும் தருவதற்கு எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கிறவர் (வச. 8-10).
நாம் எல்லாவித கொடையிலும், ஒருவரையொருவர் தாங்குவதிலும் உதாரத்துவமாய் இருக்க வேண்டும், ஏனெனில், தேவன் நம்முடைய உலகத் தேவைகள், உணர்வு சார்ந்தவை மற்றும் ஆவிக்குரிய தேவைகள் யாவையும் சந்திக்கின்றார் (வச. 11). நாம் கொடுப்பதன் மூலம் நம்முடைய தேவன் நமக்குத் தந்துள்ளவற்றிற்கு நன்றியை வெளிப்படுத்துகின்றோம். நாம் பிறரையும் கொடுக்கும்படி ஊக்கப்படுத்தி, தேவன் தந்துள்ளவற்றிலிருந்து அவருக்கு கொடுத்து அவரைத் துதிக்கலாம் (வச. 12-13). அன்பையும் நன்றியையும் அதிகமாக வெளிப்படுத்துவதே நம்முடைய உதாரத்துவமான கொடை. அது தேவன் அவருடைய பிள்ளைகளின் தேவைகளையெல்லாம் சந்திக்கின்றார் என்ற நம்பிக்கையின் வெளிப்படுதலேயாகும்.