நான் பத்தொன்பது வயதாயிருந்த போது என்னுடைய நெருங்கிய சிநேகிதி ஒரு கார் விபத்தில் மரித்துக் போனாள். அதன் பின்னர் வாரங்கள், மாதங்களாக ஒவ்வொரு நாளும் நான் துக்கத்தின் பாதையில் நடந்தேன். ஓர் அற்புதமான சிநேகிதியை இளம் வயதில் இழந்ததினால் ஏற்பட்ட வேதனை என் பார்வையை மறைத்தது. நான் சில வேளைகளில் என்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதையே உணராதிருந்தேன். துக்கமும், வேதனையும் என் கண்களைக் குருடாக்கி, தேவனைக் காணக் கூடாதவாறு செய்தன.

லூக்கா 24ல், இயேசுவின் மரணத்திற்கு பின் இரு சீடர்கள் குழப்பமடைந்தவர்களாய், இருதயம் நொறுங்குண்டவர்களாய் நடந்து செல்கையில், தாங்கள் உயிர்த்தெழுந்த இயேசுவோடு நடந்து செல்கின்றோம் என்பதையே உணராதிருந்தனர். இயேசு அவர்களுக்கு வேதாகமத்திலிருந்து அவர்களுடைய இரட்சகர் ஏன் மரிக்க வேண்டும், உயிர்த்தெழ வேண்டும் என்பதை அவர்களுக்கு விளக்கிக் காண்பித்தார். பின்னர் அவர் அப்பத்தை எடுத்துப் பிட்ட போதுதான் அவர் இயேசு என்று தெரிந்து கொண்டனர் (வச. 30-31). இயேசு கிறிஸ்துவின் பாடுகளையும், மரணத்தையும் நேரடியாகப் பார்த்த இயேசுவின் சீடர்களுக்கு இயேசு தன்னை மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தவராகக் காண்பித்து அவர்கள் மீண்டும் நம்பிக்கை பெறச் செய்தார்.

அந்த சீடர்களைப் போன்று நாமும் குழப்பத்தாலோ, கவலையினாலோ சோர்ந்து காணப்படலாம். ஆனால். இயேசுகிறிஸ்து உயிரோடிருக்கிறார். இவ்வுலகிலும், நம்மிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்ற உண்மை நமக்கு நம்பிக்கையையும் ஆறுதலையும் தருகிறது. நாம் இன்னமும் இருதய வேதனையையும் வலியையும் சந்தித்துக் கொண்டிருக்கும் போது நாம் இயேசுவை நம்மோடு நம்முடைய வேதனையின் பாதையில் நடந்து வரும்படி அழைப்போம். இயேசு உலகிற்கு ஒளியாயிருக்கிறார் (யோவா. 8:12). அவரே நம் பாதையை மறைக்கும் பனிமூட்டத்தினூடே நம்பிக்கையின் ஒளியைத் தருபவர்.