என்னுடைய சிநேகிதியின் பெயர் ஈடித். அவர் தான் இயேசுவைப் பின்பற்ற தீர்மானம் செய்த நாளைக் குறித்து எனக்குச் சொன்னாள்.

ஈடித் தேவனைப் பற்றி எந்த அக்கறையும் கொண்டவளல்ல. ஒரு நாள் தன் ஆன்மாவில் ஏற்பட்ட விரக்தியோடு, அந்த ஞாயிறு காலை, தன் வீட்டின் அருகிலுள்ள ஆலயத்தினுள் சென்றாள். அன்றைய தினம் போதகர் வேதாகமத்திலிருந்து வாசித்த பகுதி லூக்கா 15:1-2 “சகல ஆயக்காரரும் பாவிகளும அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள். அப்பொழுது பரிசேயரும், வேதபாரகரும் முறுமுறுத்து, அவர் பாவிகளை ஏற்றுக் கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள்” என்பதாக வாசிக்கப்பட்டது. ஆனால், அது ஈடித்தின் காதில் “இவர் பாவிகளை ஏற்றுக் கொண்டு அவர்களோடு ஈடித்தையும் ஏற்றுக் கொண்டார்” என்பதாக விழுந்தது. உடனே அவள் தன் இருக்கையில் நிமிர்ந்து உட்கார்ந்தாள். சற்று நேரத்தில் தான் தவறாகப் புரிந்து கொண்டதை உணர்ந்து கொண்டாள். ஆனால். இயேசு பாவிகளை ஏற்றுக் கொண்டார் என்ற எண்ணமும் அதில் ஈடித்தும் அடங்குவாள் என்ற எண்ணமும் அவளில் தங்கி விட்டது. அன்று மாலை அவள் இயேசுவை நெருங்கி வரத் தீர்மானித்தாள். அவரின் வார்த்தைக்குச் செவி கொடுத்தாள். சுவிசேஷங்களை வாசிக்க ஆரம்பித்தாள். தன்னுடைய நம்பிக்கையை இயேசுவின் மீது வைத்து அவரைப் பின் தொடர்ந்தாள்.

இயேசுவின் நாட்களில் இருந்த வேதபாரகர்கள், இயேசு பாவிகளோடு உணவருந்தினார், அநியாயக்காரரோடு சாப்பிட்டார் என்ற உண்மையை அவதூறான செய்தியாகப் பரப்பினர். அவர்களுடைய சட்டம் அவர்களை அத்தகைய ஜனங்களோடு பழகுவதைத் தடுத்தது. ஆனால், இயேசு அவர்கள் உருவாக்கிக் கொண்ட சட்டத்திற்கு எந்த கவனமும் செலுத்தவில்லை அவர் புறக்கணிக்கப்பட்டவர்களையும், தள்ளப்பட்டவர்களையும், அவர்கள் எவ்வளவு தூரம் விலகியிருந்தாலும் தன்னோடு சேர்த்துக் கொண்டார்.

இப்பொழுதும் இது உண்மை. இயேசு பாவிகளை ஏற்றுக் கொள்கின்றார்;. உன்னையும் ஏற்றுக் கொள்கின்றார்.