எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

பிலிப் யான்சிகட்டுரைகள்

பயப்படாதிருங்கள்

எப்பொழுது ஒரு தேவதூதன் தோன்றினாலும் அவன் கூறும் முதல் வார்த்தை, “பயப்படாதிருங்கள்” என்பதாக வேதாகமத்தில் காண்கின்றோம். இது நமக்கு ஆச்சரியத்தைக் தருகிறது. இயற்கைக்கு அப்பாற்பட்டது புவியைத் தொடும் போது, அதைத் காணும் மாந்தர் பயத்தால் முகங்குப்புற விழுகின்றனர். ஆனால், தேவன் தன்னைக் காண்பிக்கும் போது பயப்படத்தக்க ரூபத்தில் இருப்பதில்லையென லூக்கா கூறுகின்றார். இயேசு கிறிஸ்து பிறந்த போது, விலங்குகளின் மத்தியிலிருந்தார், தீவனத் தொட்டியில் கிடத்தப்பட்டார். நாம் பயப்படாமலிருக்கும்படி தேவன் இத்தகைய அணுகுமுறையைத் தேர்ந்தெடுத்தார். ஒரு புதிதாகப் பிறந்த குழந்தையைவிட பயப்படாமலிருக்கத்தக்கது எது?

புவியிலிருக்கும் போது இயேசு தேவனாகவும், மனிதனாகவும் வாழ்ந்தார். அவர் அற்புதங்களைச் செய்தார். பாவங்களை மன்னித்தார். ஆனால், தேவன் பிரகாசமான மேகஸ்தம்பம் அல்லது அக்கினி ஸ்தம்பத்தின் மூலம் வெளிப்படுவதற்கு, யூதர்கள் பழக்கப்பட்டிருந்ததால் அவர்களால் மனிதனான இயேசுவின் மூலம் தேவனைப் பார்க்க முடியவில்லை, குழப்பமடைந்தனர். பெத்லகேமில் பிறந்த ஒரு குழந்தை, ஒரு தச்சனின் மகன், நாசரேத்தூரிலுள்ள ஒரு மனிதன் எப்படி தேவனிடமிருந்து வந்த மேசியாவாக இருக்க முடியும் எனக் கேட்டனர்.

ஏன் தேவன் மனித வடிவில் வந்தார்? பன்னிரண்டு வயது நிரம்பிய இயேசு தேவாலயத்தில் போதகர்களுடன் விவாதித்தக் காட்சி ஒரு சாட்சியாகவுள்ளது. “அவர் பேசக் கேட்ட யாவரும் அவருடைய புத்தியையும், அவர் சொன்ன மாறுத்தரங்களையும் குறித்துப் பிரமித்தார்கள்” என லூக்கா குறிப்பிடுகின்றார் (2:47) முதல் முறையாக சாதாரண ஜனங்கள் தேவனோடு உரையாடுவதைக் காண்கின்றார்கள்.

இயேசு அவருடைய பெற்றோர், போதகர், ஏழை விதவை என்று யாவரோடும் பேசுகின்றார். அவர் முதலில் “பயப்படாதிருங்கள்” என்று சொல்லிக் கொள்ளவில்லை. இயேசுவின் மூலம் தேவன் நம்மருகில் வந்துள்ளார்.

கர்த்தர் பேசுகின்றார்

யோபு புத்தகத்தில் வருகின்ற ஒவ்வொரு உரையாடலும், இவ்வுலகில் ஏன் வேதனைகள் வருகின்றன என்பதைக் குறித்தேயிருப்பதைக் காணலாம். ஆனால், இந்த உரையாடல்கள் எவ்விதத்திலும் யோபுவிற்கு உதவவில்லை. யோபு இருந்தது சந்தேக நெருக்கடியிலல்ல, அது உறவின் நெருக்கடி. அவனால், தேவன் மீது நம்பிக்கையாயிருக்க முடியுமா? எல்லாவற்றிற்கும் மேலாக யோபுவின் தேவை ஒன்றே, தேவன் அவனுக்கு தரிசனமாகி, அவனுடைய இந்த பரிதாப நிலைக்கு காரணமென்ன என்பதை விளக்குமாறு கேட்கின்றான். தேவனை முகமுகமாய் சந்திக்க விரும்பினான்.

இறுதியாக யோபுவின் வேண்டுதல் கேட்கப்பட்டது. யோபுவின் நண்பன் எலிகூ, தேவன் யோபுவைச் சந்திக்க அவனுக்கு எந்தத் தகுதியுமில்லை என விளக்கமளித்த போது, அதற்கு மாறாக தேவன் யோபுவிற்கு தரிசனமாகிறார் (யோ. 38:1).

தேவன் கேட்பவற்றிற்குப் பதிலளிக்க யோபுவோ, அவனுடைய நண்பர்களோ, வேறு எவருமே தயாராக இல்லை. யோபு தேவனிடம் கேட்கும்படி ஒரு பெரிய பட்டியல் நிறைய கேள்விகளை வைத்திருந்தான். ஆனால் யோபு அல்ல தேவனே கேள்விகளைக் கேட்கின்றார். “இப்போதும் புருஷனைப் போல், இடைக்கட்டிக்கொள்; நான் உன்னைக் கேட்பேன், நீ எனக்கு உத்தரவு சொல்லு” (வச. 3) என ஆரம்பிக்கின்றார். யோபுவின் வேதனைகளையும், பிரச்சனைகளையும் குறித்த உரையாடலைக் கொண்டிருந்த முப்பத்தைந்து அதிகாரங்களையும் தள்ளிவிட்ட, கர்த்தர் அற்புதமான இவ்வுலகைக் குறித்த ஒரு கெம்பீரமான கவிதைக்குள் வழிநடத்துகின்றார்.

அனைத்தையும் படைத்த தேவனுக்கும் குறுகிப்போன யோபுவைப் போன்ற மனிதனுக்குமுள்ள மிகப்பெரிய வேறுபாட்டை, தேவனுடைய வார்த்தைகள் வரையறுக்கின்றன. என்னுடைய கேள்விகளுக்கு விடையளிக்க யாரேனும் உளரோ? என்ற யோபுவின் மிகப் பெரிய கேள்விக்கு தெள்ளத் தெளிவான பதிலை தேவனுடைய பிரசன்னம் தருகிறது. யோபுவே பதிலளிக்கின்றான், “நான் எனக்குத் தெரியாததையும், என் புத்திக்கு எட்டாததையும், நான் அறியாததையும் அலப்பினேன்” என்கின்றான் (42:3)

மவுனத்தை கலைத்தல்

பழைய ஏற்பாட்டின் முடிவில் தேவன் தன்னை மறைத்துக் கொண்டதுபோல் தோன்றுகிறது. நான்கு நூற்றாண்டுகளாய் யூதர்கள் ஆச்சரியத்தோடு காத்திருந்தனர். தேவனோ அவர்கள் ஜெபத்தைக் கேளாதவராய், கரிசனையற்றவராய், செயல்படாதவராய் இருப்பதுபோலத் தோன்றியது. மேசியா வருவாரென்ற ஒரே ஒரு பண்டைய வாக்குத்தத்தம் மட்டுமே நம்பிக்கையளித்தது. அந்த வாக்குக்குத்தத்தத்தின் மேலேயே யூதர்கள் அக்கரை வைத்திருந்தனர். திடீரென்று ஆச்சரியமானதொன்று நடந்தது, ஒரு பாலகன் பிறந்ததாக அறிவிக்கப்பட்டது.

அந்த செய்தியைக் கேட்டவர்களின் உற்சாகத்தை லூக்காவில் வாசிக்கிறோம். இயேசுவின் பிறப்பைச் சுற்றி நிகழ்ந்தவையெல்லாம் ஒரு சந்தோஷத்தால் நிறைந்த இசை நிகழ்ச்சி போலிருக்கிறது. பலவித கதாபாத்திரங்கள் மேடையில் தோன்றுகின்றனர். ஒரு வயதான வெள்ளைத்தலை மாமா (லூக். 1:5-25), பிரமிப்படைந்த ஒரு கன்னிகை (லூக். 1:26-38), வயதான தீர்க்கதரிசி அன்னாள் (2:36), மரியாள் பாடிய அருமையான கீதம் (லூக். 1:46-55), தாயின் வயிற்றிற்குள்ளிருந்து துள்ளின இயேசுவின் உறவுப் பாலகன் (லூக். 1:41).

லூக்கா கவனமாக மேசியாவைப்பற்றிய பழைய ஏற்பாட்டு வாக்குத்தத்தங்களோடு நேரடித் தொடர்பு ஏற்படுத்துகிறார். காபிரியேல் தூதன் யோவான் ஸ்நானனை கர்த்தருக்கு வழியை ஆயத்தம் பண்ண அனுப்பப்பட்ட எலியா என்றான் (லூக். 1:17). நிச்சயமாகவே ஏதோ ஒன்று பூமி என்னும் கிரகத்தில் உருவாகிக்கொண்டிருந்தது. ரோமப் பேரரசில் அவர்களாய் தோற்கடிக்கப்பட்ட யூதேயாவின் இருண்ட மூலையிலிருந்த கிராமவாசிகளிடமிருந்து எதோ  ஒரு நன்மையான காரியம் வெடித்து வெளிப்பட்டது.

நல்ல உலகம்

1968 ஆம் வருடத்தில் நிலவை சுற்றி வரும்பொழுது, அப்பொல்லோ 8ன் விண்வெளி வீரர், பில் அன்டர்ஸ், மிக அருகாமையில் தெரிந்த நிலவின் தோற்றத்தை விவரிக்கும் போது, அது ஒரு அறிகுறியை காட்டும் தொடுவானம் என்றும்...விறைப்பானதும், மோசமானதும், பார்வைக்கு விரும்பப்படாத இடமாகத் தோன்றியது என்றும் கூறினார். அதன் பின் விண்வெளி வீரர்கள் மாறிமாறி ஆதி 1:1-10 வசனங்களை பூமியில் காத்திருந்தவர்களுக்கு வாசித்தனர். பின்பு கமான்டர் ஃபிராங் போர்மன் “தேவன் அது நல்லதென்று கண்டார்” என்ற 10ஆம் வசனத்தை வாசித்தபின் “நல்ல உலகத்தில் வாழும் உங்களை தேவன் ஆசீர்வதிப்பாராக” என்று பெருமூச்சுடன் ஒலிபரப்பை முடித்தார்.

வேதாகமத்தின் முதல் அதிகாரம் இரண்டு உண்மைகளை வலியுறுத்துகிறது:

சிருஷ்டிப்பு தேவனுடைய கை வண்ணம். “பின்பு தேவன் சொன்னார்” என்ற சொற்றொடர் ஒரு தாளம்போல இந்த அதிகாரம் முழுவதிலும் தொனிக்கிறது. நாம் வாழும் இந்த மகிமையான உலகம் முற்றிலும் அவருடைய படைப்பே! ஆதியாகமம் 1ஆம் அதிகாரத்திற்குப்பின் வரும் வேதாகமம் முழுவதிலும், இந்த செய்தியையே உறுதிப்படுத்துவதைக் காண்கிறோம். ஒவ்வொரு சரித்திரத்தின் பின்னணியிலும் இருப்பது தேவனே.

சிருஷ்டி நல்லது. இனிய மணியோசைபோல் இந்த அதிகாரம் முழுவதிலும் தொடர்ந்து கேட்கும் ஒரு வசனம் “தேவன் அது நல்லதென்று கண்டார்” என்பதே. தேவன் சிருஷ்டித்த நாளிலிருந்தே சிருஷ்டி பல மாற்றங்களை அடைந்துள்ளது. பூமி கெடுக்கப்படுமுன் எப்படி இருக்க வேண்டுமென்று தேவன் விரும்பினாரோ, அதையே ஆதியாகமம் 1ஆம் அதிகாரம் விவரிக்கிறது. நாம் இன்றைய உலகில் அனுபவிக்கும் இயற்கை அது தேவன் சிருஷ்டித்த ஆதியிலிருந்த பூமியின் மங்கிய எதிரொலியே.

அப்போல்லோ 8 விண்வெளி வீரர்கள், பூமியை வானத்தில் தனியே பிரகாசிக்கும் வர்ணத்தில் தொங்குகிற பந்துபோலக் கண்டார்கள். அது மிக அழகாகவும் அதே சமயத்தில் உடையக்கூடியதாகவும் தோன்றியது. இது ஆதியாகமம் 1 ஆம் அதிகாரத்தின் காட்சியே!

சமுதாயத்தைக் கட்டுதல்

நீங்கள் இணைந்து வாழ விரும்பாத ஒரு நபரோடு சேர்ந்து வாழ வேண்டிய சூழ்நிலைதான் “சமுதாயம்” என்று ஹென்ரி நவ்வென் கூறுகிறார். பொதுவாக நாம் நமக்குப் பிடித்தமான மக்கள் மத்தியில்தான் வாழ விரும்புகிறோம். அது சமுதாயமல்ல; அது ஒரு பொழுதுபோக்கு குழுவாக இருக்கலாம். அல்லது பிறருடன் சேர விரும்பாத சுயநலக் குழுவாக இருக்கலாம். ஒரு பொழுதுபோக்குக் குழுவை யார் வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு சமுதாயத்தை உருவாக்க சிறந்த பண்பும், ஒருவரோடொருவர் எண்ணங்களை பகிர்ந்துகொள்ளும் தன்மையும், கடின உழைப்பும் தேவையாக உள்ளன.

சரித்திரத்திலேயே பலதரப்பட்ட மக்களை முதன் முதலாக ஒன்றாக இணைத்த நிறுவனம் கிறிஸ்தவ திருச்சபையாகும். ஆதித்திருச்சபையில் யூதர்களும், புறஜாதிகளும், ஆண்களும், பெண்களும்; அடிமைகளும், சுயாதீனர்களும் ஒரே சமமான நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். இதைக் குறித்துப் பவுல் “தேவனுக்குள்ளே ஆதி காலமுதல் மறைந்திருந்த இரகசியம்” என்று வெகு தெளிவாக விளக்கியுள்ளார். திருச்சபையில் பலதரப்பட்ட மக்களை ஒன்று சேர்த்து ஒரு கிறிஸ்தவ சமுதாயத்தை உருவாக்குவதின் மூலம், உலகத்தையும் உன்னதங்களிலுள்ள துரைத்தனங்களையும், அதிகாரங்களையும் ஈர்க்கத்தக்கதான சந்தர்ப்பம் கிடைக்கிறது என்று பவுல் கூறியுள்ளார் (எபே. 3:9-10).

வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் இன்றயத் திருச்சபை இச்செயலை செய்ய தவறிவிட்டது. ஆனாலும், நான் செல்லும் பல இடங்களில் திருச்சபையானது பல தலைமுறைகளை ஒன்றாக இணைக்கும் இடமாக உள்ளது. குழந்தைகளைக் கரங்களில் ஏந்தியுள்ள தாய்மார்கள், வேண்டாத நேரங்களில் புழுப்போல நெளிந்து கொண்டும் சிரித்துக் கொண்டும் இருக்கும் சிறார்கள், எல்லா நேரங்களிலும் பொறுப்போடு நடக்கக்கூடிய பெரியவர்கள், போதகரது பிரசங்கம் நீண்டதாகவும், சலிப்பூட்டுவதாகவும் இருந்தால் உறக்கத்தில் ஆழ்ந்துபோகும் மக்கள் என்ற பலதரப்பட்ட மக்களை உள்ளடக்கியதுதான் திருச்சபை.

தேவன் நமக்கு அருளுகிற சமுதாய அனுபவத்தை நாம் பெற விரும்பினால், “நம்முடைய தரத்திற்கு ஒத்துவராத மக்களையும்”, நமது திருச்சபையிலே அங்கத்தினர்களாக சேர்த்துக்கொள்ளும் மனமுடையவர்களாக இருக்க வேண்டும்.

பரிபூரண கிருபை

இயேசு போதித்த பரிபூரணமான குறிக்கோள்களும் பரிபூரண கிருபையும் ஒன்றுக்கொன்று முரண்பாடாக தோன்றலாம்.

ஆனால் தேவன் எதிர்பார்க்கும் பூரண நிலையை இயேசு ஒருபோதும் குறைத்துக்கொள்ளவே இல்லை. “பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்” (மத். 5:48) என, மிகுந்த ஆஸ்தியுடைய வாலிபனுக்கு இயேசு பதில் கூறினார். மேலும் நியாயப்பிரமாண வல்லுநர் ஒருவர் நியாயப்பிரமாணத்திலே பிரதான கட்டளை எது என்று கேட்டதற்கு, “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக (22:37). இந்த கற்பனைகளையும் ஒருவனும் முழுமையாய் நிறைவேற்றினதில்லை.

ஆனாலும் அதே இயேசு நமக்கு பரிபூரண கிருபையை கனிவாக அளித்துள்ளார். ஒரு விபச்சாரியை மன்னித்தார், சிலுவையில் தொங்கின திருடனை மன்னித்தார், தன்னை மறுதலித்த சீஷனை மன்னித்தார் மேலும் கிறிஸ்தவர்களை உபத்திரவப்படுத்துவதிலே கீர்த்தி பெற்ற சவுலையும் மன்னித்தார். அனைத்தையும் உள்ளடக்கிய பரிபூரணமான கிருபை இயேசுவை சிலுவையில் அறைந்தவர்களுக்கும் தன் கரம் நீட்டுகிறது: “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” என்றார் (லூக். 23:34). இயேசு கடைசியாகப் பேசின வார்த்தைகளில் இதுவும் ஒன்று.

பல வருடங்களாக இயேசுவின் பூரணமான கற்பனைகளை எண்ணும்பொழுது, என்னைத் தகுதியற்றவனாகவே உணர்ந்தேன். அப்பொழுது அவருடைய கிருபையை குறித்துக் கருதவேயில்லை. ஆனால் இந்த இரட்டைச் செய்தியை புரிந்து கொண்ட பிறகு, இக்கிருபையின் சத்தியம் இயேசுவின் வாழ்க்கை மற்றும் போதனைகள் முழுவதும், பெருங்காற்று போல சீறி பாய்ந்து செல்வதை கண்டுகொண்டேன்.

நம்பிக்கை இழந்தவர்கள், தேவையுள்ளவர்கள், நொறுங்குண்டவர்கள், சுயபெலத்தினால் காரியங்களை நிறைவேற்ற முடியாதவர்கள் என இவர்கள் அனைவருக்கும் கிருபை உண்டு. நம் அனைவருக்கும் கிருபை உண்டு.

தேவனுடைய முகம்

இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்.
2 கொரிந்தியர் 4:6

ஒரு எழுத்தாளராக என்னுடைய படைப்புகள் பெரும்பாலும் வலியின் வேதனையை சுற்றியே இருந்துள்ளன. பல நாட்களாகியும் ஆறாத புண்ணை நகத்தால் சுரண்ட நினைப்பது போல, மறுபடியும் மறுபடியும் நான் அதே கேள்விகளுக்கு திரும்புவேன். என்னுடைய புத்தகங்களை படிக்கும் வாசகர்கள் அவர்களுடைய கடுந்துயரமான கதையை பகிர்ந்து கொள்ளும்பொழுது, அவர்களுடைய முகங்கள் என் சந்தேகங்களுக்கு உருவம் கொடுத்துவிடும். வாலிபர் மத்தியில் ஊழியம் செய்யும் போதகர், எய்ட்ஸ் (AIDS) நோயினால் பாதிக்கப்பட்டவருடைய இரத்தத்தை சரியாக பரிசோதிக்காமல் தன் மனைவிக்கும், குழந்தைக்கும் செலுத்தியதால் மரணத்தை நோக்கி அவர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டவுடன் என்னை தொலைபேசியில் அழைத்து, “இனி ஒரு ‘அன்பான தேவனைக்’ குறித்து என் வாலிபர் குழுவிடம் நான் எப்படி பேச முடியும்?” எனக் கேள்வி எழுப்பினார்.

இப்படிப் பட்டதான ‘ஏன்’ என்ற கேள்விகளுக்கு பதிலளிக்க முயற்சிகூட செய்யக்கூடாது என்பதை நான் கற்றுக்கொண்டேன். மாசுள்ள அந்த இரத்தம் எதற்காக அப்போதகரின் மனைவிக்கு செலுத்தப்பட வேண்டும்? ஏன் ஒரு சுழற்காற்று ஒரு ஊரை தாக்கிவிட்டு இன்னொரு ஊரை தாக்காமல் செல்கிறது? ஏன் சரீர சுகத்திற்காக ஏறெடுக்கப்படும் எல்லா ஜெபங்களுக்கும் பதில் கிடைப்பதில்லை?

இப்படி அநேக கேள்விகள் இருப்பினும், “தேவனுக்கு நம்மீது அக்கறை உண்டா?” என்ற கேள்வி மாத்திரம் இனி ஒருபோதும் என்னை குடைவதில்லை. ஏனென்றால் வலியின் வேதனைகளினால் இப்பூமி குமுறும்பொழுது தேவனுடைய மன வேதனையை அவருடைய முகத்தை பார்த்து அறிந்து கொள்ளலாம். ஆம், தேவன் நமக்கு காட்டிய அவருடைய முகம், இயேசுவினுடைய முகமே.

தேவனுடைய குமாரனாகிய இயேசு நமக்காக மரணத்தை ருசித்ததினால் வலி, வேதனைகள், துன்பங்கள் மற்றும் மரணமும் நித்தியத்திற்கும் இறுதியாக அழிக்கப் பட்டதினால், “தேவனுக்கு நம்மீது அக்கறை உண்டா?” என்கிற கேள்விக்கு பதில் கிடைத்தாயிற்று. “இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார் இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்” (2 கொரி. 4:6).

நான் ஒரு பொருட்டா?

சிறப்பு அங்காடியில் (Super Market) பொருட்களை வாங்கிவிட்டு பணம் செலுத்துவதற்காக வரிசையில் நின்றுகொண்டிருந்தபொழுது, நொறுக்குத் தீனியைப் பார்த்துக் கொண்டிருந்த மொட்டைத் தலையுடன் மூக்குத்தி அணிந்த சில இளைஞர்களை கவனித்தேன். மேலும் அலுவலகத்தில் பணிபுரியும் வாலிபன் ஒருவன் இறைச்சித் துண்டு, கீரை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு வாங்குவதையும், வயதான பெண்மணி ஸ்டராபெரி மற்றும் ‘பீச்’ பழங்களை (Peaches) வாங்குவதையும் பார்த்து கொண்டிருந்தேன். இவர்களை எல்லாம் தேவன் அறிந்திருக்கிறாரா? இவர்களுடைய பெயர்கள் அவருக்குத் தெரியுமா?  உண்மையிலேயே இவர்கள் எல்லோரும் அவருக்கு முக்கியமானவர்களா? என்றெல்லாம் என் மனதில் கேள்விகள் எழுந்தது.

எல்லாவற்றையும் படைத்தவர் தான் மனிதனையும் படைத்தார். நாம் ஒவ்வொருவரும் அவருடைய தனிப்பட்ட அன்பையும், கவனத்தையும் பெற்றுக் கொள்ளப் பாத்திரவான்களாகப் படைக்கப்பட்டிருக்கிறோம். மனிதனாகப் பிறந்து தேவன் தம்முடைய அற்புதமான அன்பை இஸ்ரேல் மலைகளின் மத்தியில் வாசம் செய்து வெளிப்படுத்தினார். பின்னர் முற்றிலுமாக அதை சிலுவையில் நமக்கு காண்பித்தார்.

இயேசு பூமிக்கு ஓர் சாதாரண ஊழியக்காரரைப் போல் வந்தார். எந்த ஒரு சூழ்நிலையில் இருக்கும் எளிய மனிதனையும் அவர் கனப்படுத்தினார். அவரது பலத்த கரம் சிறுமைப்பட்ட எளியவரையும் அணைத்துக் கொண்டது. அவரது கரத்தில் ஒவ்வொருவருடைய பெயர்களும் எழுதப்பட்டிருக்கிறது. அதை அவர் தம் தழும்புகளினாலும், காயங்களினாலும், எழுதியுள்ளார். அப்படிபட்ட விலை செலுத்தி தேவன் நம்மில் அன்பு கூர்ந்தார்.

யோபு மற்றும் பிரசங்கி புத்தகங்களில் எழுதப்பட்டது போல நான் சுய-பரிதாபத்தால் வாடும் பொழுதும், தனிமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் பொழுதும் நான் சுவிஷேச புத்தகங்களில் விவரிக்கப்பட்டுள்ள இயேசுவைப்பற்றிய செய்திகளை படித்து தியானிப்பேன். பிரசங்கி புத்தகத்தில் சொன்னது போல “சூரியனுக்குக் கீழே” (பிர. 1:3) வசிக்கும் மனிதனின் வாழ்க்கைக்கு எந்த அர்த்தமும் இல்லை என்ற முடிவிற்கு வந்தால், தேவன் பூமிக்கு வந்த முக்கியமான நோக்கத்தையே நான் அறியவில்லை என்பதைக் காண்பிக்கின்றது. நான் முக்கியத்துவம் பெற்றவனா? நான் விசேஷித்தவனா? என்ற கேள்விகளுக்கு ஒரே பதில் உண்டு. இயேசுதான் அதற்கு பதில்.

ஒருவருக்கொருவர் உதவுதல்

புதிய ஏற்பாட்டில் 30 முறைக்கும் மேலாக பயன்படுத்தப்படும் “கிறிஸ்துவின் சரீரம்” என்னும் சொற்றொடர் ஒரு புதிர். அப்போஸ்தலனாகிய பவுல் அச்சொற்றொடரை சபையைக் குறிக்க உபயோகப்படுத்துகிறார். இயேசு பரமேறிய பின்பு, அவருடைய பணியை தொடரும்படி குறைவுள்ள,  திறமையில்லாத ஆண்கள் மற்றும் பெண்களிடம் ஒப்புக்கொடுக்கிறார். அவர் சபைக்கு தலையாக தலைமை ஏற்றுக்கொண்டு, அவருடைய கைகளாக, கால்களாக,  காதுகளாக, கண்களாக, மற்றும் குரலாக ஒழுங்கற்ற சீஷர்களை, அதாவது உன்னையும், என்னையும் விட்டுச் சென்றுள்ளார்.

அநேக அவயங்கள் உள்ள ஒரு பெரிய சரீரத்திற்கு காணக்கூடாத தலையாக இருக்க தீர்மானித்த இயேசு, …

தொடர்புடைய தலைப்புகள்

> odb

ஆசீர்வாதங்களை தாங்குபவர்

ஜனவரி 15, 1919 அன்று, அமெரிக்காவின் பாஸ்டன் நகரில், மூல சர்க்கரை பாகை ஏற்றிச் செல்லும் ஒரு டேங்கர் வாகனம் வெடித்தது. 75 லட்சம் லிட்டர் மூல சர்க்கரை பாகு, பதினைந்து அடி அலையாய் 30 மைல் வேகத்தில் தெருவில் பாய்ந்து, ரயில் வண்டிகள், கட்டிடங்கள், மக்கள் மற்றும் விலங்குகளை மூழ்கடித்தது. இந்த மூல சர்க்கரை பாகு அந்த அளவிற்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடியதாய் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அன்று 21 பேரின் உயிரைக் குடித்து, 150 பேருக்கு மேலானோருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. 

இந்த மூல சர்க்கரைப் பாகைப் போன்று, சில நல்ல விஷயங்கள் கூட நம்மை எதிர்பாராத விதமாய் முழ்கடிக்கலாம். தேவன் இஸ்ரவேலருக்கு வாக்குப்பண்ணிய தேசத்திற்குள் பிரவேசிக்கும் முன்பு, மோசே அவர்களைப் பார்த்து, தேசத்திற்குள் பிரவேசிக்கும்போது அது தங்களுடைய சாமர்த்தியத்தினால் வந்தது என்று சொல்லவேண்டாம் என்று எச்சரிக்கிறார்: “நீ புசித்துத் திர்ப்தியாகி, நல்ல வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருக்கும்போதும், உன் ஆடுமாடுகள் திரட்சியாகி, உனக்கு வெள்ளியும் பொன்னும் பெருகி... உன் இருதயம் மேட்டிமையடையாமலும்… உன் தேவனாகிய கர்த்தரை நீ மறவாமலும்” இருக்கும் படிக்கும் இந்த ஐசுவரியத்திற்கு அவர்களின் சாமர்த்தியம் காரணம் என்று சொல்லவேண்டாம் என்றும் எச்சரிக்கிறார். அதற்கு பதிலாக, “உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக... ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர்” (உபாகமம் 8:12-14, 17-18) என்று அறிவுறுத்துகிறார். 

நம்முடைய சரீர ஆரோக்கியம் மற்றும் வாழ்வாதார தேவைகள் போன்ற அனைத்து காரியங்களும் தேவனுடைய கரத்தினால் அருளப்பட்ட ஈவுகள். நாம் கடினமாக உழைத்து சம்பாதித்தாலும், அவரே நம்மை தாங்குகிறவர். திறந்த கைகளோடு நம்முடைய ஆசீர்வாதத்தை பற்றிக்கொண்டு, நம் மீதான அவருடைய இரக்கங்களுக்காய் அவரை துதிப்போம். 

வெறுமையாய் ஓடுதல்

“இனி என்னால் இதைச் செய்ய முடியும் என்று எனக்கு தோன்றவில்லை,” என்று என் சிநேகிதி கண்ணீரோடு சொன்னாள். ஒரு சர்வதேச சுகாதார நெருக்கடியில் ஒரு செவிலியராக அவள் எதிர்கொண்ட இக்கட்டான சூழ்நிலையை அவள் விவாதிக்கும்போது அப்படி சொன்னாள். “தேவன் என்னை செவிலிய சேவை செய்ய அழைத்தார் என்பது எனக்குத் தெரியும். ஆனால் உணர்வுபூர்வமாய் சோர்ந்துபோயிருக்கிறேன்” என்றாள். அவள் மிகவும் சோர்வுற்றிருக்கிறாள் என்பதை அறிந்து, “நீ இப்போது உதவியற்றவளாய் உணருகிறாய் என்று எனக்குத் தெரியும், ஆனால் தேவன் உன்னை வழிநடத்தி பெலப்படுத்துவார்” என்று ஆறுதல் சொன்னேன். அந்த நேரத்தில் அவள் ஜெபிக்க தீர்மானித்தாள். விரைவில் அவளுடைய சோர்வுகள் மறைந்து ஒரு புதிய தெளிவுடன் காணப்பட்டாள். செவிலியர் பணியை தொடர்ந்து செய்வதற்கு மட்டுமல்லாது, பல நாடுகளில் இருக்கும் பல மருத்துவமனைகளுக்கு கடந்துசென்று சேவை செய்ய தேவன் அவளுக்கு பெலன் கொடுத்தார். 

கிறிஸ்துவின் விசுவாசிகளாய், நாம் பாரங்களினால் அழுத்தப்படும்போது நம்முடைய உதவிக்காகவும் ஊக்கத்திற்காகவும் தேவனை நோக்கிப் பார்ப்போம். ஏனெனில் அவர்  “சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை” (ஏசாயா 40:28). ஏசாயா தீர்க்கதரிசி தேவனைக் குறித்து, “சோர்ந்துபோகிறவனுக்கு அவர்பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்” (வச. 29) என்று சொல்லுகிறார். தேவனுடைய பெலன் நித்தியமானது என்றாலும், நாம் சரீரப்பிரகாரமாகவும் உணர்வுரீதியாகவும் பாதிக்கப்படுவது தவிர்க்கமுடியாதது என்பதை அவர் அறிவார் (வச. 30). ஆனால் வாழ்க்கையின் சவால்களை மட்டும் கடக்க முயற்சிப்பதற்குப் பதிலாக, நம்முடைய பெலத்திற்காக நாம் தேவனை சாரும்போது, அவர் நம்மை மீட்டெடுத்து, புதுப்பித்து, விசுவாசத்தில் வளருவதற்கான நிச்சயத்தை நமக்குத் தருவார்.

ஏழு நிமிட திகில்

பிப்ரவரி 18, 2021 அன்று செவ்வாய் கிரகத்தின் பெர்சிவரன்ஸ் என்ற ரோவர் வாகனம் அங்கு தரையிறங்கியபோது, அதின் வருகையை கண்காணித்தவர்கள் “ஏழு நிமிட திகிலை” அனுபவிக்கவேண்டியிருந்தது. விண்கலம் 292 மில்லியன் மைல் பயணத்தை முடித்து, அது வடிவமைக்கப்பட்டபடி தானே தரையிறங்கும் சிக்கலான செயல்முறையை மேற்கொண்டது. செவ்வாய் கிரகத்தில் இருந்து பூமிக்கு சிக்னல்கள் வந்துசேருவதற்கு சில நிமிடங்கள் ஆகும். ஆகையினால் அந்த ரோவர் வாகனத்திலிருந்து எந்த தகவலையும் நாசா விஞ்ஞானிகளால் கேட்க முடியவில்லை. பல உழைப்புகளையும் பொருட்செலவையும் விரயமாக்கி அந்த பிரம்மாண்ட கண்டுபிடிப்பைச் செய்தவர்கள் அத்துடன் தொடர்பை இழப்பது திகிலடையச்செய்யும் ஒரு அனுபவம். 

நாம் சிலவேளைகளில் தேவனுடைய சத்தத்தைக் கேட்கத் தவறும்போது இதுபோன்று உணருவதுண்டு. நாம் ஜெபிக்கிறோம் ஆனால் பதில் கிடைக்கவில்லை. வேதாகமத்தில் ஜெபத்திற்கு உடனே பதிலைப் பெற்றுக்கொண்டவர்களையும் (பார்க்க. தானியேல் 9:20-23), வெகு நாட்கள் கழித்து பதிலைப் பெற்றுக்கொண்டவர்களையும் (அன்னாளுடைய சம்பவம் 1 சாமுவேல் 1:10-20) நாம் பார்க்கமுடியும். ஆனால் வெகு தாமதமாய் பதில் கிடைத்த ஜெபத்திற்கான உதாரணம், தங்கள் வியாதிப்பட்ட சகோதரன் லாசருவுக்காக இயேசுவிடத்தில் ஜெபித்த மரியாள்-மார்த்தாள் சம்பவம் (யோவான் 11:3). இயேசு தாமதிக்கிறார். அவர்களின் சகோதரன் மரித்துப்போனான் (வச. 6-7, 14-15). ஆகிலும் நான்கு நாட்கள் கழித்து அவர்களின் ஜெபத்திற்கு இயேசு பதிலளிக்கிறார் (வச. 43-44). 

நம்முடைய ஜெபத்திற்கான பதிலுக்காய் காத்திருப்பது மிகவும் கடினமான ஒன்று. “ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்” (எபிரெயர் 4:16), அப்போது தேவன் நமக்கு உதவிசெய்ய வல்லவராய் இருக்கிறார்.